கம்பராமாயணத்தில் 220 கேள்விகள் (Post.16,351)

Written by London Swaminathan

Post No. 16,351

Date uploaded in London – 28 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கம்ப ராமாயணத்தை முழுக்க படிக்க வேண்டாம்; சுவையான பகுதிகளை மட்டும் படியுங்க!! கம்பன் ஒவ்வொரு விஷயத்துக்கும் 10 அல்லது 15 பாடல்களைச் சொல்வதால் 10,000 பாடல்கள் கிடைக்கின்றன; அவைகளைப் படிக்க முடியாதோருக்கு சுவையான பகுதிகளை மட்டும் கேள்வி – பதில் வடிவில் தருகிறேன்; எப்போதும் என் பிளாக்குகளில் இலவசமாகக் கிடைக்கும் ; தொடர்ந்து படியுங்கள்:

இதற்கு முன்னர் வெளியிட்ட 210 கேள்விகளும், விடைகளும்  எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.

***

211

லெட்சுமணனிடம் காதல் மொழி பேசிய அயோமுகியின் விசித்திரமான ஆபரணங்கள் என்ன ?

212

லெட்சுமணன் நீ யார் என்று வினவியவுடன்அயோமுகி I LOVE YOU   ஐ லவ் யூ-சொன்னதைக் கம்பன் எப்படிப் பாடினான் ?

213

காதலை ஏற்க மறுத்தவுடன் இலக்குவனைத் தூக்கிக் கொண்டு அயோமுகி ஆகாயத்தில் பறந்தது எவ்வாறு ?

214

அயோமுகியின்  பிடியிலிருந்து லெட்சுமணன் தப்பியது எப்படி ?

215

இலக்குவனைக் கண்டவுடன் ராமனுக்கு இழந்த கண்கள் திரும்பி வந்தது போல இருந்தது என்ற உவமையை உரைகாரர்கள் எதனுடன் ஒப்பிடுகின்றனர் ?

216

ஐம்பது யோஜனை தூரம் நடந்த பின்னர்  ராம லட்சுமணர் சென்ற இடத்தின் பயங்கர நிலைமை என்ன ?

217

கவந்தனின் நீண்ட கைக்குள் அகப்பட்டவுடன் ராமன் மகிழ்ச்சி அடைந்து, ஏமாந்தது எங்ஙனம் ?

218

வயிறும் வாயும் ஒன்றாகவுள்ள கவந்தனைக் கண்டு ராமன் எப்படி வியந்தான் ?

219

ராம லெட்சுமணார் வாள் பட்டவுடன், கவந்தன் தெய்வ உருவம் பெற்றது ஏன் ?

220

சாபம் நீங்கிய கவந்தன் ராமபிரானை எப்படித் துதித்தான் ?

XXXXXXXXXXXXXX

விடைகள்

211.அயோமுகியின் வினோத ஆபரணங்கள்

நீள் அரவச் சரி,     தாழ் கை, நிரைத்தாள்;

ஆள் அரவப் புலி     ஆரம் அணைத்தாள்;

யாளியினைப் பல     தாலி இசைத்தாள்;

கோள் அரியைக் கொடு     தாழ் குழை இட்டாள்;

அயோமுகி பாம்புகளை வளையலாகவும் உறுமுகிற ஆண்புலிகளைக் (கோத்து) மாலையாகவும்  யாளிகளைக் கோர்த்து தாலியாகவும்    சிங்கங்களைக் காதணியாகவும் அணிந்தவள்.  (அரக்கிகள் கூடத் தாலி அணிந்ததைக் கம்பன் குறிப்பிடுவது நோக்கற்பாலது!)          

