
Written by London Swaminathan
Post No. 16,392
Date uploaded in London – 11 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
351
அனுமனைத் தடுக்க சுரசை என்னும் அரக்கியை யார்
அனுப்பினர் ?
352
சுரசை என்ன சொல்லி அனுமனைத் தடுத்தாள் ?
353
சுரசையை அனுமன் எப்படி சமாளித்தான் ? அதன் மூலம் வால் மீகியும் கம்பனும் உலகிற்குக் கற்பிக்கும் பாடம் என்ன?
354
சுரசையை அனுமன் வெற்றிகொண்டதை விண்ணவர்கள் கொண்டாடியதை கம்பன் எப்படி அழகுபட வருணிக்கிறான்?
355
கம்ப ராமாயணத்தில் அனுமன் செய்த அடுத்த ஸ்டண்ட் காட்சி என்ன ?
356
அங்காரதாரகையை அனுமன் வென்றது எப்படி ?
357
இலங்கையைக் கண்ட அனுமன் ஆச்சர்யத்தில் மூழ்கிப்போய் என்ன நினைத்தான் ? இதுதான் சொர்க்கம்?
358
இலங்கையில் அரக்க மகளிர் எப்படி இருந்தனர் என்று கம்பன் புகழ்கிறான் ?
359
ராவணனைக் கம்பன் எப்படிப் புகழ்ந்த தள்ளுகிறான் ?
360
இலங்கையை ஏராளமான பாடல்களில் புகழும் கம்பனுக்கு ஏற்பட்ட மனக் குழப்பம் என்ன ?
xxxxxxxxxxxxxxxxxx
விடைகள்

351. அனுமன் இலங்கைக்குக் கடலைத் தாண்டிச் செல்லும்போது, அவனது ஆற்றலைச் சோதிப்பதற்காகத் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுரசை என்னும் நாகமாதா அரக்கி வடிவெடுத்து வழிமறித்தாள்
மூன்று உற்ற தலத்திடை முற்றிய துன்பம் வீப்பான்
ஏன்றுற்று வந்தான் வலி மெய்ம்மை உணர்த்து நீ ‘ என்று,
ஆன்றுற்ற வானோர் குறை நேர, அரக்கி ஆகித்
தோன்றுற்று நின்றாள், சுரசைப் பெயர்ச் சிந்தை தூயாள்.
***
352.நீ என்னுடைய பசிப்பிணி தீர்க்க வந்துள்ளாய். நீயே என் வாய்ப்பக்கம் வருக என்று சுரசை கூறினாள்
தீயேஎனல்ஆய பசிப்பிணி
தீர்த்தல்செய்தாய்
ஆயே விரைவுற்றெனை அண்மினை
வண்மை யாள!
நீயே இனிவந்துஎன் நிணம்கொள்
பிணங்குஎயிற்றின்
வாயே புகுவாய்; வழிமற்றிலை
வானின் என்றாள்.
(சுரசை அனுமனைநோக்கி) கொடைப் பண்புடையவனே!
நெருப்பே என்று கூறத்தக்க பசியாகிய நோயை நீக்க விரைவாக என்னைச் சார்ந்தாய்; இப்போது நீயே வந்து ஒன்றோடொன்று பின்னியிருக்கும் கோரைப்பற்களையுடைய வாயிலே நுழைவாயாக; ஆகாயத்தில் வேறு வழியில்லை என்று கூறினாள்.
