கம்ப ராமாயணத்தில் 190 கேள்விகள் (Post.16,341)

RAVANA MEETING SITA – VALMIKI RAMAYANA PICTURE

Written by London Swaminathan

Post No. 16,341

Date uploaded in London – 25 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கம்ப ராமாயணம் முழுக்க படிக்க வேண்டாம்; ரொம்ப போர் அடிக்கும்! சுவையான பகுதிகளை மட்டும் படியுங்க!!

கம்பன் ஒவ்வொரு விஷயத்துக்கும் 10 அல்லது 15 பாடல்களை சொல்வதால் 10,000 பாடல்கள் கிடைக்கின்றன; அவைகளைப் படிக்க முடியாதோருக்கு சுவையான பகுதிகளை மட்டும் கேள்வி -பதில் வடிவில் தருகிறேன்; எப்போதும் என் பிளாக்குகளில் இலவசமாகக் கிடைக்கும் ; தொடர்ந்து படியுங்கள்:

இதற்கு முன்னர் வெளியிட்ட 180 கேள்விகளும், விடைகளும்  எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.

xxxxxxxxxxxxxxxxxxx


SITA AND GOLDEN DEER-
VALMIKI RAMAYANA PICTURE

181. ராமனின் அபயக்குரல் கேட்டும் நீ போகாமல் இருப்பது ஏன் என்று சீதை கேட்டபோது ராமனுக்கு பூவுலகில் யாரும் தீங்கிழைக்கமுடியாது என்று லெட்சுமணன் பதில் சொன்னான் ; நீ போகாவிடில் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று எப்படி மிரட்டினாள் சீதை ?

182

லெட்சுமணன் ராமனைத் தேடிச் சென்ற பின்னர் ராவணன் எந்த உருவத்தில் சீதை இருக்கும் இடத்துக்கு வந்தான் ?

183

ராவணன் கிழவன் போல நடித்ததை கம்பன் எப்படி வருணிக்கிறான்?

184

ராவணனை துறவி என்று எண்ணி சீதை எப்படி உபசரித்தாள்?

185

ராவணன் சீதையிடம் ஒரு முறை கங்கை நதிக்குப் போயிருக்கிறேன் என்று ஏன் சொன்னான்?

186

சீதை நீங்கள் யார் என்று கேட்டதற்கு ராவணன் சொன்ன பதில் என்ன ?

187

சீதை- ராவணனின் உரையாடலில் அரக்கர்களை ராம பிரான் கொன்றுவிடுவான் என்று சொன்னவுடன் ராவணன் ஆத்திரம் அடைந்தது எவ்வாறு ?

188

ராவணன் சீதையை கவர்ந்து சென்றது எங்ஙனம் ? அவளைக் கைப்பிடித்து இழுத்தானா ? அல்லது சாபத்துக்குப் பயந்து அவளைத் தொடாமல் கவர்ந்து செண்றானா?

189

தேரில் ஏற்றப்பட்ட சீதை சும்மா இருந்தாளா ?

190

சீதை ராவணன் செய்த மாயங்களை பட்டியலிட்டு “நீ சரியான ஆண்மகன் என்றால் என் கணவருடன் போர் செய்; தேரை நிறுத்து” என்று சொன்னபோது ராவணன் சிரித்துக்கொண்டே  சொன்ன பதில் என்ன ?

RAMA’S FIGHT WITH DEMONS- VALMIKI RAMAYANA PICTURES.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

விடைகள்

181.ஒரு பகல் பழகினார்

உயிரை ஈவரால்;

பெருமகன் உலைவுறு பெற்றி

கேட்டும், நீ

வெருவலை நின்றனை; வேறு என்?

யான், இனி,

எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென்,

ஈண்டு’ எனா,

ஒரு நாள் மட்டும் பழகின வராயினும் அன்புடையோர் தாம் பழகியவர்க்காகத் தம் உயிரையும் கொடுத்து உதவி புரிவர்; (மாறாக) நீயோ ராமனின் அபயக்குரல் கேட்டும் அஞ்சாமல் நின்றாய்; இனி எனக்கு வேறு வழி யாது? இனிமேல் நான் தீயில் விரைந்து விழுந்து சாவேன் இவ்விடத்தே என்று மிரட்டினாள் சீதை.

