
My picture of Sabari from 100 year old book
Written by London Swaminathan
Post No. 16,354
Date uploaded in London – 29 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கம்ப ராமாயணத்தை முழுக்க படிக்க வேண்டாம்; சுவையான பகுதிகளை மட்டும் படியுங்க!! கம்பன் ஒவ்வொரு விஷயத்துக்கும் 10 அல்லது 15 பாடல்களைச் சொல்வதால் 10,000 பாடல்கள் கிடைக்கின்றன; அவைகளைப் படிக்க முடியாதோருக்கு சுவையான பகுதிகளை மட்டும் கேள்வி – பதில் வடிவில் தருகிறேன்; எப்போதும் என் பிளாக்குகளில் இலவசமாகக் கிடைக்கும் ; தொடர்ந்து படியுங்கள்:
இதற்கு முன்னர் வெளியிட்ட 220 கேள்விகளும், விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.

221
ராமரின் மூலம் சுய உருவம் பெற்ற கவந்தன் தன் வரலாறு கூறிய பின்னர், எல்லோருக்கும் உதவி அவசியம் ; சிவபெருமான் கூட பூத கணங்களை உதவிக்கு வைத்துக்கொண்டிருக்கிறார் ; உங்களுக்கும் உதவி தேவை என்று சொன்ன பொன்மொழி என்ன ?
222
சபரியைச் சந்திப்பாயாக; சுக்ரீவனைத் துணைக்குப் பெறுவாயாக என்று சொன்னது யார் ?
223
இப்போது யானைகளைப் பாதுகாக்க தாய்லாந்திலும் பிரிட்டனிலும் ஏராளமான சாரிட்டிகள் பண வசூல் செய்கின்றன! கம்பன் காட்டும் யானைப் பிரியன் யார் ? அவருக்கு ஏன் மிஸ்டர் யானை MR ELEPHANT என்ற பெயர் வந்தது ?
224
சார் தாமஸ் மூர் உடோபியா-வைக் கற்பனையில் கண்டுபிடித்து (Sir Thomas More coined the term in his 1516 Latin book Utopia) எழுதுவதற்கு முன்னரே கம்பன் கண்ட பூலோக சொர்க்கம் எங்கே இருக்கிறது ?
225
மதங்காஸ்ரமத்தில் இருந்த தவச் செல்வி – கிழவி சபரி – ராமரை எப்படி உபசரித்தாள் ?
226
சபரி இருந்த இடத்தில் ராம லெட்சுமணர் கண்ட அதிசயக் காட்சி என்ன ?
227
சம்ஸ்க்ருதம் முதலிய 18 பாஷைகளின் பெருமையைக் கம்பன் உவமித்தது எவ்வாறு ?
228
பம்பா நதி தீரத்தின் இயற்கை அழகினை இருபது பாடல்களுக்கு மேல் கம்பன் வருணிக்கிறான்; ஒரு பாடலில் காட்டில் நடந்த நடனம், நட்டுவாங்கம் பற்றி எப்படிப் பாடினான் ?
229
செடி, கொடி, மலர், பறவைகளைக் கண்டு ராமன் புலம்பியதை கம்பன் நமக்கு எப்படிச் அழகாகச் சொல்கிறான் ?
230
கீழ்கண்ட இரண்டு பாடல்களில் கம்பன் சொல்ல வந்த ஒரே வரிச் செய்தி என்ன ? நீங்களே சொல்லலாம் !
3747. பூஒடுங்கின; விரவு புள்
ஒடுங்கின, பொழில்கள்;
மா ஒடுங்கின; மரனும் இலை
ஒடுங்கின; கிளிகள்
நா ஒடுங்கின; மயில்கள் நடம்
ஒடுங்கின; குயில்கள்
கூ ஒடுங்கின; பிளிறு குரல்
ஒடுங்கின, களிறு.
