கம்பராமாயணத்தில் 280 கேள்விகள்; ‘ராமா ’ நீ இப்படிச் செய்ய ‘லாமா’? (Post.16,370)

Written by London Swaminathan

Post No. 16,370

Date uploaded in London – 3 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

பால காண்டம், அயோத்தியா காண்டம்,  ஆரண்ய காண்டங்களை முடித்து இப்பொழுது கிஷ்கிந்தா காண்டத்தில் இருக்கிறோம். மிகவும் சுவையான பகுதிக்கு வந்துவிட்டோம்; படித்துச் சுவையுங்கள்! இதற்கு முன்னர் வெளியிட்ட 270 கேள்விகளும், விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும். கம்ப ராமாயணம் பற்றி நான் எழுதிய இரண்டு நூல்களையும் வாங்கிப் படிக்க முடிந்தால் படியுங்கள்.

271

உலகில் நேர்மையில் நிற்பவர்கள் மிகச் சிலரே; பொய்யானவர்கள் அல்லது தவறு செய்பவர்கள்  பலர்; இதுதான் உலக நியதி- ராமனின் பொன்மொழி எந்தப் பாடலில் வருகிறது ?

272

VALI SUGREEVA WRESTLING FIRST ROUND RESULT  10-10 DRAW!

வாலி -சுக்ரீவன்  முதல் ரவுண்டு மல்யுத்தம் டிராவில் முடிந்தது ; மூச்சுத் திணறிய சுக்ரீவன் , ராமனிடம் வந்து ஏதேனும் ஒரு ஐடியா சொல்லப்பா என்று கெஞ்சியவுடன் ராமன் என்ன ஐடியா சொன்னான் ?

273

ராமன் மரத்துக்குப் பின்னால் மறைந்து நின்று அம்பு விடுகிறான் ; அது வாலியின் உடலை ஊடுருவி நின்றவுடன் வாலி எப்படிக் கதறினான் ?

274

அம்பின் மீது ராம என்ற பெயரைக் கண்ட வாலியின் மன எழுச்சியைக் கூறும் கீழேயுள்ள அற்புதமான, புகழ்பெற்ற பாடலின் பொருள் என்ன ?

மும்மை சால் உலகுக்கு எல்லாம்

மூல மந்திரத்தை , முற்றும்

தம்மையே தமர்க்கு நல்கும்

தனிப் பெரும் பதத்தை , தானே

இம்மையே எழுமை நோய்க்கும்

மருந்தினை , ‘இராமன் ‘ என்னும்

செம்மை சேர் நாமம் தன்னைக்

கண்களின் தெரியக் கண்டான் .

275

ராமா இப்படிச் செய்யலாமா ? பரதனின் BROTHER பிரதர் அல்லவா நீ!  என்று வாலி கேட்ட பொருத்தமான, சுவையான கேள்விகள் என்ன?

276

மறைந்திருந்து கொன்றாயே , இது முறையோ, தகுமோ, நியாயமோ என்று வாலி கேட்டது  என்ன ?

277

ஓஹோ , எனக்குப்புரிகிறது ! மனைவியை இழந்த மதிமயக்கத்தில் இப்படிச் செய்தாயோ என்று ராமனை வாலி கிண்டல் செய்தது எப்படி?

278

தை பிறந்தால் வழி பிறக்கும் திரைப் படத்தில் சுரதா இயற்றிய

மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?

கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?

என்னும் பாடலை வாலி பாடியது எங்கே வருகிறது?

279

நீ அடுத்தவன் பொண்டாட்டியைத் தூக்கிட்டுப் போனேயே; அதுதாண்டா, ஒரே தப்பு- என்று ராமன் சொன்னானா ?

280

ராமா , நீ புரிஞ்சுக்கலியே!  நாங்கள் எல்லாம் கீழ் ஜாதி ! யார் மேலையும் கை வைப்போம்! என்று வாலி கூறிய பதில் என்ன ?

