

Written by London Swaminathan
Post No. 16,419
Date uploaded in London – 23 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

451
இலங்கை பற்றி எரிகிறது ; உலோகங்கள் உருகியதிலும் என்ன தத்துவத்தைக் கம்பன் போதிக்கிறான் ?
452
RAVANA USED EMERGENCY AIRPLANE TO ESCAPE FROM PALACE FIRE
ராவணன் எமர்ஜென்சி விமானத்தில் எஸ்கேப் ஆனது பற்றி கம்பன் என்ன செப்பினான் ?
453
இராவணன் கேட்டான் உலகம் அழியும் ஊழிக்காலம் வந்துவிட்டதா? அரக்கர்கள் என்ன பதில் இயம்பினர்?
454
இதே நேரத்தில் டைரக்டர் கம்பன், காமெராவை அசோகவனம் பக்கம் திருப்பி , நமக்கு காட்டும் காட்சி என்ன ?
455
தேவர்கள் ஒரு அதிசயக் காட்சி பற்றி என்ன பேசிக்கொண்டார்கள் ?
456
இலங்கைக்குப் போகும்போது மைனாக மலைக்கு அனுமன் கொடுத்த வாக்குறுதியை திரும்பிச் செல்கையில் நிறைவேற்றினானா ?
457
அநுமனைக் கண்ட வானர சேனையினர் எப்படி மகிழ்ந்தார்கள்?
458
வெற்றிச் செய்தி கிட்டியதால் வானரங்களுக்குப் பரிசு மது ! அதைக் கம்பன் ஏராளமான பாடல்களில் பாடுகிறான் ; ஒரு பாடலைக் காண்போமா ?
459
இது ஒருபுறமிருக்க சுக்ரீவனிடம் ராமன் புலம்பியது என்ன?
460
தென் திசையில் உதித்த அதிசய சூரியன் பற்றி கம்பன் சொல்லும் வியப்பான செய்தி என்ன?
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX


விடைகள்
451.படைக்கலச்சாலையின் அழிவு! ஒரு தத்துவப்பாடல்!
வில்லும், வேலும், வெங் குந்தமும் முதலிய விறகாய்
எல்லுடைச் சுடர்எனப் புகர் எஃகு எலாம் உருகி,
தொல்லை நல்நிலை தொடர்ந்த, பேர் உணர்வு
அன்ன தொழிலால்
சில்லி உண்டையின் திரண்டன படைக்கலச் சாலை.
மீண்டும் ஒரு அத்வைதக் கருத்தினைக் கம்பன் நம் முன்னால் வைக்கிறான் .ஆயுதசாலைகளில் உள்ள விற்கள், வேல்கள் , ஈட்டிகள் முதலியவற்றில் இருந்த மரப்பகுதிகள் விறகுகளாய் அமைய ஆயுத வடிவம் பெற்ற இரும்புகள் எல்லாம் அத்தீயில் உருகி ஒன்றாயின. இது தமது பழைய உயர் நிலையை நாடிச் சென்ற பெரிய ஆத்ம ஞானிகள் போல இருக்கிறது .
தனித்தனி ஆயுதவடிவில் இருந்த இரும்புகள் அனைத்தும், நெருப்பில் உருகி, ஒன்றாகச் சேர்ந்து, ஒரு சிறு உருண்டையாயிற்று. இதனை விளக்க வந்த உவமை தத்துவக் கருத்தைத் தாங்கியது. ஆயுதங்களின் தொல்லை/ பழைய நிலை இரும்பு. அனுமன் இட்ட தீயால், அவை உருகியதும் பழைய இரும்புத் துண்டாகத் திரண்டன. ஆத்ம ஞான உணர்வு தோன்றுவதற்கு முன்பு பல்வேறுபட்ட தோற்றம்; அவ்வுணர்வுக்குப் பின்பு, எல்லா வேற்றுமையும் மறைந்து ஒன்றாகவே காண்பது. இது, தொல்லை/பழைய நல்நிலை தொடர்ந்த பேர் உணர்வு எனப்பட்டது.
ராம கிருஷ்ண பரமஹம்சரும் இதைத் தண்ணீருக்கு உள்ள வெவ்வேறு பெயர்களைச் சொல்லியும் ஒரே மாவு-சர்க்கரை முதலியவற்றிலிருந்து பல்வேறு பெயருள்ள இனிப்புகள் செய்யப்படுவதைச் சொல்லியும் விளக்கியுள்ளார் ; ஒப்பிட்டு மகிழ்க!
