
Written by London Swaminathan
Post No. 16,397
Date uploaded in London – 12 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கம்ப ராமாயணத்தில் மொத்தமுள்ள பத்தாயிரம் பாடல்களில் பாதியை முடித்துவிட்டோம்; சுவையான, செல்வம் நல்கும் சுந்தர காண்டத்தை மேலும் பாராயணம் செய்வோம் ; முந்தைய கேள்விகளும் பதில்களும் என்னுடைய இரண்டு பிளாக்குகளிலும் எப்போதும் கிடைக்கும்.
361
இலங்கை முழுதும் கேட்ட வீணை ஒலியில் கடல் ஓசை அடங்கிவிட்டதாமே ; உண்மையா ?
362
அரக்கர்களுக்கு எப்படி இவ்வளவு பலம் கிடைத்தது?
363
இலங்கையில் மாலைநேரத்துக்குப் பின் இருள் கவ்வியது ; இது எல்லா இடங்ககளிலும் நடப்பதுதான் ;இதற்குக் கம்பன் சொல்லும் நல்ல உவமைகள் என்ன ?
364
அனுமன் சிந்தனையில் ஒடிய இந்தப்பாடலின் பொருள் புரிகிறதா ?
5014. ‘கருங்கடல் கடப்பது அரிது அன்று : இநகர் காவல்
பெருங்கடல் கடப்பது அரிது! எண்ணம் இறை பேரின்
அருங்கடன் முடிப்பது அரிதாம்! அமர் கிடைப்பின்
நெருங்கு அடல் விளைப்பர் நெடுநாள்! ‘என நினைந்தான்.
365
இலங்கையில் அனுமன் சந்தித்த முதல் எதிரியின் தோற்றம் எப்படி இருந்தது ?
366
அநுமனை இலங்காதேவி எப்படி மிரட்டினாள்?
367
I AM A TOURIST! WHAT IS YOUR PROBLEM?—HANUMAN.
நான் ஒரு டூரிஸ்ட் ; இலங்கையைச் சுற்றிப்பார்க்க வந்தேன் ! இதில் உனக்கு என்ன கஷ்டம்? நஷ்டம்? என்று அனுமன் சொன்னானா ?
368
பெண்ணைக் கொல்வது பாவம் என்று கருதிய அனுமன் லங்காதேவியை எப்படி சமாளித்தான்?
369
அறம் வெல்லும் பாவம் தோற்கும்என்று சொல்லி இலங்கைக்குள் செல்ல அனுமனை இலங்காதேவி அனுமதித்தது ஏன் ?
370
இலங்கை நகருக்குள் புகுந்த அனுமன், சீதையைத் தேடிய இடங்கள் யாவை ?

XXXXXXXXXXXX
விடைகள்
361எங்கும் வீணா கானம் ; அதுதான் இலங்கை !
.மகரவீணையின் மந்தர கீதத்து மறைந்த,
சகர வேலையின்ஆர்கலி; திசைமுகம் தடவும்
சிகர மாளிகைத்தலம்தொறும் தெரிவையர் தீற்றும்
அகரு தூமத்தின்அழுந்தின முகிற்குலம் அனைத்தும்.
மகர வீணையின் –மகரவடிவாய் அமைந்த வீணையில் தோன்றிய, மந்தர கீதத்து – மென்மையான கீதத்தினாலே; சகரவேலையின் – சகரரால் தோண்டப்பெற்ற கடலினுடைய; ஆர்கலி மறைந்த – பேரொலி மறைந்துவிட்டது. திசை முகம் தடவும் – நான்கு திசைகளையும் தடவுகின்ற; சிகரம் – விமானங்களைப் பெற்ற; மாளிகைத் தலம் தொறும் – மாளிகையின்இடங்கள் தோறும்; தெரிவையர் தீற்றும் – பெண்கள் புகைக்கின்ற; அகருதூமத்தின் – அகிலின் புகைப்பரப்பில்; முகில் குலம் அனைத்தும் – எல்லாமேகக் கூட்டங்களும்; அழுந்தின – மறைந்து விட்டன.
