
london swaminathan picture taken from 100 year old book.
Written by London Swaminathan
Post No. 16,358
Date uploaded in London – 30 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கம்ப ராமாயணத்தை முழுக்க படிக்க வேண்டாம்; சுவையான பகுதிகளை மட்டும் படியுங்க!! கம்பன் ஒவ்வொரு விஷயத்துக்கும் 10 அல்லது 15 பாடல்களைச் சொல்வதால் 10,000 பாடல்கள் கிடைக்கின்றன; அவைகளைப் படிக்க முடியாதோருக்கு சுவையான பகுதிகளை மட்டும் கேள்வி – பதில் வடிவில் தருகிறேன்; எப்போதும் என் பிளாக்குகளில் இலவசமாகக் கிடைக்கும் ; தொடர்ந்து படியுங்கள்: இதற்கு முன்னர் வெளியிட்ட 230 கேள்விகளும், விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.
231
ராம லட்சுமணர்கள் தொலைவில் வருவதைப் பார்த்து வாலியின் ஆட்கள் என்று எண்ணி ஒடி ஒளிந்தான் சுக்ரீவன் ! பயப்படாதீர்! நான் போய் பார்த்தது வருகிறேன் என்று அனுமன் சென்றான் ; இதுதான் கம்பராமாயணத்தில் அனுமன் வரும் முதல் காட்சி ; அனுமன் எந்த வடிவத்தில் சென்றான்?
232
இருவரையும் கண்டவுடன் அனுமனின் மனதில் எழுந்த எண்ணங்கள் என்ன? எந்தக் காரணமும் இல்லாமல் அனுமன் உள்ளத்தில் அன்பு பீறிட்டெழுந்ததை கம்பன் எப்படிச் சொல்கிறான் ?
233
ராம, லெட்சுமணர்களுக்கு அருகில் புலி, சிங்கம், பறவைகள் முதலியன செய்த அற்புதக் காட்சிகளைக் கண்டு அனுமன் வியந்தது எங்ஙனம் ?
234
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்? என்றான் வள்ளுவன் ; அன்பினுக்கு எல்லை இல்லை – என்று கம்பன் உதிர்த்த பொன்மொழியின் சிறப்பு என்ன?
235
ராம லெட்சுமணர்களை என்ன சொல்லி அனுமன் வரவேற்றான் ?
236
அனுமனைப் பார்த்த ராமன், யார்கொல் இச்சொல்லின் செல்வன்?- என்று வியப்படைந்ததன் காரணம் என்ன?
237
இவன் சாதாரண பிரம்மச்சாரி அல்ல; உலகிற்கே அச்சாணி என்று தம்பியிடம் ராமன் விளம்பியது என்ன ?
238
அனுமனிடம் “சுக்ரீவனைக் காண வந்தோம் ; அவனைக் காட்டுவீராக” என்று ராமன் சொன்னவுடன் அனுமன் சொன்ன பதில் என்ன ?
239
வாலி- சுக்ரீவன் பகைமைபற்றி அனுமன் அளித்த செய்தி என்ன?
240
நீங்கள் யார் என்று ஆஞ்சனேயன் (அனுமன்) கேட்டவுடன் ரத்தினச் சுருக்கமாக மூன்றே பாடல்களில் லெட்சுமணன் தங்கள் யார் என்பதை எப்படி அழகாகச் சொன்னான் ?
XXXXXXXXXXXXXXX


விடைகள்
231.பிரம்மச்சாரி வடிவத்தில் அனுமன்!
3754. அஞ்சனைக்கு ஒரு சிறுவன்,
அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி, ஒரு
மாணவப் படிவமொடு,
‘வெஞ் சமத் தொழிலர், தவ மெய்யர்,
கைச் சிலையர்’ என,
நெஞ்சு அயிர்த்து, அயல் மறைய
நின்று, கற்பினின் நினைவும்:
அஞ்சனாதேவியின் ஒப்பற்ற மகனான அனுமன், ஒரு மாணாக்கன் (பிரம்மச்சாரி) வடிவம் தாங்கி, நீலமலையைப் போன்ற இராமனை நெருங்கி அருகில் மறைவாக நின்று, இவர்கள் கொடிய போர்த்தொழில் உடையர்; தவவேடம் தாங்கிய உடம்பினர்; கையில் வில்லேந்தியுள்ளனர்’ என்று சந்தேகத்தோடு சிந்தித்தான்.
