கம்ப ராமாயணத்தில் 350 கேள்விகள்! சுந்தர காண்டம் வந்தாச்சு! அனுமனின் திகில் காட்சிகள்! (Post.16,389)

Written by London Swaminathan

Post No. 16,389

Date uploaded in London – 10 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

பால காண்டம், அயோத்யா காண்டம் ஆரண்ய காண்டம் , கிஷ்கிந்தா காண்டம் ஆகியவற்றை முடித்ததால் 5000 செய்யுள் கடலில் மூழ்கி முத்து எடுத்தோம். மொத்தமுள்ள செய்யுட்கள் சுமார் 10,000. அடுத்ததாக சுந்தர காண்டம்;  திரைப்பட டைரக்டர்கள் போல பல திடுக்கிடும் திகில் காட்சிகளை ராமாயணம் எழுதியோர் நமக்கு அளிக்கின்றனர்; அத்தனையும் ஒவ்வொரு கருத்தை நமக்கு தெரிவிக்கிறது அவைகளை ஆங்காங்கே காண்போம் . இதுவரை வெளியான அத்தனை கேள்விகளும் பதில்களும் என்னுடைய பிளாக்கில் எப்போதும் கிடைக்கும்

341

(சுந்தர காண்டத்தின் முதல்பாடலில்) சொர்க்கத்தைக் கண்டும் அனுமன் உள்ளே போகாதது ஏன்?

342

அனுமன் விஸ்வரூப கோலத்தில்  புறப்பட்டபோது மகேந்திர மலையில் முனிவர்களுக்கு என்ன நேர்ந்தது ?

343

HANUMAN ROCKET LAUNCHED TOWARDS SRI LANKA

ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஹனுமான் என்னும் ராக்கெட் ஏவப்பட்டவுடன் என்ன நடந்தாது  ?

344

மாருதியைக் கம்பன் கயிலை மலைக்கு ஒப்பிட்டதன் கருத்து என்ன ?

345

அனுமனின் வாலினை கம்பன் எப்படி வருணிக்கிறான்?

346

BIOLOGY LESSON ABOUT WHALES AND KILLER WHALES

திமிங்கிலம், கில்லர் வேல்ஸ் பற்றி கம்பனறிந்தது என்ன? கப்பனின் பயாலஜி லெஸ்ஸன் என்ன கற்பிக்கிறது?

347

நாகரத்தினம் குறித்து என்ன படுகிறான் கம்பன் ?

348

திரைப்பட டைரக்டரைப்போல, அனுமன் மூலம், பல திகில் காட்சிகளைக் கம்பன் காட்டுகிறான் ; முதல் திகில் காட்சி மைனாக பர்வதம் ; கம்பன் என்ன பகர்கிறான் ?

349

அனுமனிடம் மைனாக மலை செப்பியது என்ன ?

350

மைனாக பரவத்துக்குப் பதில் சொல்லிவிட்டு அனுமன் மேலே சென்றதன்  மூலம் ராமாயணம் உலகிற்கு கற்பிக்கும் பாடம் என்ன ?

XXXXXXXXXXXXXXX

விடைகள்

341.ஆண் தகை ஆண்டு அவ் வானோர்

துறக்கம் நாடு அருகில் கண்டான்;

ஈண்டது தான்கொல் வேலை

இலங்கை என்று ஐயம் எய்தா,

வேண் தரு விண்ணாடு என்னும்

மெய்ம்மை கண்டு உள்ளம் மீட்டான்;

‘காண் தகு கொள்கை உம்பர்

இல் ‘எனக் கருத்துள் கொண்டான்.

ஆண்களில் உயர்ந்த அனுமன் விஸ்வரூபம் எடுத்த போது தேவர்களின் நாட்டை அருகில் கண்டான்; அது தான்கடல் சூழ்ந்த இலங்கை என்று சந்தேகம் கொண்டான். அது இலங்கை இல்லை வேண்டியதைத் தரும்  விண்ணவர்களின் நாடு என்ற உண்மையை அறிந்து இலங்கை செல்லும் முயற்சியில் இறங்கினான் .

சீதையை காண வேண்டும் என்ற கொள்கை  மனதில் உந்த சொர்க்க லோகத்தையும் புறக்கணித்தான்.  ஒன்று, நமது குறிக்கோள் என்ன என்பதை ஒரு போதும் மறக்கக் கூடாது. குறிக்கோளை அடையும் வழியில் பல சலனங்கள், சபலங்கள் வரும். சொர்க்கமே கிடைத்தாலும், அதில் மயங்கி நின்று விடக் கூடாது.