3748. மண் துயின்றன; நிலைய மலை
துயின்றன; மறு இல்
பண் துயின்றன; விரவு பணி
துயின்றன; பகரும்
விண் துயின்றன; கழுதும் விழி
துயின்றன; பழுது இல்
கண் துயின்றில, நெடிய கடல்
துயின்றன களிறு.
*****************************************



விடைகள்
221 கடலைக்.கடப்பதற்கு படகு தேவை; சீதையைத் தேடுவதற்கு உதவி தேவை – கவந்தன் உதிர்த்த பொன்மொழி
‘கணை உலாம் சிலையினீரைக் காக்குநர் இன்மையேனும்
இணை இலாள் தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும்;
புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது; அன்னதேபோல்,
துணை இலாதவருக்கு இன்னா, பகைப் புலம் தொலைத்து நீக்கல்.
வில் ஏந்திய உங்களை காக்க வேண்டியவர்களோ காக்கும் தகுதியுடையவர்களோ எவரும் இல்லை; ஆயினும் சீதா பிராட்டியாரைத் தேடுவதற்கு பிறர் துணையை நாடிப்பெறுதல் அவசியமாகும்; தெப்பம் இல்லாதவர்களுக்கு கடலைக் கடப்பது
அரிது; அதைப் போல; பகைவர்களை அழித்தொழிப்பது துணை அற்றவர்களுக்குத் துன்பம் விளைவிக்கும்.
***
222.சத் சங்கம் அவசியம்
.’ஆயது செய்கை என்பது, அறத்துறை
நெறியின் எண்ணி
தீயவர்ச் சேர்க்கிலாது, செவ்வியோர்ச்
சேர்த்து, செய்தல்;
தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியைத்
தலைப்பட்டு, அன்னாள்
ஏயது ஓர் நெறியின் எய்தி,
இரலையின் குன்றம் ஏறி,
அறநெறி இது என முறைப்படி எண்ணி (துணை சேர்த்துக்
கொள்ள வேண்டுமே என்பதற்காகத்) தீயவர்களைச் சேர்த்துக்கொள்ளாமல்; நல்லவர்களையே (சத் சங்கம்) துணைவராகச் சேர்த்துக்கொண்டு செயல்படுங்கள்; உயிர்களுக்குத் தாயைவிட அன்பொடு உதவுகின்ற சவரியைச் சந்தித்து, அவள் சொன்ன வழியிலே போய், இருசிய முக மலை மீது ஏறுவீர்களாகுக.
‘கதிரவன் சிறுவன் ஆன கனக
வாள் நிறத்தினானை
எதிர் எதிர் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து,
அவனின், ஈண்ட,
வெதிர் பொரும் தோளினாளை நாடுதல்
விழுமிது’ என்றான்.
அதிர் கழல் வீரர்தாமும், அன்னதே
அமைவது ஆனார்.
சூரிய தேவனின் மகனும் பொன்போல ஒளிகொண்ட நிறம் உடையவனும் ஆகிய சுக்கிரீவனை சந்தித்து நண்பனாக ஏற்று அவன் உதவியால், விரைவாக சீதையை தேடுவது சிறந்தது என்று கவந்தன் கூறினான்.
****
223.மதங்க (யானை) முனிவரது ஆச்சிரமம் ELEPHANT SANCTUARY
ஆன பின், தொழுது வாழ்த்தி, அந்தரத்து
அவனும் போனான்
மானவக் குமரர்தாமும் அத் திசை வழிக்
கொண்டு ஏகி
கானமும் மலையும் நீங்கி, கங்குல் வந்து
இறுக்கும் காலை,
யானையின் இருக்கை அன்ன, மதங்கனது
இருக்கை சேர்ந்தார்.
அதன்பின், கவந்தன் இராம இலக்குவரைத் தொழுது வாழ்த்திவிண் வழியே போனான். மனு மரபில் தோன்றியவர்களாகிய இராமலக்குவரும் கவந்தன் குறித்த இரலை மலை இருந்த திசை நோக்கிச் சென்றனர். காடும் மலையும் கடந்துஇரவு நேரம் வந்து சேர்ந்தபோது, யானைகள் இருக்கும் இடம் போன்ற மதங்க முனிவரது ஆச்சிரமத்தை அடைந்தார்கள்.
