
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,391
Date uploaded in London –11 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அம்பாளின் அரண்மனையும் சிந்தாமணி க்ரஹமும்!
ச. நாகராஜன்
அம்பாளின் அரண்மையைப் பற்றியும் சிந்தாமணி க்ரஹம் பற்றியும் லலிதா சஹஸ்ரநாமம் வெகுவாக விவரிக்கிறது.
லலிதா சஹஸ்ரநாமத்தில் 56வது நாமம்
ஶ்ரீமன் நகரநாயிகா
ஶ்ரீமத் லக்ஷ்மி விலாஸத்தோடு கூடிய, நகர- வித்யாநகரம் – அதனுடைய நாயிகா – அதிபதியாக இருப்பவள்.
இன்ன நகரம் என்று குறிப்பாக இங்கு சொல்லப்படவில்லை என்றாலும் கூட ‘ஶ்ரீமாதா’ என்ற முதல் நாமத்திற்கு விவரமான அர்த்தத்தைக் கண்டு கூறியது போல, இங்கு ‘நகரம்’ என்றால் ஒரே நகரம் தான் – அது தான் ஶ்ரீ வித்யா நகரம் என்று பொருள்.
ஶ்ரீமன் நகரம் என்றால் ஶ்ரீ சக்ரம் என்றும் அர்த்தம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே ஶ்ரீ சக்ர நாயிகா என்றும் பொருள் கொள்ளலாம்.
அடுத்த நாமம் – 57வது நாமம்
சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா
சிந்தா (மணி) ரத்னங்களால் நிர்மாணிக்கப்பட்ட க்ருஹத்தில் வசிப்பவள்.
ஆகவே அம்பாளின் அரண்மனை இருக்கும் இடம் ஶ்ரீ சக்ரம். அதில் நடு நாயகமாக உள்ள இல்லத்தில் – சிந்தாமணி க்ருஹத்தில் வசிப்பவள் அம்பாள் என்பது பெறப்படுகிறது.
“சிந்தாமணிகணரசிதம் தூரிகரோது மே ஸதனம்” என்று லலிதாஸ்தவ ரத்னம் குறிப்பிடுகிறது.
சிந்தா (மணி) ரத்னத்திற்கு ஆகர்ஷண சக்தியும் அனைத்தையும் கொடுக்கும் சக்தியும் உண்டு என்று சொல்லப்படும்.
இதுவே அம்பாள் இருக்கும் இடமாகும்.
சிந்திதமான அர்த்தங்களைக் கொடுப்பதால் மந்திரங்களுக்கு சிந்தாமணிகள் என்றும், அவைகளை நிர்மாணிக்கும் இடமாதலால் ‘சிந்தாமணி க்ரஹம்’ என்றும் சொல்லப்படுகிறது.
ஶ்ரீ தேவியின் வாசஸ்தானமான சிந்தாமணி க்ருஹத்தைப் பற்றி ஆதி சங்கரர் சௌந்தர்ய லஹரியில் எட்டாவது ஸ்லோகத்தில் இப்படி குறிப்பிடுகிறார்:-
ஸுதா ஸிந்தோர் மத்யே ஸுரவிடபி வாடீ பரிவ்ருதே
மணித்வீபே நீபோபவநவதி சிந்தாமணி க்ருஹே
ஸிவாகாரே மஞ்சே பரமசிவ பர்யங்க நிலயாம்
பஜந்தி த்வாம் தந்யா: கதிசந சிதாநந்த லஹரீம்
இதன் பொருள்:
தாயே! அமுதக் கடலின் நடுவில், கற்பக மரங்களால் சூழப்பட்ட ரத்னமயமான தீவில், கதம்ப மரங்கள் நிறைந்ததும், சிந்தாமணிகளால் அமைந்ததுமான அரண்மனையில், முக்கோண வடிவில் உள்ள கட்டிலில், பரமசிவனாகிய படுக்கை மீது அமர்ந்தவளும் ஞான ஆனந்த அலை போன்றவளுமாகிய உன்னை ஒரு சில புண்ணியவான்களே தியானம் செய்கிறார்கள்.