****

342. அனுமன் கால்கள் அழுந்திய வேகத்தில் விலங்குகளும் பறவை களும் இறந்தன; சிகரங்கள் பொடிப் பொடியாகின ; முனிவர்கள் தவத்தை விட்டு ஆகாயத்துச் சென்றார்கள்

‘கடல்உறுமத்துஇது’ என்னக்

கருவரை திரியும் காலை,

மிடல்உறுபுலன்கள் வென்ற

மெய்த்தவர் விசும்பின் உற்றார்;

திடல்உறுகிரியில் தம்தம்

செய்வினைமுற்றி, முற்றா

உடல்உறு பாசம்வீசாது,

உம்பர்செல்வாரை ஒத்தார்.

கரிய மகேந்திரமலைபாற் கடலைச் சார்ந்த மத்து என்று கூறும்படி சுழல்கின்ற சமயத்தில் ஐம்புலன்களும் பொறிவழியே போகாமல் அடக்கிய முனிவர்கள்  ஆகாயத்தை அடைந்தார்கள் (அவர்கள்) மேட்டுப் பாங்கான மலையில் தாம் தாம் செய்யவேண்டிய கடமைகளைத் தொடங்கி நிறைவு செய்யாமல்  உடலின்கண் கொண்ட பற்றை விடாமல்   விண்ணுலகத்திற்குச் செல்பவரை ஒத்தார்.  தவத்தை முறையாக முடித்திருந்தால் முத்தி பெற்றிருப்பர். நிறைவேற்றாமையால் அவர்கள் சுவர்க்கம் சென்றனர்.

காலைஊன்றி எழுந்தபோது நிகழ்ந்த மாறுதல்கள்

*****

343. அனுமன் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது ; மகேந்திர மலை பூமிக்குள் போனது

4863.  வால் விசைத்து எடுத்து, வன் தாள்

மடக்கி, மார்பு ஒடுக்கி, மானத்

தோல் விசைத் தோள்கள் பொங்கக்

கழுத்தினைச் சுருக்கித் தூண்டும்

கால் விசைத் தடக்கை நீட்டி,

கண்புலம் கதுவா வண்ணம்,

மேல் விசைத்து எழுந்தான், உச்சி

விரிஞ்சன் நாடு உரிஞ்ச வீரன்.

அனுமன் (வீரன்) கடலைத் தாவுவதற்காகத் தன் வாலை வேகமாக மேலே உயர்த்தி, வலிமையான கால்களை மடக்கி, மார்பைச் சுருக்கி, பெருமைமிக்க தோள்களின் வலிமை பொங்கக் கழுத்தைச் சுருக்கி, செல்வதற்குக் காரணமாகிய கைகளை நீட்டி, பார்ப்பவர்களின் கண்களுக்குத் தெரியாத வேகத்தோடு, பிரம்மாவின் (விரிஞ்சன்) உலகம் வரை செல்லும்படியாக மேல்நோக்கி எழுந்து வானில் பாய்ந்தான்

‘இலங்கையின் அளவிற்று அன்றால்,

“இவ்வுரு எடுத்த தோற்றம்;

விலங்கவும் உளதுஅன்று” என்று

விண்ணவர்வியந்து நோக்க,

அலங்கல்தாழ்மார்பன் முன்தாழ்ந்து

அடித்துணைஅழுத்தலோடும்,

பொலன்கெழுமலையும் தாளும்

பூதலம்புக்க மாதோ !

அனுமன்மேற்கொண்ட தோற்றம் இலங்கையை எல்லையாகக் கொண்டது அன்று;  (அனுமனைத்) தடுத்து நிறுத்தவும்ஒரு பொருளும் இல்லை. தேவர்கள் ஆச்சரியப்பட்டுப் மாலைகள் தங்கிய மார்பை உடைய அனுமான்   முன் புறமாக மேனியை இரண்டு திருவடிகளையும் ஊன்றியவுடன்    பொன் மயமான மகேந்திர மலையும் அதன் அடிச் சாரலும்  பூமியின் அடித்தளத்தைச் சென்று சேர்ந்தன.

அனுமன் கொண்டபேருரு இலங்கையை எல்லையாகக் கொண்டதன்று. இவன் இலங்கையடைந்ததும் இவனைத் தடுத்து நிறுத்தும் பொருள் இல்லையே என்று தேவர்கள் கருதினர்.