***
232.இருவரையும் கண்டவுடன் அனுமனின் மனதில் எழுந்த எண்ணங்கள்:-
‘தேவருக்கு ஒரு தலைவர் ஆம்
முதல் தேவர் எனின்,
மூவர்; மற்று, இவர் இருவர்;
மூரி வில் கரர்; இவரை
யாவர் ஒப்பவர், உலகில்? யாது,
இவர்க்கு அரிய பொருள்?
கேவலத்து இவர் நிலைமை தேர்வது
எக் கிழமை கொடு?
தேவர்களுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவர்களாகிய தேவர்களோ
என்றால் அவர்கள் மூவராவர்; இவர்கள் இருவராய் இருக்கின்றனர் (அவர்கள் சூலம், திகிரி, வேதம் ஏந்தியிருக்க) இவர்கள் வில்லைத் தாங்கினர்; இவர்களை போன்றவர்கள் உலகில் யாருளர்? இவர்களுக்குச் செய்தற்கு அரிய செயல்தான் யாது உளது? இவர்கள் நிலைமையை எந்தத் தகுதியைக் கொண்டு தெளிவது?
(மும்மூர்த்திகட்கும் இராமலக்குவர்க்கும் உள்ள வேற்றுமை கூறப்பட்டது. முத்தேவர் அல்லாதவராயினும் யாவர்க்கும் மேலானவர்களாகத் தோன்றியதால் ‘இவரை ஒப்பார் யார்? யாது இவர்க்கு அரிய பொருள்’ என வியக்கிறான்)
அனுமன் இவர்களே தருமம் என்று துணிதல்.
3759. என்பன பலவும் எண்ணி,
இருவரை எய்த நோக்கி,
அன்பினன், உருகுகின்ற
உள்ளத்தன், ஆர்வத்தோரை
முன்பிரிந்து, அனையர்தம்மை முன்னினான்
என்ன நின்றான் –
தன் பெருங்குணத்தால் தன்னைத்
தான்அலது ஒப்பு இலாதான்.
தனது சிறந்த குணங்களால் தனக்குத்தானே வேறு ஒப்புமை இல்லாதவனாகிய அனுமன், மேற்கூறியவாறு பலவற்றையும் எண்ணினான். அவ்விருவரையும் உற்றுப்பார்த்து அன்பால் உருகுகின்ற உள்ளம் கொண்டவனாய், முன்னர் ஒரு காலத்தில் விட்டுப்பிரிந்து அவர்களை மீண்டும் சந்தித்தது போல அன்புருக நின்றான்.
*************
233 விலங்குகள் செய்த அற்புதங்கள்
3760. ‘தன்கன்று கண்ட அன்ன
தன்மைய, தறுகண் பேழ் வாய்
மின் கன்றும் எயிற்றுக் கோள்மா,
வேங்கை, என்று இனையவேயும்,
பின்சென்று, காதல் கூரப்
பேழ்கணித்து இரங்குகின்ற;
என்கன்றுகின்றது, எண்ணிப்
பற்பல இவரை? அம்மா!
கொடிய கண்ணையும், பெரிய வாயினையும் பளபளக்கும் பற்களையும் உடைய சிங்கம்,புலி போன்ற கொடிய விலங்குகளும் (இராமலக்குவரைக் கண்டு), தன் குட்டிகளை கண்டாற்போல
இவர்கள் பின்னால் சென்று அன்புகாட்டி உருகுகின்றன; (இங்ஙனம் இருக்க) இவர்களைப் பகைவர்களாகப் பலவாறு எண்ணி வருந்துவது ஏன்? (கொடிய விலங்குகளும் தம் கொடுமை நீங்கி, இராமலக்குவர் இடத்தில் அன்புகாட்டி உருகுமாயின், இவர்களைப் பகைவர்களாக எண்ணி அஞ்சுவதற்குக் காரணம் இல்லை; இவ்வாறு அனுமன் எண்ணினான்)
3761. ‘மயில் முதல் பறவை எல்லாம்,
மணி நிறத்து இவர்கள் மேனி
வெயில் உறற்கு இரங்கி, மீதா,
விரி சிறைப் பந்தர் வீசி,
எயில் வகுத்து எய்துகின்ற; இன
முகில் கணங்கள், எங்கும்
பயில்வுற, திவலை சிந்தி,
பயப்பயத் தழுவும், பாங்கர்.
மயில் முதலான பறவைகள் எல்லாம் இவர்கள் மேனியில் வெயில் படாமல் இருப்பதற்காக, விரிந்த சிறகுகளைப் பந்தலாகப் பரப்பி தொடர்ந்து வருகின்றன;மேகக் கூட்டங்கள் எல்லா இடங்களிலும் நீர்த்துளிகளைச் சிந்திக்கொண்டு இவர்கள் பக்கத்தில் மெல்ல மெல்லத் தொடர்ந்து வருகின்றன – என்ற அதிசயக் காட்சிகளை அனுமன் கண்டான்.