********************
452.இராவணன்முதலியோர் அவசர விமானத்தில் வெளியேறுதல்
அனையகாலையில் அரக்கனும், அரிவையர் குழுவும்,
புனை மணிப்பொலி புட்பக விமானத்துப் போனார்;
நினையும்மாத்திரை யாவரும் நீங்கினர்; நினையும்
வினை இலாமையின், வெந்தது, அவ் விலங்கல்மேல்
இலங்கை.
இராவணன் அரண்மனை எரிகின்ற பொழுது, இராவணனும், அவனது உரிமை மகளிர் கூட்டமும் இரத்தினங்களால் அமைக்கப்பெற்ற புட்பக விமானத்தில் ஏறி மேலே சென்றனர். இறந்தவர் போக மற்றைய அரக்கர்களும் நொடிப்பொழுதில் அவ்விடம் விட்டு அகன்றனர்; அவ்வாறு நினைக்கும் செயலைச் செய்யும் தன்மை இல்லாததால் இலங்கை நகர் வெந்து அழிந்தது.
நினைத்ததைச்செய்யக் கூடியவர்கள் அரக்கர்கள். அஃறிணைப் பொருளாகிய இலங்கைநகர் அவ்வாறு செய்ய முடியாததால் நெருப்பில் வெந்து அழிந்தது.
********************
453. உலகம் அழியும் ஊழிக்காலம் வந்துவிட்டதா? அரக்கர்கள் பதில் :-
‘ஏழுக்கு ஏழென அடுக்கிய உலகங்கள் எரியும்
ஊழிக் காலம் வந்து உற்றதோ? எனப் பகர்ந்தான்.
அரக்கர்கள் பதில் ,
6073. கரங்கள் கூப்பினர், தங்களைத்
திருவொடும் காணார்,
இரங்குகின்ற வல் அரக்கர் ஈது
இயம்பினர் : ‘இறையோய்!
தரங்க வேலையின் நெடிய தன்
வால் இட்ட தழலால்,
குரங்கு சுட்டது ‘என்று உரைத்தலும்,
இராவணன் கொதித்தான்.
கடற்கரையில் நீண்ட வாலில் தீ வைத்தபின்னர் அந்தக் குரங்கு செய்த சேஷ்டை இது என்று அரக்கர்கள் பயபக்தியுடன் இரு கை கூப்பி பதில் தந்தனர் ; இராவணனுக்கு பிளட் பிரஸர் BLOOD PRESSURE அதிகரித்தது.
இலங்கையை ஒரு குரங்கு எரித்தது என்று கேட்டால் தேவர்கள் என்னைக் கண்டு சிரிக்கப்போகிறார்கள் ; அந்தக் குரங்கைப் பிடித்து வாருங்கள் என்றான் ராவணன் ஒரு அட்டஹாசச் சிரிப்புடன்!
********************
454 இலங்கை எரிகிறது; மறுபக்கம் அசோக வனம் எரியாமல் அமைதியாக காட்சி தருகிறது; சீதா பிராட்டியை அனுமன் வணங்கி மகிழ்ந்தான்.பைந்தொடி தாள்கள் பணிந்தான்.
பார்த்தனள், சானகி, பாரா
‘வேர்த்து எரிமேனி குளிர்ந்தாள்,
‘வார்த்தை என்?’ ‘வந்தனை’ என்னா,
போர்த்தொழில் மாருதி போனான்.
சீதை தன்னைவணங்கிய அனுமனைப் பார்த்தாள்; (அனுமனுக்கு என்ன ஆயிற்றோ என) வியர்த்துக் கொதிக்கின்ற தன் உடல்
குளிர்ந்தவளானாள்; யான் சொல்ல வேண்டியது எதுவேனும் உளதோ என்றாள்; அனுமன் ‘வணக்கம்’ என்று சொல்லி, பிராட்டியிடம் விடை பெற்றுச் சென்றான்.
இது ஒரு அருமையான காட்சி ; தான் உயிருடன் இருப்பத்தைச் சீதைக்குத் தெரிவிக்க வேண்டும் என்று வருகிறான் ; அவளோ WHAT IS THE NEWS ? வாட் ஐஸ் தி நியூஸ் என்கிறாள் ; அனுமனுக்குப் பேசுவதற்கு நேரமில்லை ; MY BIG SALUTE; GOOD BYE! மை பி சல்யுட்ட் குட் பை என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறான். இதிலும் ஒரு டிவிஸ்ட் TWIST இருக்கிறது என்னுடைய வணக்கம் என்று சீதை சொன்னாளா அல்லது அனுமன் சொன்னானா ? கம்பன் பொடி வைத்துப் பேசுகிறான் எழுத்தில் மட்டும் இருப்பதால் யார் சொன்னது என்பதை நாமே ஊகிக்க வேண்டியதுதான்.
