சீதையின் 27 அங்க அடையாளங்கள்! கம்ப ராமாயணத்தில் 330 கேள்விகள்! (Post No.16,384)

Written by London Swaminathan

Post No. 16,384

Date uploaded in London – 8 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

இந்தப் பகுதியில் வரும் மூன்று முக்கிய விஷயங்கள் :

1.அனுமனை தென் திசையில் தேட அனுப்பியது;

2.சீதையின் 27 அங்க அடையாளங்கள்

3.அனுமனிடம் ராமன் மோதிரம்/கணையாழிகொடுத்தது

XXXXXXXX

picture of London Kamban Festival 2025.

321

தென்திசையில் சென்று சீதையைத் தேடுவாயாக என்று  அனுமனுக்கு சுக்ரீவன் கட்டளையிட்டது ஏன்?  பிற திசைகளுக்குச் சென்றவர்கள் யார்?

322

வேங்கட மலையில் வெங்கடாசலபதி கோவில் இருப்பதைக்  கம்பன் பாடினானா ?

323

தமிழ்நாடு என்று பெயர்க்குறிப்பிட்டுக் கம்பன் என்ன பாடினான் ?

324

அகத்தியன் பற்றியும் தமிழ்ச் சங்கம்  பற்றியும் கம்பன் செப்பியது என்ன ?

325

சீதையைத்தேடிக்கண்டுபிடிக்க சுக்ரீவன் விதித்த கெடு எவ்வளவு காலம் ?

326

அனுமனை தானியே அழைத்துச் சென்ற ராமன் சீதாதேவியின் எத்தனை அங்கங்களை வருணித்தான் ?

327

பிரம்மா  உவமை சொல்ல முடியாத ஒன்றினைப் படைத்தான் என்கிறான் கம்பன் ; அது என்ன ?

328

சீதை சொன்ன விஷயங்களை அனுமனிடம் சொல்லி இதையெல்லாம் நீ கூறினால், நீ ராம தூதன் என்று நம்புவாள்; இவ்வாறு எண்ணி அனுமனிடம் ராமன் சொன்ன ஒரு விஷயத்தைக் காண்போமா:

4518.  ‘மல்லல் மா நகர் துறந்து

ஏகும் நாள், மதி தொடும்

கல்லின் மா மதிள்

மணிக் கடை கடந்திடுதல்முன்,

”எல்லை தீர்வு அரிய வெங்

கானம் யாதோ?” எனச்

சொல்லினள்; அஃது எலாம்

உணர, நீ சொல்லுவாய்.’

329

RAMA SAID – ALL THE BEST AND BEST OF LUCK TO HANUMAN!

சீதையிடம் கொடுப்பதற்காக அனுமனிடம் ராமன் தனது மோதிரத்தைக் கொடுத்த முக்கியமான காட்சியை கம்பன் எப்படிச் சொல்கிறான் ?

330

MONKEYS CRIED S O S , SO S, SOS!

SAVE OUR SOULS= SOS

திரைப்பட டைரக்டர் மிஸ்டர் கம்பன் குகையில் சிக்கிய வானரங்கள் பற்றி ஒரு சர்ப்ரைஸ் காட்சி தருகிறார்.அவர்கள் எஸ் ஓ எஸ் செய்தி அனுப்பவே அனுமன் தந்தரமாக அவர்களை சுரங்கத்திலிருந்து தப்பிக்க வைத்தது எப்படி ?

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

விடைகள்

321.தென் திசையில் அனுமனும் ஏனைய திசையில் பிறரும் சீதாதேவியைத் தேடச் சென்றார்கள்……

4454.  ‘வள்ளல் தேவியை

வஞ்சித்து வௌவிய

கள்ள வாள் அரக்கன்

செலக் கண்டது,

தெள்ளியோய்! ”அது தென்

திசை என்பது ஓர்

உள்ளமும் எனக்கு உண்டு”

என உன்னுவாய்.

