

RAMAYANA SCULPTURES FROM INDONESIA.
Written by London Swaminathan
Post No. 16,372
Date uploaded in London – 4 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நான் பி எஸ் சி B. Sc. படித்த காலத்தில் தமிழும் ஆங்கிலமும் கம்பல்சரி/ கட்டாய பாடம் ; மதுரையில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்த , கம்பனும் மில்டனும் எழுதி டாக்டர் பட்டம் வாங்கிய எஸ். ஆர். கே (ரஷிய ஆதரவு வலது கம்யூனிஸ்ட் பேச்சாளர் -டாக்டர் எஸ் ராமகிருஷ்ணன்) எழுதிய சிறியன சிந்தியாதான் புஸ்தகம்தான் எனக்கு நான் டீடைல்ட் பாடப் புஸ்தகம் ; அந்த வரி இந்தப் பகுதியில் வருகிறது! அற்புதமான பகுதி! ராமன் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்திய அதே வாலியின் வாயிலாக ராமபிரானை கம்பன் புகழும் அற்புதமான பாடல்கள் நிறைந்த பகுதி! ராமனிடம் வாலி கேட்ட இரண்டு வரங்களும் வாலியின் பெருமையை உயர்த்துகிறது ; அவன் சிறியன சிந்தியாதான் என்று கம்பன் புகழ்வது சாலப்பொருத்தமே!
***
பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டங்களை முடித்து இப்பொழுது கிஷ்கிந்தா காண்டத்தில் இருக்கிறோம். மிகவும் சுவையான பகுதிக்கு வந்துவிட்டோம்; படித்துச் சுவையுங்கள்! இதற்கு முன்னர் வெளியிட்ட 280 கேள்விகளும், விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும். கம்ப ராமாயணம் பற்றி நான் எழுதிய இரண்டு நூல்களையும் வாங்கிப் படிக்க முடிந்தால் படியுங்கள்.
***********

281
வாலியின் குற்றச்சாட்டுக்கு பதில் தந்த
‘ராமனின் விளக்கம்: மக்கள் யார்? மாக்கள் யார் ?
282
அது சரி ! போகட்டும் ; ஏன் மறைந்து நின்று அம்பு விட்டாய் ? என் கேள்விக்கென்ன பதில்?– வாலி
283
வாலியின் கேள்விக்கு ராமன் பதில் சொல்லவில்லை ; லெட்சுமணன் இடையில் புகுந்து என்ன செப்பினான் ?
284
சிறியன சிந்தியாதான் என்ற அற்புதமான அடைமொழியை வாலிக்குச் சூட்டி, கம்பன் புகழும் படி, என்ன நடந்தது ?
285
பிழைகளைப் பொறுத்தருள்வாய் என்று வேண்டிய வாலி, ராமனை என்ன சொல்லிப் போற்றினான் ?
286
ராமனிடம் வாலி இரண்டு வரங்களைக் கேட்கிறான் ; முதல் வரம் குடிகார சுக்ரீவனின் குடிப்பழக்கம் பற்றியது; அது என்ன வரம்?
287
ராம பிரானிடத்தில் வாலி கேட்ட இரண்டாவது வரம் என்ன ?
288
288.அனுமன் பற்றி வாலி என்ன மொழிந்தான்?
289
சுக்ரீவனைக் கட்டித் தழுவி வாலி பகர்ந்த அறிவுரை என்ன?
290
இறப்பதற்கு முன்னர் அங்கதனை அழைத்து, அவனுக்கு வாலி வழங்கிய புத்திமதிகள் யாவை ?
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX



விடைகள்
281. ‘நன்று , தீது , என்று இயல் தெரி நல் அறிவு
இன்றி வாழ்வது அன்றோ , விலங்கின் இயல் ?
