கம்ப ராமாயணத்தில் 310 கேள்விகள்!  குடிபோதை பற்றி கம்பன் எச்சரிக்கை! (Post.16,379)

Written by London Swaminathan

Post No. 16,379

Date uploaded in London – 6 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மது போதையால் மதி கெட்டுப் போச்சே: சுக்ரீவன் புலம்பல். ‘எரிமலை லெட்சுமணன்’ அனல் கக்கினான்! இந்த கிஷ்கிந்தைப் படலத்தைக் குடிபோதை பற்றி எச்சரிக்க கம்பன் பயன்படுத்து கிறான்; சுக்ரீவன் வாய் மொழியாக மதுப்பழக்கத்தால் வரும் கேடுகளை கம்பன்  விளக்குகிறான்; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நாட்டில் இது ஒரு பிரச்சனையாக இருந்ததை கம்பன் நமக்கு எடுத்துக் காட்டுகிறான்!

நன்றி கொன்றவர்களுக்குப் பரிகாரமே இல்லை என்ற வால்மீகி இராமாயண ஸ்லோகம் அப்படியே அனுமன் மூலம் வருகிறது ; குடித்துக் குடித்துக் குடி கெடுக்கும் தமிழர்களுக்கு கம்பன் சொல்லும் புத்திமதி, இப்பகுதியின் கடைசி மூன்று பாடல்களில் தரப்பட்டுள்ளது.

****

301

தூங்கிக் கொண்டிருந்த சுக்ரீவனை எழுப்பிய அங்கதன் லெட்சுமணன் வருகையை எப்படித் தெரிவித்தான் ?

302

அங்கதன் அனுமனை அழைத்துக்கொண்டு போய் தாரையைச் சந்தித்தபோது அவள் என்ன சொல்லி கண்டித்தாள்?

303

குரங்குகள் கிஷ்கிந்தை வாசலைப் பாறைகளை அடுக்கி வைத்து வழிமறித்தபோது, லெட்சுமணன் எப்படி அவைகளைத் தவிடு பொடியாக்கினான்?

304

லெட்சுமணனைத் தடுத்து நிறுத்த அனுமன் சொன்ன ஐடியா என்ன ?

305

குரங்கின அழகிகளுடன் தாரை வந்தவுடன் லெட்சுமணன் அபௌட் டர்ன் ABOUT TURN அடித்தது எப்படி?

An about-turn (known as an about-face in American English) is a 180-degree reversal of direction, either physically or figuratively.

306

லட்சுமணன் தலையில் தாரை ‘டன்  கணக்கில் ஐஸ் வைத்து’ கோபத்தை அடக்கியது எப்படி?

307

நான் ஏன் வந்தேன்? என்று லெட்சுமணன் ரத்தினச் சுருக்கமாக விளக்கியது என்ன?

308

HEY, MR HANUMAN, HOW DID YOU FORGET? LAKSHMAN’S QUESTION.

தாரை கூறியதால் கோபம் அடங்கிய இலக்குவன் அருகில் அனுமன் வந்தவுடன், நீ எப்படி மறந்தாய் என்று கேட்டதற்கு அனுமன் என்ன பதில் தந்தான் ?

309

இலக்குவன் அனுமனிடம் “தாழ்வித்தீர், வாழ்வித்தீர், வருவித்தீர், கிளர்வித்தீர், மூள்வித்தீர், முனிவித்தீர்” என்று அடுக்கு மொழிகளை அள்ளி வீசி, என்ன சொன்னான்?

310

இலக்குவனை சுக்ரீவனிடம் அழைத்துச் சென்றான் அனுமன்; அங்கதன் அதை அறிவித்தான்; குடிபோதையில் கெட்டுப் போனேனே என்று சுக்ரீவன் என்ன புலம்பினான் ?