**********************************

182. ராவணனின் தோற்றம்

இளையவன் ஏகலும்,

இறவு பார்க்கின்ற

வளை எயிற்று இராவணன்,

வஞ்சம் முற்றுவான்,

முளை வரித் தண்டு ஒரு

மூன்றும், முப் பகைத்

தளை அரி தவத்தவர்

வடிவம், தாங்கினான்.

இலக்குவன் அவ்வாறு சென்றதும் ,வளைந்த பற்களையுடைய இராவணன் தான் கருதிய வஞ்சகச் செயலைச் செய்து

முடிப்பதற்காக வரிந்து கட்டிய மூங்கில் தண்டுகள் ஒரு மூன்றையும் ,  (முக்கோல் அல்லது திரிதண்டம்) காமம் வெகுளி மயக்கம் எனும் மூன்று உட்பகையாம் கட்டுகளை அறுத்த தவ வடிவையும் ஏற்றுக் கொண்டான்.

காமம், வெகுளி மயக்கம் ஆகியவற்றை அடக்கியவர் என்பதை

இத் திரிதண்டம் குறிக்கும். ‘துறவிகளை முக்கோற் பகவர்’ என்பர்

முன்னையோர். நூலேகரகம் முக்கோல் மணையே ஆயுங்காலை

அந்தணர்க்குரிய (தொல். பொருள் மரபியல். 71) எனத்

தொல்காப்பியம் கூறும். ‘கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான்

முக்கோலசை நிலை’ என்பது முல்லைப் பாட்டு (37 – 38). ‘உரைசான்ற முக்கோல்‘ எனக் கலித்தொகையில் காணலாம்.

********************************

183.தொண்டுக் கிழவன் போல நடித்தான் ராவணன்

பூப் பொதி அவிழ்ந்தன

நடையன்; பூதலம்

தீப் பொதிந்தாமென

மிதிக்கும் செய்கையன்;

காப்பு அரு நடுக்குறும்

காலன், கையினன்;

மூப்பு எனும் பருவமும்

முனிய முற்றினான்.

பூவின் இதழ்கள் மென்மையாக விரிந்தாற் போலும் நடையுடையவனாகவும், நிலம் நெருப்பால்

நிறைந்துள்ளது போலும் காலால் பட்டும்படாமலும் அடிவைத்து

நடப்பவனாகவும் காக்க இயலாமல் நடுக்கங் கொண்ட கால்களையும் கைகளையும் உடையவனாகவும் முதுமைப் பருவமும் பிறர் கண்டு வெறுக்கும் வகையில் முதியவனாகவும் ஆனான் (இராவணன்).

*************************

184.ஏத்தினள்; எய்தலும் “இருத்திர் ஈண்டு ” என

வேத்திரத்து ஆசனம் விதியின் நல்கினாள்;

மாத் திரி தண்டு அயல் வைத்த வஞ்சனும்

பூத் தொடர் சாலையின் இருந்த போழ்தினே.

இராவண சன்னியாசியை  ‘இங்கு அமர்வீராக’ என்று கூறிப் பிரம்பு இருக்கையை அளித்தாள்;  முக்கோலை அருகே வைத்த வஞ்சகனாம் இராவணனும் பூக்கள் படர்ந்து அழகுடன் விளங்கி யபர்ண  சாலையில்  உட்கார்ந்தான்

*****************

185. சீதையை யார் என்று கேட்டவுடன் அவள் தன்னைப்பற்றியும் தசரதன் மற்றும் ராமபிரானின் பெருமையையும் சொல்லவே, ஓஹோ நான் கூட ஒரு முறை கங்கை நதிக்குப் போயிருக்கிறேன் என்றான் ராவண சன்யாசி !