நின்ற நல் நெறி , நீ அறியா நெறி
ஒன்றும் இன்மை , உன் வாய்மை உணர்த்துமால் . ‘
எது நல்லது, எது தீயது என்று வேறுபடுத்தி அறியும் நல்ல அறிவு
இல்லாமல் வாழ்வது விலங்குகளின் இயல்பு அல்லவா? நீ நல்ல அறநெறிகளை அறியாதவனில்லை ; நீ தெரிந்தே தவறு செய்திருக்கிறாய் என்பதை உன் வார்த்தைகளே உணர்த்துகின்றன என்று வாலியிடம் இராமர் கூறுகிறார்.
மேலும் மக்கள் யார்? விலங்குகள் யார்? என்று மனு ஸ்ம்ருதி என்ன சொல்கிறது என்று ராமர் விளக்குகிறார்:-
‘தக்க இன்ன, தகாதன இன்ன, என்று
ஒக்க உன்னலர் ஆயின் , உயர்ந்துள
மக்களும் , விலங்கே ; மனுவின் நெறி
புக்கவேல் , அவ் விலங்கும் புத்தேளிரே .
எவை நல்லவை, எவை தீயவை என்று பகுத்தறிந்து,
எண்ணிப் பார்த்து அறியவில்லையானால், பிறப்பால் உயர்ந்துள்ள மனிதர்களும் விலங்குகளுக்குச் சமமானவர்களே. ஆனால், விலங்குகளானாலும் மனுநீதி கூறும் அறநெறியில் நடப்பவை உயர்ந்த தேவர்களுக்கு இணையானவை என்று ராமர் விளக்குகிறார்
*********
282.’நேர் நின்று அம்பு எய்யாமல் மறைந்து நின்று அம்பு எய்தது ஏன்? ஏன்? ஏன்? ‘ என வாலி இராமனை வினாதல்:
அவ் உரை அமையக் கேட்ட
அரி குலத்து அரசு , ‘மாண்ட
செவ்வியோய் ! அனையது ஆக ;
செரு களம் அத்து உருத்து எய்யாதே
வெவ்விய புளிஞர் என்ன ,
விலங்கியே மறைந்து , வில்லால்
எவ்வியது என்னை ? ‘ என்றான் ;
இலக்குவன் இயம்பல் உற்றான் .
இராமனின் நியாயமான வார்த்தைகளைக் கேட்ட வானரங்களின் அரசனான வாலி, “மாட்சிமை பொருந்திய செம்மையான குணமுடையவனே! நீ கூறிய காரணங்கள் அப்படியே இருக்கட்டும்! ஆனால், போர்க்களத்தில் நேருக்கு நேர் நின்று கோபத்துடன் அம்பைச் செலுத்தாமல், கொடிய வேடர்களைப் போல ஒரு பக்கமாக மறைந்து நின்று என் மீது வில்லால் அம்பெய்தது ஏன்?” என்று கேட்டான். வாலியின் இக்கேள்விக்கு இலக்குவன் மறுமொழி கூறத் தொடங்கினான்
*********
283.வாலியின் வினாவுக்கு இலக்குவன் விடை பகர்தல்
‘முன்பு , நின் தம்பி வந்து
சரண்புக , முறை இ(ல்)லோயைத்
‘’ தென் புலத்து உய்ப்பன் ” என்று
செப்பினன் ; செருவில் நீயும்
அன்பினை உயிருக்கு ஆகி ,
‘’ அடைக்கலம் யானும் ” என்றி
என்பது கருதி , அண்ணல்
மறைந்து நின்று எய்தது ‘ என்றான் .
“வாலியே! இதற்கு முன்பு உன் தம்பியாகிய சுக்ரீவன் எங்களிடம் வந்து அடைக்கலம் (சரண்) புகுந்தான். அப்போது இராமபிரான் அவனிடம், தர்மநெறி தவறி முறை இல்லாமல் நடக்கும் உன்னை (வாலியை), ‘நான் தென்திசையில் உள்ள எமலோகத்திற்கு அனுப்புவேன்’ என்று வாக்குக் கொடுத்தார்.ஒருவேளை இராமன் உன் முன்னே நேராக நின்று போர் புரிந்தால், நீ உன் உயிரின் மேல் உள்ள ஆசையினால் அவனிடம் ‘நானும் உன்னை அடைக்கலம் அடைகிறேன்’ என்று கூறி சரணடைந்து விடக்கூடும். அப்படி நீ சரணடைந்தால், சரணடைந்தவரைக் காப்பது இராமனின் கடமை என்பதால் உன்னைக் கொல்ல முடியாது. ஆனால், அதே சமயம் சுக்ரீவனுக்குத் தந்த வாக்கையும் நிறைவேற்ற வேண்டும். இந்த இரண்டு தர்மசங்கடங்கள் வராமல், சுக்ரீவனுக்குத் தந்த வாக்கைக் காப்பாற்றுவதற்காகவே அண்ணல் இராமன் மறைந்து நின்று உன் மீது அம்பு எய்தார்” என்று இலக்குமணன் கூறினான்.
