அம்பாளின் தலைநகரம்! – 4 (Post No.16,383)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,383

Date uploaded in London –7 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

அம்பாளின் தலைநகரம்! – 4

ச. நாகராஜன்

16. மரகதக் கோட்டை

கோபுரங்களோடும் மற்ற சிறப்புகளோடுமுள்ள இந்த மரகதக் கோட்டைக்கும் பதினைந்தாவதாக அமைந்துள்ள

முத்துக் கோட்டைக்கும் இடையிலுள்ள பிரதேசமானது மரகதமயமாய் விளங்கும்.

இதில் மதுகடங்களையுடைய பொன்னாலான பனைமரங்களும், தோட்டங்களும், தோப்புகளும், மாளிகைகளும் உள்ளன. மேலும் அங்கே மரகதப் பச்சைக் கற்களால் கட்டப்பட்ட சியாமளா தேவியின் மாளிகையும், தண்ட நாயகியாகிய வாராஹீ தேவியின் மாளிகையும் உண்டு. பச்சைக் கற்களால் இழைக்கப்பட்ட அவ்வாராஹீ தேவியின் அரண்மனையில் நூறு தூண்கள் கொண்ட மண்டபத்துள் தங்கமயமான பீடத்தில் பொற்றாமரைப் புஷ்பம் ஒன்று உள்ளது. அப்புஷ்பத்தில் கர்ணிகையில் பிந்து, திரிகோணம், வட்டம், அறுகோணம், இரண்டு விருத்தம் (வட்டம்) இவைகளோடு 110 அக்ஷரங்களையுடைய சக்ரத்தில், வராஹ முகத்தையும், தாமரை இதழ் போன்ற கண்களையும், சந்திர கிரீடத்தையும், உருக்கி வார்த்த தங்கம் போன்ற ஒளியை உடைய சரீரத்தையும், அந்திச் சிவப்பையும், சிவந்த மலர் மாலைகளையும், கலப்பை, உலக்கை, சங்கம், சக்ரம், பாசம், அங்குசம், அபயம், வரதம் இவைகளால் சோபிக்கும் கைகளையும் உடைய மஹா வாராஹீயானவள், உன்மத்த, கபால, பீஷண, டமருபாஸ்கர, ரவிபக்ஷக, கால, சண்ட, மஹாமந்தானர்களென்னும் அஷ்ட பைரவர்கள் புடைசூழ, ஜம்பினி முதலிய சேனைகளோடு கூடி வீற்றிருப்பாள்.

17. பவழக் கோட்டை

இது பவழங்களால் செய்த அநேக கோபுரங்களும், பதுமைகளும், துவஜங்களும், கொண்டதாய் மிக்க ரமணீயமாய் இருக்கும். இதற்கும் பதினாறாவது கோட்டைக்கும் இடையில் உள்ள பிரதேசத்தில் உருக்கிச் சாய்த்த தங்கம் போல் பிரகாசிக்கும் அநேக ஸ்தானங்களும், உத்தியான வனங்களும் சிறந்து விளங்குவனவாயிருக்கும். அங்கே சிவப்பு நிறமுள்ள யோகினிக் கூட்டங்கள் வசிக்கும்.

18. நவரத்தினப் பிராகாரம்

இக்கோட்டையும் இதர கோட்டைகளைப் போன்று பல சிறப்புகளைக் கொண்டதாய் விளங்கும். இதற்கும் பதினேழாவது கோட்டைக்கும் இடையில் தனது காந்தியினால் பத்துத் திக்குகளையும் பிரகாசிக்கச் செய்யும் மாணிக்க மண்டபமுண்டு. அதில் நீலமேக நிறமும், செந்தாமரை மலரைப் போன்ற கண்களும், வைஜயந்தீ வனமாலைகளுக்கும், கௌஸ்துப மணிக்கும், மஹா லக்ஷ்மிக்கும் இருப்பிடமாகிய அகன்ற மார்பும், சங்கத்தை ஜெயிக்கும் கண்டமும் கொண்டதாய் கிரீடம் மகர குண்டலம் முதலிய பல ஆபரணங்கள் விளங்க, பீதாம்பரதாரியாய், சங்கம், சக்ரம் முதலிய ஆயுதங்களைத் தரித்து, கருட வாகனாரூடராய் பிரஹ்லாத, புண்டரீக, நாரதாதி பக்த ரக்ஷகராயும், துஷ்ட ராக்ஷஸ சிக்ஷகராயுமுள்ள மஹா விஷ்ணு, திரிபுரசுந்தரீ ஆராதனையில் தற்பரராய் வீற்றிருப்பார்.

19. நவரத்தினப் பிராகாரம்

இது சந்திரமண்டலத்தைத் தொடும்படியான மணிச் சிகரங்களையும், கோபுரங்களையும் மற்றுமுள்ள பல சிறப்புக்களையும் கொண்டதாய் விளங்கும்.

இதற்கும் பதினெட்டாவது கோட்டைக்கும் இடையில் உள்ள பிரதேசமானது ரத்தின மாளிகைகளாலும், உத்தியான வனங்களாலும் சூழப்பட்டிருக்கும். அன்றியும், இங்கே பொன்னால் செய்யப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் ஒன்று உண்டு. இதில் சந்திரசேகரனும், பவானீ சமேதனுமான ஈசானன், நந்தி, பிருங்கி முதலிய சிவ கணங்களும் , உருத்திர கணங்களும் புடைசூழ திரிபுரசுந்தரியை வணங்கிக் கொண்டு மஹா ஆனந்தத்தோடு வசிப்பான்.

அடுத்து மஹாபத்மாடவீ பிராகாரங்கள் எனப்படும் ஆறு பிராகாரங்களைப் பார்ப்போம்.

**            தொடரும்

Leave a comment

Leave a Reply