***
353. நாம் குடும்ப வாழ்க்கையில் , அலுவலத்தில் , நீதி மன்றத்தில் எவ்வளவோ பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது; பிரச்சனை வளர வளர நாமும் அதைப்பெரிதாக எண்ணி எண்ணி பயப்படுவோம் அல்லது கவலைப்படுவோம். எதிரிகள் எதிர் பார்க்காத வகையில் திடீரென்று நாம் வேறு விதமாகத் தாக்கினால் பிரச்சனையிலிருந்து தப்பித்துவிடலாம் ; பல வழக்குகளில் கோர்ட்டுகளில் நமது தரப்பு வக்கீல் ஒரு கேள்வியைக் கேட்டு எதிரியை மடக்கி சிக்கவைப்பதைப் பார்க்கிறோம்; அனுமனும் சுரசை வாய் பெரிதாக ஆக வளர்ந்து எதிர்பார்க்காத நேரத்தில் அவள் வாயில் சிறிய உருவில் நுழைந்து அவள் மூச்சு விடும் ஒரு நொடிக்குள் வெளியே வந்து விடுகிறான்!
நீண்டான்உடனே சுருங்கா
நிமிர்வாள் வயிற்றின்
ஊண்தான் எனஉற்று ஓர் உயிர்ப்பு
உயிராதமுன்னர்
மீண்டான் அதுகண்டனர் விண்உறை
வோர்கள் எம்மை
ஆண்டான்வலன்என்றுஅலர் தூஉய் நெடிது
ஆசிசொன்னார்.
வளர்ந்துஉயர்ந்த அனுமன் சடக்கெனத் தன்னைச் சுருக்கிக் கொண்டு ஓங்கி வளர்ந்த சுரசையின் வயிற்றில் உணவு போலப் புகுந்து, அவள் ஒரு மூச்சு விடுவதற்கு முன் வெளி வந்தான்; தேவர்கள் அச் செயலைப் பார்த்தனர்; எம்மைப் பாதுகாக்க வந்த அனுமன் வல்லமை உடையவன் என்று மலர் தூவி நீண்ட ஆசி கூறினார்கள்.
அனுமனது சாதுர்யத்தையும் வல்லமையையும் இது உணர்த்தியமையால் தேவர்கள் மகிழ்ந்தனர்.
****
354. கீதங்கள் இசைத்தனர் கின்னரர்; கீதம் நின்ற
பேதங்கள் இயம்பினர் பேதையர்; ஆடல் மிக்க
பூதங்கள் தொடர்ந்து புகழ்ந்தன; பூசுரேசர்
வேதங்கள் இயம்பினர்; தென்றல் விருந்து செய்ய, 61
கின்னரர்கீதங்கள் – கின்னரர்கள்பாடல்களை; இசைத்தனர் –
பாடினார்கள் ; பேதையர் கீதம் நின்ற – மகளிர்கள் பாடல்கள் அமைந்த;பேதங்கள் இயம்பினர் – இசை விகற்பங்களைப் பாடினார்கள்; ஆடல்மிக்கபூதங்கள் – ஆடுதலிற் சிறப்புப் பெற்ற பூத கணங்கள்; தொடர்ந்து புகழ்ந்தன- விடாமற் போற்றின; பூசுரேசர் – பூலோக தேவர்களான அந்தணர்கள் வேதங்கள் இயம்பினர் – வேதங்களை ஓதினார்கள் தென்றல் வி்ருந்து செய்ய – இனிமையாக வீசியது தென்றல் காற்று
மந்தாரம் உந்து மகரந்தம் மணந்த வாடை
செந்தாமரை வாள் முகத்தில் செறி வேர் சிதைப்ப,
தம்தாம் உலகத்திடை விஞ்சையர் பாணி தள்ளும்
கந்தார வீணைக் களி செஞ் செவிக் காது நுங்க. 62
- மந்தாரம் உந்து மகரந்தம் மணந்த வாடை: கற்பக சோலையில் உள்ள மந்தார மலர்களிலிருந்து சிந்துகின்ற நறுமணம் மிக்க மகரந்தப் பொடிகளை அள்ளிக்கொண்டு வீசுகின்ற வாடைக் காற்று (தென்றல் காற்று). [
- செந்தாமரை வாள் முகத்தில் செறி வேர் சிதைப்ப: செந்தாமரை மலரைப் போன்ற ஒளி பொருந்திய முகத்தை உடைய வித்யாதரப் பெண்களின் முகத்தில் அரும்பிய வியர்வைத் துளிகளை மாற்றி இன்பம் அளிக்கிறது.
