
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,359
Date uploaded in London – 31 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லலிதா சஹஸ்ர நாமத்தில் பக்தி சம்பந்தமான நாமாக்கள்! – 1
ச. நாகராஜன்
லலிதா சஹஸ்ர நாமத்தை, வேத துல்யம் – வேதத்திற்கு சமமானது என்று மகான்கள் கூறி அருளியுள்ளனர்.
இது மந்திர சாஸ்திரம். தந்திர சாஸ்திரம். கர்மம், பக்தி, ஞானம் ஆகிய யோகங்களை விளக்கும் அற்புத நூல். இதில் ஏராளமான ரகசியங்கள் உள்ளன.
நூல் அமைப்பு, சப்தங்களின் அமைப்பு, பொருள் அமைப்பு உள்ளிட்ட ஏராளமான அமைப்புகளின் நுணுக்கங்கள் உள்ளன. லலிதா தேவியின் அருள் பெற்ற ஒருவரே இதன் மஹிமையைப் பற்றி ஒரு சிறிதளவு உணரக் கூடும்; உணர்ந்ததில் ஒரு சிறிதளவையே சொல்லக் கூடும்.
பாஸ்கர ராயர் இந்த வகை மகான்களில் ஒருவர். அவர் இதற்கு இயற்றி அருளியுள்ள பாஷ்யத்தின் வாயிலாகத் தான் நம்மால் நாமங்களின் அர்த்தத்தையும் மஹிமையையும் உணர முடிகிறது.
பக்தி சம்பந்தமாகவும் பக்தர்களுக்கு லலிதாம்பிகை அருள் புரிவது சம்பந்தமாகவும் உள்ள நாமங்களில் ஒரு சில நாமங்களை இங்கு பார்ப்போம். இந்த விளக்கம் பாஸ்கர ராயர் தரும் விளக்கமே.
நாமம் 119 பக்தி கம்யா
பக்தி மார்க்கத்தால் அடையக் கூடியவள். இன்னொரு அர்த்தம் பக்தியோடு உபாஸனை செய்வதால் பிரத்யக்ஷமாகிறவள்.
பரமாத்மாவை சாதாரணமாக நேரில் பார்ப்பது முடியாது என்று சொல்லப்பட்டிருந்தாலும் பக்தியின் தீவிரத்தால் பரமாத்வாவின் சொரூபத்தை பக்தர்கள் பார்க்க முடியும். இது கீதை உள்ளிட்ட பல நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
பக்த்யாது அனன்யா சக்ய: அஹம் ஏவம் விதோ அர்ஜுன |
ஞாதும் த் ரஷ்டும் தத்வேன ப்ரவேஷ்டும் ச பரந்தப ||
கீதையில் 11வது அத்தியாயமான விஸ்வரூப தர்சன யோகத்தில் 54வது ஸ்லோகம் இது.
இதன் பொருள்:
“எதிரிகளை அடக்கும் பரந்தபனே, அர்ஜுனா! வேறு எதிலும் சிதறாத (அனன்ய) தூய பக்தியினால் மட்டுமே, என்னை இந்த விஸ்வரூபத்தில் உண்மையாக அறியவும், நேரடியாகக் காணவும், இறுதியாக என்னோடு கலந்திடவும் முடியும்.
இதுவே ச்ருதியிலும் கூறப்பட்டுள்ளது.
பக்தி என்பது அம்பாளை அடையக் கூடிய ஒரு வழியாகும். அந்த வழியில் போனால் அடையக் கூடிய – கம்யமான- இடமாகிற அம்பாளை பக்தி கம்யா என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இன்னொரு விதமாகவும் இதைப் பார்க்கலாம்.
பக்தி என்பதற்கு லக்ஷணம் என்று ஒரு அர்த்தம் உண்டு. இந்த விதத்தில் பார்த்தால் பக்தி கம்யா என்றால் உள்ளபடியாகத் தெரியாமல் இருந்தாலும் கூட லக்ஷணங்களினால் அறியக் கூடியவள் என்று பொருள் கொள்ளலாம்.
பிரம்மத்தைச் சொல்லும் போது ஸத்யம், ஞானம் உள்ளிட்ட சொற்கள் பிரம்மத்தின் லக்ஷணத்தைச் சொல்கின்றனவே தவிர, உண்மையான ரூபத்தை – உருவத்தைச்- சொல்லவில்லை. ஆகவே தான் லலிதா
த்ரிசதியில் கூட லக்ஷணா கம்யா – லக்ஷணத்தால் அறியக் கூடியவன் – அடையக் கூடியவள் – என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆகவே கம்யா என்ற சொல்லின் மூலமாக லலிதாம்பிகை பிரத்யக்ஷமாகிறவள், அடையப்படுகிறவள், அறியப்படுகிறவள் என்ற மூன்று வித அர்த்தங்களைப் பெறுகிறோம்.
இது பக்தியினால் சாத்தியமாகிறது.
அடுத்து இந்த ஸ்தோத்ரத்தில் உள்ள இன்னும் சில பக்தி சம்பந்தமான நாமங்களைப் பார்ப்போம். ** தொடரும்