************
234.அன்பினுக்கு எல்லை இல்லை
3763. துன்பினைத் துடைத்து, மாயத் தொல்
வினை தன்னை நீக்கி,
தென் புலத்து அன்றி, மீளா
நெறி உய்க்கும் தேவ்ரோதாம்?
என்பு எனக்கு உருகுகின்றது; இவர்கின்றது
அளவு இல் காதல்;
அன்பினுக்கு அவதி இல்லை; அடைவு
என்கொல்? அறிதல் தேற்றேன்.
பிறவித் துன்பங்களைப் போக்கி, (அத்துன்பங்களுக்குக் காரணமான)
மயக்கத்தால் உண்டாகின்ற பழவினை தன்னைப் போக்கி, யமலோகத்தில் அல்லாமல் (சென்றவர்கள்) மீண்டு வருதலில்லா முத்திநெறியில்செலுத்துகின்ற கடவுளரோ இவர்கள்? என் எலும்பும் உருகுகின்றது; அளவு இல்லாத அன்பு மிகுகின்றது; அன்பினுக்கு அவதி இல்லை – (இவர்களிடம் எனக்குத் தோன்றும்) அன்பிற்கு எல்லை இல்லை; (அவ்வாறு ஆவதற்குக்) காரணம் யாதோ?; அறிய முடியவில்லையே!
இராமனால் சரபங்கனும் சபரியும் பிறப்புநீங்கி முக்தியடைந்தனர். இறைவனைக் காண்கையில் எலும்பு உருகும் என்பதை ‘இரும்பு மனத்தேனை ஈர்த்து ஈர்த்து என் என்புருக்கி‘ (திருவாசகம் 544) என்ற மணிவாசகர் வாக்கும் உணர்த்தும். அனுமன் உருகியதுபோல வீடணனும் ‘என்புறக் குளிரும் நெஞ்சுருகும் மேலவன், புன்புலப் பிறவியின் பகைஞன் போலுமால்” (6384) என்று கூறுவதைக் காணலாம்.
****************
235.அனுமன் எதிர் சென்று வரவேற்றலும்’நீ யார்’ என இராமன் வினாவுதலும்
3764. இவ் வகை எண்ணி, ஆண்டு,
அவ் இருவரும் எய்தலோடும்,
செவ் வழி உள்ளத்தானும், தெரிவுற
எதிர் சென்று எய்தி,
‘கவ்வை இன்றாக, நுங்கள்
வரவு! ‘ என, கருணையோனும்,
‘எவ் வழி நீங்கியோய்? நீ யார்’
என, விளம்பலுற்றான்:
இவ்வாறு ஆலோசித்து அனுமனும் அவ்விரண்டு பேரும் வந்தஅளவில்அவர்களுக்குத் தெரியுமாறு எதிரில்சென்று அடைந்து; ”உங்கள் வருகை துன்பம் இல்லாதது ஆகுக” என வரவேற்றான்.
இராமனும் நீஎவ்விடத்திலிருந்து வருகின்றாய்? நீ யார் என்று வினவ (அனுமன்) சொல்லத் தொடங்கினான். காற்றில் வேந்தற்கு –
வாயுதேவனுக்கு; அஞ்சனை வயிற்றில் – அஞ்சனாதேவியின் வயிற்றில்; வந்தேன் – பிறந்தேன்; நாமமும் – என் பெயரும்; அனுமன் என்பேன் –அனுமன் என்று அழைக்கப்பெறுவேன்– என்று சுருக்கமாகப் பேசினான் அனுமன்
********
236. சொல்லின் செல்வன்
3767. மாற்றம்அஃது உரைத்தலோடும்,
வரிசிலைக் குரிசில் மைந்தன்
தேற்றம் உற்று, இவனின் ஊங்கு
செவ்வியோர் இன்மை தேறி
‘ஆற்றலும், நிறைவும், கல்வி
அமைதியும், அறிவும் என்னும்
வேற்றுமை இவனோடு இல்லையாம்’
என, விளம்பலுற்றான்.
அந்த மறுமொழியை அனுமன் சொன்ன அளவில் இராமன் தெளிவடைந்து இவ்வனுமனைக் காட்டிலும் செம்மைக் குணம் உடையோர் பிறர் இன்மையைத் தெளிந்து, திறமையும் நிறைந்த குணங்களும்,கல்வியால் வரும் அடக்கமும் அறிவும் இவனிடம் உள்ளது
3768. ”’இல்லாத உலகத்து எங்கும், இங்கு
இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும், வேதக் கடலுமே”
என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே?