***********

விடைகள்

271. ‘அத்தா! இது கேள் ‘ என ஆரியன் கூறுவான் : ‘இப்

பித்து ஆய விலங்கின் ஒழுக்கினைப் பேசல் ஆமோ ?

எ தாயர் வயிற்றினும் பின் பிறந்தார்கள் எல்லாம்

ஒத்தால் , பரதன் பெரிது உத்தமன் ஆவது உண்டோ ? ‘

‘வில் தாங்கு வெற்பு அன்ன , இலங்கு எழில்

தோள ! `‘மெய்ம்மை

உற்றார் சிலர் , அல்லவரே பலர் ”

என்பது உண்மை ;

பெற்றார் உழைப் பெற்ற பயன் பெறும்

பெற்றி அல்லால் ,

” அற்றார் நவை ” என்றலுக்கு ஆகுநர்

ஆர் கொல் ? ‘ என்றான் .

வாலி- சுக்ரீவன் மோதலைக் கண்ட இலக்குவன் “ஒரே வயிற்றில் பிறந்த சகோதரர்கள் ஒருவருக்கொருவர் இப்படிப் பகைத்துக் கொண்டு கொல்லலாமா?” என்று  வருத்தத்தோடு கேட்கிறான். அப்போது ராமன் சொல்கிறான் :- பைத்தியம் பிடித்தது போன்ற விவேகமில்லாத இவ்விலங்குகளின் (சுக்ரீவன், வாலி போன்றோரின்) ஒழுக்க முறையையும் மனிதர்களின் ஒழுக்கத்தையும் ஒப்பிட்டுப் பேசுவது முறையல்ல; ஒரே தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர்கள் எல்லாரும் ஒரே மாதிரி நடந்து கொள்வார்கள் என்றால், என் தம்பி பரதன் மட்டும் எல்லாருக்கும் மேலான உத்தமனாக விளங்குவது எப்படிச் சாத்தியமாகும்? (அதாவது எல்லா சகோதரர்களும் ஒன்றாக இருப்பதில்லை, பரதனைப் போலச் சிறந்தவரும் உண்டு, இவர்களைப் போல் வேறு விதமானவர்களும் உண்டு)

மேலும்…………….

வில்லினை ஏந்திய மலை போன்ற, விளங்குகின்ற அழகிய தோள்களை உடைய இலக்குவா!

“மெய்ம்மை உற்றார் சிலர்; அல்லவரே பலர் என்பது உண்மை.” — உண்மையான வழியில், நேர்மையில் நிற்பவர்கள் உலகில் மிகச் சிலரே; அவ்வாறில்லாதவர்கள் (பொய்யானவர்கள் அல்லது தவறு செய்பவர்கள்) பலராய் இருப்பதுதான் உலக நியதி– என்று ராமன் ஒரு பொன்மொழியை உதிர்த்தான் !

***

272. ராமன் சொன்ன ஐடியா: நான் உதவி செய்ய ரெடி! ஆனால் இரண்டு பெரும் ஒரே மாதிரியா இருக்கீங்க! ரெண்டு பெரும் சம மாக சண்டை போடுறீங்க; எனக்கு I AM CONFUSED  ஒரே கன்ப்யூஷன் : நீ மாலை போட்டுக்கொண்டு போ ! அப்புறம் அந்த வாலியை நான் கவனிச்சுக்கறேன்

மலைந்தபோது இனைந்து , இரவிசேய் , ஐயன்மாட்டு அணுகி ,

உலைந்த சிந்தையோடு உணங்கினன் , வணங்கிட , ‘உள்ளம்

குலைந்திடேல் ; உமை வேற்றுமை தெரிந்திலம் ; கொடி பூ

மிலைந்து செல்க ‘ என விடுத்தனன் ; எதிர்த்தனன் மீட்டும் .

