அம்பாளின் தலைநகரம்! – 6 (Post No.16,388)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,388

Date uploaded in London –10 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

அம்பாளின் தலைநகரம்! – 6

ச. நாகராஜன்

24. சந்திரப் பிராகாரம்

இது கண்ணுக்கு விருந்தாக அமையும். இதன் மேற்பாகத்தில் பனிமலையைப் போல வெண்மையும் தண்மையும் உடைய நிலவும், நக்ஷத்திரக் கூட்டங்களும் உண்டு. அவற்றின் நடுவே சுதாநிதியாகிய சந்திரன் பேராந்தத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பான்.

25. சிருங்காராவரணம்

(ஆவரணம் என்றால் பிராகாரம் அல்லது சுற்றுப்பாதை என்று பொருள்).

இது சுவர்ண, ரஜத, இரத்தின மயமான சிகரங்களையும், கோபுரங்களையும் துவஜங்களையும் கொண்டது. இதற்கும் இருபத்தினான்காவது கோட்டைக்கும் இடையில் ரமணீயமான மாடங்களும் (மாளிகைகள்) உபவனங்களும் இன்னோரன்ன பல சிறப்புகளும் உள்ளன. இக்கோட்டையைச் சுற்றி சிருங்காரப்பரிகை (அகழ்) ஒன்று உண்டு. இதற்கு அதிபதியாகிய மன்மதன் அந்த அகழியின் கரையில் உள்ள மணிமயமான உப்பரிகையின் மீது சிருங்கார தேவதைகளோடு கூடி வசித்துக் கொண்டிருப்பான்.

இருபத்தைந்தாவது கோட்டைக்குள்ளே ஸர்வ தெய்வப் பெண்களால் போற்றப்படும் சிந்தாமணி மயமான பிராகாரம் ஒன்று உண்டு. இதற்கும் சிருங்காரக் கோட்டைக்கும் இடையில் மஹா பதும வனம் ஒன்று உள்ளது. இந்த மஹா பதும வனத்தினிடையே சிந்தாமணி கிருஹராஜம் உள்ளது. அந்த கிருஹத்தில் பரதேவதையின் பூஜைக்கு உரித்தான ஐந்து பாத்திரங்கள் உண்டு. (அவை சங்க பாத்திரம், ஶ்ரீ பாத்திரம், பலி பாத்திரம், பாத்ய, அர்க்ய, ஆசமனாதி பாத்திரம், தீர்த்த பாத்திரம்). ஒவ்வொரு பாத்திரமும், அக்கினி மண்டல சொரூபமான ஆதாரத்தையும், சூரிய மண்டல ரூபமான பாத்திரத்தையும், ஸோம மண்டலமயமான அமிர்தத்தையும் கொண்டதாய், பிரஹ்ம, விஷ்ணு, ருத்திர, மகேஸ்வர, ஸதாசிவ கலைகளோடும், பஞ்ச ரத்தினங்களோடும் கூடி, கந்த புஷ்பாக்ஷதைகளால் அலங்கரிக்கப்பட்டு, வேதோக்த ஸூக்தங்களால் தூய்மையாக்கப்பட்டு விளங்கிக் கொண்டிருக்கும்.

இத்தகைய பூஜா பாத்திரங்களுக்குக் கீழ், மஹா திரிபுரசுந்தரீ சரணாரவிந்த ஸேவாபரர்களான பிரஹ்ம, விஷ்ணு, ருத்திர, மகேஸ்வர, ஸதாசிவர்களின் இல்லங்கள் விளங்கிக் கொண்டிருக்கும்.

மஹா திரிபுரசுந்தரியின் அரண்மனையாகிய சிந்தாமணி கிருஹத்தின் அக்கினி மூலையில் அப்பரதேவதையின் உற்பத்தி ஸ்தானமானதும், பேரொளியோடு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதுமான சிதக்கினி குண்டமும், நிருதி மூலையில் பரதேவதையின் திவ்விய ரதமும், வாயுமூலையில் சியாமளா தேவியின் தேரும், ஈசான மூலையில் ஸேநா நாயகியாகும் மஹாவாராஹீ தேவியின் ரதமும் விளங்கும்.

அன்றியும் மேற்படி சிந்தாமணி கிருஹத்தின் கிழக்குத் துவாரத்தின், வலது பக்கத்தில் மந்திரிணீயாகிய சியாமளா தேவியின் கிருஹமும், மேற்படி துவாரத்தின் இடது பக்கத்தில் ஸேநாநாயகியாகிய வாராஹியின் கிருஹமும் உள்ளன.

கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்னும் நான்கு திக்குகளின் துவாரங்களில் சதுராம்நாய தேவதைகள் சதுரங்க சேனைகளோடு கூடி காவல் பூண்டிருப்பார்கள். இத்தகைய மஹா மஹிமையோடு விளங்குவது தான் ஶ்ரீ சக்ர நகரமாகும். இந்நகரமே ராஜராஜேஸ்வரியின் தேஜோமயமான கிருஹமாகும்.

இந்த கிருஹ ராஜத்தின் நடுவில் பிரஹ்மா, விஷ்ணு, உருத்திரன், மகேச்வரன் கால்களாகவும். ஸதாசிவம் பலகையாகவும் விளங்கும் பஞ்சப்பிரஹ்ம மஹா சிங்காதனத்தின் மேல் “ஸர்வாநந்த மய பிந்து பீடம்” ஒன்று உள்ளது.

இந்த பிந்து பீடத்தின் மேலே தான் பரதேவதை வீற்றிருக்கிறாள்.

இந்த பிந்து பீடத்தின் கீழ், எட்டு சக்ரங்கள் உண்டு. இந்த வெட்டுச் சக்ரங்களோடு உள்ள பிந்து பீடமே ஶ்ரீ சக்ரம் எனப்படும்.

ஶ்ரீ நகரத்தின் 25 கோட்டைகள் பற்றிய விளக்கம் முற்றும்.

**

Leave a comment

Leave a Reply