*********
284.ராம லெட்சுமணர்களின் உரைகளைக் கேட்ட வாலி மனம் திருந்தி சரண்டர் SURRENDER ஆகிவிடுகிறான்!
தாய் என உயர்க்கு நல்கி ,
தருமமும் , தகவும் , சால்பும் ,
நீ என நின்ற நம்பி !
நெறியினின் நோக்கும் நேர்மை ,
நாய் என நின்ற எம்பால் ,
நவை அற உணரலாமே ?
தீயன பொறுத்தி ‘ என்றான்
சிறியன சிந்தி யாதான் .
தாய் போல உயிர்களுக்கு நலம் செய்து, தருமமும், நடுநிலையும், நற்குண நிறைவும் நீயே என்று சொல்லும்படி அவ்வழி நின்று காட்டும் புருஷோத்தமனே! அறநெறி நோக்கில் காணும் தன்மையை “நாய் போன்ற எம்மிடம் குற்றம் காணலாமோ? தீய செயல்களைப் பொறுத்தருள்வாய்” என்றான் சிறிய எண்ணம் இல்லாத வாலி.
நாய் போன்றவனான என் மேல் குற்றம் பார்க்க வேண்டாம். நாங்கள் செய்யும் தீமைகளை பொறுத்துக் கொள் என்றான் சிறியன சிந்தியாதான் = கீழானவைகளை சிந்திக்காத வாலி!
*********
285.என் தம்பிக்கு கிடைத்தது இந்த உலக அரசு; எனக்கு நீ தந்ததோ வீடு பேறு (மோட்சம்)
285.‘உண்டு எனும் தருமமே உருவமாய் உடைய நிற்
கண்டு கொண்டேன் ; இனிக் காண என் கடவெனோ ?
பண்டொடு இன்று அளவுமே என் பெரும் பழவினைத்
தண்டமே , அடியனேற்கு உறு பதம் தருவதே . ‘
‘மற்று இனி உதவி உண்டோ ?
வானினும் உயர்ந்த மானக்
கொற்றவ ! நின்னை , என்னைக்
கொல்லிய கொணர்ந்து , தொல்லைச்
சிறு இனம் குரங்கினோடும்
தெரிவு உறச் செய்த செய்கை ,
வெற்று அரசு எய்தி , எம்பி ,
வீட்டு அரசு எனக்கு விட்டான் . ‘
வேதங்கள் ‘உள்ளது’ என்று கூறுகின்ற அறத்தின் வடிவமாகவே நின்றிருக்கும் பெருமானே!
உன்னைக் கண்களால் நேரில் கண்டு கொண்டேன்; இனிமேல் காண்பதற்கு வேறு என்ன இருக்கிறது? (வேறு எதையும் காண வேண்டிய தேவை எனக்கு இல்லை).
பண்டு தொட்டு இன்றுவரை என்னைத் தொடர்ந்து வந்த எனது பழைமையான தீவினையின் தண்டனையே, இப்போது அடியேனுக்கு முக்திப் பேற்றைத் (உறு பதம்) தருவதாகிவிட்டது !
“ஆகாசத்தைக் காட்டிலும் உயர்ந்த பெருமையையும் மாண்பையும் உடைய வெற்றி வேந்தனே (ராமனே)! என் தம்பியாகிய சுக்கிரீவன் தன் அறியாமையால் என்னை உன்னைக் கொண்டு கொல்வதற்காக இங்கு அழைத்து வந்தான். ஆனால், அந்தச் சிறு குலத்தைச் சேர்ந்த குரங்கினத்தோடு நீ நட்பு கொண்டு செய்த இந்தச் செயலானது, எனக்குப் பேருதவியாக முடிந்தது.