XXXXXXXXXX

விடைகள்

301.‘எரிமலை’ லெட்சுமணன் வருகை

4292.  ‘எந்தை! கேள்: அவ்

இராமற்கு இளையவன்,

சிந்தையுள் நெடுஞ்

சீற்றம் திரு முகம்

தந்து அளிப்ப, தடுப்ப

அரும் வேகத்தன்

வந்தனன்; உன் மனக்

கருத்து யாது?’ என்றான்.

என் தந்தையே! நான் சொல்வதைக் கேட்பாயாக! இராமனுக்குத் தம்பியான இலக்குவன் மனத்திற் படிந்துள்ள பெருங் கோபத்தை,  முகமானது எடுத்துக் காட்ட  (யாராலும்) தடுக்க முடியாத வேகத்தோடு வந்து சேர்ந்துள்ளான்; உனது கருத்து என்ன? என்று (சுக்கிரீவனிடம் அங்கதன்) கேட்டான்.

***

302 சத்தியம் தவறிவிட்டீர்கள்- வாலி மனைவி தாரை கண்டனம்

4300.  ‘திறம்பினீர் மெய்;

சிதைத்தீர் உதவியை;

நிறம் பொலீர்; உங்கள்

தீவினை நேர்ந்ததால்,

மறம் செய்வான் உறின்,

மாளுதிர்; மற்று இனிப்

புறஞ்செய்து ஆவது என்?’

என்கின்ற போதின்வாய்,

சத்தியம் தவறிவிட்டீர்கள்;  (இராமன் செய்த) உதவியை மறந்தீர்கள்; குணத்தால் பொல்லாதவர்கள் ஆனீர்கள் (அந்த வீரர் உம்மை எதிர்த்துப்) போர் செய்யத் தொடங்கினால், (அவரால்) மடிவீர்கள்; இனி மேற்கொண்டு என்ன செய்தும் அதனால் பயன் யாது என்று (அங்கதன் முதலோரைத் தாரை) கண்டித்தாள்

******

303.எரிமலை போன்ற கோபக்கனல் வீசிய இலக்குவன் பாறைகளைத் தவிடுபொடி ஆக்கினான்

4304.  காவல் மா மதிலும், கதவும், கடி

மேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும்,

தேவு சேவடி தீண்டலும், தீண்ட அரும்

பாவம் ஆம் என, பற்று அழிந்து இற்றவால்.

அந்த வாயிற் கதவும், காவல் அமைந்த  வாயிலில் (வானரங்கள்) அடுக்கி வைத்திருந்த, பெரிய பாறைகளோடு (வாயிலைச்

சார்ந்து) கட்டுக் காவல் சூழ்ந்துள்ள பெரிய மதிலும் அழிந்தன..

தெய்வத்தின் சிவந்த திருவடி பட்ட அளவில் தீர்க்க முடியாத பாவங்களும் அழிந்துபோகும் அது போல முழுவதும் அழிந்துவிட்டன. கம்பனின் அருமையான உவமை !

இலக்குவனின் திருவடி பட்ட அளவிலே வாயில் கதவு முதலியன அழிந்து போனதற்குத் தெய்வத் திருவடியின் தொடர்பால் அடியார்க்குக் கொடிய வினைக் கட்டுக்கள் பற்றற அழிவதை உவமையாக்கினார்.

***

304.லெட்சுமணனைத் தடுத்து நிறுத்த அனுமன் சொன்ன ஐடியா:

‘இலக்குவனது மனம் மலர் போல் மென்மையானது; பெண்ணாகிய நீ சென்று சுக்கிரீவனது அரண்மனை வாயில் வழியில் நின்றுவிட்டால் பெண்ணைக் கொல்லக் கூடாதென்ற அறத்தையறிந்த அவன் விலகிச் சென்று விடுவான்.  இதுவே நாம் செய்யத் தக்க தந்திரம்’ என்று அனுமன் தாரையிடம் சொன்னான்

4310.  அனையன் உள்ளமும் –

ஆய்வளையாய்! – அலர்

மனையின் வாயில்

வழியினை மாற்றினால்,

நினையும்; வீரன் அந்

நீள் நெறி நோக்கலன்;

வினையம் ஈது என்று

அனுமன் விளம்பினான்.