கீதத்தில் கடல்ஒலி அடங்கிவிட்டது. அகிற்புகையில் மேகங்கள் மறைந்தன. மந்தரம் – மெல்லோசையாற் பாடுதல்
****
362. சிவனிடமும் பிரம்மாவிடமும் அரக்கர்கள் பெற்ற வரங்கள்!
“காயத்தால் பெரியர்; வீரம் கணக்கு இலர்; உலகம் கல்லும்
ஆயத்தார்; வரத்தின் தன்மை அளவு அற்றார்; அறிதல் தேற்றா
மாயத்தார்; அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமே? மற்றோர்
தேயத்தார் தேயம் சேர்ந்தால், தேர்விலார் செருவிற் சேறல்!”
சீதையைத் தேடி இலங்கை சென்ற அனுமன், அங்குள்ள அரக்கர்களின் உடல் வலிமையையும் பிரம்மாண்டமான கோட்டைகளையும் பார்த்து வியந்து சிந்திப்பதாகக் கம்பர் இப்பகுதியை அமைத்துள்ளார்.
• காயத்தால் பெரியர்: அரக்கர்கள் அனைவரும் மலை போன்ற பிரம்மாண்டமான உடலமைப்பைக் கொண்டவர்கள்.
• வீரம் கணக்கு இலர்: அவர்களின் போர்க்கள வீரத்திற்கு அளவே இல்லை.
• உலகம் கல்லும் ஆயத்தார்: நினைத்தால் இந்த உலகத்தையே அப்படியே பெயர்த்து எடுக்கக்கூடிய பெரும் ஆற்றல் படைத்த கூட்டத்தினர் அவர்கள்.
• வரத்தின் தன்மை அளவு அற்றார்: பிரம்மன், சிவன் போன்ற தேவர்களிடம் அவர்கள் பெற்ற வரங்களின் வலிமையோ எல்லையற்றது.
• அறிதல் தேற்றா மாயத்தார்: யாராலும் எளிதில் கண்டறிய முடியாத அளவுக்குப் மாய வித்தைகளில் வல்லவர்கள்.
இவ்வளவு பேராற்றலும், வரங்களும், மாய சக்திகளும் கொண்ட அரக்கர்களுக்கு அழிவு என்று ஒன்று உண்டா? அப்படிப்பட்டவர்களின் தேசத்திற்கு (இலங்கைக்கு) வந்து, அவர்களின் பலத்தை ஆராய்ந்து அறியாமல் அவர்களோடு நேருக்கு நேர் போரிடத் துணிவது விவேகமற்ற செயலாகும் என்று அனுமன் அரக்கர்களின் வலிமையை எண்ணி வியக்கிறார்.
***
363. இலங்கையில் இருள்பரவுதல்
முயற்சியால் செல்வம் பெற்று முறை பிறழ்ந்தவனின் தீச்செயல் போல் இருள் செறிந்தது
ஏய்வினைஇறுதியில் செல்வம் எய்தினான்
ஆய்வினை மனத்துஇலான், அறிஞர் சொற்கொளான்
வீவினைநினைக்கிலான், ஒருவன் மெய்இலான்
தீவினை என இருள்செறிந்தது எங்குமே.
தகுதியுடையதவமுயற்சியால் செல்வத்தை அடைந்தவனும்
உள்ளத்தில் ஆராய்வதைப் பெற்றிராதவனும்; அறிஞர்களின் அறிவுரையை மதியாதவனும் தனக்கு வரும் மரணத்தை நினையாதவனும் – சத்தியப் பற்றில்லாதவனும் (ஆகிய) ஒரு மனிதனுடைய தீச்செயல்கள் போல எல்லா இடத்திலும்
இருளானது அடர்ந்து பரவிற்று.
****
364.கடலைக்கூ டக் கடந்து விடலாம் ; இலங்கையின் காவலைக் கடப்பது கடினமே! அதி பயங்கர செக்யூரிட்டி! Tight Security!