ஏனெனில், என் தம்பி சுக்கிரீவன் மண்ணுலகின் வெறும் ‘வெற்று அரசை’ (பயனற்ற உலகியல் ஆட்சியை) அடைந்தான். ஆனால், அவன் உன்னை என்னிடம் காட்டியதன் மூலம், எனக்கு என்றும் அழியாத மோட்சமாகிய ‘வீட்டு அரசை’ (முன்னேற்றப் பெருநிலையை) அல்லவா தேடித்தந்துவிட்டான்! இதற்கு மேல் எனக்கு யாரால், என்ன உதவி செய்ய முடியும்?” என்று வாலி ராமனைப் போற்றித் துதிக்கிறான்
*********
286.வாலி கேட்ட முதல் வரம்
சுக்ரீவனின் குடிப்பழக்கத்தால், நான்கு மாதம் கழித்துத் திரும்பி வராத போது லெட்சுமணன் வசைபாடியது பின்னால் வருகிறது; இதற்கு முன் எச்சரிக்கையாக வாலியின் வரம் அமைகிறது !
‘ஓவிய உருவ ! நாயேன்
உளது ஒன்று பெறுவது உன்பால் ;
பூ இயல் நறவம் மாந்தி ,
புந்தி வேறு உற்ற போழ்தில் ,
தீவினை இயற்று மேனும் ,
எம்பி மேல் சீறி , என் மேல்
ஏவிய பகழி என்னும்
கூற்றினை ஏவல் ‘ என்றான் .
சித்திரத்தில் வரையப்பட்ட ஓவியம் போல பேரழகு கொண்ட வடிவம் உடையவனே! (ராமனே!)
நாய் போன்ற எளியவனாகிய நான் உன்னிடமிருந்து வேண்டிப் பெற விரும்பும் வரம் ஒன்று உள்ளது.
மலர்களில் இருந்து எடுக்கப்பட்ட கள்ளைக் (மதுவை) குடித்து, அதனால் புத்தி மயங்கி இருக்கும் சமயத்தில், என் தம்பியான சுக்க்ரீவன் ஏதேனும் செய்யத் தகாத தீய காரியங்களைச் செய்தாலும், அவனது தவற்றைக் கண்டு கோபமடைந்து,
என் மீது ஏவி என் உயிரைக் குடித்த இந்த எமன் போன்ற அம்பினை, என் தம்பி மீது மட்டும் எப்போதும் ஏவிவிடாதே (அவனைக் கொன்றுவிடாதே) என்று வாலி ராமனிடம் வேண்டுகிறான்.
*********
287 வாலி கேட்ட இரண்டாவது வரம்!
‘இன்னும் ஒன்று இரப்பது உண்டால் ;
எம்பியை உம்பிமார்கள்
‘’தன்முனைக் கொல்வித்தான் ” என்று
இகழ்வரேல் , தடுத்தி , தக்கோய் !
முன் முனே மொழிந்தாய் அன்றே ,
இவன் குறை முடிப்பது ? ஐயா !