பற்றிய கோள் அரி, யாளி, பணிக்கண்

தெற்றிய பாத சிலம்பு சிலம்ப,

இற்று உலகு, யாவையும் ஈறுறும் அந் நாள்,

முற்றிய ஞாயிறு போலும் முகத்தாள்;

பாம்பாகிய கயிற்றில் சிங்கம், யாளி ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டிப் பாதச் சிலம்பாக அணிந்தவள். உலகம் அழியும் காலத்தில் மிக்க வெப்பத்துடன் சுடர் விடும் கதிரவன் போன்ற முகத்தினை உடையவள்

ஆழி வறக்க முகக்க அமைந்த

மூழை எனப் பொலி மொய் பில வாயாள்;

கூழை புறத்து விரிந்தது ஓர் கொட்பால்,

ஊழி நெருப்பின் உருத்தனை ஒப்பாள்;

அயோமுகியின் பெரிய வாய் கடலை முகந்து வறளச் செய்யும் பெரிய அகப்பை போல் விளங்கியது. அவளது விரிந்த தலைமயிர் ஊழிக் காலத்து நெருப்பைப்போல விளங்கியது

****

212.அயோமுகியின் காம வெறி

பேசினன்; அங்கு அவள்     பேசுற நாணாள்;

ஊசல் உழன்று அழி     சிந்தையளும்தான்,

‘நேசம் இல்,     அன்பினளாயினும், நின்பால்

ஆசையின் வந்த     அயோமுகி’ என்றாள்.

கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் என் பெயர் அயோமுகி ; உன் மீது எனக்கு ஆசை என்று ஊசலாடும் மனத்துடன் வந்த அயோமுகி செப்பினாள்.

****

213.இலக்குவனை மந்திரம் போட்டுத் தூக்கிச் சென்றாள் அயோமுகி

மோகனை என்பது     முந்தி முயன்றாள்;

மாக நெடுங் கிரி     போலியை வவ்வா

ஏகினள் – உம்பரின்     இந்துவொடு ஏகும்

மேகம் எனும்படி –     நொய்தினின் வெய்யாள்.

அயோமுகி மோகனை என்ற மாய மந்திரத்தால் இலக்குவனை மயக்கி, அவனை எடுத்துக் கொண்டு, நிலவுடன் சேர்ந்து செல்லுகிற மேகம் போல வானத்தில் விரைந்து சென்றாள்.

***

214.     பேர்ந்தான், நெடு     மாயையினில் பிரியா;

ஈர்ந்தான், அவள் நாசி     பிடித்து, இளையோன்;

சோர்ந்தாள் இடு பூசல்     செவித் துளையில்

சேர்ந்து ஆர்தலுமே,     திருமால் தெருளா,

மோகனை மாயையில் இருந்து நீங்கிய லக்குவன்,அயோமுகியின்

மூக்கைப் பிடித்து அறுத்தான். தன் உறுப்பு அறுப்புண்டதனால் அவள் எழுப்பிய பேரொலி இராமனின் காதுகளில் பட்டது.

இலக்குவன் தன்னைச் சந்தித்துத் துயர்விளைவித்தவரை வென்று விட்டான் என்று  யூகித்து ராமன்  அத்திசை நோக்கி வந்தான்.

***

215.’வந்தனென் அடியனேன்; வருந்தல்,

வாழி! நின்

அந்தம் இல் உள்ளம்’ என்று,

அறியக் கூறுவான்,

சந்த மென் தளிர் புரை

சரணம் சார்ந்தனன்;

சிந்தின நயனம்

வந்தனைய செய்கையான்.

இலக்குவன் தன்னைத் தேடி வந்த இராமனுடைய தாமரைத் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினான். அவனைத் தன் கண் போல் எண்ணியிருந்த இராமன்  இழந்த கண்ணைப் பெற்றவன் போல் மகிழ்ந்தான்.

இராமனின் கணையாழியைப் பெற்ற சீதையின் மகிழ்ச்சியைக் கூறவந்த கவிஞர் சுந்தர காண்டத்தில்

இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்,

பழந்தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள்;

குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள்

உழந்து விழி பெற்றது ஓர் உயிர்ப் பொறையும் ஒத்தாள் (5292)என்ற பாடலை இதனோடு ஒப்பு நோக்கிக் காண்க.

****

216.கவந்தன் வாழும் பயங்கர வனத்தைக் காணுதல்

ஐ-ஐந்து அடுத்த யோசனையின்

இரட்டி, அடவி புடையுடுத்த

வையம் திரிந்தார்; கதிரவனும் வானின்

நாப்பண் வந்துற்றான்;

எய்யும் சிலைக் கை இருவரும் சென்று,

இருந்தே நீட்டி எவ் உயிரும்

கையின் வளைத்து வயிற்றின் அடக்கும்

கவந்தன் வனத்தைக் கண்ணுற்றார்.