வளையல்களை  அணிந்தவளே! ; (நீ சென்று) அரண்மனையின் வாயில் வழியை தடுத்துவிட்டால் அந்த இலக்குவனது மனமும் (தான் செய்ய முனைந்திருப்பது சரிதானா என்று) எண்ணும்;  இலக்குவன் அந்த நெடு வழியைக் கண்ணால் பார்க்கவும் மாட்டான்; (வந்த காரியத்தைச் சொல்வான். தந்திரம் இதுவே என்று அனுமன் (தாரையை நோக்கிக்) கூறினான்.

****

305. இலக்குவன் மகளிரைப் பார்க்க அஞ்சுதல்! அனுமன் ஐடியா பலித்தது!

4315.  ஆர்க்கும் நூபுரங்கள் பேரி, அல்குல்

ஆம் தடந் தேர் சுற்ற,

வேற் கண் வில் புருவம

போர்ப்ப மெல்லியர் வளைந்தபோது,

பேர்க்க அருஞ் சீற்றம் பேர,

முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால்,

பார்க்கவும் அஞ்சினான், அப்

பனையினும் பெரிய தோளன்.

ஆரவாரிக்கின்ற காற் சிலம்புகள் பல வகைப் பேரிகைகளாக முழங்க, கண்கள் வேற் படைகளாகவும், கொடிய புருவங்கள் போர்

செய்யும் விற்படைகளாகவும் அமைய  மகளிரது சேனை சூழ்ந்துகொண்ட பொழுது  நெடிய தோள்களையுடைய அந்த இலக்குவன், (யாராலும்) மாற்றமுடியாத  கோபம் தணிய

முகத்தைத் திருப்பிக் கொண்டு ஒதுங்கி நின்று  பார்க்கவும் அஞ்சினான் (அப் பெண்களைக்) கண்ணால் பார்ப்பதற்கும் அச்சமுற்றான்.

************

306 தாரையின் புகழ்ச்சி! லெட்சுமணனைப்பார்த்து தாரை செப்பினாள்:

அளவற்ற காலம் தவம் செய்தால் தான் உன் போன்றோரின் பாதங்கள் எங்கள் அரண்மனையில் பதியும்  ; உனது வருகை  இந்திரன் முதலானவர்களும் அடையத்தகதல்ல  .நீ எம் மனைக்கு வரப் பெற்றது  நாங்கள் தவம் செய்தபயனாகும். அதனால் நாங்கள் உயர்கதி அடைந்தோம் என்றாள் தாரை.

4317.  ‘அந்தம் இல் காலம் நோற்ற

ஆற்றல் உண்டாயின் அன்றி,

இந்திரன் முதலினோரால் எய்தல்

ஆம் இயல்பிற்று அன்றே?

மைந்த! நின் பாதம் கொண்டு எம்

மனை வரப் பெற்று, வாழ்ந்தேம்;

உய்ந்தனம்; வினையும் தீர்ந்தேம்; உறுதி

வேறு இதனின் உண்டோ?

*****************

307.நான் ஏன் வந்தேன் ? என்று லெட்சுமணன் புகன்றது.

இராமனிடம் சொன்னபடி சுக்கிரீவன் வராததால் அவனது செயலை அறிய வந்தேன்; அவனது செயல்தான் என்ன என்று இலக்குவன் தாரையை  வினவினான்

4322.  ‘  ”சேனையும் யானும் தேடித்

தேவியைத் தருவென்” என்று,

மானவற்கு உரைத்த மாற்றம்

மறந்தனன், அருக்கன் மைந்தன்;

”ஆனவன் அமைதி வல்லை அறி”

என, அருளின் வந்தேன்;

மேல் நிலை அனையான் செய்கை

விளைந்தவா விளம்புக!’ என்றான்.