பின் இவன் வினையின் செய்கை
அதனையும் பிழைக்கல் ஆமோ ? ‘
வாலி கேட்ட இரண்டாவது வரம்:–
“மேன்மையான குணங்களை உடைய இராகவனே! நான் உன்னிடம் இரந்து (வேண்டி)க் கேட்கும் வரம் இன்னும் ஒன்று உள்ளது. என்னுடைய தம்பியான சுக்கிரீவனை, உன்னுடைய தம்பிகளான பரதன், இலக்குவன், சத்துருக்கனன் ஆகிய மூவரும் ‘இவன் தன் சொந்த அண்ணனையே (வாலியை) இராமனை விட்டுக்கொல்லச் செய்தவன்’ என்று பழித்து இகழக்கூடும். அப்படி அவர்கள் அவனைத் தூற்றாதபடி நீ தடுத்து அவனைக் காக்க வேண்டும்”. முன்பே சுக்கிரீவன் உன்னிடம் வந்து அடைக்கலம் அடைந்து தன் குறையைக் கூறியபோது, அதைத் தீர்த்து வைப்பதாக நீயும் வாக்குக் கொடுத்தாய். அதன் விளைவாகவே இந்த நிகழ்வுகள் நடந்துள்ளன.எனவே, எனது மரணத்திற்கு விதிப்பயனும் அவனது விதியின் செய்கையுமே காரணமே தவிர, சுக்கிரீவன் மீது எந்தத் தவறும் இல்லை. இதனை உன் தம்பிகளுக்குப் புரிய வைத்து, சுக்கிரீவனை உங்களில் ஒருவனாக ஏற்றுப் பாதுகாக்க வேண்டும்” என்று வாலி வேண்டுகிறான்
*********
288.அனுமன் பற்றி வாலி :
4175 ‘அனுமன் என்பவனை – ஆழி
ஐய ! – நின் செய்ய செங்கைத்
தனு என நினைதி ; மற்று , என்
தம்பி நின் தம்பி ஆக
நினைதி ; ஓர் துணைவர் இன்னோர்
அனையவர் இலை ; நீ , ஈண்டு , அவ்
வனிதையை நாடிக் கோடி –
வானினும் உயர்ந்த தோளாய் !
“கடல் சூழ்ந்த உலகிற்கு இறைவனே (இராமனே)! அனுமன் என்பவனை உன்னுடைய சிவந்த, சிறந்த கையில் ஏந்தியிருக்கும் ‘வில்’ என்று நீ நினைத்துக் கொள்வாயாக!” வில் செய்யக்கூடிய பயனை அனுமன் செய்து முடிப்பான். என் தம்பியை நின் தம்பியாக எண்ணுக. இவ்விருவரைப் போன்ற துணைவர்கள் வேறு யாரும் இலர். இவர்களின் துணை கொண்டு நீ சீதையைத் தேடி அடையலாம். (இவர்களைப் போன்றோர் ஒருவரும் கிடைக்க மாட்டார் என இவர்களின் பெருமையையும் ஆற்றலையும் அறிவித்துள்ளான் வாலி).
*********
289.சுக்ரீவனைக் கட்டித் தழுவி வாலி பகர்ந்த அறிவுரை என்ன?
வாலி, தன் தம்பி சுக்கிரீவனை அன்பினால் அணைத்து அவனுக்கு உறுதியுரை பகர்தல் (4176-4182)
4177 ‘மறைகளும் , முனிவர் யாரும் ,
மலர் மிசை அயனும் , மற்றைத்
துறைகளின் முடிவும் , சொல்லும்
துணிபொருள் , தனி வில் தாங்கி ,
அறை கழல் இராமன் ஆகி ,
அற நெறி நிறுத்த வந்தது ;
இறை ஒரு சங்கை இன்றி
எண்ணுதி ; எண்ணம் மிக்கோய் ! ‘ 4.7.140
வேதங்களும், தவத்தில் சிறந்த முனிவர்கள் அனைவரும்,
தாமரை மலரில் வாழும் பிரம்மதேவனும், மற்ற சாத்திரங்களின் முடிவுகளும், உறுதியாக எடுத்துரைக்கும் உயர்ந்த தத்துவம் எதுவென்றால், அந்தப் பரம்பொருள்தான் வீரம் செறிந்த வில்லினைக் ஏந்தி, வீரக்கழல் அணிந்த இராமராக அவதரித்து, உலகில் அறநெறியை நிலைநாட்ட வந்திருக்கிறது. அறிவுடையவனே! இதில் எந்தவிதமான சந்தேகமும் கொள்ளாமல் இராமன் எத்தகையவன் என்பதை நீ தெளிவாகப் புரிந்துகொள் என்று வாலி சுக்கிரீவனிடம் கூறுகிறார்.
