கம்பராமாயணத்தில் 270 கேள்விகள்; பெண்கள் மீது கம்பன் மீண்டும் தாக்குதல்!(Post.16,367)

Written by London Swaminathan

Post No. 16,367

Date uploaded in London – 2 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கம்ப ராமாயணத்தில் சுமார் 10,000 பாடல்கள் உள்ளன; அவ்வளவையும் படிப்பதற்கு எல்லோருக்கும் நேரம் கிடைக்காது; முழுக்க படிக்க வேண்டாம்; சுவையான பகுதிகளை மட்டும் தருகிறேன்; பால காண்டம், அயோத்தியா காண்டம்,  ஆரண்ய காண்டங்களை முடித்து இப்பொழுது கிஷ்கிந்தா காண்டத்தில் இருக்கிறோம். இதற்கு முன்னர் வெளியிட்ட 260 கேள்விகளும், விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும். கம்ப ராமாயணம் பற்றி நான் எழுதிய இரண்டு நூல்களையும் வாங்கிப் படிக்க முடிந்தால் படியுங்கள்.

அடுத்தது கலன் காண் படலம் .

261

ராமனிடம், சுக்ரீவன் சீதையின் ஆபரணங்களைக் காட்டி என்ன சொன்னான் ?

262

சீதையின் நகைகளைக் கண்ட ராமன்  எப்படி வருந்தினான் என்று கம்பன் சொல்கிறான் ?

263

நகைகளாக கண்ட அதிர்ச்ச்சியால் மயக்கம் அடைந்த ராமனை சுக்ரீவன் எப்படிக் காப்பாற்றினான் ?

264

மயக்கம் தெளிந்த ராமனிடம் சுக்ரீவன் சொன்ன ஆறுதல் வசனம் என்ன ?

265

ராமன் தன் குலப்பெருமையைச் சொல்லி, இப்போதுள்ள நிலைமை  குறித்து  வருந்தும் போது, பொரும் புலி மானொடு புனலும் ஊட்டினர் என்று சொல்கிறானே; அதன் பொருள் என்ன?

266

வாலியை போருக்கு அழை என்று ராமன் சொன்னவுடன் சுக்ரீவன் என்ன செய்தான் ?

267

வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் நாம் கண்டது போல போகாதே, போகாதே என் கணவா! பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என்று  வாலியின் மனைவி தாரா பாடினாளா ?

268

தாரா எச்சரித்த பொழுது இறுமாப்போடு வாலி சொன்ன பதில் என்ன ?

269

“ஸுக்ரீவன் துணைக்கு ராமன் வந்திருக்கிறான்” என்று தாரா சொன்னவுடன் சீ சீ! நீ  பொம்பளப் புள்ள ; அதான் உனக்கு அறிவு கொஞ்சம் குறைவு; என்று வாலி சொன்னதாகக் கம்பன் புகல்வது யாது ?

270

அண்ணன் தம்பிக்கு இடையே, சண்டை மூட்டும் அற்ப குணம் ராமனுக்கு இருக்கவே முடியாது என்று வாலி அவனுடைய மனைவியிடம் கூறியது ஏன் ?

***********

விடைகள்

261. சீதையின் நகைகளை ஒப்படைத்தல்

“வைத்தனம் இவ்வழி வள்ளல் நின்வயின்

உய்த்தனம் தந்தபோது உணர்தியால்” எனாக்

கைத்தலத்து அன்னவை கொணர்ந்து காட்டினான்

நெய்த்தலைப் பால்கலந் தனைய நேயத்தான்.

பொருள்:

பாலில் நெய் கலந்தது போன்ற பிரிக்க முடியாத தூய்மையான அன்பைக் கொண்டவனான சுக்கிரீவன், இராமனை நோக்கி:

“வள்ளலே! உன்னுடைய மனைவியின் இந்த ஆபரணங்களை நாங்கள் இந்த இடத்தில் பத்திரமாகப் பாதுகாத்து வைத்துள்ளோம். இவற்றை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கும்போது, நீயே பார்த்து அடையாளம் தெரிந்து கொள்வாயாக” என்று கூறினான். அவ்வாறு கூறிக்கொண்டே, தன் கைகளில் அந்த அணிகலன்களைக் கொண்டு வந்து இராமனிடம் காண்பித்தான்.