மணித்வீபத்தைப் பற்றி தேவி பாகவதம் 12ம் ஸ்கந்தத்தில் 10,11,12 அத்தியாயங்களில் மிக விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அதில் 12ம் அத்தியாயத்தில் சிந்தாமணி க்ரஹம் பற்றிய விவரம் பிரமிக்க வைக்கும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
நவரத்தின மணி பிராகாரத்திற்கு முன்பாக சிந்தாமணி க்ருஹம் இருக்கிறது. அது சிந்தாமணியினால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
சூர்யகாந்தக்கல், சந்திரகாந்தக்கல், மின்னல் போன்ற கல் ஆகியவைகளால் செய்யப்பட்ட தூண்களுடைய காந்தியினால் உள்ளே இருக்கும் வஸ்துக்கள் தெரியாமல் இருக்கும்.
அதன் மத்தியில் தேவீ ஸ்தானமாகிய ஆயிரங்கால் மண்டபம் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.
அம்மண்டபத்தினுடைய நான்கு பக்கத்தில் சிருங்கார மண்டபம், முக்தி மண்டபம், ஞான மண்டபம், ஏகாந்த மண்டபம் என்று நான்கு மண்டபங்கள் உண்டு.
அவைகள் நானாவிதமான நறுமணங்கமழும் தூபங்களோடும் கோடி சூரியர்களுக்குச் சமமான காந்தியோடும் பிரகாசித்துக் கொண்டிருக்கும். அம்மண்டபங்களில் நான்கு பக்கத்திலும் காஷ்மீரத் திரைகளிட்டும், மல்லிகை, குந்தம் இவைகளை வனம் போல் நிறைத்தும் அளவிறந்த கஸ்தூரியினால் திமிர்த்தும் வைத்திருக்கும்.
அம்மண்டபங்களைச் சூழ்ந்துள்ள தாமரைத் தடாகங்கள் ரத்னமிழைத்த படிகளோடும், அமிர்த ரசத்தோடும் சப்திக்கின்ற வண்டுகளோடும், அன்னம், காரண்டலம் இவைகளோடும் நிறைந்திருக்கும்.
முன் சொன்ன சிருங்கார மண்டபத்தில் ஜகதம்பிகை வீற்றிருப்பாள். அங்கு கணங்களாகிய தேவிகள் அநேகவிதமான கானங்களைப் பாடிக்கொண்டிருப்பார்கள். அதனை அங்குள்ளவரெல்லாம் கேட்டு மகிழ்வர்.
இரண்டாவதான முக்தி மண்டபத்தில் தேவி வீற்றிருந்து ஆத்மாக்களுடைய பாசத்தை மோசனம் செய்யும் விதத்தை எப்போதும் எண்ணிக்கொண்டிருப்பாள்.
மூன்றாவதான ஞான மண்டபத்தில் பாசமோசனத்துக்கான ஞானோபதேசம் செய்து கொண்டிருப்பாள்.
நான்காவதான ஏகாந்த மண்டபத்தில் ஜகத்தை ரக்ஷிக்கக்கூடிய சிந்தனையை மந்திரிணிகளோடு கூடிச் சிந்தித்திருப்பாள்.
இந்த நான்கு மண்டபத்தோடும் பிரகாசிக்கின்ற சிந்தாமணி க்ரஹத்தில் சக்தி தத்வாத்மகமாய் இருக்கின்ற பத்துப் படிகளோடு கூடிய மஞ்சம் ஒன்று உண்டு.
அதற்குக் கால்கள் பிரம்மா, விஷ்ணு, ருத்திரர், மகேஸ்வரர் என்று சொல்லப்பட்டவர்களாவர். பலகை சதாசிவர். அப்பலகையின் மீது மகாதேவர் புவனேசராகப் பிரகாசித்திருப்பள். இவ்வாறு தேவி நிஜலீலார்த்தமாக இரண்டு விதமாக அவ்விடத்தில் பிரகாசிப்பள்.
இப்படி விரிவாக மணித்வீபம் அத்தியாயங்கள் சிந்தாமணி க்ருஹத்தை விவரிக்கிறது.
அடுத்து ஶ்ரீ சக்ர ரகசியத்தைக் காண்போம்.
**