நானும் என் சேனையும் வந்து சீதையைத் தேடிக் கண்டுபிடித்து உங்களிடம்  சேர்ப்பேன் என்று மனுகுல மன்னனான இராமனுக்கு சூரியன் மகனான சுக்கிரீவன் சொன்னான்; அந்த வார்த்தையை மறந்துவிட்டான்;  விரைவில் சென்று நீ சுக்கிரீவனின் நிலைமையை அறிந்து வா என்று (இராமன்) கட்டளையிட்டான் ; ஆகையால்தான்  நான் இங்கே வந்தேன்;  அரசாட்சியைப் பெற்ற அச்சுக்கிரீவனது  திட்டம் என்ன என்று விளம்புக.

***************

308. நீ எப்படி மறந்தாய் என்று கேட்டதற்கு அனுமன் தந்த பதில்

வால்மீகி ராமாயணத்திலுள்ள ஸ்லோகத்தைப் புறநானூற்றுப் புலவர் (புறம் 34) அப்படியே மொழிபெயர்த்தார் ; அதை அப்படியே கம்பன் காப்பி அடித்து அனுமன் மூலம் நமக்குப் பகர்கிறான் (என்னுடைய பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் முழு விவரம் காண்க )

அன்புடைய தாயையும்,  தந்தையையும் குருவையும், தெய்வத்தின் இடத்திலுள்ள அந்தணர்களையும் பசுக்களையும் குழந்தைகளையும்;  மகளிரையும் கொன்றோருக்கும் (அந்தப் பாவங்களை) நீக்குவதற் குரிய வழிகள் உள்ளதாம்;  (ஆனால்) பேருதவியை மறந்தவர் களுக்கோ (அப் பாவத்தைப்) போக்குவதற்குரிய வழி ஒன்றாவது உண்டோ? (இல்லை).

தாய், தந்தை, குரு, அந்தணர், பசு, குழந்தை, பெண் ஆகியவர்களைக் கொல்லுதல் கொடும் பாதகச் செயலாகும்.  இருப்பினும் அப்பாவங்களைப் போக்குவதற்குரிய பரிகாரம்  உண்டு.  ஆனால், செந்நன்றி மறத்தலுக்கோ அத்தகைய கழுவாய் இல்லை என்பதாம்.  ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை, செய்ந்நன்றி கொன்ற மகற்கு’ (குறள் 110). ‘ஒருவன், செய்தி கொன்றோர்க்கு உய்தியில்லென அறம் பாடிற்றே’ (புறம் 34).

4330.  ‘சிதைவு அகல் காதல் தாயை,

தந்தையை, குருவை, தெய்வப்

பதவி அந்தணரை, ஆவை,

பாலரை, பாவைமாரை,

வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல்

ஆம் ஆற்றல்; மாயா

உதவி கொன்றார்க்கு ஒன்றானும்

ஒழிக்கலாம் உபாயம் உண்டோ?’

‘நீங்கள் தருமத்தைக் காப்பவர்கள். அத்தகைய உங்களிடம் சுக்கிரீவன் உறுதியாகச் சொன்ன சொல் தவறுவானானால் அவனது பிறவி பயனுள்ளதாகாது. அது மட்டுமல்லாமல் அவன் தவறாமல் நரகம் அடைவான்’ என்று அனுமன் கூறினான்

4333.  ‘மறந்திலன், கவியின் வேந்தன்;

வயப் படை வருவிப்பாரைத்

திறம் திறம் ஏவி, அன்னார்

சேர்வது பார்த்துத்  தாழ்த்தான்;

அறம் துணை நுமக்கு உற்றான் தன்

வாய்மையை அழிக்கும் ஆயின்,

பிறந்திலன் அன்றோ? ஒன்றோ?

நரகமும் பிழைப்பது அன்றால்.