****

262.சீதையின் ஆபரணங்களைச் சுக்கிரீவன் இராமனிடம் காட்டியபோது, அதைப் பார்த்து இராமன் அடைந்த பேரதிர்ச்சியையும் அளவற்ற துயரத்தையும் கம்பர் இந்தப் பாடலில் விவரிக்கிறார்.

ஈர்த்தன செங்கண் நீர் வெள்ளம் யாவையும்;

போர்த்தன மயிர்ப்புறும் புளகம்; பொங்குதோள்

வேர்த்தனன் என்கெனோ? வெதும்பினான் என்கோ?

தீர்த்தனை அவ்வழி யாது செப்புகேன்?

பாடலின் பொருள்:

• ஈர்த்தன செங்கண் நீர் வெள்ளம் யாவையும்: தூய்மையானவனாகிய இராமனுடைய சிவந்த கண்களிலிருந்து பெருகி வந்த கண்ணீர் வெள்ளமானது, அங்குச் சுற்றிலும் இருந்த எல்லாப் பொருட்களையும் அடித்துக் கொண்டு (இழுத்துக் கொண்டு) சென்றது.

• போர்த்தன மயிர்ப்புறும் புளகம்; பொங்குதோள்: அவனது உடல் முழுவதும் மயிர்ச் சிலிர்ப்பு (புளகாங்கிதம்) ஆடை போலப் போர்த்திக் கொண்டது.

• வேர்த்தனன் என்கெனோ? வெதும்பினான் என்கோ? தீர்த்தனை அவ்வழி யாது செப்புகேன்?: அவனுடைய பருத்த தோள்கள் வியர்த்தன என்று சொல்வதா? அல்லது அவன் மனமும் உடலும் வெம்பி வாடினான் என்று சொல்வதா? அந்த உத்தமனான இராமன் அடைந்த அந்த துயர நிலையை நான் எவ்வாறு விவரிப்பேன்?

***

263.சீதையின் ஆபரணங்களைக் கண்டு இராமன் மயக்கம் அடைந்து கீழே சாய்ந்தான் :

விடம் பரந்து அனையது ஓர் வெம்மை மீ கொள,

நெடும்பொழுது உணர்வினோடு உயிர்ப்பும் நீங்கிய

தடம்பெருங் கண்ணனைத் தாங்கினான்; தனது

உடம்பினில் செறி மயிர் சுறுக்கொண்டு ஏறவே.

• விடம் பரந்து அனையது ஓர் வெம்மை மீ கொள: உடம்பில் நஞ்சு (விஷம்) பரவினால் உண்டாகக் கூடிய கொடிய வெப்பத்தைப் போலத் துயரத்தின் வெப்பம் இராமனின் உடலில் அதிகமாகியது.

• நெடும்பொழுது உணர்வினோடு உயிர்ப்பும் நீங்கிய: அதனால், நீண்ட நேரம் உணர்வும் (அறிவு) மூச்சும் அற்றுப் போய் இராமன் மயங்கி விழுந்தான்.

• தடம்பெருங் கண்ணனைத் தாங்கினான்: அப்படி மயங்கிய பெரிய கண்களை உடைய இராமனைச் சுக்கிரீவன் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

• தனது உடம்பினில் செறி மயிர் சுறுக்கொண்டு ஏறவே: அப்படித் தாங்கும் போது, சுக்கிரீவனுடைய உடம்பில் அடர்த்தியாக இருந்த மயிர்கள் (முடிகள்), இராமனின் உடம்பில் ‘சுறுசுறு‘ என்று குத்தும்படியாகத் தாங்கினான்.