அனுமன் இலங்கை மாநகரின் பாதுகாப்பைக் கண்டு இவ்வாறு சிந்திக்கிறான்:
- கருங்கடலைக் கடப்பது எளிது. ஆழமான இந்தக் கடலைத் தாண்டி வருவது எனக்கு ஒரு பெரிய செயலல்ல.
- நகரக் காவலே உண்மையான கடல். ஆனால், இந்த இலங்கை நகருக்குப் போடப்பட்டுள்ள பாதுகாப்பு அரண்கள் என்னும் பெரிய கடலைத் தாண்டிச் செல்வதே மிகவும் கடினமான செயலாகும்.
- கவனம் சிதறினால் கடமை கெடும். என்னுடைய அறிவும் நிதானமும் சிறிதளவு பிறழ்ந்தாலும், சீதாப்பிராட்டியைத் தேடிக் கண்டுபிடிக்கும் அரிய கடமையை நிறைவேற்றுவது இயலாமல் போய்விடும்.
- போர் மூண்டால் காலம் நீளும். ஒருவேளை இவர்களுடன் இப்போதே போர் மூண்டுவிட்டால், அரக்கர்கள் நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து கடுமையான போரைச் செய்வார்கள்
***
365.இலங்கையில் அனுமன் சந்தித்த முதல் எதிரி:
எட்டுத்தோளாள், நாலு முகத்தாள்; உலகு ஏழும்
தொட்டுப் பேரும்சோதி நிறத்தாள்; சுழல்
கண்ணாள்;
முட்டிப்போரில், மூவுலகத்தை முதலோடும்
கட்டிச் சீறும்காலன் வலத்தாள்; கமை இல்லாள்.
எட்டுத்தோள்களையுடையவளும் நான்கு முகத்தையுடையவளும்; ஏழு உலகத்தையும் தீண்டி, ஒளியைப் பெற்ற மார்பை உடையவள். எல்லாப் பக்கத்திலும் சுழல்கின்ற கண்களையுடையவள் ; முட்டி யுத்தத்தில் மூன்று உலகங்களையும் புரட்டி அடிப்பாள்; கோபத்தில் யமன் போன்றவள்; பொறுமையற்றவள் அந்த லங்காதேவி (லங்கிணி). முட்டிப்போர் – முஷ்டி யுத்தம்
அவள் கைகளில் இருந்த ஆயுதங்கள்
5019. வேல், வாள், சூலம், வெம்கதை,
பாசம், மிளிர்சங்கம்,
கோல், வாள், சாபம், கொண்ட
கரத்தாள்…………………….
****
366. அநுமனை நோக்கி இலங்காதேவி கூறுவது
5023. ‘ஆகா செய்தாய்! அஞ்சலை
போலும்? அறிவு இல்லாய்!
சாகா மூலம் தின்று உழல்வார்மேல்
சலம் என்னாம்?
பாகு ஆர் இஞ்சிப் பொன்மதில்
தாவிப் பகையாதே!
போகாய்! ‘என்றாள், பொங்கு அழல்
என்னப் புகை கண்ணாள்.
• ஆகா செய்தாய்! அறிவு இல்லாய்!. “அறிவில்லாதவனே! செய்யத் தகாத (அகாத) செயலைச் செய்துவிட்டாய்!” என்று இலங்காதேவி அனுமனைக் கடிந்து கொள்கிறாள்.
• அஞ்சலை போலும்?. “நீ கொஞ்சமும் பயப்படவில்லை போலும்?” என அனுமனின் துணிச்சலைக் கண்டு சினத்துடன் வினவுகிறாள்.
• சாகா மூலம் தின்று உழல்வார்மேல் சலம் என்னாம்?. “சாகா வரம் தரும் மூலிகைகளை உண்டு திரியும் அரக்கர்கள் மீது (உன் போன்ற குரங்கின்) கோபம் என்ன செய்துவிட முடியும்?” என்று இலங்கையின் வலிமையைக் கூறி எச்சரிக்கிறாள்.