வானரங்களுக்கு அரசனான சுக்கிரீவன் (உங்களது ஆணையை) மறக்கவில்லை; வலிமையுள்ள வானரப் படைகளை அழைத்து வரும் தூதுவர்களைதொகுதி தொகுதியாக இடமெங்கும் அனுப்பி, அவ் வானர வீரர்கள் வந்து சேர்வதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் சிறிது தாமதித்தான்; தருமத்திற்குத் துணையாகவுள்ள உங்களை அடைந்த சுக்கிரீவன் தன் சத்தியநெறியை அழிப்பானாயின் (சுக்கிரீவன் இவ் வுலகில் பிறந்தும்) பிறவாதவனே ஆவான். இது மாத்திரமோ? (அவனுக்கு மறுமையில்) நரகமும்கிடைக்கும்

*****

309. தாழ்வித்தீர், வாழ்வித்தீர், வருவித்தீர், கிளர்வித்தீர், மூள்வித்தீர், முனிவித்தீர் — கம்பன் அள்ளி வீசிய அடுக்கு மொழிகள்.

உங்கள் காலதாமதம் அரக்கர்க்குப் பெருவாழ்வையும், தேவர்க்கும் முனிவர்க்கும் துன்பததையும் உண்டாக்கி,  உங்களுக்குப் பாவங்களைச் சேர்த்து, இராமனுக்குச் சினத்தைத் தோற்றுவித்து, உங்களது கேட்டிற்கும் காரணமாகியது என்று இலக்குவன் உரைத்தான்

4342.  ‘தாழ்வித்தீர் அல்லீர்; பல்

நாள் தருக்கிய அரக்கர்தம்மை

வாழ்வித்தீர்; இமையோர்க்கு இன்னல்

வருவித்தீர்; மரபின் தீராக்

கேள்வித் தீயாளர் துன்பம்

கிளர்வித்தீர்; பாவம்தன்னை

மூள்வித்தீர்; முனியாதானை முனிவித்தீர்,

முடிவின்’ என்றான்.

‘நீங்கள் கால தாமதம் செய்தவர்கள் மட்டுமில்லை;  பலநாட்களாகச் செருக்குக் கொண்டிருந்த அரக்கர்களை வாழச் செய்தீர்கள்; தேவர்களுக்கு துன்பத்தைத் தந்தீர்கள்; மரபு முறையிலிருந்து நீங்காத நூற்கேள்வியும், வேள்வி்த் தீயுமுடைய முனிவர்களுக்குத் துன்பத்தை மிகுதியாக்கினீர்கள்;  பாவங்களை மேலும் மேலும் வளரச் செய்தீர்கள்;  முடிவாக ஒருகாலும் கோபிக்காத இராமனையும் கோபம் அடையுமாறு செய்தீர்கள்’— என்று (இலக்குவன்) கூறினான்.

தாழ்வித்தீர், வாழ்வித்தீர், வருவித்தீர், கிளர்வித்தீர், மூள்வித்தீர், முனிவித்தீர் என்று ‘வி’ விகுதியைச் சேர்த்துப் பிறவினைகளாகவே அமைத்திருப்பது சிந்திக்கத்தக்கது. உங்களால் தான் இவ் விளைவுகள் அனைத்தும் ஏற்பட்டன என்பதை இப் பிறவினைகளால் நன்கு வலியுறுத்துகிறான் கம்பன்.

***************

310.போதையால் மயங்கியதற்குச் சுக்கிரீவன் வருந்துதல்.

குடிபோதை தரும் கேடுகள்: தமிழர்களுக்குக் கம்பன் புத்திமதி!

4357.  உறவுண்ட சிந்தையானும் உரை

செய்வான்; ‘ஒருவற்கு இன்னம்

பெறல் உண்டோ, அவரால் ஈண்டு யான்

பெற்ற பேர் உதவி? உற்றது

இறல் உண்டோ? என்னின் தீர்வான்

இருந்த பேர் இடரை எல்லாம்,

நறவு உண்டு மறந்தேன்; காண

நாணுவல், மைந்த!’ என்றான்.

