கம்ப ராமாயணத்தில் 200 கேள்விகள் (Post.16,344)

Written by London Swaminathan

Post No. 16,344

Date uploaded in London – 26 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

வால்மீகி என்ன சொன்னார் ?

சீதா தேவியிடம் இந்தக் கோட்டைத்  தாண்டாதீர்கள் என்று லெட்சுமணன் பர்ணசாலைக்கு வெளியே கோடு போட்டதாகவும் அதற்கு லட்சுமண ரேகா என்று பெயர் என்றும் வால்மீகி சொன்னாரா ? அது ஏன்  கம்பனில்  இல்லை?

கையைப்பிடித்து சீதையை ராவணன் இழுத்ததாக வால்மீகி என்ன சொன்னாரா ? அதை ஏன் கம்பன் மாற்றினான் ?

ஒரே பாட்டில் சீதையை அசோக வனத்தில் சிறையில் வைத்தான் ராவணன் என்று கம்பன் சொன்னது போல வால்மீகியும் சொல்லிவிட்டு அடுத்த காட்சிக்குப் போய்விட்டாரா ? இவைகளை ஒப்பிட்டுப்பார்ப்பது அவசியம் (பின்னர் எழுதுகிறேன்).

ராவணனுக்கு பத்து தலையா ஒரு தலையா ? ரவி வர்மா படத்தில் ஒரு தலை உள்ளதே!

***

கம்ப ராமாயணம் முழுக்க படிக்க வேண்டாம்; ரொம்ப போர் அடிக்கும்! சுவையான பகுதிகளை மட்டும் படியுங்க!!

கம்பன் ஒவ்வொரு விஷயத்துக்கும் 10 அல்லது 15 பாடல்களை சொல்வதால் 10,000 பாடல்கள் கிடைக்கின்றன; அவைகளைப் படிக்க முடியாதோருக்கு சுவையான பகுதிகளை மட்டும் கேள்வி -பதில் வடிவில் தருகிறேன்; எப்போதும் என் பிளாக்குகளில் இலவசமாகக் கிடைக்கும் ; தொடர்ந்து படியுங்கள்:

இதற்கு முன்னர் வெளியிட்ட 190 கேள்விகளும், விடைகளும்  எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.

xxxx

191

ராவணனை துணிச்சலாக நில்லடா, எங்கடா போகிறாய் என்று ஏகவசனத்தில் பேசியது யார் ?

192

புலியைக் கண்ட மான் போல இந்திரனும் யமனும் யாரைக் கண்டால் நடுங்குவார்களாம் ?

193

ராவணனை ஜடாயு எப்படித் தாக்கினான் ?

194

ஜடாயு – ராவணன் போரினை ஏராளமான பாடல்களில் வருணிக்கும் கம்பன் இறுதியில் என்ன சொன்னான் ?

195

ஜடாயு விழுந்தவுடன் தர்மம் தோற்குமா? வேதம் பொய்க்குமா? நரகம் வெல்லுமா? என்று சீதை புலம்பியதை கம்பன் எப்படி வருணித்தான் ?

196

ராவணன் சென்ற விமானம் பறவை தாக்கியதால் சேதம் அடைந்தது ; பின்னர் ராவணன் சீதையை எப்படித் தூக்கிச் சென்றான் ?

197

அசோக வனத்தில் சீதையைச் சிறை வைத்தான் ராவணன் என்று ஒரே பாட்டில் சொல்லிவிட்டு,  ஒரே தாவு தாவும் கம்பன் , நம் மனத்தில் எழுப்பும் சந்தேகங்கள் என்ன ?

198

திரைப்பட டைரக்டர் கம்பன் நம்மை மீண்டும் இலங்கையிலிருந்து கோதாவரி நதி தீர காட்டுக்கு அழைத்துச் சென்றது எப்படி?

199

தம்பி நீ எப்படி இங்கு வந்த ? என்று சொல்லி மார்பில் இருந்த  பூணூல் இறுகும்படி லெட்சுமணனனை ராமன் கட்டித் தழுவியது எங்ஙனம் ?

200

லெட்சுமணன் சொன்ன பதிலைக்கேட்டு ராமன் தன்னுடைய குற்றம் இது என்று ஒப்புக்கொண்டது எவ்வாறு ?