***

273.வாலி , தன்னுயிரை வாங்கிய படைக்கலம் எத்தகையதோ என ஐயுறுதல்

‘நேமி தான் கொலோ ? நீலகண்டன்

நெடுஞ் சூலம்

ஆம் இது , ஆம் கொலோ ? அன்று எனின் ,

குன்று உருவு அயிலும் ,

நாம இந்திரன் வச்சிரப்

படையும் , என் நடுவண்

போம் எனும் துணை போதுமோ ?

யாது ? ‘ எனப் புழுங்கும் .

மார்பில் பாய்ந்த அம்பின் அதிபயங்கர ஆற்றலைக் கண்டு வாலி தன் மனதுக்குள் இவ்வாறு குழம்பித் தவிக்கிறான்:

“என் மார்பில் பாய்ந்திருக்கும் இந்த ஆயுதம் திருமாலின் சுதர்சனம் என்னும் சக்கராயுதமோ?  அல்லது நஞ்சுண்ட கறுத்த கழுத்தையுடைய சிவபெருமானின் நீண்ட சூலாயுதம் தான் இதுவோ?  அவை இரண்டுமே இல்லை என்றால், கிரவுஞ்ச மலையைத் துளைத்துச் சென்ற முருகப் பெருமானின் வேலாயுதமோ? அல்லது பகைவருக்கு அச்சம் தரும் இந்திரனின் வச்சிராயுதமோ? இவை அல்லாத வேறு எந்தச் சாதாரண ஆயுதத்திற்கும் என் உடலின் நடுவே பாய்ந்து செல்லும் அளவுக்கு ஆற்றல் இருக்குமா? இது என்னவாக இருக்கும்?” என்று வாலி புழுங்கித் தவிக்கிறான்.

***

274.அற்புதமான பாடலின் பொருள்:

• மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை: மூன்று உலகங்களுக்கும் (சுவர்க்கம், பூமி, பாதாளம் அல்லது முக்குணங்கள் சார்ந்த உலகம்) மூலமான மந்திரமாக விளங்குவதும்,

• முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை: தன்னை நம்பிய அடியார்களுக்குத் தன் முழுமையான அருளையும் தாராளமாகத் தருகின்ற ஒப்பற்ற உயர்ந்த நிலையாக இருப்பதுவும்,

• தானே இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை: இந்தப் பிறப்பிலும், தொடர்ந்து வரும் ஏழு பிறவிகளாகிய துன்பம் எனும் நோய்க்குச் சிறந்த மருந்தாக இருப்பதுவும்,

• ‘இராமன்’ என்னும் செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களின் தெரியக் கண்டான்: தூய்மையான ‘இராமன்’ என்னும் திருநாமத்தை (தன் நெஞ்சில் பாய்ந்த இராமனின் அம்பில் எழுதியிருந்ததை) வாலி தன் கண்களால் பார்த்து உணர்ந்தான்.

(வாலிக்கு இராமபிரான் அம்பு எய்தபோது, அந்த அம்பில் எழுதப்பட்டிருந்த ‘இராமன்’ என்னும் திருநாமத்தைப் பார்த்து அவன் ஞானம் அடைந்ததை இந்நிகழ்வு குறிக்கிறது).

***

275.     ‘வாய்மையும் மரபும் காத்து

மன் உயிர் துறந்த வள்ளல்

தூயவன் மைந்தனே ! நீ

பரதன் முன் தோன்றினாயே ;

தீமைதான் பிறரைக் காத்துத்

தான் செய்தால் தீங்கு அன்று ஆம் ஓ ?

தாய்மையும் அன்றி நட்பும்

தருமமும் தழுவி நின்றாய் .  4.7.85

உண்மையையும், அரச மரபையும் காவல் காத்து உயிரை கொடுத்த வள்ளல் தூயவனான தசரதனின் மகனே ! நீ  பரதன் முன் பிறந்தாயே ;  பிறரை தீமை செய்யாமல் தடுத்து  தான் தீங்கு செய்தால் அது தீமை இல்லை என்று ஆகுமா?  தாய்மைக் குணமும்  நட்பும் தருமமும் கொண்டு நின்றவனல்லவா நீ.