ELEPHANT SANCTUARY
மதங்க முனிவர் யானைகளிடத்துப் பரிவு கொண்டவராய் அவற்றைப் பேணியவர். ஆதலின், அவருடைய ஆச்சிரமச் சூழலில் யானைகள் மிகுதியாக வாழ்ந்தன. எனவே, யானைகளின் இருப்பிடந்தானோ என்று எண்ணும் வகையில் அவர் தம் ஆச்சிரமம் அமைந்திருந்தது.
***
224.மதங்க முனிவரின் தவச் சாலை UTOPIA
கண்ணிய தருதற்கு ஒத்த கற்பகத்
தருவும் என்ன,
உண்ணிய நல்கும் செல்வம் உறு நறுஞ்
சோலை – ஞாலம்
எண்ணிய இன்பம் அன்றி,
துன்பங்கள் இல்லை ஆன,
புண்ணியம் புரிந்தோர் வைகும் – துறக்கமே
போன்றது அன்றே!
நினைத்ததை எல்லாம் தரவல்ல கற்பக
மரத்தைப் போல, உண்பதற்கு (ஏற்ற காய் கனி
கிழங்கு தேன் போன்றவற்றை) வழங்குகின்ற
வளம் மிக்கதும் நறுமணம் உள்ளதுமான (மதங்காசிரமம்
அமைந்த) சோலையானது உலகத்தார் அடைய
எண்ணிய இன்பத்தைத் தவிரத் துன்பமே இல்லா, பூலோக சொர்க்கம் ஆகும். புண்ணியம் செய்தோர் மட்டுமே வாழும் சுவர்க்கத்தையே நிகர்த்தது. விண்ணுலகத்துக் கற்பக மரம் தன் கீழிருப்போர் கேட்பனவற்றையெல்லாம் தரவல்லது;
கற்பகம் போன்ற மரங்கள் செறிந்து இன்பம்
அளிக்கவல்லதாய் இருப்பதால் மதங்கா சிரமச் சோலைக்குச் சுவர்க்கம் உவமையாயிற்று. சுவர்க்கத்தில் உள்ள தேவர் துன்பம் உறுதலும் உண்டு; ஆயின், மதங்கச் சோலையில் உள்ளார் தவ மேம்பாட்டாலும், இறைவனுக்கு ஆட்பட்ட சிறப்பாலும் இன்பமே தவிரத் துன்பம் அறியார். ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்றெடுத்த திருவாக்கில் ‘இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை’ என்று ஓதிய அப்பர் பெருமான் பாங்கினை எண்ணுக. ‘வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப்படும்’ (265) என்ற திருக்குறளின் பொருள் இப்பாடலில் கம்பரால் போற்றப்பட்ட பாங்கினை எண்ணி உணர்க.
• Sir Thomas More coined the term in his 1516 Latin book Utopia. He combined the Greek words ou (“not, no”) and topos (“place”) to mean “no place,” while also playing on eutopia (“good place”).
• Core Idea: It represents a society free from major human evils like poverty, greed, corruption, and suffering, featuring balanced laws, equality, and peace.
***
225.அருவி போல ஆனந்தக் கண்ணீர் விட்டாள் கிழவி சபரி!