*****

344. அனுமனும் கயிலை மலையும்- கம்பன் உவமை

விண்ணவர்ஏத்த, வேத

முனிவரர்வியந்து வாழ்த்த,

மண்ணவர்இறைஞ்ச செல்லும்

மாருதி, மறம்உள் கூர,

‘அண்ணல்வாள்அரக்கன் தன்னை

அமுக்குவென்’இன்னம் என்னாக்

கண்ணுதல் ஒழியச்செல்லும்

கைலைஅம்கிரியும் ஒத்தான்.

தேவர்கள் போற்றவும் , வேதங்களை அறிந்த சிறந்த முனிவர்கள் வியப்புற்று   வாழ்த்தவும் , மண்ணுலக்கத்தவர் வணங்கவும் அனுமன் விண்ணில் பாய்ந்தான்; இராவணன் மேல் கோபம் மிகுதியாவதால் இராவணனை    மறுபடியும்  அழுத்துவேன் என்று எண்ணினான்  சிவபிரான் இல்லாமல் தனித்துப் போகின்ற கயிலாயமலையை ஒத்திருந்தான்.

வெண்ணிறமுடைய அனுமன் இராவணன் மேல் கொண்ட சீற்றம் அதிகரிக்க அவனை  அமுக்கச் செல்லும் கயிலாயம் போன்றிருந்தான். ஏற்கனவே ஒரு முறை கயிலை மலையைத் தூக்க முயன்று ராவணன் நசுக்குண்டான். இப்பொழுது மீண்டும் ஒரு முறை அவனை நசுக்க அனுமன் சென்றதால் அவனைக் கம்பன் கயிலை மலை என்கிறான்.

****

345. அனுமன் வால்= எமதருமனின் பாசக் கயிறு

அனுமன் வால், துப்பறியும் அரக்கர்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக பின்னே மறைந்திருந்தது ஏனெனில் அது யமனின் பாசக்கயிறு!

விளித்துப்பின் வேலை தாவும்

வீரன்வால், வேதம் எய்க்கும்

அளி, துப்பின் அனுமன் என்னும்

அருந்துணைபெற்றதாயும்,

களித்துப் புன்தொழில்மேல் நின்ற

அரக்கர்கண் ணுறுவர் என்ன

ஒளித்து, பின்செல்லும் கால

பாசத்தைஒத்தது அன்றே.

வேதங்களை அறிந்த, கருணையும் உற்சாகமும் உடைய அனுமனின் அரிய உதவி, எம தர்மனுக்குக் கிடைத்தது. கள்ளுண்டு ஆட்டம்போடும் அரக்கர்கள்   கண்டு கொள்வார்களோ என்று கருதி    கடலைத் தாவுகின்ற   வீரனுடைய வாலானது   மறைந்து அனுமனுக்குப் பின்னே போகின்ற    யமனுடைய பாசத்தைப் போன்றிருந்தது.

*****

BLUE WHALES AND KILLER WHALES

346 கடலில் வாழும் நீலத் திமிங்கிலங்கள்தான் பூமியிலுள்ள பிராணிகளில் மிகப்பெரியது. அதன் நீளம் 120 அடி. அவைகளைத் தவிர கில்லர் வேல்ஸ் எனப்படும்  கொலைகாரத் திமிங்கிலங்களும் உண்டு; இவர்களையும் கம்பன் குறிப்பிடுகிறான் ; காளிதாசனின் ரகு வம்சத்திலும் திமிங்கிலம் பற்றி வருவதால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இவற்றை இந்துக்கள் அறிந்திருந்தனர் என்பது வெள்ளி டை மலை .

‘ஓசனை உலப்பு இலாத

உடம்புஅமைந்துடைய’ என்னத்

தேசமும் நூலும்சொல்லும்

திமிங்கிலகிலங்களோடும்

ஆசையை உற்றவேலை

கலங்க,அன்று அண்ணல் யாக்கை

வீசிய காலின்வீந்து

மிதந்தன,மீன்கள் எல்லாம்.*

கடலில் வாழும் திமிங்கிலம் மற்றும் அவைகளைக் கொல்லும்  திமிங்கிலகிலம் ஒரு யோஜனை நீளத்துக்கு உடையது என்று மக்களும் அறிவியல் நூல்களும் செப்பும்; அத்தகைய கடல் கலங்கும்படி அனுமன் சென்றதால் மீன்களும் இறந்து மேலே மிதந்தன .