யார்கொல் இச் சொல்லின்செல்வன்? –
வில் ஆர்தோள் இளைய
வீர! – விரிஞ்சனோ? விடைவலானோ?
இளைய வீரனே (லெட்சுமணா!)! இவன் கற்றுக்கொள்ளாத கலைகளும், வேதமாகிய கடலும் உலகத்தில் எங்கும் இல்லை; (இவன்பெற்றிருக்கும்) அறிவு, இவன் பேசிய சொல்லாலேயே; வெளிப்பட்டதன்றோ? இத்தகைய சொல்லின் செல்வனாக விளங்கும் இவன் நான்முகனோ? விடை ஏறி வலம் வரும் சிவனோ? யாராக இருத்தல் கூடும்.
இவன் கல்லாத கலையும் வேதக்கடலும் உலகத்து இல்லாதனவே என்றதால் அனுமன் எல்லாக் கலைகளையும் எல்லா வேதங்களையும் நன்கு கற்றவன் என்பது புலனாம். பிரமனின் அம் சமாகவோ,உருத்திரனின் அம்சமாகவோ இருந்தாலன்றி இத்தகைய சொல்லின் செல்வம் பெற இயலாது. எனவே இச்செல்வம் பெற்ற அனுமன், அவ்விருவருள் யார் என்று வியந்து இராமன் பாராட்டினான்
*****************
237. இவன் சாதாரண பிரம்மச்சாரி இல்லை!
3769. ‘மாணிஆம் படிவம் அன்று, மற்று
இவன் வடிவம்; மைந்த!
ஆணி இவ் உலகுக்கு எல்லாம்
என்னலாம் ஆற்றற்கு ஏற்ற
சேண் உயர் பெருமைதன்னைச்
சிக்கு அறத் தெளிந்தேன்; பின்னர்க்
காணுதி மெய்ம்மை’ என்று,
தம்பிக்குக் கழறி, கண்ணன்,
இலக்குவ! இவனது வடிவம்இப்போது காணப்பெறும் சாதாரண பிரமச்சாரி வடிவம் அன்று; இவ்வுலகுக்கு எல்லாம் அச்சாணி என்று சொல்லக்கூடிய மிகவும் மேம்பட்ட திறமை உடையவன் என்று ஐயமின்றித் தெரிந்து கொண்டேன்; அஃது உண்மையாதலை நீயும் பின்பு காண்பாய் என்று இராமபிரான் கூறினான் .
****************
238. அனுமன் விடை
3771. ‘மாதிரப் பொருப்போடு ஓங்கு வரம்பு
இலா உலகில், மற்றுப்
பூதரப் புயத்து வீரர் நும்
ஒக்கும் புனிதர் யாரே?
ஆதரித்து அவனைக் காண்டற்கு அணுகினிர்
என்னின், அன்னான்,
தீது அவித்து அமையச் செய்த, செய்
தவச் செல்வம் நன்றே!
திசைகளின் எல்லைகளில் உள்ள சக்கரவாளகிரி என்னும் மலையோடுஎல்லையில்லாமல் விரிந்து கிடக்கும் உலகத்தில்பூமியைத் தாங்கும் மலைபோன்ற (உலகத்தைத் தாங்கும்) தோள்களையுடைய வீரர்களாகிய உங்களுக்குத் சமமானவர் எவருமிலர். அச்சுக்கிரீவனிடத்து அன்பு காட்டி அவனைக் காண்பதற்க நீங்கள் இங்கு வந்தீர்கள் என்றால் சுக்கிரீவன் செய்த தவம் பெரிதே !
(பெருந்தவம் செய்திருந்தாலன்றி இராமபிரானைக் காணும் பேறு பெறாமையின் ‘தீது அவித்து அமையச் செய்த செய்தவச் செல்வம் நன்றே’என்றான்.)
*****************
239.வாலி- சுக்ரீவன் பகைமைப்பற்றி அனுமன் அளித்த செய்தி
3772. ‘இரவிதன் புதல்வன் தன்னை,
இந்திரன் புதல்வன் என்னும்
பரிவுஇலன் சீற, போந்து,
பருவரற்கு ஒருவன் ஆகி,
அருவிஅம் குன்றில், என்னொடு
இருந்தனன்; அவன்பால் செல்வம்
வருவது ஓர் அமைவின் வந்தீர்;
வரையினும் வளர்ந்த தோளீர்!