********************
455.தேவர்கள் வியந்தனர்
தேவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது பார்த்தாயா? அதிசயத்தை ! இலங்கையே எரிந்து சாம்பலாகியது; சீதை இருந்த அசோக வனத்தில் தீயின் சுவடே இல்லை என்று.
6003.
விட்டுஉயர் விஞ்சையர், ‘வெந் தீ
வட்ட முலைத் திருவைகும்
புள் திரள்சோலை புறத்தும்
சுட்டிலது‘ என்பதுசொன்னார்.
அவ்விடம் விட்டு மேலேசென்ற வித்தியாதரர், அனுமன் வாலில் வைத்த கொடிய நெருப்பு, (அனைத்தையும் எரித்த நெருப்பு திருமகள் (சீதை) இருக்கின்ற பறவைக் கூட்டம் நிறைந்த சோலையின், வெளியிடத்தைக் கூட சுடவில்லை! என்ற செய்தியை வியப்பாகத்
தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
********************
456 இலங்கைக்குப் போகும்போது மைனாக மலைக்கு அனுமன் கொடுத்த வாக்குறுதி என்ன? இப்போது எனக்கு நேரமில்லை; வெற்றியுடன் திரும்பி வந்தால் உன் மீது அமர்ந்து இளைப்பாறுவேன் என்றான்; சத்ய சீலனான மாருதி அதை நிறைவேற்றினான்!
மைந்நாகம்என்ன நின்ற குன்றையும், மரபின் எய்தி,
கைந் நாகம்அனையோன் உற்றது உணர்த்தினன்,
கணத்தின் காலை,
பைந் நாகம்நிகர்க்கும் வீரர் தன் நெடு வரவு
பார்க்கும்,
கொய்ந் நாகம்நறுந் தேன் சிந்தும், குன்றிடைக்
குதியும் கொண்டான்.
துதிக்கையை உடைய யானை போன்றவனான அனுமன், மை நாகம் என்று சொல்லப் படுகின்ற மலையையும்; (முன் அதனிடம் சொல்லி வந்த) முறைப்படி அடைந்து, இலங்கையில் நடந்த நிகழ்ச்சிகளை அதனிடம் கூறி, ஒரு கணப் பொழுதிலே, நெடு நேரமாகத் தனது வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் எடுத்து எழுந்து நோக்கும் பாம்பு போன்ற அங்கதன் முதலிய வானரவீரர்கள் நின்ற மகேந்திரமலையிலே குதித்தான்.
பாம்பு, ஒன்றைஆவலோடு எதிர் பார்க்கும் போது, படம் எடுத்துக் கொண்டு எழுந்து நோக்கும் இயல்புடையது. அதனால் வானர வீரர்கள் அனுமனது வரவை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதற்கு, பை நாகம் உவமையாக்கப்பட்டது.
********************
457. தாய்ப்பறவை திரும்பி வருவதற்காகக் காத்துக் கிடக்கும் கூட்டிலுள்ள குஞ்சுகள் தாயைக் கண்டவுடன் மகிழ்வது போல வானரங்கள் ஆனந்தம் அடைந்தனர்.
அழுதனர்சிலவர்; முன் நின்று ஆர்த்தனர் சிலவர்;
அண்மித்
தொழுதனர்சிலவர்; ஆடித் துள்ளினர் சிலவர்;
அள்ளி
முழுதுறவிழுங்குவார்போல் மொய்த்தனர் சிலவர்;
முற்றும்
தழுவினர்சிலவர்; கொண்டு சுமந்தனர் சிலவர்,
தாங்கி.
(அனுமனைக் கண்ட அவ்வானர வீரர்களுள்) சிலர் மகிழ்ச்சியினால் அழுதார்கள்; சிலர் அனுமனுக்கு முன்னாலே நின்று ஆரவாரித்தார்கள்; சிலர், (அனுமனை) நெருங்கி வணங்கினார்கள்; சிலர் குதித்துக் கூத்தாடினார்கள்; சிலர் (அனுமனை) எடுத்து முழுவதும் விழுங்குபவர் போன்று (அவனை) நெருங்கிச் சூழ்ந்து கொண்டனர்; சிலர் சுற்றிலும் அனுமனைஆலிங்கனஞ் செய்தார்கள்; சிலர்அனுமனைத் தாங்கித் தூக்கிச் சுமந்து கொண்டார்கள்.
MISSION ACCOMPLISHED
போய் வரும் கருமம் முற்றிற்று என்பது ஓர் பொம்மல்
பொங்க,
வாய் வெரீஇநின்ற வென்றி வானர வீரர் மன்னோ,
பாய்வரு நீளத்துஆங்கண் இருந்தன பறவைப்
பார்ப்புத்
தாய் வரக்கண்டதன்ன உவகையின் தளிர்த்தார்
அம்மா !
