
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,413
Date uploaded in London –21 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
த்ரிபுராதாபின்யுபநிஷத் விளக்கும் ஶ்ரீ சக்ர ரகசியம்!
ச. நாகராஜன்
108 முக்கிய உபநிடதங்களில் ஒன்றான த்ரிபுராதாபின்யுபநிஷத் பல ரகசிய மந்திரங்களை விளக்குகிறது.
இதை நல்ல சத்குரு வாயிலாகவே முற்றிலும் உணர்தல் வேண்டும்.
என்றாலும் இதில் கூறியுள்ள விஷயங்களை மிகச் சுருக்கமாக இங்கு காணலாம்.
தமிழில் விரிவாக அர்த்தத்தைப் படிக்க விரும்புபவர்கள். ஶ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை, 600004 வெளியிட்டுள்ள 108 உபநிஷத் சாரம் என்ற நூலை வாங்கிப் படிக்கலாம். (இது மூன்று பாகங்கள் கொண்டது. மூன்றாம் பாகத்தில் த்ரிபுராதாபின்யுபநிஷத்தின் விளக்கத்தைக் காணலாம்.)
இதன் உரையாசிரியர் ஶ்ரீ அண்ணா ஆவார்.
ப்ரதமோபநிஷத், த்விதீயோபநிஷத், த்ரூதீயோபநிஷத், சதுர்த்தோபநிஷத், பஞ்சமோபநிஷத் என்று ஐந்து பகுதிகளைக் கொண்டது இது.
ப்ரதமோபநிஷத்
காயத்ரீ மந்திரமும், துர்க்கா மந்திரமும், ம்ருத்யுஞ்சய மந்திரமும் சேர்ந்து (24+44+32) நூறு எழுத்துக் கொண்ட சதாக்ஷரீ மந்திரமாகிறது. முப்புர வடிவான உத்தம வித்தையும், அஷ்டாக்ஷரியும், த்ரிபுரா பரமேஸ்வரியும் இதில் அடக்கம்.
த்விதீயோபநிஷத்
தேவர்கள் மகா சக்ர நாயகத்தைப் பற்றி விளக்குமாறு சிவபிரானை வேண்ட அவரும் அப்படியே விளக்குவதாக அனுக்ரஹித்தார்.
ஶ்ரீ சக்ரத்தில் ஓங்கார பீடத்தைப் பூஜித்து அதில் அழிவற்ற பிந்து ரூபத்தில் அடங்கியுள்ள பாமாகாச வடிவினளான ஶ்ரீ வித்யா ரூபிணியை தியானித்து மகாத்ரிபுரசுந்தரியை ஆவாஹனம் செய்து பாலாபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு வில்வத்தால் அர்ச்சனை செய்து லக்ஷ்மி தந்திரத்தில் கூறியபடி பூஜை செய்ய வேண்டும்.
த்ரூதீயோபநிஷத்
பகவான் முத்திரைகளை விவரித்து அதன் பயன்களை அடைவதைப் பற்றி விளக்குகிறார்.
சதுர்த்தோபநிஷத்
தேவர்கள் அனைவரும் ம்ருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசிக்குமாறு சிவபிரானை வேண்ட அவர் இதை விளக்குகிறார்.
பஞ்சமோபநிஷத்
தேவர்கள் குறியும், குணமுமற்ற பரம்பொருளைக் கூறுமாறு வேண்ட சிவபிரான் அதை விளக்குகிறார்.
தீர்க்காயுளையும், பிரஜைகளை பரிபாலிக்கும் திறமையையும், செல்வத்தையும், முக்தியையும் அளிக்கும் மந்திரங்களின் விளக்கங்களை இந்த உபநிடதத்தில் காணலாம்.
தேவியின் அருளால் அம்ருதத்வத்தை அடைவர் என்பது இந்த உபநிடதம் கூறும் முக்கிய ரகசியமாகும்.
**