
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,371
Date uploaded in London –4 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லலிதா சஹஸ்ர நாமத்தில் பக்தி சம்பந்தமான நாமாக்கள்! – 4
ச. நாகராஜன்
பக்தி நாமாக்களின் மஹிமை தொடர்கிறது.
நாமம் 545 புலோமஜார்ச்சிதா
இந்திராணியினால் ஆராதிக்கப்பட்டவள்.
நகுஷன் தேவலோகத்தை ஆளும்போது இந்திரனைத் தான் திரும்பவும் அடைவதற்காக இந்திராணி அம்பாளை பூஜித்தாள்.
இந்த விருத்தாந்தம் தேவி பாகவதம் ஆறாவது ஸ்கந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
நாமம் 641 த்யானகம்யா
தியானத்தினால் அறியக்கூடியவள்
தியானம் என்பது சித்த விருத்திகளை நிரோதம் செய்து பாவனை செய்வதாகும். இதனால் அம்பாளை அடையலாம் என்று ச்ருதியிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
நாமம் 732
நாமபாராயண ப்ரீதா
தனது நாமங்களைப் பாராயணம் செய்வதால் ப்ரியமடைபவள்
அ, ஆ, இ, ஈ, என்பது முதல் க்ஷ முடிய இருக்கும் அக்ஷரங்களெல்லாம் அம்பாளுடைய நாமங்கள் தான். இவற்றில் அ முதல் அ: வரையில் 16 பாக்கி அக்ஷரங்களாகிய வ்யஞ்ஜனங்கள் க காரம் முதல் க்ஷ காரம் வரையில் உள்ள 35 அக்ஷரங்களாகும்.
அகாரமும் வ்யஞ்ஜனங்கள் 35ம் சேர்ந்து ஆகும் 36 அக்ஷரங்களும் முப்பத்தாறு வர்ஷங்களின் ரூபங்களாகின்றன. அவற்றில் ஒவ்வொரு அக்ஷரத்துடன் பதினாறு ஸ்வரங்களைப் பெருக்கினால் (36X16=576) வர்ணங்கள் வருவது அத்தனை மாதங்கள் ஆகின்றன. இந்த 36 வர்ஷங்களை 576 மாதங்களால் பெருக்கினால் வரும் 20376 என்ற எண்ணிக்கையானது நாமங்களின் எண்ணிக்கை ஆகிறது, ஒவ்வொரு நாமமும் 7 அக்ஷரங்களுடையது. முதல் மூன்று அக்ஷரங்கள் மேலே சொல்லப்பட்டபடி வருவன. அவற்றிற்குப் பிறகு, ஆம், ஈம், நம: என்று சேர்த்தால் ஏழு ஆகிறது. (இந்த ஆ, ஈ இவ்விரண்டையும் பல்லவங்கள் – அதாவது தளிர்கள், கடைசி அக்ஷரங்கள்- என்று சொல்லப்படும்)
உதாரணமாக, முதல் நாமமானது அம், கம், அம், ஆம், நிம், நம: என்பது. இரண்டாவது அம், கம், கம், ஆம், ஈம், நம: என்பது. மூன்றாவது அம், கம், க2ம், ஆம், ஈம், நம: என்பது. இம்மாதிரி முதல் மூன்று பீஜங்களையும் மாற்றிச் சொல்ல வேண்டியது.
இம்மாதிரி நாமங்கள் ஏற்படுவதில் ஒவ்வொரு நாமத்திலும் ஆதியில் உள்ள பீஜத்ரயமானது முறையே நித்யாக்ஷர, யுகாக்ஷர, மாஸாக்ஷரங்கள் என்று சொல்லப்படும். இவை தான் மேலே கூறியபடி மாறிமாறிக்கொண்டுபோகும். இவற்றில் ஸ்வரங்கள் விமர்சாம்சம் என்றும், வ்யஞ்ஜனங்கள் ப்ரகாசாம்சமென்றும் இவையிரண்டின் ஸம்யோகமானது ப்ரஹ்மஸ்வரூபம் என்றும் சொல்லப்படும்.