XXXXXXXXXXXXX

விடைகள்

191.சானகியைக் கவர்ந்து செல்லும் இராவணனைச் சடாயு எதிர்த்தல்

என்னும் அவ் வேலையின்கண், ‘எங்கு

அடா போவது?’ என்னா,

‘நில் நில்‘ என்று, இடித்த சொல்லன்,

நெருப்பு இடைப் பரப்பும்கண்ணன்;

மின் என விளங்கும் வீரத்

துண்டத்தன்; மேரு என்னும்

பொன் நெடுங் குன்றம் வானில் வருவதே

பொருவும் மெய்யான்;

என்று (சீதை) சொல்லிய அந்தச் சமயத்தில்; எங்கே அடா

(என்னையும் மீறி) போவது; நில்நில் என்று

இடியோசை போல் ஒலிக்கும்

உரத்த சொற்களை உடையவனும்;

– சினத் தீ கண்களை உடையவனும்;

மின்னலைப் போல் (பளபளக்கும் அலகை உடையவனும்; பொன்னால் ஆகிய மேரு மலையே வருவது போல பெரிய உடலை உடையவனும் வானத்தில் பறந்து வருவது போன்ற (பேருடம்பினை) உடையவனும் – ஆகிய “எருவையின் மன்னன்”

வந்தனன்”

*****

மான்கள் புலியைக் கண்டது போல்

192.’எல்லா உலகங்களும், இந்திரனும்,

அல்லாதவர் மூவரும், அந்தகனும்,

புல்வாய் புலி கண்டதுபோல்வர் அலால்;

வில்லாளனை வெல்லும் மிடுக்கு உளரோ?

கழுகு மன்னன் ஜடாயு சொல்கிறான் : மூவுலகில் உள்ளவர் அனைவரும் இந்திரனும், மும்மூர்த்திகளும்,  (இந்த இராமலக்குவரைக் கண்டபோது) மான்கள் புலியைக் கண்டது போல் (அஞ்சி நடுக்கம் அடைவர் ) வில்தொழில் வித்தகனாகிய இராமனை வெல்லுதற்கு உரிய வலிமை உடையர் ஆவரோ? ஆகார்.

****

193.சண்டப் பிறை வாள்

எயிற்றான் சர தாரை மாரி

மண்ட, சிறகால் அடித்தான் சில;

வள் உகீரால்

கண்டப்படுத்தான் சில;

காலனும் காண உட்கும்

துண்டப் படையால், சிலை துண்ட

துண்டங்கள் கண்டான்.

பிறை நிலவு போன்ற வளைந்த பற்களைக்கொண்ட ராவணனின் அம்புகள் தாக்கவே அவைகளை கழுகு அரசன் தன் சிறகுகளால் அடித்து வீழ்த்தினான்;  சிலவற்றைத் தன் கூர்மையான (கால்) நகங்களால் துண்டாக்கினான்; – வில்லை  யமனும் காண அஞ்சும் (தன்) மூக்காகிய படைக் கலத்தால் துண்டு துண்டுகளாக ஆக்கினான்.

****

194.ராவணன் வாளுக்கு யாரும் தப்பமுடியாது; இரண்டாவதாக ஜடாயுவுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆயுளும் முடிவடைகிறது; மூன்றாவது இந்திரனின் வஜ்ராயுதம் தாக்கினால் எப்படி ஒருவர் வீழ்வாரோ அப்படி ஜடாயு நிலத்தில் விழுந்தான்.

வலியின்தலை தோற்றிலன்; மாற்ற

அருந் தெய்வ வாளால்

நலியும் தலை என்றது அன்றியும்,

வாழ்க்கை நாளும்

மெலியும் கடை சென்றுளது; ஆகலின்,

விண்ணின் வேந்தன்

குலிசம் எறியச் சிறை அற்றது ஒர்

குன்றின், வீழ்ந்தான்.

இராவணன் வீசிய தெய்வ வாள் தப்பாமல் எதையும் அழிக்கும் தன்மை உடையது ஆதலாலும், சடாயுவின் வயது எண்ணரும் பருவங்கள் கடந்து முதிர்ந்து முடியும் காலம் நெருங்கி விட்டதாலும் யாரிடமும் தோற்காதவன் வச்சிரப் படை சிறகு அறுத்த மலை போல் விழுந்தான். (பறந்து வந்த மலைகளின் சிறகுகளை இந்திரன் அறுத்ததாக புராணங்கள் கூறும்).