‘கேட்டனென், கண்டிலென்;

கெழுவு கங்கை நீர்

நாட்டிடை ஒருமுறை

நண்ணினேன்; மலர்

வாள் தடங் கண்ணி! நீர்

யாவர் மா மகள்,

காட்டிடை அரும் பகல்

கழிக்கின்றீர்?’ என்றான்.

நீர் கூறிய செய்திகளை நான் முன்னரே கேள்விப்பட்டுள்ளேன்; (ஆனால் அவரை = தசரதன்) நேரில் பார்த்ததில்லை;  கங்கை பாயும் நாட்டுக்கு ஒரு தடவை போயிருந்தேன்;  தாமரை மலர் போன்றும் வாள் போலும் நீண்டகண்ணையுடையவளே!; நீவிர் யாருடையபெருமைக்குரிய மகள்? இக் கொடிய காட்டில் நாட்களைக் கழிக்கின்றீர்  எனக் கேட்டான்.

ஒரு முறை நண்ணினேன் என்பது முன்னர் இராவணன் திக் விசயம் செய்த போது அயோத்தியை ஆண்ட அனரணியன் என்ற மன்னனைப்  போரில் வீழ்த்தி நிந்தித்ததான்; அவன் எங்கள் வம்சத்தில் வரப்போகும்  ஒரு மன்னன் உன்னைக் கொல்வான் என்று  சபித்த வரலாறு இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.

*************************

186.ராவணனின் தற்பெருமைப் பேச்சு

‘இந்திரற்கு இந்திரன்;

எழுதல் ஆகலாச்

சுந்தரன்; நான்முகன்

மரபில் தோன்றினான்;

அந்தரத்தோடும் எவ்

உலகும் ஆள்கின்றான்;

மந்திரத்து அரு மறை

வைகும் நாவினான்.

தேவர் தலைவனாம் இந்திரனுக்கே தலைவன்; ஓவியத்தில் தீட்டற்கு அரிய அழகுடையவன் பிரமனின் குல வழியில் பிறந்தவன் ; வானில் உள்ள உலகத்தோடு எல்லா உலகங்களையும் ஆள்கின்றவன் ; மந்திரங்களைத் தம் இடமாகக் கொண்ட அரிய வேதங்கள் தங்கியுள்ள நாவை உடையவன்…..

சீதையின் கேள்விக்கு விடையாக இராவணன் பெருமை இது முதல் கூறப்பெறுகிறது.

‘ஈசன் ஆண்டு இருந்த பேர்

இலங்கு மால் வரை

ஊசி-வேரொடும் பறித்து

எடுக்கும் ஊற்றத்தான்;

ஆசைகள் சுமந்த பேர்

அளவில் யானைகள்

பூசல் செய் மருப்பினைப்

பொடிசெய் தோளினான்.

சிவபிரான் எழுந்தருளியுள்ள மிகப் பெரிய கயிலை மலையை

அக்காலத்தில் ஆணிவேருடன் அடியோடு பறித்து எடுக்கின்ற

வலிமையுடையவன்; திசைகளைத் தாங்கும் பெருமையில் அளவில்லாத யானைகளின் போர் புரியும் கொம்புகளைப் பொடி செய்யும் வலிய தோள்களை உடையவன்.

இதனால் இராவணன் பேராற்றல் விளங்கும்.

*********************

187.தீயாரைச் சேர்ந்தவரும் தீயவர்கள் — சீதை

ராவணன் தன்பெருமையெல்லாம் சொல்லி அரக்கன் என்று சொன்னபோது அய்யய்யோ! கெட்டவருடன் இருக்கும் யாரும் கெட்டவர்கள் என்ற பொன்மொழியை உதிர்த்தாள் சீதை!

சேயிழை-அன்ன சொல்ல,- ‘தீயவர்ச்

சேர்தல் செய்தார்

தூயவர் அல்லர், சொல்லின், தொல் நெறி

தொடர்ந்தோர்’ என்றாள்;

‘மாய வல் அரக்கர் வல்லர், வேண்டு

உரு வரிக்க’ என்பது,

ஆயவள் அறிதல் தேற்றாள்; ஆதலின்,

அயல் ஒன்று எண்ணாள்.