தெளிவான அறிவுள்ளவனே! சிறந்த கொடை வள்ளலான  இராமனின் மனைவியாகிய சீதையை வஞ்சனையால் கவர்ந்து சென்ற கள்ளத் தன்மையுடைய கொடிய அரக்கனான இராவணன்

தெற்குத் திக்க்கை நோக்கி சென்றதைக் கண்டது  எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது ; இதையும் மனத்தில் வைத்துக்கொள் என்றான் சுக்ரீவன்.

(சீதை தன் கலன்களை ஒரு முடிப்பில் பொதிந்து எறிந்ததைக் கண்டது.)

ஏனைத் திசைகளுக்கு மற்றவர்களை அனுப்புதல்

4456.  ‘குட திசைக்கண், சுடேணன்;

குபேரன் வாழ்

வட திசைக்கண்,

சதவலி; வாசவன்

மிடல் திசைக்கண்,

வினதன்; விறல் தரு

படையொடு உற்றுப் படர்க’

எனப் பன்னினான்.

மேற்குத் திசையில்  இடபனும்,குபேரன் வாழுகின்றவடக்குத் திசையில்  சதவலி என்னும் தலைவ னும், இந்திரனுக்குரிய கிழக்குத் திக்கில் வினதனும்  பலத்த  சேனையோடு செல்வாராக என்று கூறினான்.

****************

322. திருப்பதி பாலாஜி கோவிலைச் சொல்லாமல், தொல்காப்பிய பாயிரத்தில் கண்டபடி, தமிழ் மொழி பேசுவோரின் வடக்கு எல்லை என்று மட்டும் சொல்லிவிட்டான் கம்பன்!

4472.  ‘வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி,

நான் மறையும்,மற்றை நூலும்,

இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய்,

நல் அறிவுக்கு ஈறு ஆய், வேறு

புடை சுற்றும் துணை இன்றி, புகழ் பொதிந்த

மெய்யேபோல் பூத்து நின்ற

அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய

வேங்கடத்தில் சென்று அடைதிர் மாதோ.

வட திசை மொழிகளுக்கும் தென்மொழியாகிய தமிழுக்கும் எல்லையாகியும் , நான்கு வேதங்களும் பிற சாத்திரங்களும்

தம்மிடம் குறித்துள்ள எல்லாப் பொருள்களுக்கும் முடிவான பொருளைத் தன்பாற் கொண்டுள்ளதாகியும்  நுட்பமான ஞான அறிவுக்கெல்லாம் வரம்பாகியும் , பக்கத்தில் பொருந்திய உவமானப் பொருள் வேறொன்றும் புகழ் நிரம்பிய உடலைப் போல பொலிவுற்று

தேன்கூடுகளால் சுற்றிலும் நிரம்பப்பெற்ற குளிர்ந்த தாழ்வரைக ளையுடைய உயர்ந்துள்ள திருவேங்கட மலைக்குப்  போங்கள்.

‘வேங்கடத்து உம்பர் மொழிபெயர் தேஎம் (அகம். 211) என்ற சங்கப் பாடல் வேங்கடத்துக்கு அப்பால் வேறு மொழிகள் பேசப்பட்டதை உறுதி செய்கிறது; தொல்காப்பியமும் வேங்கடத்துக்கு அப்பால் தமிழ் பேசப்படவில்லை என்று சொல்கிறது.

*******

323. பாண்டியநாடுதான் தமிழ்நாடு!

‘துறக்கம் உற்றார் மனம் என்ன, துறை கெழு நீர்ச்

சோணாடு கடந்தால், தொல்லை

மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர்;

அவ் வழி நீர் வல்லை ஏகி,

உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும்

உணர்வினொடும் ஒதுங்கி, மணியால் ஓங்கல்

பிறக்கம் உற்ற மலை நாடு நாடி, அகன்

தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ.

சொர்க்கத்தையடைந்தவர்களின் மனம் போல தெளிவான

நீரையுடைய (காவிரியைக் கொண்டுள்ள) சோழநாட்டைத் தாண்டிச் சென்றால் அந்த நாட்டின் அருகிலே பழவினைத் துன்பங்களை முற்றும் மறந்த முனிவர்கள் மறைந்து வாழ்வார்கள்; நீங்கள் அந்த

வழியிலே விரைவாகச் சென்று, தூங்கியவர் ஒரு பயனையும்

அடையமாட்டார்கள்  என்ற எண்ணத்தோடு சற்று விலகிச் சென்று,

இரத்தின மலைகள் உள்ள மலை நாட்டில் சீதையைத் தேடி,  (பிறகு) பரந்துள்ள செந்தமிழ் நாடான பாண்டிய நாட்டிற்குச் சென்று சேருங்கள்.