அனுமன் நிலை யாதாகுமோ என்ற அச்சத்துடன் புலம்பிக் கொண்டிருந்த அங்கதன் முதலிய வானர வீரர்கள், பிராட்டியை அனுமன் தேடிக்கண்டு பிடித்து மீண்டும் வந்த செயல் முற்றுப் பெற்றதால் மகிழ்ச்சி அடைந்தார்கள்; கூட்டில் இருந்த பறவைக் குஞ்சுகள் தமது தாய்ப் பறவை மீண்டு வர, அதைப் பார்த்ததைப் போன்ற மகிழ்ச்சியினால் உடல் பூரித்தார்கள்.
********************
458. மதுவனத்தில்குரங்குகளின் கூத்தாட்டம்.
ஒருவர் வாய்க் கொள்ளும் தேனை ஒருவர் உண்டு
ஒழிவர்; உண்ண
ஒருவர் கைக்கொள்ளும் தேனை ஒருவர் கொண்டு
ஓடிப் போவர்;
ஒருவரோடு ஒருவர் ஒன்றத் தழுவுவர்; விழுவர்; ஓடி
ஒருவர்மேல்ஒருவர் தாவி ஒல்லென உவகை
கூர்வார்.
விளக்கமே தேவை இல்லை ! குடிகாரர்கள் செயல்கள் ! மது என்பதற்கு கள், தேன் என்ற இரு பொருளும் உண்டு . ஆயினும் கள் என்ற பொருளிலேயே வருகிறது; பிறகு மதுவனத்தை வானரங்கள் அழித்ததாகப்புகார் கூறிய ததிமுகனுக்கும் அங்கதனுக்கும் மோதலும் நடந்து சமாதானத்தில் முடிகிறது.
********************
459. சுக்கிரீவனைநோக்கி இராமபிரான் புலம்பல்
6023. குறித்தகாலத்துக்குள், தென் திசை சென்றவர்கள் வராததனால்மாண்டுவிட்டனரோ என்று ஐயமுறுகின்றான் இராமபிரான்.
‘குறித்த நாள் இகந்தன குன்ற, தென் திசை
வெறிக் கருங்குழலியை நாடல் மேயினார்
மறித்து இவண்வந்திலர்; மாண்டுளார்கொலோ ?
பிறித்துஅவர்க்கு உற்றுளது என்னை ?-
பெற்றியோய் !’
நற்பண்புடையவனே ! நறு மணம் உள்ள கரிய கூந்தலை உடைய சீதையை தெற்குத் திசையில் தேடச் சென்ற அனுமன் முதலிய வானர வீரர்கள், நாம் குறிப்பிட்ட தவணை நாட்கள் கடந்தும் திரும்பி வரவில்லை.அவ்வானர வீரர்க்கு என்ன நேர்ந்தது ? இறந்து போனார்களோ ?
********************
460.இவ்வாறு ராமன் புலம்புகையில் சுக்ரீவன் ஆறுதல் சொல்வதற்குள் தென் திசையில் பேரொளி கிளம்பியது!
என்புழி,அனுமனும், இரவி என்பவன்
தென் புறத்துஉளன் எனத் தெரிவது ஆயினான்;
பொன் பொழி தடக் கை அப் பொரு இல் வீரனும்,
அன்புறுசிந்தையன், அமைய நோக்கினான்.
என்று (இவ்வாறு இராமபிரான் சுக்கிரீவனை நோக்கி)
வினாவிய காலத்தில், சூரியன் தெற்குத் திசையில் தோன்றியுள்ளான் போல (அவர் கண்களில்) காணப்பட்டான்; அழகு ததும்பி வழியும் பெரிய கைகளை உடைய ஒப்பற்ற வீரனான அந்த இராமபிரானும் அன்பு மிக்க மனத்தை உடையவனாய் நன்றாகப் பார்த்தான்..
அனுமனைச் சூரியனாகவும், அவன் தென் திசையிலிருந்து வருவதால், சூரியன் தெற்கிலிருந்து வருவதாகவும் கூறப்பெற்றது. கிழக்கிலிருந்து வரவேண்டிய சூரியன், இப்போது தெற்குத் திக்கிலிருந்து வருகின்றான் என்று நயம் படக் கூறப்பட்டது.

—சுபம்—
TAGS- தென் திசையில், உதித்த அதிசய சூரியன், கம்ப ராமாயணத்தில் 460 கேள்விகள் , ராவணன் விமானம், அனுமன் திரும்பினான், மதுவனம்