****

276 குலம் இது ; கல்வி ஈது ;

கொற்றம் ஈது ; உற்று நின்ற

நலம் இது ; புவனம் மூன்றும்

நாயகம் உன்னது அன்றோ ?

வலம் இது ; இவ் உலகம் தாங்கும்

வண்மை ஈது ; என்றால் திண்மை

அலமரச் செய்யலாமோ ,

அறிந்திருந்து அயர்ந்துளார் போல் .

நீ பிறந்த குலமோ (சூரிய வம்சம்) மிகவும் உயர்வானது; நீ கற்ற கல்வியும் உயர்ந்தது; உன்னிடம் உள்ள ஆட்சியும் வெற்றியும் அத்தகையது;  உன்னைச் சேர்ந்துள்ள நற்பண்புகளும் நன்மைகளும் இவ்வளவு சிறந்தவை; மூன்று உலகங்களுக்கும் நீயே தலைவன் அல்லவா?  உனது வலிமையும் வீரமும் அப்படிப்பட்டவை;  இந்த உலகத்தைக் காக்கும் பெருந்தன்மையும் அருளும் உன்னுடையது என்றால்; அறத்தின் திண்மையும் நீதியும் குலையுமாறு (மறைந்து நின்று என்னை அம்பு எய்து) இப்படிச் செய்வது முறையா? எல்லாவற்றையும் அறிந்திருந்தும் ஒன்றுமறியாதவன் போல் நடப்பது தகுமா?

***

277.’ ஓவியத்தில் வரையமுடியாத அழகு படைத்தவனே ! உங்கள் குலத்தினரின் பெருமையே தருமத்தைக் காப்பதுதான் ! ஆவியை , சனகன் பெற்ற அன்னத்தை , அமிழ்தின் வந்த  சீதா தேவியைப் பிரிந்தததால் உன் புத்தி நிலை தடுமாறிற்றோ! என்றான் வாலி

கோ இயல் தருமம் உங்கள்

குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் –

ஓவியத்து எழுத ஒண்ணா

உருவத்தாய் ; – உடைமை அன்றோ ?

ஆவியை , சனகன் பெற்ற

அன்னத்தை , அமிழ்தின் வந்த

தேவியைப் பிரிந்த பின்னை ,

திகைத்தனை போலும் , செய்கை . ‘

****

278. ஏ ராமா, நான் உனக்கு ஒரு பாரமா?  மனு ஸ்ம்ருதியில் குரங்கு இனத்தைக் கொல்லும் விதி ஏதேனும் உள்ளதா?

குரக்கு இனத்து அரசைக் கொல்ல

மனுநெறி கூறிற்று உண்டோ ?

இரக்கம் எங்கு உகுத்தாய் ? என்பால்

எப் பிழை கண்டாய் ? அப்பா !

என்னிடத்தில் என்ன தவற்றினைக் கண்டாய் ? மேலும்

வீரம் அன்று ; விதி அன்று ; மெய்ம்மையின்

வாரம் அன்று ; நின் மண்ணினுக்கு என் உடல்

பாரம் அன்று ; பகை அன்று ; பண்பு ஒழிந்து ,

ஈரம் அன்று இது ; என் செய்தவாறு நீ ? ‘

• வீரம் அன்று: நீ என்னைக் கொன்றது உனது வீரத்தைக் காட்டும் செயல் அல்ல.

• விதி அன்று: அறநூல்கள் வகுத்த விதிமுறைக்கு ஒத்த செயலும் அல்ல.

• மெய்ம்மையின் வாரம் அன்று: உண்மையைச் சார்ந்ததும் அல்ல.

• நின் மண்ணினுக்கு என் உடல் பாரம் அன்று: உனக்குரிய இந்த பூமிக்கு என் உடல் ஒரு சுமை அல்ல.