இவ்விதமான நாம பாராயணத்தைப் பற்றி லகு ஸ்துதியிலும், தேவி பாகவதத்திலும் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படி பாராயணம் செய்யும் போது முதல் பீஜத்ரயத்திற்குப் பின்னும், பல்லவங்களுக்கு முன்னும், மூல மந்திரத்தைச் சேர்த்துச் சொல்ல வேண்டும்.
இந்த பாராயணக்ரமமானது ஐந்து விதமாகும். ஒரு தினத்திலாவது, ஒரு வாரத்திலாவது, ஒரு பக்ஷத்திலாவது, ஒரு மாதத்திலாவது, முப்பத்தாறு தினங்களிலாவது செய்யலாம் என்று காதிமதத்தில் பல ஸ்லோகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
லகு ஸ்துதி ஸ்லோகத்தில் (ஆ ஈ பல்லவிதை என்று ஆரம்பிக்கும் ஸ்லோகம்) சொல்லப்பட்டதற்கு ராகவானந்தர் ஒரு வியாக்யானம் எழுதியுள்ளார். அதில் நாமத்திய அக்ஷரங்கள் சேர்ப்பதானது வேறு விதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
பாஸ்கர ராயருடைய அபிப்ராயம் பின் வருமாறு:-
அ முதலான ஸ்வரங்கள் பதினாறு.
க முதலான வ்யஞ்ஜனங்கள் ஒவ்வொன்றோடு பதினாறு ஸ்வரங்களையும் சேர்த்தால் (35X16=560) 560 வர்ணங்களாகின்றன. ஆக மொத்தம் 576. இவ்விதமான இரண்டு அக்ஷரங்களின் சேர்க்கைகள் ஒவ்வொன்றுடன் அடுத்தாற்போல் (அகாரம்+35 வ்யஞ்ஜனங்கள் =) 36 அக்ஷரங்களில் ஒவ்வொன்றையும் சேர்த்தால் (576X36 = 20736) 20736 பேதங்கள் ஏற்படுகின்றன. இவற்றுடன் ஒவ்வொரு முறையும் மேலே கூறப்பட்ட பல்லவத்தைச் சேர்க்க வேண்டும்.
இது தவிரம் இன்னமும் பேதங்கள் இருக்கக்கூடும் என்பதால், இந்த நாம பாராயணத்தின் ரகசியங்களை குரு மூலமாகவே தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம பாராயணம் என்று நாமத்தில் சொல்லப்பட்டிருப்பதால் இந்த சஹஸ்ர நாம பாராயணமே சொல்லப்பட்டதாகவும் எடுத்துக் கொள்ளலாம். இந்த பாராயணத்தின் மகிமையைப் பற்றி பூர்வ பாகத்திலும், உத்தர பாகத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.
பூஜை, ஜபம் செய்யாவிட்டாலும் கூட, சஹஸ்ர நாம பாராயணம் செய்தாலேயே அம்பாளுடைய ப்ரியம் ஏற்படுவதாகச் சொல்லப்பட்டது.
முக்கிய குறிப்பு: இத்துடன் இந்த பக்தி நாமத் தொடர் முடிவடைகிறது. மேலே கூறிய குறிப்புகள், விளக்கங்கள் அனைத்தும் 1938ம் ஆண்டு G.V. கணேச ஐயர் B.A.B.L தமிழில் எழுதி அளித்துள்ள பாஸ்கர ராயரின் லலிதா சஹஸ்ர நாம பாஷ்யத்திலிருந்து எடுத்துத் தரப்பட்டது. பக்தி நாமாக்களின் தொகுப்பாக இதைக் கொள்ளலாம். சம்ஸ்கிருத ஸ்லோகங்களை அன்பர்கள் புத்தகத்தில் பார்த்துத் தெரிந்து கொள்வதோடு அதற்கான அர்த்தத்தை மூல நூல்களை நாடித் தெரிந்து கொள்ள வேண்டும்.
இது போல கர்மம், ஞானம், யோகம் ஆகியவற்றில் உள்ள நாமாக்களையும் தொகுத்து அர்த்தம் தெரிந்து கொண்டால் இந்த சஹஸ்ர நாமம் எவ்வளவு அர்த்தம் பொதிந்த ரகசியமான அற்புத நூல் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
*** முற்றும்