பிறர் எவராலும் பெறுதற்கு அரியதும், அழிவில்லாததுமான பேருதவியை நான் இராமனிடமிருந்து பெற்றிருந்தும், மது மயக்கத்தால் நன்றியை மறந்து அத் தலைவனுக்குச் செய்ய வேண்டிய உதவி எதையும் செய்யாமல் அவனை வருந்துமாறு விட்டு வைத்ததால் இப்போது இலக்குவனைக் கண்ணாற் காணுதற்கும் வெட்கப்படுகிறேன் என்றான் சுக்கிரீவன் .

4363.  ‘வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும்,

மரபு இல் கொட்பும்,

தஞ்சம் என்றாரை நீக்கும்

தன்மையும், களிப்பும், தாக்கும்:

கஞ்ச மெல் அணங்கும்

தீரும், கள்ளினால்; அருந்தினாரை

நஞ்சமும் கொல்வது அல்லால்,

நரகினை நல்காது அன்றே?

கள்ளைக் குடிப்பதால் வஞ்சனையும் திருட்டும் பொய் பேசுதலும் அறியாமையும் தொன்றுதொட்டு வந்த முறைக்கு மாறான

கொள்கையும் அடைக்கலமாக அடைந்தவரைபாதுகாவாது நீக்கும் தீய பண்பும்;  செருக்கும் (சேர்ந்து வந்து) வருத்தும்;  செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் மென்மை நிரம்பிய திருமகளும் நீங்குவாள்;  நஞ்சும் உண்பவரைக் கொல்லுமேயல்லாமல் நரகத்தைக் கொடுக்காது.

தன்னை உண்டவரது உடம்பை மட்டும் நஞ்சு அழிக்கும்; கள்ளோ உடம்பையழித்தலோடு உயிரையும் நரகத்தில் சேர்க்கும் !

‘துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்’ – (குறள்- 926) என்ற குறட் கருத்தை ஒப்பிட்டுணர்க. குடிவெறியால் செல்வம்  அனைத்தும் இழந்து வறியராவர் ஆதலின் கஞ்ச மெல்லணங்கும் தீரும் என்றார்.  திருக்குறளும் இக்கருத்தினைக் கூறும்: ‘இருமனப் பெண்டிரும் கள்ளுங் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு’ (குறள்: 920)

4365.  ‘ஐய! நான் அஞ்சினேன், இந்

நறவினின் அரிய கேடு;

கையினால் அன்றியேயும் கருதுதல்

கருமம் அன்றால்;

வெய்யது ஆம் மதுவை இன்னம்

விரும்பினேன் என்னில், வீரன்

செய்ய தாமரைகள் அன்ன

சேவடி சிதைக்க’ என்றான்

அங்கதனே! இந்த மதுவால் நேரும்  பெரிய தீங்கிற்கு நான் பயந்தேன்; அந்த மதுவைக் கையினால் தீண்டு வதல்லாமல் மனத்தால் நினைத்தலும் செய்யக்கூடிய செயலாகாது; கொடியதான இந்தக் கள்ளை இனியும் நான் விரும்பினேனானால்  வீரனான இராமனுடைய செந்தாமரை போன்று அடிகள் என்னை அழிக்கட்டும் என்று ஆணையிட்டுக் கூறினான்.

இராமனின் திருவடியே சான்றாக மதுவை இனி ஒருக்காலும் விரும்பமாட்டேன் என்று சுக்கிரீவன் சத்தியம் செய்தான் .  மதுவை இடைவிடாது நினைத்தலும், இடையறாது காண்டலும் பின்னர் அதனைப்பருகுவதற்குத் தூண்டுகோல் ஆகுமாதலின் ‘கருதுதல் கருமம் அன்று’என்றான்.

–SUBHAM—

TAGS-கம்ப ராமாயணம்

,310 கேள்விகள், சுக்ரீவன், எரிமலை லெட்சுமணன் , குடிப்பழக்கம், கேடுகள், தீமைகள், செய்நன்றி , கம்பன் அறிவுரை, புத்திமதி

Leave a comment

Leave a Reply