**************

324.அகத்தியன் பற்றியும் தமிழ்ச் சங்கம்  பற்றியும் கம்பன் செப்பியது

4477.  ‘தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு

முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்,

என்றும் அவன் உறைவிடம் ஆம்; ஆதலினால்,

அம்மலையை இறைஞ்சி ஏகி,

பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும்

திரு நதி பின்பு ஒழிய, நாகக்

கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா

நெடு வரையும், கடலும், காண்டிர்.

தெற்குத் திசையில் தமிழ்நாடான பாண்டிய நாட்டிலுள்ள பொதிய மலை எப்பொழுதும் அகத்திய முனிவன் வாழ்ந்துவரும் இடமாகும்;ஆதலால் அகத்திய முனிவனது   தமிழ்ச்சங்கத்தைச் சேர்வீர்களாயின் அந்தப் பொதிய மலையை வணங்கி அப்பாலே சென்று  நீர் பெருகுகின்ற  தாமிரபரணி என்னும் அழகிய ஆற்றினையும் கடந்து போங்கள்; பின்னர் குட்டி யானைகள் வாழும்  பெரிய மகேந்திர மலையையும் தென் கடலையும் காண்பீர்கள்.

தமிழை வளர்த்த அகத்திய முனிவனுக்கு இருப்பிடமாதலால் பொதிய மலையை வணங்கிச் செல்லுமாறு சுக்கிரீவன் கட்டளையிட்டான்; அகத்திய முனிவன் வடதிசையிலிருந்து தமிழை வளர்க்கத் தென்திசை நோக்கி வந்தவனாதலால் அம் முனிவன் இருக்கும் இடத்தில் தமிழறிந்த புலவர் கூட்டம் நிரம்பியிருத்தல் இயல்பே.

************

325 சீதையைத்தேடிக்கண்டுபிடிக்க சுக்ரீவன் விதித்த கெடு

4478.  ‘ஆண்டு கடந்து, அப் புறத்தும், இப்புறத்தும்,

ஒரு திங்கள் அவதி ஆக,

தேண்டி, இவண் வந்து அடைதிர்; விடை கோடிர்,

கடிது’ என்னச் செப்பும் வேலை,

நீண்டவனும், மாருதியை நிறை அருளால் உற

நோக்கி, ‘நீதி வல்லோய்!

காண்டி எனின், குறி கேட்டி!’ என, வேறு

கொண்டு இருந்து, கழறலுற்றான்;

அந்த இடத்தைத் தாண்டிச் அதற்கு அப்பாலும் இந்த இடங்களிலும் ஒரு திங்கள் முழுதும் அலைந்து (சீதையைத்) தேடி இங்கு வந்து சேருங்கள்;  விரைவாக விடை பெற்றுச் செல்லுங்கள் என்று (சுக்கிரீவன்) வானரங்களுக்குக் கட்டளை யிட்டான்; அப்போது (திருவிக்கிரம அவதாரத்தில்) திருமாலாகப் பேருருவம் கொண்டவனான இராமனும்    மாருதியை முழுக் கருணை யோடு பார்த்து நீதி நூல்களில் வல்லவனே!  (சீதையைக்) காண்பாயானால் (இவள்தான் சீதையென்று தெளிவதற்காக)  அவளுடைய அங்க அடையாளங்களை (நான் கூறக்) கேட்பாய் என்று (அவனைத்) தனியே அழைத்துச் சென்று சொல்லத் தொடங்கினான்.