225.ஆண்டு, அவள் அன்பின்
ஏத்தி, அழுது இழி அருவிக்கண்ணள்,
‘மாண்டது என் மாயப் பாசம்;
வந்தது, வரம்பு இல் காலம்
பூண்ட மா தவத்தின் செல்வம்;
போயது பிறவி’ என்பாள்
வேண்டிய கொணர்ந்து நல்க,
விருந்துசெய்து இருந்த வேலை,
அவ்வேளையில், சவரி இராமபிரானை அன்பினால் புகழ்ந்து
(பக்திக் கனிவினால்) அழுது, வழிகின்ற அருவிபோன்ற
கண்ணீர் உடையவளாய்; பொய்யான என் உலகப் பற்று அழிந்தது;
அளவற்ற காலம் மேற்கொண்டிருந்த பெருந் தவத்தின் பயன் என்னை வந்தடைந்தது. இனிமேல் பிறப்பு ஒழிந்தது – என்று சொல்லி ஏராளமாகக் கனி முதலியவற்றைக் கொண்டு வந்து
அவள் விருந்து படைத்தாள்.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குதல் பக்தியின் இயல்பான
மெய்ப்பாடு. இங்கே பக்தியுணர்வு மட்டுமன்றி, பரம்பொருளாய
இராமனைப் புறக்கண்ணாலும் காணப்பெற்ற மகிழ்ச்சியும் கண்ணீர்
அருவிக்குக் காரணமாயிற்று. உலகப் பற்று என்பது ஒரு பொய்த் தோற்றத்தால் ஏற்படுவது என்பதால் ‘மாயப் பாசம் என்றார். முன்னையோர் சேகரித்து விட்டுச் செல்வது செல்வம் ஆகாது; தம் முயற்சியால் சேர்ப்பதே செல்வம், பயன் தான் செய்த தவத்தின் முடிவான பயனைச் செல்வம் என்றாள் சவரி. அச் செல்வப் பயன் பிறவாமைப் பேறாகும்.
****
226.ராம லெட்சுமணன் கண்ட அதிசயக் காட்சி
மும்மூர்த்திகளும் இந்திரனும் அழைத்தபோது போகாமல் ராமனைத் தரிசித்த பின்னர் பிறப்பு அறும் என்று காத்திருந்தாள் கிழவி சபரி ; ராமனின் அனுமதி பெற்று அவன் முன்னாலேயே தீ மூட்டி அதில் நுழைந்தாள் என்கிறார் வால்மீகி; கம்பனோ அதிசயக் காட்சி என்று மட்டும் செப்பிவிட்டான் .
According to Valmiki’s Ramayana (Aranya Kanda, Sarga 74), Shabari died by entering a self-created sacred fire (immolation) after meeting Lord Rama and Lakshmana.
• The Encounter: After showing Rama and Lakshmana the hermitage of Sage Matanga and serving them as honored guests, Shabari expressed her desire to depart and join her spiritual teachers (rishis) in the higher spheres.
• The Ascension: With Rama’s consent, she stepped into a sacred fire, shed her mortal body, emerged in a radiant divine form (divine angel), and ascended to heaven
பின், அவள் உழந்து பெற்ற
யோகத்தின் பெற்றியாலே
தன் உடல் துறந்து, தான் அத்
தனிமையின் இனிது சார்ந்தாள்;
அன்னது கண்ட வீரர் அதிசயம்
அளவின்று எய்தி,
பொன் அடிக் கழல்கள் ஆர்ப்ப,
புகன்ற மா நெறியில் போனார்.
சவரி வழி சொல்ல இருவரும் கேட்ட பிறகு அரிய முயற்சியால் வருந்திப் பெற்ற யோக நெறியின் சிறப்பாலே தன் உடம்பை விடுத்து, அவள் அந்தத் தனிப்பெரு நிலையினை அடைந்தாள்; அதனை நேரிலே கண்ட வீரர்களாகிய இராமனும் இலக்குவனும் அளவற்ற அதிசயம் அடைந்தார்கள் ; சவரி சொல்லிய வழியிலே போனார்கள்.
யோக நெறி உணர்தலும் அதனைப் பின்பற்றலும் அருமை; அதனைப் பெரிதும் பாடுபட்டு அறிந்தவள் சவரி. அந்நெறியில் முற்றுற வெற்றி பெற்ற அவள், யோகக் கனலை எழுப்பி அவ்வழி வீடு எய்தினாள். அதனைக் கண்டு வியந்தனர். இராமலக்குவர். பின்னர் அச் சவரி சொன்ன வழியைப் பற்றி இரலை மலை நோக்கிப் பயணம் சென்றனர் .
“குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே– என்று அவ்வையாரும் விநாயகர் அகவலில் கூறியது காண்க . (கால்= காற்று= பிராணாயாமம் )
உடலினைச் சிதை மூட்டித் தகனம் செய்யாமல் உதறிச் சென்றது யோகத் தவம். பல்துறைத் தவமுனிவர்களைக் கண்டறிந்த இராமலக்குவர்க்குச் சவரியின் யோக முத்தி புதிய காட்சி. புதுமை பற்றிய வியப்பினைக் கம்பர் ‘அதிசயம்‘ என்றார். வாழ்விலே வியப்புக்கு உரிய வெற்றிக் காட்சியைக் காணும் பேறு பெற்றனர் என்பதை வீரக் கழல் ஒலிப்பதாகச் சொல்லி விளக்குகிறார். கவிச்சக்கரவர்த்தி.
சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து நூலிலும் இந்த அதிசயக்காட்சி வருகிறது ! பார்ப்பானும் பார்ப்பனியும் எங்களை மேலுலத்துக்கு அனுப்பு என்று சேர மன்னனிடம் வேண்டியவுடன் வேத விற்பன்னர்கள் சொன்ன முறைப்படி சேர மன்னன் யாகங்களைச் செய்தான்; பத்தாவது யாகத்தின் போது பிராமணப் புலவனும் அவனது மனைவியும் மாயமாய் மறைந்தனர் என்கிறது சங்கத் தமிழ் நூல்!
***
பத்தாயிரம் பாடல்களில், 3800 முடித்துவிட்டோம்! கிஷ்கிந்தா காண்டத்தில் நுழைவோம்!
****
227.சம்ஸ்க்ருத மொழியின் முதன்மை; கம்பன் கொடுத்த சர்ட்டிபிகேட் CERTIFICATE
ஆரியம் முதலிய பதினெண் பாடையில்
பூரியர் ஒரு வழிப் புகுந்தது ஆம் என,
ஓர்கில கிளவிகள் ஒன்றோடு ஒப்பு இல,
சோர்வு இல, விளம்பு புள் துவன்றுகின்றது;
சம்ஸ்க்ருதம் முதலான பதினெட்டு மொழிகளில், புலமை இல்லாத புல்லறிவாளர் ஓரிடத்தில் கூடி ஆரவாரிப்பது போல (இன்ன பறவையின் குரல் என) கேட்டு அறிய முடியாத ஒலிகள் ஒன்றோடொன்று தொடர்பு இல்லாமல் ,நிறுத்தாமல் ஒலிக்கும்
பறவைகள் அந்தக்குளத்தில் இருந்தன
சம்ஸ்க்ருதம் முதலிய மொழிகளில் என்று ஸம்ஸ்க்ருதத்தை முதலில் வைத்தது அதன் முதன்மையையும், பழமையையும், பெருமையையும் கம்பன் உணர்த்தியது நோக்கற்பாலது.
(ஆரியம் – சம்ஸ்க்ருதம் ; பாடை – பாஷா என்னும் வட சொல்லின் திரிபு; கிளவி – பேச்சு – ஒலி; விளம்புதல் -பேசுதல்- ஒலித்தல்; புள் – பறவை. பூரியர் – தம்மைப் பெரியராய்க் கருதும் அற்பர்.) ஆங்கிலச் சொல் SPURIOUS/ ஸ்பூரியஸ் என்பது தமிழிலிருந்து உண்டாக்கியது!
பஜ கோவிந்தம் துதியில் ஆதி சங்கரரும் இப்படி மொழிப்பிரியர்கள் காரசாரமாக விவாதித்தது கண்டு இதையெல்லாம் விடுத்து கோவிந்தனைத் துதி, கோவிந்தனைத் துதி என்று பாடியது இங்கே நம் நினைவுக்கு வருகிறது.