***

264.திருமகள் அனைய அத் தெய்வக் கற்பினாள்

வெருவரச் செய்து உள வெய்யவன் புயம்

இருபதும் ஈரைந்து தலையும் நிற்க ; உன்

ஒரு கணைக்கு ஆற்றுமோ ? உலகம் ஏழுமே .

சுக்ரீவன் சொல்கிறான் : உன்னுடைய ஒரு அம்பினில் ராவணனின் பத்து தலைகளையும் சிதறடிக்கலாமே  ! ஏன் வருந்துகிறாய்?

• திருமகள் அனைய: திருமகளான லட்சுமியைப் போன்றவளும்,

• அத்தெய்வக் கற்பினாள்: தெய்வத்தன்மை பொருந்திய கற்புடையவளுமான சீதை,

• வெருவரச் செய்து உள: அஞ்சும் படி அவளுக்குத் தீங்கு செய்த,

• வெய்யவன்: கொடியவனான இராவணனுடைய,

• புயம் இருபதும் ஈர் ஐந்து தலையும் நிற்க: இருபது தோள்களும் பத்துத் தலைகளும் அழியாமல் அப்படியே இருக்க, அவற்றை அழிக்க ‘உன் ஒரு கணைக்கு ஆற்றுமோ அல்லது உலகம் ஏழுமோ?’

***

265.ஒரு நாட்டில்  தர்ம ஆட்சி நடந்தால், அந்த மன்னனுக்கு முன்னால் புலியும் மானும் கூட ஒரே நீர் நிலையில் தண்ணீர் குடிக்கும்; இயற்கையான பகைமை யை மறந்து விடும் ; இது சம்ஸ்க்ருதத்தில் உள்ளது. புலிப்போத்தும் புல்வாயும் ஒரு துறையில் நீருண்ண உலகாண்ட ஒருவன் — என்று சூரியவம்ஸா மன்னர்கள் பெருமைப்படுவர்.

“கரும் கடல் தொட்டனர்; கங்கை தந்தனர்;

பொரும் புலி மானொடு புனலும் ஊட்டினர்;

பெருந் தகை என் குலத்து அரசர்; பின், ஒரு

திருந்திழை துயரம் நான் தீர்க்ககிற்றிலேன்.”

• கரும் கடல் தொட்டனர்: (கடலைத் தோண்டிய சாகரர்கள்) என் குலத்து முன்னோர்கள் கரிய பெரிய கடலையே தோண்டினார்கள்.

• கங்கை தந்தனர்: (பகீரதன்) தேவருலகில் இருந்த கங்கையாற்றை எவராலும் செய்ய முடியாத கடும் தவத்தைச் செய்து பூமிக்குக் கொண்டு வந்தார்.

• பொரும் புலி மானொடு புனலும் ஊட்டினர்: பகைமை பாராட்டிப் போரிடும் புலியையும், சாதுவான மானையும் ஒரே துறையில் எவ்வித அச்சமுமின்றி ஒன்றாக நீர் அருந்தச் செய்யும் அளவுக்கு அறநெறி தவறாது உலகை ஆண்டனர்.

• பெருந்தகை என் குலத்து அரசர்; பின், ஒரு திருந்திழை துயரம் நான் தீர்க்ககிற்றிலேன்: இத்தகைய ஒப்பற்ற பெருமைகளைக் கொண்ட சூரிய குலத்தில் பிறந்த நான், இன்று என் மனைவியான சீதையின் துயரத்தைக் கூட தீர்க்க முடியாமல் செயலற்று நிற்கிறேனே!

என் தந்தையோ இந்திரனின் துயரைத் தீர்க்க அரக்கர்களையே அழித்தானே என்று அடுத்த பாட லில் புலம்புகிறான் ராமன்.