- விளக்கம்: அனுமன் வான்வழியே வேகமாகப் பறந்து செல்லும்போது, தேவருலகத்தில் வீசும் மந்தார மலர் மணம் கொண்ட குளிர்ந்த காற்று, அங்குள்ள பெண்களின் வியர்வையைப் போக்குவது போல, அனுமனின் களைப்பையும் வியர்வையையும் போக்கி வழிநெடுகிலும் விருந்து உபசரிக்கிறது என்று கம்பர் மிக அழகாகக் கற்பனை செய்துள்ளார். மேலும், இந்த வரியில் “மந்தாரம் – மகரந்தம் – மணந்த” என அடுத்தடுத்து வரும் சொற்கள் ‘சீர் எதுகை’ நயத்திற்குச் சிறந்த சான்றாக இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுகிறது
****
355. நிழல் மூலம் ஆட்களைப்பிடிக்கும் உலக மஹா அதிசயம்!
அங்காரத்தாரகை (ஸிம்ஹிகா) என்ற அரக்கி விஞ்ஞானம் கண்டுபிடிக்காத அற்புத ஆற்றல் படைத்தவள்; ஒருவருடைய நிழலைவைத்தே அந்த ஆளை இழுத்து விடுவாள்; இதுவரை எந்த விஞ்ஞானப் புதினத்திலும், புனைக் கதையிலும் இப்படிப்பட்ட அம்சம் விவாதிக்கப்பட்டதா என்பது கேள்விக்குறியே!
அவளை பார்த்து அனுமன் கேட்கிறான்:
4927. ‘சாயா வரம் தழுவினாய்; தழிய பின்னும்
ஓயா உயர்ந்த விசை கண்டும் உணர்கில்லாய்!
வாயால் அளந்து நெடு வான்வழி அடைத்தாய்!
நீ யாரை? என்னை இவண் நின்ற நிலை? ‘என்றான்.
· சாயா வரம் தழுவினாய்: (நீரின் மீது செல்லும் உயிரினங்களின்) நிழலைப் பற்றி இழுக்கும் வரம் பெற்றவள் போல இருக்கிறாய்.
· தழிய பின்னும் ஓயா உயர்ந்த விசை கண்டும் உணர்கில்லாய்: என்னைப் பற்றிப் பிடித்த பின்பும், ஓய்வில்லாமல் செல்கின்ற எனது பெருவேகத்தைப் பார்த்தும் நீ என் வலிமையை உணரவில்லை.
· வாயால் அளந்து நெடு வான் வழி அடைத்தாய்: பெரிய வாயைத் திறந்து ஆகாய வழியை அடைத்துவிட்டாய்.
· நீ யாரை? என்னை இவண் நின்ற நிலை?: நீ யார்? நான் இங்கே நின்றுகொண்டிருக்கும் நிலை என்னவென்று உனக்குத் தெரியவில்லை என்று அனுமன் அவளிடம் வினவுகிறான்.
****
356 அநுமன் அங்காரதாரையின் வாயுள் புக்கு வயிற்றினைக் கிழித்து வெளிப்படல்
4929. திறந்தாள் எயிற்றை அவள்! அண்ணல் இடை சென்றான்!
அறந்தான் அரற்றியது! அயர்த்து அமரர் எய்த்தார்!
இறந்தான் எனக்கொடு; ஒர் இமைப்பதனின் முன்னம்
பிறந்தான்! எனப் பெரிய கோளரி பெயர்ந்தான்!
அனுமனைப் பிடிப்பதற்காக அங்காரதாரை, தன் வாயைத் திறந்தாள். அவளது வாய்க்குள் அனுமன் புகுந்தான். அவளுடைய வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்தான்.
• திறந்தாள் எயிற்றை அவள்! – தன் பற்கள் தெரியுமாறு வாயைப் பெரிதாகத் திறந்தாள்.