ஐம்பது யோசனை தூரத்தைக் கடந்த இராமலக்குவர்கள் ஒருநாள் நண்பகற் பொழுதில் கவந்தன் வாழும் கானகத்தைக் கண்டார்கள்.

கபந்தம் (அல்லது கவந்தம்) என்ற வட சொல்லுக்கு முதலில் வாயகன்ற மிடா (பீப்பாய்) என்பது பொருள். மிடாவுக்கு வாய் உண்டு; உள்ளிடம் உண்டு. இதே கருத்துக்குரிய வடிவம் பெற்றவன் – வாயும் வயிறுமாக, வயிற்றிலே வாயனாக இருப்பவன். இந்திரனின் வச்சிராயுதம் தாக்கியதால் தலை வயிற்றுள் போய் வயிற்றில் வாயனாக உருமாறிய அரக்கனுக்கு கவந்தன் என்பது பெயராயிற்று. இராமலக்குவரின் வாளால் பிளக்கப்படும் வரை இதே உருவத்தில் இருக்குமாறு சபிக்கப்பட்டவன்  இவன்.

கவந்தன் கதை: தனு என்னும் பெயருடைய கந்தருவன் தூலசிரசு என்ற முனிவரின் வடிவத்தை எள்ளினான். சினமுற்ற முனிவரின் சாபத்தால் கவந்தன் ஆயினான். இந்திரனின் வச்சிராயுதம் தாக்கியதால் தலை வயிற்றுள் ஆழ்ந்தது. இவன் கரங்கள். ஒரு யோசனை நீளம் கொண்டனவாம். தன் கரங்களுக்கு உட்பட்ட எதனையும் கவர்ந்து, வயிற்றுள் திணித்து உணவாகக் கொள்வது இவன் வாழ்வு.

****

217.ராமன் ஏமாந்தான் !

இளவலை நோக்கினன்     இராமன், ‘ஏழையை

உளைவு செய் இராவணன்     உறையும் ஊரும், இவ்

அளவையது ஆகுதல் அறிதி;     ஐய! நம்

கிளர் பெருந் துயரமும்     கீண்டது ஆம்’ என,

கவந்தன் கரங்களின் நெருக்கலால் ஏற்பட்ட சப்தம் என்பதை

அறியாமல், ஆரவாரங்களும் நிலை குலைவுகளும் அரக்கர்

சேனையின் வரவால் விளைவன என்று தவறாக நம்பினர். சேனையின் வரவு என்று கருதியதால், அச் சேனையை ஏவும் இராவணனது இருக்கையும் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்பது  இராமனின் கருத்து. ‘இராவணன் சேனை வந்து விட்டதால் போரிட்டு வென்று சீதையை மீட்டுவிடலாம்’ என்ற நினைப்பினால், ‘நம் பெருந்துயரும் கீண்டது’ என்கிறான் இராமன்.

***

218.இராமலக்குவர் கவந்தன் வாயைக் கண்டு கருதியவை

3662.  நீர் புகு நெடுங் கடல்     அடங்கு, நேமி சூழ்

பார் புகு நெடும் பகு     வாயைப் பார்த்தனர்;

‘சூர் புகல் அரியது ஓர்     அரக்கர் தொல் மதில்

ஊர் புகு வாயிலோ இது?’     என்று, உன்னினார்.

ஆறுகள் புகுகின்ற பெரிய கடல்களெல்லாம் தன்னுள் அடங்கப்பெற்ற சக்கரவாள மலையால் சூழப்பட்டுள்ள உலகமே நுழையும் படியாக உள்ள பெரிய தாயும்  பிளந்துள்ளதாயும் உள்ள (கவந்தனது) வாயைப் பார்த்தார்கள் .தேவர்களும் உள்ளே செல்ல முடியாத அரக்கரின் ஊருக்குள் புகும் வாசலோ என்று இராமலக்குவர் கருதினார்கள்.