***

266.சுக்கிரீவனது போர் முழக்கம்

வாலியைக் கொன்று சுக்ரீவனின் படை மூலம் அரக்கர்களை வெல்லலாம் என்று அனுமன் யோசனை சொல்கிறான்; அவர்கள் பத்து யோஜனை தூரம் நடந்து மகேந்திர மலைக்குச் சென்றனர் .

இடித்து , உரப்பி , ‘வந்து போர்

எதிர்த்தியேல் அடர்ப்பன் ‘ என்று

அடித் தலங்கள் கொட்டி ,

வாய் மடித்து , அடுத்து , அலங்கு தோள்

புடைத்து நின்று , உளைத்த பூசல்

புக்கது என்ப ; மிக்கு இடம்

துடிப்ப அங்கு உறங்கு வாலி

திண் செவி தொளைக்கணே .

: “எதிர்த்து வந்து நீ என்னோடு போர் புரிந்தால், உன்னை நசுக்கி அழித்துவிடுவேன்” என்று சூளுரைத்து, தன் கால்களால் தரையை உதைத்து அதிரச் செய்து, உதடுகளைக் கடித்து, வலிமையான தோள்களைத் தட்டி, சுக்கிரீவன் செய்த அந்தப் பெரும் ஆரவாரம் எட்டுக் திக்குகளும் அதிரச் செய்தது.

அந்தச் சமயத்தில், தீய நிமித்தமாக இடக்கண்ணும் இடத்தோளும் துடிக்க, மாளிகையில் உறங்கிக் கொண்டிருந்த வாலியினுடைய வலிமையான காதுத் துவாரங்களுக்குள் அந்தச் சத்தம் போய் ஈட்டி பாய்வது போல நுழைந்தது.

சுக்கிரீவன் வாலியைப் போருக்கு அழைத்த வீரம் மற்றும் சினம் நிறைந்த இக்காட்சியை கம்பர் மிகக் கம்பீரமாக விவரித்துள்ளார்

****

267.இல்லை; அபசகுனப் பாடல் பாடவில்லை! வாலியின் மனைவி அதி புத்தி சாலி! சுக்ரீவன் துணையில்லாமல் வந்தால் இப்படி சண்டைக்கு அழைக்க மாட்டான் ; அவன் துணையுடன் வந்திருக்கிறான் என்று வாலியின் மனைவி தாரா எச்சரிக்கிறாள்

‘கொற்றவ , நின்பெருங் குவவுத் தோள் வலிக்கு

இற்றனன் , முன்னை நாள் , ஈடு உண்டு ஏகினான் ;

பெற்றிலன் பெருந்திறல் ; பெயர்த்தும் போர்செயற்கு

உற்றது , நெடும் துணை உடைமையால் ‘ என்றாள்

***

268.    (என் வலிமையை அறியாத) அறிவில்லாத மூடர்கள்

என்னை எதிர்த்துப் போரிட வந்தாலும் அவர்கள் தவம் செய்து பெற்ற பயனுள்ள வரங்களும் அவர்களின் உடல் வலிமையும்

அவற்றிடம் உள்ளவற்றில் பாதி அளவும் என்னுடையதாகிவிடும் (என்னை வந்தடைந்துவிடும்)  அப்படியிருக்க அவர்கள் என்னை எப்படி எதிர்க்க முடியும்? உன்னுடைய இந்த வீண் கவலையை விடுப்பாயாக- என்று வாலி தாராவிடம் கூறுகிறான்

‘பேதையர் எதிர்குவர் எனினும் பெற்று உடை

ஊதிய வரங்களும் , உரமும் , உள்ளதில்

பாதியும் என்னதால் ; பகைப்பது எங்ஙனம் ?

நீ துயர் ஒழிக ‘ என , நின்று கூறினான் .

வாலியுடன் சண்டைக்கு வருபவர்களின் பாதி பலம் வாலிக்கே வந்து விடும் என்று இந்திரன் வரம் கொடுத்துள்ளான் (இதனால்தான் ராமன் மரத்துக்குப் பின்னால் மறைந்து நின்று வாலியின் மீது அம்பு தொடுத்தான் என்பது இன்னும் ஒரு பாடலில் வருகிறது).