• அண்ணல் இடை சென்றான்! – பெருமையில் சிறந்தவனான அனுமன் , அந்த வாயின் நடுவே புகுந்து சென்றான்.
• அறந்தான் அரற்றியது! – இதைக் கண்டு தர்மதேவதையே ஐயோ என்று பயந்து கதறியது.
• அயர்த்து அமரர் எய்த்தார்! – வானத்தில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள் அனைவரும் பயத்தால் சோர்ந்து, செய்வதறியாது திகைத்துப் போனார்கள். அனுமன் கதை முடிந்தது என்று அவர்கள் அஞ்சினர் ஆனால் அனுமனோ ஒரு இமைப்பொழுதில் சிங்கம் போல வெளியே வந்தான்.
****
357.இலங்கையைக் கண்ட அனுமனின் வியப்பு! இதுதான் சொர்க்கம்!
4940. ‘மாண்டது ஓர் நிலத்திற்றாம் ‘என்று
உணர்த்துதல் வாய்மைத்து அன்றால்!
வேண்டிய வேண்டின் எய்தி
வெறுப்பு இன்றி விழைந்த துய்க்கும்
ஈண்டு அரும் போக இன்பம்
ஈறு இலது, யாண்டுக் கண்டாம்,
ஆண்டு அது துறக்கம்! அஃதே
அருமறைத் துணிவும், அம்மா!
“இலங்கை என்பது அழியக்கூடிய (மண்ணுலகைச் சேர்ந்த) ஒரு நிலப்பகுதி என்று கூறுவது உண்மையானது அல்ல. ஒருவர் தான் விரும்பியவற்றை விரும்பியவாறே பெற்று, எவ்வித வெறுப்பும் சலிப்பும் இல்லாமல் ஆசையோடு அநுபவிக்கக்கூடிய எல்லையற்ற போக இன்பங்கள் நிறைந்த இடமாக இது இருக்கிறது. இப்படிப்பட்ட அரிய இன்பங்களை வேறெங்கும் நாம் காண முடியாது; எனவே, இதுவே தேவர்கள் வாழும் ‘துறக்கம்’ (சொர்க்கம்) ஆகும். அரிய வேதங்களின் முடிவும் இதுவேயாகும்!”
உட்புலம்எழுநூறு என்பர்
ஓசனை;உலகம் மூன்றில்
தெட்புறுபொருள்கள் எல்லாம்
இதனுழைச்செறிந்த என்றால்
நுட்புலம் நுணங்குகேள்வி
நுழைவினர்எனினும் நோக்கும்
கட்புலம்வரம்பிற் றாமே ?
காட்சியும்கரையிற் றாமே ?
இலங்கையில்மூன்று உலகப் பொருள்களும் அடங்கியிருக்கிறது என்றால் (அவ்விலங்கை) கட்புலனுக்கு அடங்குமா ? அறிவின் எல்லைக்குள் அடங்குமா?
(இலங்கையின்) நகர்ப் பகுதி 700 யோசனை என்று கூறுவார்கள்; மூன்று உலகங்களிலும் உள்ள சிறப்புடைய பொருள்கள் யாவும் உள்ளன. நுண்மையான அறிவும், நுட்பமான கேள்வியும் பெற்ற அறிவாளிகள் என்றாலும் அறிவின் எல்லைக்குள் அடங்குமா ?; காணும் அறிவும் எல்லைக்குள் அடங்குமா.?