• பகை அன்று: நான் உனக்குப் பகைவனும் அல்ல.

• பண்பு அழிந்து ஈரம் இன்றி, இது என் செய்தவாறு அரோ?: இப்படிப்பட்ட எந்தக் காரணமும் இல்லாமல், உனது நற்பண்புகளை இழந்து, இரக்கமில்லாமல் நீ என்னை மறைந்திருந்து கொல்வது என்ன நியாயம்? என்று இராமனை நோக்கி வாலி கேள்வி கேட்கிறான்

***

279.நீ அடுத்தவ ன் பொண்டாட்டியைத் தூக்கிட்டுப் போனேயே; அதுதாண்டா, ஒரே தப்பு-

4145    ‘ஈரம் ஆவதும் , இற் பிறப்பு ஆவதும் ,

வீரம் ஆவதும் , கல்வியின் மெய்ந் நெறி

வாரம் ஆவதும் , மற்று ஒருவன் புணர்

தாரம் ஆவது தாங்கும் தருக்கு அரோ . ‘

ஈரம்‌ ஆவதும்‌ – அன்பின்‌ செயல்‌ ஆவதும்‌; இற்பிறப்பு ஆவதும்‌ – நல்ல குலத்தில்‌

பிறந்ததன்‌ பயன்‌ ஆவதும்‌; வீரம்‌ ஆவதும்‌ – வீரத்தன்மை ஆவதும்‌, கல்வியின்‌

மெய்ந்நெறி – கல்வி கற்று உணர்ந்த உண்மை நெறியில்‌; வாரம்‌ ஆவதும்‌ – மேன்மை

அடைவதும்‌; மற்று ஒருவன்‌ புணர்தாரம்‌ ஆவதை – மற்றொருவன்‌ மணந்த

மனைவியை; தாங்கும்‌ தருக்கு அதோ – (அவளது கற்பிற்கு இழுக்கு வராதவாறு)  மதித்துக்‌ காக்கும்‌ பெருமையே அன்றோ?

வாலி பிறன்மனை விரும்பிய பெருங்குற்றம்‌ இங்குச்‌ சுட்டப்படுகிறது. எல்லா நல்ல குணங்களையும்‌ அழிக்கும்‌ பெருங்குற்றமாக இது கருதப்படுகிறது. “பிறர்மனை

நோக்குவேமை உறவு எனப்‌ பெறுதி போலாம்‌” (7405) என்ற கும்பகர்ணன்‌ கூற்றும் பின்னால் வருகிறது ,’பிறன்‌ கடை நின்றாரின்‌ பேதையார்‌ இல்‌” (குறள்‌. 142) பிறன்மனை நோக்காத பேராண்மை’ (குறள்‌. 148) என்றார்‌ வள்ளுவர்‌.

‘வீரம்‌ அன்று’ (4026) என வாலி கூறிய குற்றச்சாட்டிற்கு ‘வீரமாவது இது’ என இப்பாடலில்‌ இராமன்‌ உணர்த்தினான்‌.

****

280

‘ஐய ! நுங்கள் அரும் குலம் கற்பின் அப்

பொய் இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சி போல்

செய்திலன் , எமைத் தேம் மலர் மேலவன் ;

எய்தின் எய்தியது ஆக இயற்றினான் .

ராமா! எங்களை பிரம்மா படைத்த விதம் வேறு ; உங்களுடைய உயர்ந்த கற்பு நெறியை பிரம்மா எங்களுக்கு விதிக்கவில்லை என்கிறான் வாலி.

(அடுத்த பகுதியில் இன்னும் சுவையான விஷயங்களைக் காண்போம்)

–SUBHAM—

TAGS- வாலி கேள்வி , ராமன் பதில் , கம்ப ராமாயணம், 280 கேள்விகள் , மறைந்து நின்று கொன்றது ஏன்?

Leave a comment

Leave a Reply