***

269.வாலி, இராமனுடைய நற்பண்புகளை யெடுத்துரைத்துத் தாரையின் கூற்றினை மறுத்தல் (4068-4073)

‘உழைத்த வல் இரு வினைக்கு ஊறு காண்கிலாது

அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம்

இழைத்தவற்கு , இயல்பு அல இயம்பி என் செய்தாய் ?

பிழைத்தனை , பாவி ! உன் பெண்மையால் ‘ என்றான் .

பொருள்:

• உழைத்த – உயிர்களைத் துன்புறுத்துகின்ற

• வல் இரு வினைக்கு – நல்வினை, தீவினை ஆகிய வலிமையான இருவினைகளுக்கும்

• ஊறு காண்கிலாது – அழிவு அல்லது முடிவு காணும் வழியினை அறிய முடியாமல்

• அழைத்து அயர் உலகினுக்கு – இறைவனை உதவிக்கு அழைத்து வருந்துகின்ற உலக மக்களுக்கு

• அறத்தின் ஆறு எலாம் இழைத்தவற்கு – தர்மத்தின் வழிகளையெல்லாம் தன் செயல்களால் வகுத்துக் காட்டிய இராமனுக்கு

• இயல்பு அல இயம்பி என் செய்தாய் – அவனது நற்குணத்திற்கு மாறான குற்றங்களைச் சொல்லி என்ன காரியம் செய்தாய்?

• பிழைத்தனை பாவி உன் பெண்மையால் – பேதமை நிறைந்த பெண்ணாகப் பிறந்ததால் பெரும் பிழை செய்துவிட்டாய் (அறியாமையால் பேசிவிட்டாய்).

***

270.சுக்கிரீவனுடன் போரிடச் செல்லும் வாலியை அவனது மனைவி தாரை தடுத்து, “சுக்கிரீவனுக்குத் துணையாக இராமன் வந்திருக்கிறான்” என்று எச்சரிக்கிறாள். அப்போது தாரையிடம் வாலி, “தன் தம்பிமார்களைத் தவிர தனக்கு என்று தனியாக வேறு ஒரு உயிர் இந்த உலகத்தில் இல்லை என்று எண்ணி வாழ்பவனும், கருணைக் கடலுமான இராமன், நானும் என் தம்பியும் நேருக்கு நேர் மோதும் போரின் நடுவே புகுந்து என் மீது அம்பு தொடுப்பானா? மாட்டான்” என்று இராமனின் அறநெறி மீது கொண்ட பெருநம்பிக்கையை வெளிப்படுத்துகிறான்

‘தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர்

இம்பரின் இலது ‘ என எண்ணி ஏய்ந்தவன்

எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரினில்

அம்பு இடைதொடுக்குமோ , அருளின் ஆழியான் ? ‘4080

தம்பியர் அல்லது = தம்பிகளை தவிர

தனக்கு வேறு உயிர் = தனக்கு வேறு ஒரு உயிர்

இம்பரின் இலது = இந்த உலகில்  இல்லை

என எண்ணி ஏய்ந்தவன் = என எண்ணி வாழ்கிறவன்

எம்பியும் = என் தம்பியும்

யானும் = நானும்

உற்று எதிர்ந்த போரினில் = ஒருவரோடு ஒருவர் எதிர்த்து சண்டை இடும் போது

அம்பு இடை தொடுக்குமோ = அம்பை இடையில் விடுவானோ ?

அருளின் ஆழியான் = கருணை கடல் (ஆழி = கடல் ) ராம பிரானைக் கருணைக் கடல் என்றும் புகழ்கிறான் வாலி

–subham—

Tags – கம்ப ராமாயணம், 270 கேள்விகள், விடைகள், பெண்கள் மீது கம்பன் மீண்டும் தாக்குதல், வாலியின் மனைவி தாரா,

Leave a comment

Leave a Reply