(இராவணன் அத்தகைய சொற்களைக் கூற;

சீதை, கொடியவரை நட்பாகச் சேர்ந்தவர்கள்

தூயவர் ஆகார் என்றாள்.

‘தீயவர்ச் சேர்தல் செய்தார் தூயவர் அல்லர்’ என்ற கருத்து

‘மனந் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா

வரும்’ (குறள். 455) என்ற கருத்துடன் ஒப்புடைத்து. அதற்கேற்பச்

சிற்றினம் சேர்ந்தவர் சிற்றினத்தாரே எனச் சீதை முடிவு செய்கிறாள்.

அரக்கன் மாயையால் துறவி வேடம் பூண்டு வந்தனன் என்பதைத்

தெளியாள். காரணம் அரக்கர்க்குத் தாம் வேண்டிய வடிவெடுக்கும்

ஆற்றல் உள்ளது என்பதை அறியா நிலையாகும். ‘அயல் ஒன்று

எண்ணாள்’ என்பது சீதையின் தூய மன நிலையைக் காட்டும்.

மனிதர்கள் புழுவுக்குச் சமன் என்று கூறி ராவணன் சீறினான்

‘விண்ணவர் ஏவல் செய்ய, வென்ற

என் வீரம் பாராய்;

மண்ணிடைப் புழுவின் வாழும்

மானிடர் வலியர் என்றாய்;

பெண் எனப் பிழைத்தாய் அன்றேல்; உன்னை

யான் பிசைந்து தின்ன

எண்ணுவென் என்னின், பின்னை என்

உயிர் இழப்பென் என்றான்.

தேவர்கள் யான் ஏவிய குற்றேவல் செய்ய அவர்களை வென்ற என் வீரத்தை நீ கருதாமல்,  இவ்வுலகில் இழிந்த புழுப் போல் வாழும் மனிதரை வலிமை உடையவர் எனக் கூறினாய்; ஒரு பெண் என்ற காரணத்தால் நீ உயிர் பிழைத்துள்ளாய்; அல்லாவிடில் உன்னை என் கைகளால் பிசைந்து உண்ண நினைப்பேன்; அவ்வாறு எண்ணிச்

செயல்பட்டேனென்றால் (உன்னை அடைய முடியாததால்) பின்னர் என் உயிரைப் போக்கிக் கொள்வேன் என்று கூறினான் இராவணன்.

*******************

188.இராவணன் பன்னசாலையோடு சீதையை எடுத்தல்

ஆண்டு, ஆயிடை, தீயவன் ஆயிழையைத்

தீண்டான், அயன் மேல் உரை சிந்தைசெயா;

தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால்,

கீண்டான் நிலம்; யோசனை கீழொடு மேல்.

அப்பொழுது தீயவனாம் இராவணன் பிரமன் முன்னரிட்ட சாபத்தை மனத்தில் எண்ணி அணிகலன்கள் அணிந்த சீதையின் திருமேனியைத் தொடாமல்  கல்தூண்கள் போன்ற தோள்களின் வலிமையால், சீதை இருந்த பூமியின் கீழேயும் பக்கங்களிலும் ஆக ஒரு யோசனை அளவு பெயர்த்தெடுத்தான்.

பிரம்மா கொடுத்த  சாபம் பின்னர்ச் சடாயு உயிர் நீத்த படலத்தில் வருகிறது ; இது தவிர இராவணனுக்கு வேதவதி, அரம்பை, நரி கூபரன், புஞ்சிகத்தலை

ஆகியோராலும் சாபங்கள் உண்டு. நிலத்தொடு பெயர்த்தெடுத்த செய்தி கம்பரின் படைப்பு. இவ்வாறு படைத்தது மட்டுமின்றி நூலில் பல இடங்களில் இதனைக் கூறியுள்ளார்.