• பாகு ஆர் இஞ்சிப் பொன் மதில் தாவிப் பகையாதே; போகாய் என்றாள். “வலிமையான பொன் மதிலைத் தாண்டி உள்ளே வந்து எங்களோடு பகைமை கொள்ளாமல், இங்கிருந்து திரும்பிப் போய்விடு” என்று நெருப்பைப் போலக் கண்கள் சிவக்கக் கோபத்துடன் கூறுகிறாள்.
***
367. ஆமாம்; தன்னை ஒரு சுற்றுலாப் பயணி என்று அனுமன் சொல்லிக்கொண்டான்!
களியா உள்ளத்து அண்ணல், மனத்தில் கதம் மூள
விளியாநின்றே, நீதி நலத்தின் வினை ஓர்வான்,
‘அளியான் இவ் ஊர் காணும் நலத்தால் அணைகின்றேன் :
எளியேன் உற்றால், யாவது உனக்கு இங்கு இழவு?’என்றான்.
• களியா உள்ளத்து அண்ணல்: செருக்கு (ஆணவம்) இல்லாத உள்ளத்தைக் கொண்ட பெருமையுடைய அனுமன்.
• மனத்தில் கதம் மூள விளியாநின்றே: (இலங்காதேவி தன்னை இகழ்ந்து பேசியதால்) மனத்தில் கோபம் மூண்டு எழும்படி நின்றுகொண்டே.
• நீதி நலத்தின் வினை ஓர்வான்: நீதி நெறிக்கு ஏற்ற நன்மையான செயலின் பயனை ஆராய்ந்து அறிபவனாகிய அனுமன்.
• அளியான்: வலிமையற்றவன் (அல்லது இரங்கத்தக்கவன்).
• இவ் ஊர் காணும் நலத்தால் அணைகின்றேன்: இந்த இலங்கை மாநகரின் அழகைக் காண வேண்டும் என்ற ஆசையினால் உள்ளே வருகிறேன்.
• எளியேன் உற்றால்: எளியவனாகிய நான் இவ்வூருக்குள் வந்தால்.
• யாவது உனக்கு இங்கு இழவு என்றான்: உனக்கு இங்கே என்ன நஷ்டம் (இழப்பு) ஏற்பட்டுவிடப் போகிறது? என்று கேட்டான்.
****
368
368.பெண்ணைக் கொல்வது பாவம் !
“அடியா முன்னம், அங்கை அனைத்தும் ஒரு கையால்
பிடியா, ‘என்னே? பெண் இவள்! கொல்லில் பிழை!’ என்னா
ஒடியா நெஞ்சத்து ஓரடி கொண்டான்; உயிரோடும்,
இடியேறு உண்ட மால்வரை போல், மண்ணிடை வீழ்ந்தாள்.”
• பின்னணி: சீதையைத் தேடி இலங்கைக்குள் நுழைய முயன்ற அனுமனை, இலங்கையின் காவல் தெய்வமான இலங்காதேவி தடுத்து நிறுத்திப் போரிட்டாள். அவள் வைத்திருந்த ஆயுதங்களை அனுமன் முறித்து எறிந்ததால், சினம் கொண்ட அவள் தன் கைகளால் அனுமனை அடிக்க ஓங்கினாள்.
• அனுமனின் செயல்: அவள் தன்னை அடிப்பதற்கு முன்பாகவே, அனுமன் அவளது அனைத்துக் கைகளையும் தனது ஒரே கையால் இறுகப் பற்றிக்கொண்டார்.
• அறம் காத்தல்: ‘இவள் ஒரு பெண் ஆயிற்றே, இவளைக் கொல்வது பாவம் (பிழை)’ என்று கருதிய தளராத மனமுடைய அனுமன், அவளைக் கொல்லாமல் தன் கையால் ஓர் அடி மட்டும் அடித்தார்.
• முடிவு: அனுமன் அடித்த அந்த ஓரடியின் வேகத்தைத் தாங்க முடியாமல், இடி விழுந்த பெரிய மலை சாய்வது போல இலங்காதேவி உயிரோடு பூமியில் சுருண்டு விழுந்தாள்.