Orcas (Killer Whales) are known predators of large sharks, including great white sharks, which they sometimes hunt specifically for their nutrient-rich livers. They also hunt benthic stingrays and high-speed ocean sunfish.

Their diet includes phocid seals (ringed, harp, bearded, and hooded seals), sea lions, walruses, dolphins, porpoises, and narwhals. They also target Gray whale calves and occasionally consume parts of larger baleen whales.

******

347.நாகரத்தினம் குறித்து கம்பன்

கீண்டதுவேலை நல்நீர்;

கீழ்உறக்கிடந்த நாகர்

வேண்டிய உலகம்எல்லாம்

வெளிப்பட,மணிகள் மின்ன,

ஆண்தகை அதனைநோக்கி,

‘அரவினுக்குஅரசன் வாழ்வும்

காண்தகுதவத்தென் ஆனேன்

யான் !’ எனக் கருத்துள் கொண்டான்.

ஆழமான  நீரையுடைய கடல் பிளவுபட்டு  மிகவும் கீழே  அமைந்துள்ள நாகலோகத்தவர்கள் முழுவதும் வெளிப்பட்டனர்; அவர்களுடைய  மாணிக்கங்கள் ஒளிவீசின; ஆண்மை மிக்க அனுமன் அதைப் பார்த்து;  பாம்புகளின் வேந்தனான ஆதிசேடனின் செல்வச் செழிப்பினைக் காணும் தவத்தைச் செய்தவனாய் விட்டேன்    என்று எண்ணினான். நாகரத்தினங்கள் (மாணிக்கம்) செல்வச் செழிப்பைக் காட்டிற்று. .

சுந்தர காண்டத்தின் நிந்தனைப் படலத்தில் சீதையைத் தேடி அசோக வனத்துக்குள் வந்த ராவணனை வருணிக்கும் கம்பன் செப்புவான்:-

ஒரு மணி தேடும் பல் தலை அரவின்

உழைதொறும் உழைதொறும் உலாவி

காம மயக்கத்தால் சீதை இருக்கும் இடத்தை மறந்து போன ராவணன், தன் ஒப்பற்ற மாணிக்கத்தை  இழந்த பல தலைப் பாம்பு போலப் பற்பல இடங்களிலும் அவளைத் தேடித் திரிந்தபடி வந்தான்.

கீண்டது வேலை நல் நீர் கீழ் உறக் கிடந்த நாகர்

வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட மணிகள் மின்ன

–கடல் தாவு படலம், சுந்தர காண்டம்.

உருக் காட்டுப் படலத்தில் ராமனின் மோதிரத்தை அனுமான் சீதையிடம் கொடுத்தவுடன், மாணிக்கத்தைத் தேடும் பாம்புக்கு அந்த ரத்தினம் கிடைத்து விட்டால் எவ்வளவு மகிழ்ச்சி கொள்ளுமோ அது போல சீதையின் மன நிலை இருந்ததாம்.

‘இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்’– என்பான்.

இரும்பு ஐயம் முதலிய உலோகங்களைத் தங்கம் ஆக்கும் அதிசய மணிக்கு வேதிகை மணி என்று பெயர்

அதிசயமான வேதிகை மணி பற்றிய பாடலும் சுந்தர காண்டம் உருக்காட்டுப் படலத்திலேயே வருகிறது:-

நீண்ட விழி நேரிழைதன் மின்னின் நிறம் எல்லாம்

பூண்டது ஒளிர்பொன் அனைய பொம்மல் நிறம் மெய்யே

ஆண்தகைதன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம்

தீண்டு அளவில் வேதிகை செய்தெய்வ மணிகொல்லோ

பொருள்:-

நீண்ட கண்களையும் சிறந்த அணிகலன்களையும் உடைய சீதையின் மின்னல் போன்ற உடலின் நிறமானது, மோதிரத்தின் ஒளியால் பொன்னிறம் பெற்றுப் பொலிவும் பூண்டது. இது உண்மை! எனவே, இராமனது மோதிரம் தன்னை நெருங்கும் எல்லாப் பொருள்களும் தன்னைத் தீண்டுகிற மாத்திரத்தில் பொன்னாக மாற்றுகின்ற தெய்வத் தன்மை பெற்ற ஸ்பரிசவேதி என்னும் ரசவாத குளிகைதானோ?

ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலத்தில் ராவணன் மாணிக்கத் தேரில் ஏறி வந்ததாகவும் அங்கே ஒன்பது மணிகளால் (நவரத்னம்) ஆன மரங்கள் இருந்ததாகவும் கூறுகிறான்

‘மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான்‘

‘பொற்பு உற்றன ஆய் மணி ஒன்பதும் பூவில் நின்ற‘

*****

348. நடுக்கடலில் திடீரென்று மேலே எழும்பிய மைனாக்கம் மலையின் தோற்றம்

பல்ஆயிரம் ஆயிரம் காசு இனம்

பாடு இமைக்கும்

கல் ஆர் சிமயத்தடங் கைத்தலம்

நீண்டுகாட்டி,

தொள்ஆர்கலியுள் புக மூழ்கி

வயங்குதோற்றத்து

எல்ஆர் மணிஈட்டம் முகந்து,

எழுகின்றதுஎன்ன*.

கணக்கற்ற மணிகள் ஒளி வீசுகின்ற கற்கள் நிரம்பிய விசாலமான மலையுச்சியாகிய கைகளை மேலே உயர்த்திக் காட்டி, கடலில்

முத்துக்குளிப்பவர்கள் மணிகளை வாரிக் கொண்டு மேலே வருபவனைப் போல, நடுக்கடலில் திடீரென்று மேலே எழும்பியது.

மைந்நாகமலை கடலில் முழுகி முத்துக்குளிப்பவர்கள் மணிகளை வாரிக்கொண்டு மேலே எழுவதைப் போன்றிருந்தது. மலைச் சிகரங்கள் கைகளைப் போன்றிருந்தன.

கடலுக்கு அடியில் இருந்த குகைகளில் வாழ்ந்த பாம்புகளும் வெளியே வந்தன ; அந்தப் பாம்புகளை ஆறு பகைவர்களுக்கு கம்பன் ஒப்பிடும் அழகினைக் கீழே காணலாம்

கொடு நாலொடு இரண்டு குலப்பகை

குற்றம்மூன்றும்

சுடுஞானம்வெளிப்பட உய்ந்த

துய்க்கு இலார்போல்

விடநாகம்முழைத்தலை விம்மல்

உழந்து,வீங்கி,

நெடுநாள்,பொறைஉற்ற உயிர்ப்பு

நிமிர்ந்துநிற்ப.

ஆறு வகையான கொடிய பகையையும், மூன்று குற்றத்தையும் அழிக்கின்ற ஞானமானது ஆன்மாவிலே தோன்ற தப்பிப் பிழைத்த பற்றற்ற ஞானிகளைப் போல, மலைக் குகைகளில் நீண்ட நாட்கள் அடங்கிக் கிடந்த விடப் பாம்புகள் வெளிப்பட்டன

மலையின் குகையில் அகப்பட்ட பாம்புகள் ஆறு வகையான பகையையும் மூன்று குற்றமும் நீங்கிய ஞானிகளைப் போல விடுதலை பெற்று உயிர்த்தன. பகை ஆறு – காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் என்பவை. முக்குற்றம்  – ஐயம், திரிபு, அறியாமை.  தனம், குலம், கல்விஎன்று குற்றம் மூன்று என்று பழைய உரை பேசும்.

*****

349. ஒரு காலத்தில் பறந்து கொண்டிருந்த மலைகளின் இறக்கைகளைஇந்திரன் வெட்டியபொழுது மைநாகபர்வதத்துக்கு கடலில் வாழ்வதற்கு காற்று தேவன் உதவினான். அதற்கு நன்றி கூறும் முகத்தான் ஒய்வு எடுத்துக்கொள்வதற்கு இங்கே தங்குக என்று மைனாக மலை இயம்பியது.

அன்னான்அருங்காதலன் ஆதலின்

அன்பு தூண்ட

என்னால் உனக்குஈண்டு செயற்கு

உரித்தாயதுஇன்மை

பொன்னார் சிகரத்து இறை ஆறினை

போதி என்னா,

உன்னாஉயர்ந்தேன் – உயர்விற்கும்

உயர்ந்ததோளாய் !

உயர்ந்துள்ள பொருள்கள் அனைத்திலும் உயர்ந்த தோள்களை யுடையவனே! அந்த வாயு தேவனுடைய   அருமை மைந்தன் நீ; ஆகையால்   அவன்பால் யான் கொண்ட அன்பானது உந்தித்தள்ள  இங்கே என்னால் செய்வதற்கு உரிய உபகாரம் வேறு இல்லாததால்   பொன் நிரம்பிய மலையில் சிறிது இளைப்பாறிப் போவாய் என்று நினைந்து மேலே வந்தேன்.