********************

326 கம்பன் சீதையின் 27 உறுப்புகளின் வருணனையைக் சுமார் முப்பது பாடல்களில் நமக்கு அளிக்கிறான்; இவற்றை சிறந்த ஒரு பெண்ணின் சாமுத்ரிகா லட்சணமாகக் கொள்ளலாம்

இராமன் சீதையின் அடையாளங்களை அனுமனுக்குக் கூறியது (4585-4617)

ஒவ்வொரு அங்கத்தையும் வருணிக்க ஒவ்வொரு பாடலையும் சில அங்கங்களுக்கு இரண்டு பாடல்களையும் கம்பன் எழுதியுள்ளான் ; அவ்வளவையும் நான் எழுதினால் நீங்கள் பாதிப் பதிப்பதற்குள் தூங்கப் போய்விடுவீர்கள் ! கம்ப ராமாயண வெப்சைட்டுகளில்  (ப்ராஜெக்ட் மதுரை Project Madurai, தமிழ் வர்சுவல்யூனிவர்சிட்டி TVU) காண்க.

அடியின் அமைப்பு, புறவடி, கணைக்கால், தொடை, அல்குல், இடை,

வயிறு, உந்தி, கொங்கை, தோள், முன்கை, நகம், அகங்கை,

வயிற்று மடிப்பு, வயிற்றிடை மயிரொழுங்கு, கழுத்து, வாயிதழ், பல், மூக்கு, காது ,கண், அளகம், முகம், கூந்தல். புருவம்,.நடை, நிறம்

****

327.பிரம்மா உவமை சொல்ல முடியாத ஒன்றினைப் படைத்தான்

4508.  ‘குழல் படைத்து, யாழைச் செய்து

குயிலொடு கிளியும் கூட்டி

மழலையும் பிறவும் தந்து,

வடித்ததை, மலரின் மேலான்,

இழை பொரும் இடையினாள்தன்

இன் சொற்கள் இயையச் செய்தான்;

பிழை இலது உவமை காட்டப்

பெற்றிலன்; பெறும்கொல் இன்னும்?

புல்லாங் குழலையுண்டாக்கியும்,   யாழ்க் கருவியை வகுத்தமைத்தும் குயிலையும் கிளியையும் படைத்தும் , மழலைச் சொல்லையும், இனிய சொற்களுக்கு உவமையாகும் பொருள்களை இயற்றியும் பழகித் தேர்ந்த பிரமன் சீதையின் இனிய சொற்களுக்குள்  அவற்றினைப் பொருத்தினான். ஆனால் அச்சொற்களுக்கு உவமைப் பொருள் எதையும் உண்டாக்கவில்லை!  இனிமேலாவது (அவன்) படைப்பானோ? யாம் அறியோம் (பிரம்மா, சீதையின் இன்சொற்களைப் படைப்பதற்காக முதலில் வேய்ங்குழல் முதலியவற்றைப் படைத்துப் பழகிக் கைதேர்ந்த பிறகே  அச்சீதையின் சொற்களைப் படைத்தான்; ஆகவே, அவற்றிற்கேற்ற உவமப் பொருள்களை இதுவரையிலும் பிரம்மா படைக்க வில்லை.)

******************

328.அயோத்தி நகர வாசலிலேயே காடு எங்கே இருக்கிறது? கேட்டாள் சீதை! ஒன்றும் அறியாத அப்பாவிப் பெண் சீதை !

அயோத்தி நீங்கி (காட்டுக்கு)ச் சென்ற காலத்தில் அழகிய வாயிலைக் கடப்பதற்கு முன்பே எல்லையில்லாத கொடிய கானம் எதுவோ என்று கேட்டாள்; அவையனைத்தையும் அவள் மனம் கொள்ளுமாறு உரைப்பாய்.!

புகார் நகரத்து எல்லையிலேயே ‘மதுரை மூதூர் யாது’ (சிலப்.நாடுகாண்.41) என்று கேட்ட கண்ணகி வினாவின் எதிரொலியே ‘யாண்டையது கான்’ என்ற சீதையின் வினா.

சீதையின் கேள்வி,  வேறொன்றையும் அறியாத அச்சீதையின்  மெல்லியல்பையும், பேதைமையையும் வெளிப்படுத்தும்.