மலையினும் பெரிதாக வளர்ந்த தோள்களை உடையவர்களே! சூரியன் மகனாகிய சுக்கிரீவனை இந்திரன் மகன் என்று கூறப்படும் இரக்கமற்றவனாகிய வாலி என்பவன் சினந்து துரத்தியதால் அஞ்சி வந்து தனியே அருவிகள் பாய்கின்ற ருசியமுகம் என்னும் இம் மலையில் என்னோடு தங்கியிருக்கிறான்; அவனிடத்து செல்வம் வருதற்குரிய நல்ல காலம் (நீங்கள் இங்கு) வந்தீர்கள்.
(இராமலக்குவர் வந்ததால் இனிச் சுக்கிரீவன் இழந்த செல்வத்தைப் பெறுவன் என்பதாம்).
****
240.லெட்சுமணன் தங்கள் யார் என்று சொல்லும் மூன்று பாடல்கள் இதோ :
3776. ‘சூரியன்மரபில் தோன்றி,
சுடர் நெடு நேமி ஆண்ட
ஆரியன்; அமரர்க்காக
அசுரரை ஆவி உண்ட
வீரியன்; வேள்வி செய்து
விண் உலகோடும் ஆண்ட
காரியன்; கருணை அன்ன
கண்ணன் அக் கவிகை மன்னன்;
அந்த வெண்கொற்றக் குடையை உடைய அரசன் (தயரதன்) சூரிய குலத்தில் தோன்றி, பெரிய ஆணைச் சக்கரத்தை உடையவனாய் உலக முழுவதும் ஆட்சி செலுத்திய உயர்ந்தோன்; தேவர்கள் பொருட்டு சம்பரன் முதலிய அசுரர்களை வென்று உயிரைப் பறித்த வீரம் உடையவன்;பல வேள்விகளைச் செய்து மண்ணுலகத்தோடு விண்ணுலகத்தையும் ஆட்சி புரிந்த செயல்திறம் படைத்தவன்; அருளே வடிவு எடுத்தாற் போன்ற குணம் உடையவன்;
3777. ‘புயல் தரு மதத் திண் கோட்டுப்
புகர் மலைக்கு இறையை ஊர்ந்து,
மயல் தரும் அவுணர் யாரும்
மடிதர, வரி வில் கொண்ட,
இயல் தரும் புலமைச் செங்கோல்
மனு முதல் யாரும் ஒவ்வாத்
தயரதன்; கனக மாடத் தட
மதில் அயோத்தி வேந்தன்;
மலைகள் போன்ற யானைகளுக்குத் தலைவனாகிய தயரதன், மதி மயக்கம் கொண்ட அசுரர்கள் எல்லாம் அழியும்படி வில்லைக் கொண்டு போர் செய்தான். அறிவினையும் செங்கோலையும் உடைய மனு முதலான எந்த அரசர்களும் தயரதனுக்கு நிகர் ஆகமாட்டார் பொன் மயமான மாளிகைகளையும்;, பெரிய மதிலையும் உடைய அயோத்தி நகரத்திற்கு வேந்தனாவான்.
3778. ‘அன்னவன்சிறுவனால், இவ்
ஆண்தகை; அன்னை ஏவ,
தன்னுடைய உரிமைச் செல்வம்
தம்பிக்குத் தகவின் நல்கி,
நல் நெடுங் கானம் சேர்ந்தான்;
நாமமும் இராமன் என்பான்;
இந் நெடுஞ் சிலைவலானுக்கு ஏவல்
செய் அடியென் யானே.’
இந்த வீரர்களிற் சிறந்தவன் அந்தத் தயரத சக்கரவர்த்தியின் மகனாவான்; தன் சிற்றின்னையின் கட்டளையால் மூத்த மகனாகிய தனக்கு உரிமையுடைய ஆட்சிச் செல்வத்தை தன் தம்பியாகிய பரதனுக்குப் பெருந்தன்மையோடு கொடுத்து விட்டு, நெடிய காட்டை அடைந்தான்; அவன் பெயர் இராமன்; அப்பேற்பட்ட வில்லாற்றல் பொருந்தியவனுக்கு குற்றேவல் செய்கின்ற அடியவன் யான்’
இம்மூன்று பாடல்களால் தன் தமையனைப் பற்றியும் தன்னைப் பற்றியும் உணர்த்தினான் இலக்குவன்.
–subham—
Tags- கம்பராமாயணம் , 240 கேள்விகள், கிஷ்கிந்தா காண்டம், அனுமன், சுக்ரீவன்