***

195 சீதையின் புலம்பல்

‘பின்னவன் உரையினை     மறுத்து, பேதையேன்,

அன்னவன்தனைக் கடிது     அகற்றினேன்; பொரு

மன்னவன் சிறை அற     மயங்கினேன்; விதி

இன்னமும் எவ் வினை     இயற்றுமோ?’ எனா,

நான் ஒரு இடியட்/ முட்டாள் ! லெட்சுமணன் சொன்னதைக் கேட்காமல் அவனை விரட்டினேனே; விதியின் விளையாட்டு இது. இன்னும் என்ன என்ன ஆபத்து வரப்போகிறதோ?

அல்லல் உற்றேனை, வந்து, “அஞ்சல்”     என்ற, இந்

நல்லவன் தோற்பதே?     நரகன் வெல்வதே?

வெல்வதும் பாவமோ?     வேதம் பொய்க்குமோ?

இல்லையோ அறம்?’ என,     இரங்கி ஏங்கினாள்.

பெருந்துன்பம் அடைந்தவளாகிய என்னை  (காக்க) வந்து அஞ்சாதே (என்று ஆறுதல் கூறிய) இந்த நல்ல அறப் பண்புகள் உடையவன் ஆகிய (சடாயு) தோல்வி அடைவதா?; நரகைச் சேர்தற்கு உரியான் ஆகிய (இராவணன்) வெல்வதா?;  பாவந்தானோ வெற்றி பெறுவது; வேதம் விளக்கும் (அறம்) பொய்த்து விடுமோ?; (இவ்வுலகில்) தருமம் இல்லாமல் போய்விட்டதோ என்று மனம் கலங்கிப் புலம்பினாள் சீதை.

***

196.ராவணன் சென்ற விமானத்தில் 16 குதிரைகள் (பொம்மைக் குதிரை?) இருந்தன ; அவைகளையும் விமானத்தையும் கழுகு அரசன் ஜடாயு சேதப்படுத்தினான் ; உடனே அதை நிறுத்தி விட்டு ராவணன் சீதையைத் தோளில் தூக்கிச் சென்றான்; அப்போதும் அவன் உடலில் படாமல் இருக்க நிலத்தோடு தூக்கித் தோளில் வைத்துக் கொண்டானாம் ராவணன் ( கொஞ்சம் நம்புவதற்குக் கஷ்டமான பாடல் !)

ஏங்குவாள் தனிமையும், இறகு இழந்தவன்

ஆங்குறு நிலைமையும், அரக்கன் நோக்கினான்;

வாங்கினன், தேரிடை     வைத்த மண்ணொடும்,

வீங்கு தோள்மீக் கொடு, விண்ணின் ஏகினான்.

சீதையினது தனிமையையும்,  சிறகு இழந்தவ சடாயு அடைந்த நிலைமையையும், அரக்கனாகிய இராவணன் பார்த்து (இனித் தடுப்பார் இல்லை என எண்ணி) தேரின் மேல் பெயர்த்து எடுத்து வைத்த நிலத்தோடு சீதையை எடுத்து(தன்) பருத்த தோள்களின் மேல் வைத்துக் கொண்டு ஆகாய வழியில் (இலங்கையை நோக்கிச்) சென்றான்.

சடாயு தேர்க் குதிரைகளைக் கொன்று (3438) தேர்ப் பாகனையும் அழித்தமை (3436) யால் இராவணன் சீதையைத் தேரில் கொண்டு செல்ல முடியாமையால் நிலத்தொடு பருத்த தோள் மீது ஏந்தி இலங்கையை நோக்கிச் சென்றான் என இப்பாடலில் கவிஞர் கூறியுள்ளார்.

MY COMMENTS

(இதில் வரும் புதிய விஷயங்களுக்கு விளக்கம் தேவைப்படுகிறது! முன்னொரு பாடலில் தேரில் (விமானத்தில்) 16 குதிரைகள் இருந்ததாகக் கம்பர் சொல்கிறார் ; அவை பொம்மைகளா ? இப்போது உரைகாரர் , தேர்ப்பாகன் அழிந்ததாகச் சொல்கிறார்; அப்படியானால் ராவணன் தேர்ப்ப்பாகனுடன் ( ஏர் பிளேன் பைலட்) வந்தனா ?)