****

329. மோதிரம் அளித்து விடைகொடுத்தல்

4519.  இனைய ஆறு உரைசெயா,

‘இனிதின் ஏகுதி’ எனா,

வனையம் மா மணி நல்

மோதிரம் அளித்து, ‘அறிஞ! நின்

வினை எலாம் முடிக!’ எனா,

விடை கொடுத்து உதவலும்,

புனையும் வார் கழலினான்

அருளொடும், போயினான்.

(இராமன்) அனுமனிடம் இவ்விதமாக அடையாளங்களைச் சொல்லி, இனிதாகச் செல்வாய் என்று கூறி, சிறந்த இரத்தினங்கள் பதித்துச்

செய்யப்பட்ட சிறந்த மோதிரத்தைக் கொடுத்து மேலும் கூறினான்;

“அறிவு மிக்கவனே, நீ மேற்கொண்ட செயல் முழுவதும் (இடை யூறில்லாமல்) இனிது முடிவதாகுக”- என்று விடைதந்து அனுப்பினான் ; நீண்ட வீரக் கழலைப் பூண்டவனான அனுமன் இராமனின் கருணையை மனதிற்கொண்டு துணிவோடு சென்றான்.

அடியார்கள் கடவுளின் அருளை முன்னிட்டுக் கொண்டு செய்தொழில் தொடங்குதல் இயல்பாதலின் ‘வார்கழலினான் அருளொடும் போயினான்’ என்று பொருள் கொள்ளலாம்.  அசோக வனத்துச் சோகத்தாளாகிய நங்கைக்கு நன்னம்பிக்கை தருவதற்கு உரியதாகலின் ‘நல்மோதிரம்’ என்று கூறப்பெற்றது.

****

330. DON’T WORRY; I AM ON MY WAY; I AM COMING TO HELP YOU – SAID HANUMAN

குகையில் கும்மிருட்டில் சிக்கிய வானரங்கள் அனுமனே காப்பாற்ற வா என்றவுடன் அனுமன் சென்று எல்லோரும் ஒருவர் ஒருவர் வாலினைப் பிடியுங்கள்; முதல் ஆள் என் வாலினைப் பிடியுங்கள் என்று ஐடியா சொல்லி குகையில் சிக்கிய வானரங்களை வெளியே கொண்டு வந்தான் ; இது அனுமனின் சமயோசித புத்தியைக் காட்டுகிறது.

4550.  ‘உய்வுறுத்துவென்; மனம் உலையிர்;

ஊழின் வால்

மெய்யுறப் பற்றுதிர்;

விடுகிலீர்’ என,

ஐயன், அக் கணத்தினில்,

அகலும் நீள் நெறி

கையினில் தடவி, வெங்

காலின் ஏகினான்.

(மாருதி மற்றவர்களைப் பார்த்து) நீங்கள் பிழைக்க (வேண்டியன) செய்வேன்; வருந்த வேண்டா; முறையாக (ஒருவர்பின் ஒருவராக நின்று),   (எனது) வாலை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்; அதனை விட்டு விடாதீர்கள் என்று கட்டளையிட்டு – (அவ் வானரர்கள் தனது வாலைப் பற்றிக் கொண்ட) அப்பொழுதே;  சிறந்தவனான அந்த அனுமன் செல்லவேண்டிய அந்தக் குகையின் வழியில் கையால் தடவிக் கொண்டு வேகமாக நடந்து முன்னே சென்றான்.

இருட்பிழம்பில் திசை தெரியாமல் திகைத்துத் தம்மைக் காக்குமாறு வேண்டிய வானரர்களுக்கு அனுமன் அபயமளித்துத் தனது நீண்ட வாலைப் பிடித்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டுக் கைகளால் தடவிக் கொண்டு காலால் முன்னே நடந்து சென்றான் என்பது ஒரு விளக்கம் ; ஒருவர் வாளினை ஒருவர் பிடித்துக்கொண்டு தன்னுடன் வருமாறு சொன்னது மேலும் பொருத்தமாக உளது; பாடலும் அதற்கு இடம் தருகிறது.

–சுபம் –

TAGS- சீதையின் அங்க அடையாளங்கள்,  கம்ப ராமாயணத்தில் 330 கேள்விகள், தென் திசை, அனுமன், மோதிரம், கணையாழி, கொடுத்தது

Leave a comment

Leave a Reply