****
358.இலங்கையில் அரக்க மகளிர்
குழலும் வீணையும் யாழும் என்று இனையன குழைய
மழலை மென்மொழிகிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர்
சுழலும் நல்நெடுந்தடமணிச் சுவர்தொறும் துவன்றும்
நிழலும்தம்மையும் வேற்றுமை தெரிவு அரு நிலைய
குழலும் வீணையும்யாழும் என்று இனையன குழைய – குழல்
வீணை யாழ் என்று கூறப்படுகின்ற இப்படிப்பட்ட இசைக் கருவிகள் தோற்கடிக்கும் வகையில் மென் மழலை மொழி – மென்மையான மழலைச் சொற்களை; இருந்து – வீற்றிருந்து; கிளிக்கு அளிக்கின்ற மகளிர் – கிளிகட்குச்சொல்லிக் கொடுக்கும் பெண்கள்; சுழலும் – சுற்றிலும் உள்ள; நெடும் நல் – பெரிய நல்ல; தடமணி சுவர்தொறும் – பெரிய மணிகள் பதிக்கப்பெற்ற மாடங்களில் இருந்தனர்; துவன்றும் நிழலும் – நிழலையும்; தம்மையும் –தங்களையும்; வேற்றுமை தெரிவு அரு நிலைய – வேறுபாடு உணரமுடியாத காட்சி அது .(பெண்கள் தம்மையும் தம்முடைய நிழலையும் பிரித்து அறிய முடியாதபடி இருந்த மாடங்கள்).
****
359.ராவணனைக் கம்பன் புகழும் பாடல்
4844.
தேவர்என்பவர் யாரும் இத்திரு நகர்க்கு இறைவற்கு
ஏவல் செய்பவர்,செய்கிலாதவர் எவர் என்னின்,
மூவர் தம்முளும் ஒருவன் அங்கு உழையனா முயலும் !
தாவில் மாதவம்அல்லது பிறிதொன்று தகுமோ ?
இந்த இலங்கைஅரசனுக்கு தேவர்கள் அடிமை வேலை செய்கிறார்கள். மும்மூர்த்திகளில் ஒருவனாகிய பிரமதேவன் அந்த பணிசெய்பவனாக முயல்கின்றான்; பெருந்தவம் அல்லது வேறு ஒன்று செய்தற்குத் தகுதியுடையது ஆகுமோ.
தேவரும் பிரமதேவனும் ஏவல் வேலை செய்வதால், தவத்தால் எதையும் பெறலாம் என்பது விளங்கும்
***
360.பிரம்மனைப் புகழ்வதா? மயனைப் புகழ்வதா? ராவணனைப் புகழ்வதா? தவத்தைப் புகழ்வதா? தெரியவில்லையே!
4852.
தெய்வத்தச்சனைப் புகழ்துமோ ? செங்கண்வாள்
அரக்கன்
மெய்ஒத்துஆற்றிய தவத்தையே வியத்துமோ ?
விரிஞ்சன்
ஐயப்பாடு இலாவரத்தையே மதித்துமோ ? அறியாத்
தொய்யல்சிந்தையேம், யாவரை யாதென்று துதிப்போம்.
தெய்வத்தச்சனைப புகழ்துமோ ? – (இந் நகரை அமைத்த)
தேவசிற்பியைப் புகழ்வோமா..?; செங்கண்வாள் அரக்கன் – சிவந்த
கண்களையும் வாளையும் பெற்ற இராவணன்; மெய் ஒத்து – சத்தியத்துடன் ஒன்றுபட்டு; ஆற்றிய – செய்த; தவத்தையே – தவம் ஒன்றையே;வியத்துமோ – மதிப்போமா? விரிஞ்சன் – பிரம்மதேவன் (வழங்கிய); ஐயப்பாடு இலா – சந்தேகத்துக்கு இடம் இல்லாத; வரத்தையே – வரத்தைமட்டும்; மதித்துமோ – மதிப்போமா? அறியா – (ஒன்றைத் தேர்ந்துபுகழ்வதை) அறியாத; தொய்யல் சிந்தையேம் – தளர்ந்த மனத்தைப் பெற்றயாம்; யாவரை – தச்சன், பிரம்மன் – இராவணன் என்னும் இவருள் எவரை; யாதென்று – எவ்வாறு; துதிப்போம் – புகழ்வோம்.
–சுபம்—
TAGS –கம்ப ராமாயணத்தில் 360 கேள்விகள்!, சுரசை, அங்காரதாரை, ராவணன், இலங்கை பெருமை