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே ।
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே ॥ 1 ॥
****
228. பம்பா நதிக்கரையில் நடந்த டான்ஸ்
வலி நடத்திய வாள் என வாளைகள் பாய,
ஒலி நடத்திய திரைதொறும் உகள்வன, நீர்நாய்
கலிநடக் கழைக் கண்ணுளர் என நடம் கவின,
பொலிவு உடைத்து என, தேரைகள் புகழ்வனபோலும்.
வேகமாக வீசிய வாளாயுதம் போன்று (அப்பொய்கையில்) வாளை மீன்கள் பாய்ந்து ஒலித்துக் கொண்டு சென்றன; அதே நேரத்தில் நீர் நாய்கள் அலைகளிடையே உருண்டு சென்றன; அது (சதங்கை) ஒலிக்கும் நடையுடைய கழைக்கூத்தாடிகள் போல (அவ்வாளை மீன்களின் மேல்) அழகிய நடனம் ஆடின; அதைக்கண்ட தவளைகள், நடனம் நன்றாய் இருக்கின்றதென புகழ்ந்து பேசுவன போல குரல் எழுப்பின!
வாளைகள் பாய்தலும் நீர்நாய்கள் அலைகளிடையே உருண்டு செல்லுதலும், தவளைகள் ஒலித்தலும் ஆகிய நிகழ்ச்சிகளால் பொய்கை, கழைக்கூத்து நடைபெறும் இடம்போல் விளங்கிற்று. அலை கயிற்றுவடமாகவும், நீர்நாய்கள் கயிற்றின் மேல் நடக்கும் கழைக்கூத்தாடிகளாகவும், வாளை பாய்தல் கழைக்கூத்தாடிகள் வீசும் வாளின் வீச்சாகவும், தவளைகளின் ஒலி பாராட்டுரையாகவும் கற்பனை செய்யப்பட்டன.
சபாஷ் ! பலே ஜோர்! பலே ஜோர்! என்று தவளையின் ஒலி பாராட்டுரையாகத் தோன்றியது தற்குறிப்பேற்ற அணியாகும்.
வாளை பாய்தலுக்கு வாள் வீச்சு உவமையாதல் ‘வாளென வாளை பாய்வன’ (1180) ‘வாளென வாளைபாய’ (2583) எனச் சிந்தாமணியும் ‘வாளை வாளிற் பிறழ’ (390) என நற்றிணையும் உரைப்பதில் காண்க.
***
229 ராமன் புலம்பல்
பக்தி வெறி ஏறிவிட்டால் பார்க்கும் எல்லாம் இறைவனாகத் தோன்றும் ; இதை பாரதியாரும் பாடினார்:
நந்த லாலா
ராகம்-யதுகுல காம்போதி தாளம்-ஆதி
காக்கைச் சிறகினிலே நந்த லாலா!-நின்தன்
கரியநிறந் தோன்று தையே நந்த லாலா!
பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா!-நின்தன்
பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா!
கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!-நின்தன்
கீத மிசக்குதடா நந்த லாலா!
தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!-நின்னைத்
தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா! —பாரதியார்:
அதே போல பெண்களின் நினைவு வந்து விட்டால் என்ன நேர்ந்தது என்பதை ராமனின் புலம்பலில் கம்பன் காட்டுகிறான் :
குவளை மலரைப்பார்த்து என்னைக் கண்டு நீ நகைப்பது ஏனோ — என்கிறான் ராமன்
3739. ‘பஞ்சு பூத்த விரல், பதுமம்
பவளம் பூத்த அடியாள், என்
நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம்
பூத்தாள், நிறம் பூத்த
மஞ்சு பூத்த மழைய அனைய குழலாள்,
கண்போல் மணிக் குவளாய்!
நஞ்சு பூத்ததாம் அன்ன நகையால்
என்னை நலிவாயோ?’