4178 ‘நிற்கின்ற செல்வம் வேண்டி
நெறி நின்ற பொருள்கள் எல்லாம்
கற்கின்றது , இவன்தன் நாமம் ;
கருதுவது , இவனைக் கண்டாய் ;
பொற் குன்றம் அனைய தோளாய் !
பொது நின்ற தலைமை நோக்கின் ,
எற் கொன்ற வலியே சாலும் ;
இதற்கு ஒன்றும் ஏது வேண்டா . ‘
அழியாமல் எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் மேலான செல்வமாகிய ‘வீடுபேற்றை’ (மோட்சத்தை) அடைய விரும்பி,
அறநெறிகளைக் கடைப்பிடித்து வாழ்கின்ற உயிர்கள் யாவும், (அழிவில்லாத அந்தப் பரம்பொருளாகிய) இந்த இராமனின் திருநாமத்தையே ஓதுகின்றன; தங்கள் மனத்தால் தியானிப்பதும் இந்த இராமனைத்தான் என்பதை அறிவாயாக;
பொன்மலையைப் போன்ற வலிமையான தோள்களை உடையவனே!
உலகங்கள் அனைத்திற்கும் பொதுவான முழுமுதற் தலைவனாகிய இவனது தன்மையை ஆராய்ந்து பார்த்தால், என்னைக் கொன்ற இவனது ஒருசில வலிமையே இவனது பெருமையை உணர்த்தப் போதும்; இதற்கு வேறு எந்தத் சான்றும் (ஏதுவும்) தேவையில்லை.
*********
290.மகனே, அங்கதா! ராமனே அருமருந்து !
4193 ‘பாலமை தவிர் நீ; என் சொல்
பற்றுதி ஆயின் , தன்னின்
மேல் ஒரு பொருளும் இல்லா
மெய் பொருள் , வில்லும் தாங்கி ,
கால் தரை தோய நின்று ,
கண் புலக்கு உற்றது அம்மா !
மால்தரும் பிறவி நோய்க்கு
மருந்து என வணங்கு மைந்த !
உன் சிறுபிள்ளைத்தனத்தை (அழுது புலம்புவதை) கைவிடுவாயாக.
நான் சொல்லும் இந்த வார்த்தையை நீ உறுதியான உண்மையாகக் கொள்வாயானால், தன்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறு எதுவுமில்லாத முழுமுதற் கடவுள், : கையில் வில் ஏந்தி, நிலத்தில் தன் திருவடிகள் படிய மனித வடிவில் நின்று, நம் கண்களுக்கு எதிரே நேரில் காட்சியளிக்கிறான்.
நம்மை மயங்க வைக்கும் இந்தப்பிறவிப்பிணிக்கு இவனே சிறந்த மருந்து; இவனை வணங்குவாயாக என் மகனே!
4194 ‘என் உயிர்க்கு இறுதி செய்தான்
என்பதை இறையும் எண்ணாது ,
உன் உயிர்க்கு உறுதி செய்தி ;
இவற்கு அமர் உற்றது உண்டேல் ,
பொன் உயிர்த்து ஒளிரும்
பூணாய் பொன்றுதி ; தருமம் போற்றி
மன்னுயிர்க்கு உறுதி செய்வான்
மலர் அடி சுமந்து வாழ்தி . ‘
“என் உயிருக்கு முடிவை (இறப்பை) ஏற்படுத்தியவன் இராமன் என்று கொஞ்சமும் எண்ணி வருந்தாமல், உன் வாழ்வுக்கு நல்லதைக் செய்து கொள். இராமனுடன் போர் செய்வதற்கு உரியது ஏதேனும் இருந்தால்… அறத்தின் பக்கம் நின்று, உலக உயிர்களுக்கு நன்மை செய்பவனாகிய அந்த இராமனின் திருவடிகளைத் தொழுது வாழ்வாயாக” என்று வாலி கூறுகிறான்.
–SUBHAM—
TAGS- கம்ப ராமாயணம், 290 கேள்விகள், வாலி- ராமன் கேள்வி பதில் , சிறியன சிந்தியாதான், அங்கதன், சுக்ரீவன், அறிவுரை , வாலி கேட்ட 2 வரங்கள்