அனுமனே ! எனக்குஉதவி செய்த வாயுதேவன் புதல்வன் நீ

ஆகையினாலே உனக்கு உதவி செய்வதற்கு மேலே கிளர்ந்து வந்தேன் என்று மைந்நாகமலை கூறிற்று.

*****

350. விசுவாமித்திரர் வாழ்வில் ஆசைக்கவர்ச்சிகள் / டெம்ப்டேஷன் புகுந்து அவரை ஒவ்வொரு முறையிலும் இக்கட்டில் மாட்டி வைத்ததை அறிவோம் ; இதே போல புத்தர், ஏசு வாழ்வில்  டெம்ப்டேஷன் வந்தபோது அவர்கள் அந்த வலையில் சிக்கவில்லை ; அனுமன் தான் இ அணும்னாதானிவர்கள் எல்லோருக்கும் முன்னோடி ! ஓய்வெடுத்துச் செல்லுங்கள் என்று மைனாக பர்வதம் ஆசை காட்டிய போதும் அனுமன் அந்த ஆசை வலையில் – பாச வலையில் சிக்கவில்லை என்பதைக் கீழே காணலாம்:

‘வருந்தேல்! இது என்? துணை வானவன்

வைத்த காதல்!

அருந்தேன் இனி யாதும் ஒன்று, ஆசை

நிரப்பி அல்லால்;

பெருந் தேன்மொழி சார நின் அன்பு

பிணித்த போதே

இருந்தேன், நுகர்ந்தேன் : இதன்மேல் இனி

ஈவது என்னோ? ‘

மைநாகமலையைப் பார்த்து அனுமன், நான் பறந்து வந்ததால் சோர்வு அடையேன்; அதற்குக் காரணம்;  இராமபிரான் என்பால் கொண்ட அன்பாகும்;   என் விருப்பம் நிறைவேறும்வரை எதையும் உண்ணமாட்டேன்; தேன் போன்ற உன்னுடைய அன்பானது  கட்டிப் பிடித்த அப்பொழுதே உன் வீட்டில் தங்கி உண்டவன் ஆனேன்; இப்போது இதற்குமேல் கொடுக்கக்கூடிய பொருள் யாது ?

இராமபிரான் என்பால் வைத்த கருணையால் யான் சோர்வு

அடைய மாட்டேன். என்னுடைய விருப்பம் நிறைவேறினால் அல்லாமல் எதையும் உண்ணேன். உன் அன்பு என்னைப் பிணித்து விட்டது. அதனாலேயே உண்டவன் ஆனேன். இனிமேல் தருவதற்கு யாதுளது என்று அனுமன் கூறினான்.

4907.  ‘முன்பின் சிறந்தார் இடை உள்ளவர்

காதல், முற்றப்

பின்பின் சிறந்தார்; குணம் நன்று இது!

பெற்ற யாக்கைக்கு

என்பின் சிறந்து ஆயது ஒர் ஊற்றம் உண்டு

என்னல் ஆமே?

அன்பின் சிறந்தாயது ஒர் பூசனை

யார்கண் உண்டே? ‘

தலையேழு வள்ளல்களும்,  இடையேழு வள்ளல்களும், கடையெழு வள்ளல்களும் மேற்கொண்ட அன்பு பெரியது;

மூவகை வள்ளல்கள்பெற்றிருந்த அன்பு மிகப் பெரியது. இந்த

அன்பைப் பெற்றுள்ள உடம்புக்கு எலும்பினை விடச் சிறந்த வலிமை உள்ளது. அன்பைவிடச் சிறந்த வழிபாடு கிடையாது

ஆதலின் ததீசி அன்புக்காக முதுகெலும்பை வழங்கினான்.

***

அநுமன் மைந்நாகத்தைப் பாராட்டி மேலும் செல்லுதல்

4908.  ‘ஈண்டே கடிது ஏகி, இலங்கை

விலங்கல் எய்தி,

ஆண்டான் அடிமைத் தொழில் ஆற்றலின்

ஆற்றல் உண்டே?

மீண்டால் நுகர்வேன் நின் விருந்து ‘…..

திரும்பி வருகையில் உன்னைச் சந்திக்க்கிறேன் அனுமன் கூறினான்.

–SUBHAM—

Tags- கம்ப ராமாயணத்தில் 350 கேள்விகள்! சுந்தர காண்டம் வந்தாச்சு! அனுமனின் திகில் காட்சிகள்!

Leave a comment

Leave a Reply