****
369. அறம் வெல்லும் பாவம் தோற்கும்
லங்காதேவி கீழே விழுந்தவுடன் தன்னுடைய வரலாற்றினை அனுமனிடம் சொல்லி உள்ளே செல்ல அனுமதித்தாள். அவள் முன்பு பிரம்மதேவரின் இருப்பிடத்திற்குக் காவலராக இருந்தார். தன் வலிமையால் ஏற்பட்ட ஆணவம் காரணமாகப் பிரம்மனின் சாபத்தைப் பெற்று, இலங்கை நகரைக் காவல் காக்கும் பொறுப்பிற்குத் தள்ளப்பட்டார். எப்போது சாப விமோசனம் என்று வினவியபோது ஒரு குரங்கு உன்னைத் தோற்கடிக்கும் நாளில் உனக்கு சாப விமோசனம்; அப்போது இலங்கைக்கும் அழிவு ஏற்படும் என்று பிரம்மன் கூறியிருந்தார் . அனுமனிடம் தோற்றவுடன் அவளுக்கு இது நினைவுக்கு வந்தது; தர்மம் வெல்லட்டும் என்று சொல்லி அனுமனை உள்ளே அனுமதித்தாள்
5036. ‘அன்னதே முடிந்தது, ஐய!
அறம் வெல்லும் பாவம் தோற்கும்,
என்னும் ஈது இயம்ப வேண்டும்
தகையதோ? இனி, மற்று, உன்னால்
உன்னிய எல்லாம் முற்றும்!
உனக்கும் முற்றாதது உண்டோ?
பொன் நகர் புகுதி! ‘என்று
புகழ்ந்தனள், இறைஞ்சிப் போனாள்.
புராணங்களின்படி, இவர் ஐந்து வண்ணங்கள் கொண்ட (பஞ்ச வர்ண) ஆடையை அணிந்து வானவில் போலக் காட்சியளிப்பவர் எனக் கூறப்படுகிறது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில் இவர் லங்கேஸ்வரி என்ற பெயரில் காவல் தெய்வமாக வழிபடப்படுகிறார்
***
370
இலங்கை நகருக்குள் புகுந்த அனுமன் சீதையைத் தேடிய இடங்களின் பட்டியல் :
5042. ஆத் துறு சாலை தோறும்,
ஆனையின் கூடம் தோறும்,
மாத் துறு மாடம் தோறும்,
வாசியின் பந்தி தோறும்,
காத் துறு சோலை தோறும்,
கரும் கடல் கடந்த தாளான்,
பூத்தொறும் வாவிச் செல்லும்
பொறிவரி வண்டில், போனான்.
• ஆத் துறு சாலை: பசுக்கள் நிறைந்த கொட்டில்கள் (தொழுவங்கள்).
• ஆனையின் கூடம்: யானைகள் கட்டப்பட்டிருக்கும் கூடங்கள்.
• மாத் துறு மாடம்: பெருமை மிக்கவர்கள் தங்கும் மாட மாளிகைகள்.
• வாசியின் பந்தி: குதிரைகள் வரிசையாகக் கட்டப்பட்டிருக்கும் லாயங்கள்.
• காத் துறு சோலை: சோலைவனங்கள் (பூங்காக்கள்).
• கருங்கடல் கடந்த தாளான்: கரிய கடலைத் தாண்டி வந்த திருவடிகளை உடைய அனுமன்.
• பொறிவரி வண்டு: புள்ளிகளும் கோடுகளும் கொண்ட வண்டு.
இவ்வாறு ஒவ்வொரு இடமாக அவன் தேடிச் சென்ற காட்சியானது, ஒவ்வொரு மலராகத் தாவித் தேனைத் தேடிச் செல்லும் புள்ளிகளும் வரிகளும் கொண்ட வண்டைப் போல இருந்தது என்று கம்பர் உவமித்துக் கூறுகிறார்.

—SUBHAM–
TAGS- லங்காதேவியுடன் மோதல், சீதையைத் தேடிய இடங்கள், கம்ப ராமாயணத்தில் 370 கேள்விகள்!