***

197.வஞ்சியை அரக்கனும்     வல்லை கொண்டுபோய்,

செஞ்செவே திரு உருத்     தீண்ட அஞ்சுவான்,

நஞ்சு இயல் அரக்கியர்     நடுவண், ஆயிடை,

சிஞ்சுப வனத்திடைச்     சிறைவைத்தான் அரோ.

அரக்கன் ஆகிய இராவணனும் வஞ்சிக் கொடி போன்ற சீதையை விரைவாக எடுத்துக் கொண்டு போய் சீதையை நேராகத் தொடுதற்கு அஞ்சியவனாய் அசோக வனத்தின் இடையில், நஞ்சின் தன்மை பொருந்திய கொடிய அரக்கியர்களுக்கு நடுவில் (சிறைக் காவலில் வைத்தான்.( சிஞ்சுபவனம் – அசோக வனம்)

கோதாவரி  தீரத்தில் சீதை கடத்தப்பட்டாள்; அவளே கோதாவரியே! குயிலே! மயிலே!  நீங்கள் எல்லாம் உதவக்க்கூடாதா என்று அலறியதைக் கம்பன் கூறினான் ; இப்பொழுது திடீரென்று ஒரே பாட்டில் இலங்கைக்கு காட்சியை மாற்றிவிட்டான் : எவ்வளவு தூரம் விமானத்தில் பறந்தனர் ? எவ்வளவு நேரம் ஆயிற்று ? என்பது நம் மனத்தில் எழும் சந்தேகங்கள் ; பின்னர் ஒரே பாட்டில் காட்சியை மீண்டும் கோதாவரி நதி தீர காட்டுக்கு மாற்றிவிடுகிறான்!

***

198. கம்பனே நான் காட்சியை மாற்றுகிறேன் என்று சொல்லி விடுகிறான்!

இந் நிலை இனையவன்     செயல் இயம்பினாம்;

‘பொன் நிலை மானின்பின்     தொடர்ந்து போகிய

மன் நிலை அறிக‘     என, மங்கை ஏவிய

பின் இளையவன் நிலை     பேசுவாம் அரோ.

இராவணனது செயலை இவ்வாறாக எடுத்துக் கூறினோம்; அடுத்ததாக  பொன் மானின் பின் போனவனைத் தொடர்ந்து சீதையின் கட்டளைப் படி போன இலக்குவனின் செயலைக் கூறுவோம்.

SIGNATURE AND STYLE OF KAMBAN:

(கம்பன் பாடல்களைக் கண்டுபிடிக்க உதவும் முத்திரை , பல பாடல்களை அரோ என்று முடிப்பான் ; அதற்கு பொருள் எதுவும் இல்லை ; செய்யுள் இலக்கணத்துக்கு உதவும் ஒரு சொல் ; இது கம்பனின் ஸ்டைல்!)

***

199.கம்பன் இந்தப்பாடலில் ராமன் பூணூல் பற்றி வலிய செப்புவது நோக்கற்பாலது; அத்தோடு சீதை, ஜடாயு, ராமன் வாயிலாக விதியின் வலிமை பற்றி அவ்வப்பொழுது கம்பன் பேசுவதும் குறிப்பிடத்தக்கது:

என்று உன்னி, ‘என்னை விதியார் முடிப்பது?’

என எண்ணி நின்ற இறையை,

பொன் துன்னும் வில் கை இள வீரன்

வந்து புனை தாள் இறைஞ்சு பொழுதில்,

மின்துன்னு நூலின் மணி மார்பு

அழுந்த, விரைவோடு புல்லி, உருகா-

நின்று, ‘உன்னி வந்த நிலை என்கொல்?’

