லலிதா சஹஸ்ர நாமத்தில் பக்தி சம்பந்தமான நாமாக்கள்! – 3 (Post.16,368)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,368

Date uploaded in London –3 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

லலிதா சஹஸ்ர நாமத்தில் பக்தி சம்பந்தமான நாமாக்கள்! – 3

ச. நாகராஜன்

பக்தி நாமாக்களின் மஹிமை தொடர்கிறது.

நாமம் 331 வரதா

வரங்களைக் கொடுப்பவள்.

பிரம்மா, விஷ்ணு முதலான பக்தர்களுக்கெல்லாம் வேண்டிய வரங்களைத் தருபவள்.

பக்தியுடன் உபாஸனை செய்பவர்களுக்கு வேண்டிய வரங்களை அருள்பவள் அம்பாள்.

முத்திரைகளில் பயம், ஆபத்து ஆகியவைகளிலிருந்து காப்பாற்றுவதற்காகக் கைகளால் காட்டப்படும் முத்திரைக்கு அபயம் என்று பெயர். சகல அபீஷ்டங்களையும் கொடுப்பதாகக் காட்டும் முத்திரைக்கு வரதம் என்று பெயர்.

அபயம் வலது கையினால் காட்டப்படும்.

வரதம் இடது கையினால் காட்டப்படும்.

தேவர்கள், அசுரர்கள், முனிவர்கள் ஆகியோருக்குத் தேவையான வரன்களைக் கொடுப்பதாக அம்பாள் எப்போதும் தன் கையினால் காட்டிக் கொண்டிருப்பதாக மத்ஸ்ய புராணம், பத்ம புராணம் ஆகிய புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

உண்மையில் அம்பாள் கோரிய வரன்களைத் தருபவள் என்பதால் வரதா என்ற நாமம் ஏற்பட்டதே தவிர அவள் வரத முத்திரையைக் காண்பிப்பதனால் அந்தப் பெயர் ஏற்பட்டதென்று சொல்ல முடியாது. தியானம் செய்யும் போது அபய, வரத முத்திரைகளுடன் அம்பாளை தியானம் செய்வது வழக்கமல்ல. மாறாக நான்கு கைகளிலும் பாசாங்குச சாபபாணங்கள் இருப்பதாகவே தியானம் செய்வது வழக்கம். அம்பாளுக்கு தன் கைகளின் முத்திரைகளினால் வரங்களைக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவள் தனது பாதங்களினாலேயே வரத்தைக் கொடுக்கும் திறன் உடையவள்.

இதை ஆதி சங்கரர் ‘த்வதந்ய பாணிப்யாம்’ என்ற சௌந்தர்ய லஹரி ஸ்லோகத்தில் கூறுகிறார். (ஸ்லோக எண் 4)

அடுத்து தேவி பாகவதத்திலும் வராஹ புராணத்திலும் வரதா என்ற பெயர்க் காரணம் பற்றி அழகுறச் சொல்லப்பட்டிருக்கிறது.

நாமம் 375

காமபூஜிதா

மன்மதனால் உபாஸிக்கப்பட்டவள்

அம்பாளுடைய முக்கியமான உபாஸகர்கள் பன்னிருவர்.

அவர்களின் மன்மதனும் ஒருவர்.

ஆதி சங்கரர் சௌந்தர்ய லஹரியில் (ஸ்லோக எண் 6) “தநு பௌஷ்பம் மௌர்வீ” என்ற ஸ்லோகத்தில் அம்பாளின் கடைக்கண் பார்வையால் மன்மதனுக்கு அருள் கிடைத்ததைக் குறிப்பிடுகிறார்

அருணோபநிஷத் மன்மதன் ஶ்ரீ வித்யையான வித்யா ரத்னத்தை அடைந்ததைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

பக்தர்களுக்கு அருள் புரியும் அம்பாளின் கருணையை உபாஸகர்கள் பெற்ற பல பலன்கள் மூலமாகக் காணலாம்.

நாமம் 869

க்ஷிப்ர ப்ரஸாதினீ

சீக்கிரத்தில் அனுக்ரஹம் செய்பவள்

அதாவது பக்தர்களின் உபாஸனையால் அம்பிகை கொஞ்ச காலத்திற்குள்ளாகவே சந்தோஷப்படுகிறாள், அதனால் உடனே அனுக்ரஹம் செய்கிறாள் என்று அர்த்தம்.

இதை ஸௌர புராணமும் விவரிக்கிறது.

தீவிர பக்தியுடன் இருப்பவர்களுக்கு ஒரு ஜன்மத்திலேயே முக்தி கிடைக்கிறது. சாமான்ய பக்தி உடையவர்களுக்கு மறு ஜன்மம் அல்லது நான்காவது ஜன்மத்தில் முக்தி கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதை சிவபுராணத்திலும் தந்த்ர ராஜத்திலும் காணலாம்.

மேலும் பக்தி சம்பந்தமாக உள்ள சில நாமங்களை அடுத்துக் காணலாம்.

***                  தொடரும்

Leave a comment

Leave a Reply