செம்பஞ்சுக்குழம்பு ஊட்டிய விரல்களால் , செந்தாமரை மலரில் பவளம் பொருந்தியது போன்ற அடிகளை என் மனமென்னும் மலர்ந்த தாமரை மலராகிய நிலையத்தில், (எப்பொழுதும்)விளங்குபவளும் கருநிறத்தால் சிறந்து அழகுமிக்க மேகம் போன்ற கூந்தலை உடையவளுமான சீதையின் கண்களைப்போன்று அழகிய குவளை மலரே! நஞ்சு படர்ந்தது போல (நின்)சிரிப்பால் என்னை வருத்துவாயோ?
(எப்போதும் என் மனத்தாமரையில் தங்கியிருக்கும் சீதையின் கண்களை நீ ஒத்திருத்தலால், அவள் என்னிடம் அன்புகாட்டுதல் போல் நீயும் அன்புகாட்ட வேண்டியதிருக்க, என் துன்பங்கண்டு பரிகசித்து மகிழ்தல் தக்கதன்று என்பதாம். திருமகள் தங்குமிடம் தாமரை ஆதலாலும், இராமன் மனத்தில் அவள் என்றும் இருப்பதாலும் ‘என் நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம்’ என்றார். சீதையின் திருவடிகள் தாமரை மலராகவும், செம்பஞ்சூட்டிய விரல்கள் தாமரையில் பூத்த பவளமாகவும் கொள்ளத்தகும்).
****
230.சீதையை எண்ணி எண்ணி ராமன் தூங்கவில்லை; ஆனால் உலகமே உறங்கியது !
(இரவு வருதலும்) மலர்கள் குவிந்தன ; சோலைகளில் வந்து கலந்த பறவைகள் தத்தம் இடங்களில் போய் அடங்கின; விலங்குகள் தம் செயல் அடங்கின; மரங்களும் இலைகள் குவியப் பெற்றன; கிளிகள் பேசுதல் இன்றி அடங்கின; மயில்கள் ஆடுதல் ஒழிந்தன; குயில்கள் இனிமையாகக் கூவுதலை நிறுத்தின; யானைகள் பிளிறுதலாகிய பேரொலி அடங்கின.
(ஒடுங்குதல் என்ற சொல் ஒரே பொருளில் பலமுறை வந்ததால் சொற்பொருள் பின்வரு நிலையணியாகும்).
(இப்பாடல் சுந்தரகாண்டம் 158 ஆம்பாடலை ஒத்திருத்தல் காண்க.(4992)
பூமியில் வாழும் உயிரினங்கள் தூங்கின
அசையாத நிலையை உடைய மலையில் உள்ள உயிர்கள்
உறங்கின; குற்றமற்ற நீர் நிலைகள் தூங்கின;
(நாகலோகத்தில்) பாம்புகள் உறங்கின; பெருமையாகச் சொல்லப்படும் விண்மிசை உயிர்கள் தூங்கின; பேய்களும் கண் உறக்கம் கொண்டன; பெரிய திருப்பாற்கடலில் உறங்குவனவாகிய இராமலக்குவராகிய யானைகள் கண்களை மூடவில்லை.
(மண், மலை, பண், பணி, விண், பேய், ஆகிய அனைத்தும் உறங்க,
இராமலக்குவர் உறக்கம் கொள்ளவில்லை. இராமன் பிராட்டியைப் பிரிந்த வருத்தத்தாலும், இலக்குவன் எப்போதும் விழித்திருந்து இராமனைக் காக்கும் இயல்புடையனாதலாலும் இருவரும் உறங்கவில்லை.)
மண், மலை, விண் என்பவை ஆகுபெயராய் அவற்றிலுள்ள உயிர்களை உணர்த்தின. களிறு/ யானைகள் உவமை ஆகுபெயராய் இராமலக்குவரை உணர்த்திற்று.
–சுபம் –
Tags- சபரி, கவந்தன் யோசனை, மதங்க ஆஸ்ரமம் , யானையின் பெயர், கம்ப ராமாயணம், 230 கேள்விகள்,