என்று, நெடியோன் விளம்ப, நொடிவான்:

ஊழ்வினையால் என்ன கேடு வர இருக்கிறதோ? என்று எண்ணி நின்ற இராமன், தன் காலில் விழுந்த அழகிய வில் பிடித்த இலக்குவனைத்தன் முப்புரி நூல் அணிந்த மார்பில் இறுகத் தழுவி, நீ வந்த காரணம் என்ன என்று கேட்க, அதற்கு இலக்குவன் விடை கூறலானான்

***

200.அண்ணா! உன் பெண்டாட்டி சீதை, “நீ இப்பொழுது ராமனைத் தேடிக் கண்டுபிடிக்காவிடில் நான் தீயில் விழுந்து சாவேன் என்று காட்டுக்குள் ஒடத் துவங்கினாள்”- அதனால் வந்தேன் என்று இலக்குவன் சொன்னவுடன் “தம்பி உன் குற்றமும் அல்ல ; சீதை குற்றமும் அல்ல; இது எல்லாம் என் குற்றம்” என்று ராமன் சொன்னான்.

“ஏகாது நிற்றிஎனின், யான் நெருப்பினிடை

வீழ்வென்” என்று, முடுகா,

மா கானகத்தினிடை ஓடலோடும், மனம்

அஞ்சி, வஞ்ச வினையேன்,

போகாது இருக்கின், இறவாதிருக்கை

புணராள் எனக்கொடு உணரா,

ஆகாது இறக்கை; அறன் அன்று; எனக்கொடு,

இவண் வந்தது‘ என்ன, அமலன்,

‘நீ இராமனைத் தேடிச் செல்லா விட்டால் நான் நெருப்பில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வேன்’ என்று காட்டில் ஓடத் தொடங்கியதால், அஞ்சிப் போகாமல் இருந்தால் பிராட்டி இறந்து படுவார், அது தர்மம் ஆகாது என்று எண்ணி, உன்னைத் தேடி வந்தேன்’ என இலக்குவன் இராமனிடம் கூறினான்

ராமன் குற்றத்தை ஒப்புக்கொண்ட பாடல்

வந்தாய் திறத்தில் உளதன்று, குற்றம்;

மடவாள் மறுக்கம் உறுவாள்,

சிந்தாகுலத்தொடு உரைசெய்த செய்கை

அது தீரும் என்று தெளிவாய்;

முந்தே தடுக்க, ஒழியாது, எடுத்த

வினையேன் முடித்த முடிவால்,

அந்தோ கெடுத்தது‘ என, உன்னி உன்னி

அழியாத உள்ளம் அழிவான்.

(சீதையைத் தனியே விட்டு விட்டு) வந்த உன்னனிடம்

குற்றம் எதுவும் இல்லை; பேதைமைப் பண்புள்ள சீதை, மனத் தடுமாற்றம் உடையவளாய் மனத்தில் தோன்றிய பெரும் துயரத்தோடு சொல்லியதும் ,அவள் சொல்லால் தோன்றிய வருத்தம் தீரும் என்று நினைத்து நீ இங்கு வந்ததும் எனக்குப் புரிகிறது ; (வந்தது மாயவல் அரக்கன் கொண்ட பொன் மான் உரு என்று) தெளிந்து கொண்டு (நீ) முன்பே என்னைத் தடுத்தாய் ;

அதையும் கேட்காமல்  நான் எடுத்த முடிவு  ஐயோ என்னைக் கெடுத்து விட்டது என்று எண்ணி எண்ணி; என்றும் அழிந்து வருந்தாத (தன்) மனம் வருத்தம் அடைந்தது

( ‘சீதை மனத்தில் பெருந்துயர் கொண்டு சொல்லிய சொல்லை ஏற்று அவளைத் தனியே விட்டு விட்டு வந்தது உன் குற்றம் அன்று. அவளும் மாய மானின் குரலை என் குரல் என்று எண்ணி உன்னிடம் கூறியதால் அவளிடமும் எக்குற்றமும் இல்லை. நீ தடுத்தும் அதை ஏற்காது மாய மானைத் தொடர்ந்து சென்று உங்கள் இருவரின் செயல்களுக்கும் காரணமான என்னால் தான் இத் துன்பம் ஏற்பட்டது’ என இராமன்இலக்குவனிடம் கூறினான். )

–SUBHAM—

TAGS -கம்ப ராமாயணம்,  200 கேள்விகள், வால்மீகி,  ஜடாயு, ராவணன் போர், ராமன் குற்றம்

Leave a comment

Leave a Reply