கடலைச் சூழ்ந்து உலக எல்லையில் வட்டமாக ஒரு மலை இருப்பதாகச் சொல்வது புராண மரபு. சக்கரம் போல் வட்டமாக அமைந்த சக்கரவாள மலை அது.

****

219.கவந்தனின் புதுத் தோற்றம்

ஆளும் நாயகன் அம் கையின்     தீண்டிய அதனால்,

மூளும் சாபத்தின் முந்திய     தீவினை முடித்தான்;

தோளும் வாங்கிய தோமுடை     யாக்கையைத் துறவா,

நீளம் நீங்கிய பறவையின்,     விண் உற நிமிர்ந்தான்.

உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தையும் ஆண்டருளும் பரமனாகிய இராமன்,  தன் அழகிய கையினால் தொட்டதினால், கவ ந்தன் சாபம் நீங்கி,  உடம்பினைவிட்டு கூட்டை விட்டு வெளியேறிய பறவையைப் போல வானத்தில் தோன்றினான்.

இராமபிரானின் படைக்கலத்தான் தீண்டப் பெற்றவர்கள் வினைப்பயன் நீங்கியவராய்ப் பெரும்பேறு பெறுவதாகக் கூறுவது கம்பராமாயணத்தின் சிறப்புப் போக்கு. அவ்வாறு தீண்டுவது பரமன்அருள்கின்ற தீட்சை ஆகிறது.

***

220.ராமனின் புகழ் பாடும் பாடல்கள் நிறைய உள்ளன; இதோ ஒரு பாடல்:

‘ஆதிப் பிரமனும் நீ!     ஆதிப் பரமனும் நீ!

ஆதி எனும் பொருளுக்கு அப்பால்     உண்டாகிலும் நீ!

“சோதிச் சுடர்ப் பிழம்பு நீ!     என்று சொல்லுகின்ற

வேதம் முறைசெய்தால், வெள்காரோ     வேறு உள்ளார்?

எல்லாவற்றுக்கும் தொடக்கமாய் உள்ள நான்முகனும் நீயே;  எல்லாவற்றுக்கும் ஆதியாகிய (நான்முகனுக்கும்) மூலப் பொருளும் நீயே!;  மூலம் என்று சொல்லப்படுவதாகிய பொருளுக்கும்

கடந்ததாய் ஏதேனும் ஒன்று இருந்தால் அதுவும் நீயே;  ‘பரஞ்சுடராய் ஒளிரும் ஒளித்திரள் நீ என்று  உன்னைப் போற்றுகின்ற வேதங்கள் முறையிட்டால் வேதம் கூறும் இவ்விலக்கணத்துள் அடங்காத பிறர்தெய்வங்களெல்லாம்; வெட்கப்பட மாட்டார்களோ?

‘முடிச் சோதியாய்! உனது முகச் சோதி மலர்ந்ததுவோ

அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ

படிச் சோதி ஆடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்

கடிச் சோதி கலந்ததுவோ? திருமாலாய் கட்டுரையே

என்ற திருப்பாசுரம் திருமாலின் பல் கோலமும் பல்கலனும்

சோதிப்பாங்காய் ஒளிர்வதைக் கூறும். (நாலாயிர. 3121)

பரஞ்சோதி! நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்றோர்

பரஞ்சோதி இன்மையில் படி ஓவி நிகழ்கின்ற

பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்

பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே

என்ற திருப்பாசுரத்துள் (3123) திருமாலே பரஞ்சோதி என்ற

கருத்து அமைந்தவை இரண்டும் நம்மாழ்வார் பாடல்களாகும்..

‘சோதியாய்த் தோன்றும் உருவமே (திருவாசகம், கோயில் திருப்பதிகம் 1) என மணிவாசகரும் இறைவனைச் சோதியாய்க் கண்டு, காட்டுவர். பரம்பொருளைச் சோதி எனக் கொள்வது பல் சமயத்துக்கும் உடன்பாடு. ஞான தீட்சை பெற்ற கவந்தனுக்கு அக்காட்சி வாய்த்தது.

–SUBHAM—

TAGS- கவந்தன், அயோமுகி, கம்பராமாயணம்,  220 கேள்விகள்,

Leave a comment

Leave a Reply