குபேரனின் அளகாபுரியில் அரம்பையை இராவணன் கற்பழித்த போது அவள் இட்ட சாபம் ‘வலிய ஒரு பெண்ணைத் தீண்டின் அவள் கற்புக் கனலால் எரிவாய் என்பதாம் ; இவ்வாறே நளகூபனும் புஞ்சிகத்தலையும் சாபம் இட்டனர் என்பர். இவ்வாறு இராவணன் பெற்ற சாபம்பற்றிப் பல கதைகள் உள.

****************

189.     சீதைக் கதறிக் கதறி, நதியையும் பறவைகளையும் உதவிக்கு அழைக்கிறாள்

கொண்டான் உயர் தேர்மிசை;

கோல் வளையாள்

கண்டாள்; தனது ஆர்

உயிர் கண்டிலளால்;

மண்தான் உறும்

மின்னின் மயங்கினளால்;

விண்தான் வழியா

எழுவான் விரைவான்.

(அவ்வாறு பெயர்த்த நிலத்தை) உயர்ந்த தன் தேர் மேல் வைத்துக் கொண்டான்;அச் செயலை அழகிய வளையணிந்த சீதை பார்த்தாள்; தன்னுடைய அரிய உயிரைக் காணவில்லை; தனக்குரிய நிலமாம் மேகத்தை விட்டுத் தரையில் விழுந்த ஒரு மின்னற் கொடி போலக் கலங்கினாள் (அப்போது இராவணன்);  ஆகாய வழியாக விரைவிற்செல்லக் கருதினான்.

*****

190.அரக்கன் மறுமொழியும் சீதையின் எதிர்மொழியும்

என்று, இன்ன பலவும் பன்னி,

இரியலுற்று அரற்றுவாளை,

‘பொன் துன்னும் புணர் மென் கொங்கைப்

பொலன்குழாய்! போரில் என்னைக்

கொன்று, உன்னை மீட்பர்கொல், அம்

மானிடர்? கொள்க’ என்னா,

வன் திண்கை எறிந்து நக்கான்-

வாழ்க்கைநாள் வறிது வீழ்ப்பான்.

இவ்விதம் பல சொற்களைச் சொல்லி வாய் விட்டுப்புலம்பி அழும் சீதையை, (நோக்கி  இராவணன்;  பொற்கலன்கள் அணிந்த நெருங்கிய மார்புகளை உடைய அழகிய குண்டலமணிந்த பெண்ணே!;   அந்த மனிதர்கள் சண்டையில் என்னைக் கொன்று உன்னை மீட்டு விடுவார்களோ?; முடிந்தால் மீட்டுக் கொள்ளட்டும்;  என்று கூறி வலிய திண்ணிய கைகளைப் புடைத்துச் சிரித்தான்.

மொழிதரும் அளவில், ‘நங்கை! கேள் இது;

முரண் இல் யாக்கை

இழிதரு மனிதரோடே யான் செரு

ஏற்பன் என்றால்,

விழி தரு நெற்றியான்தன் வெள்ளி

வெற்பு எடுத்த தோட்குப்

பழி தரும்; அதனின் சாலப் பயன் தரும்,

வஞ்சம்’ என்றான்.

பெண்ணே!; இதனைக் கேட்பாயாக;  வலியற்ற உடலை உடைய இழிவான மனிதர்களுடன் நான் போர் செய்ய முனைந்தால் நெற்றியில் கண்ணுடைய சிவபெருமானின் கயிலை மலையை எடுத்த தோள்களுக்கு அவமானம்  உண்டாக்கும்; அதைக் காட்டிலும் இது போன்ற வஞ்சகச் செயல்களுக்கு பலன் அதிகம் !

—SUBHAM—

TAGS- கம்ப ராமாயணம் , 190 கேள்விகள் , ராவணன் சிரிப்பு, துறவி வேடம், பர்ணசாலை , பெயர்த்து எடுத்தல், மானிடர்கள் புழுக்கள் , சீதை கதறல்

Leave a comment

Leave a Reply