
Written by London Swaminathan
Post No. 16,424
Date uploaded in London – 25 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
யுத்த காண்டத்தில் முக்கியப் பாடல்களை மட்டும் தொடர்ந்து காண்போம் ; சுவையான காட்சிகள் நிறைந்த படலம் இது.
இரணியன் வதைப் படலம்- இதிலுள்ள முக்கியக் கதை ஆகும் ; இது வால்மீகி ராமாயணத்தில் இல்லை; கம்பனின் ஒரிஜினல் படைப்பு இது.
சபை விவாதத்தில் ராவணன் -வீடணன் மோதல். காரசார பேச்சுக்கள்!
கும்பகர்ணன் சொன்ன யோசனையை ராவணன் ஏற்றான்; நாமே கடல் கடந்து சென்று ராமரின் வானர சேனைகளை அழிப்போம் என்பது அவனது யோஜனை. நானே படைகளுடன் செல்கிறேன் என்கிறான் ராவணன் புதல்வன் இந்திரஜித் (மேகநாதன்).
471
இந்திரஜித் கூறியது என்ன ?
472
எதிர்க் கட்சித் தலைவன் விபீஷணன் என்ன சொன்னான் ?
473
எதிர்க்கட்சித் தலைவன் விபீஷணன் உரைக்கு ஆளும் கட்சித் தலைவன் ராவணன் என்ன பதில் சொன்னான் ?
474
வாலி- சுக்ரீவன் சண்டையைக் குறிப்பிட்டு ராமபிரானை ராவணன் எப்படிக் கிண்டல் செய்தான் ?
475
அரசவை விவாதத்தில், ராமனை மனிதன் என்று குறிப்பிட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவன் விபீஷணன் என்ன ஆட்சேபம் தெரிவித்தான் ?
476
சிவனும் விஷ்ணுவும் என்னைக் கண்டு பயந்து ஓடியதை மறந்து விட்டாயா ? ராவணன் ஏசல் செய்தி என்ன?
477
இரணியன் மாண்ட கதையை நினைவூட்டி வீடணன் கூறிய அறிவுரை என்ன ?
478
ஹிரண்யகசிபு பெற்ற வரங்கள் அவனை யார் யாரிடமிருந்து காப்பாற்றும் ?
479
பிரஹலாதன் பெருமை என்ன ?
480
பிரஹலாதன் பற்றி அவனுடைய ஆசிரியர் என்ன புகார் கூறினார் ?
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

விடைகள்
471.ராமர் படை நாற்படை அல்ல; வெறும் குரங்குகளின் படைதான் !
‘யானை இலர்; தேர் புரவி யாதும் இலர்; ஏவும்
தானை இலர்; நின்ற தவம் ஒன்றும் இலர்; தாமோ,
கூனல் முதுகின் சிறு குரங்கு கொடு வெல்வார்?
ஆனவரும் மானுடர்; நம் ஆண்மை இனிது அன்றோ?
நமது பகைவர்களுக்கு யானைப்படை இல்லை; தேர்ப்படை, குதிரைப்படை மற்ற எதுவுமே இல்லை;- நம்மீது எய்வதற்கேற்ற படை பலமும் இல்லை; நிலைபெற்ற தவபலமும் ஒன்றும்
இல்லை; கூனி வளைந்த முதுகை உடைய அற்பமான குரங்குகளைக் கொண்டு நம்மை வெல்பவரும் இந்த மனிதர்களா ? (சீச் சீ; வெட்கம், வெட்கம்) அரக்கர்களாகிய நமது ஆண்மை என்ன ஆகும் ?
‘இனிது அன்றோ’ = இகழத்தக்கது என்னும் பொருள் தந்து நின்றது.
*************************
472
எதிர்க் கட்சித் தலைவன் வீடணன் கூறியது
6143.
‘எந்தை நீ; யாயும் நீ; எம்முன் நீ; தவ
வந்தனைத் தெய்வம் நீ; மற்றும் முற்றும் நீ;
“இந்திரப் பெரும் பதம் இழக்கிறாய்’ என
நொந்தனென் ஆதலின், நுவல்வது ஆயினேன்.
எனக்குத் தந்தையும் நீயே, தாயும் நீயே, எனக்கு மூத்த
தமையனும் நீயே; தவத்தால் நான் வணங்குதற்குரிய தெய்வமும் நீயே; இந்திர பதவிக்கு நிகரான பெரிய அரச பதவியை இழக்கப் போகிறாயே என்று மனம் வருந்தி இதைச் சொல்கிறேன் :
‘கோநகர் முழுவதும், நினது கொற்றமும்,
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை
ஆனவள் கற்பினால், வெந்தது அல்லது, “ஓர்
வானரம் சுட்டது” என்று உணர்தல் மாட்சியோ?
நமது தலைநகரமாகிய இலங்கை நகர் முழுவதும் உன்னுடைய வெற்றியும் , சானகி என்ற பெயர் கொண்ட உலகத்தின் தாயாகிய அந்தத்தேவியின் கற்பினால்தான் எரிந்தது; ஒரு குரங்கு வந்து சுட்டது என்று நினைப்பது அறிவுடைமை ஆகுமோ?
‘இன்னம் ஒன்று உரை செய்தால்;
இனிது கேள், எம்பிரான்! இருவர் ஆய
அன்னவர் தம்மொடும் வானரத்
தலைவராய் அணுகி நின்றார்,
மன்னும் நம் பகைஞர் ஆம்
வானுளோர்; அவரொடும் மாறுகோடல்
கன்மம் அன்று; இது நமக்கு உறுதி
என்று உணர்தலும், கருமம் அன்றால்.
எமது தலைவனே இன்னும் ஒன்று சொல்கிறேன். அதனை பொறுமையாகக் கேட்பாயாக; இருவரான ராம, இலக்குவர்களோடும் நமது பகைவர்களாக தேவர்கள் வானரத் தலைவர்களாக வந்து இருக்கிறார்கள் அவர்களோடு மோதுவது நல்லதல்ல. இது செய்யத் தக்கதல்ல.
(தேவர்களே வானரர்களாக வந்தனர் என முன்னர் ஒரு பாடலில் குறிக்கப்பட்டுள்ளது).
*************************
473 எதிர்க்கட்சித் தலைவர் விபீஷணன் உரைக்குஆளும் கட்சித் தலைவன் ராவணன் பதில்:–
‘ “நந்தி சாபத்தின் நமை அடும், குரங்கு” எனின்,
நம்பால்
வந்த சாபங்கள் எனைப் பல; அவை செய்த வலி
என்?
இந்திராதியர், சித்தர்கள், இயக்கர், நம் இறுதி
சிந்தியாதவர் யார் ? அவை நம்மை என் செய்த ?
நந்திதேவன் கொடுத்த சாபத்தால், குரங்குகள் நம்மைக் கொல்லும்
என்றால் நம்மை வந்தடைந்த சாபங்கள் எத்தனை எத்தனை ?
அவை விளைவித்த துன்பம் என்ன? இந்திரன் முதலான தேவர்கள் சித்தர்கள், இயக்கர்கள் கும்பலில் நமது அழிவை நினைக்காதவர் யார்? அவை எல்லாம் நம்மை என்ன செய்துவிட்டன?
‘அரங்கில் ஆடுவார்க்கு அன்பு பூண்டுடை வரம்
அறியேன் ;
இரங்கி யான் நிற்ப, என் வலி அவன்வயின் எய்த
வரம் கொள் வாலிபால் தோற்றனென்; மற்றும் வேறு
உள்ள
குரங்கு எலாம் எனை வெல்லும் என்று எங்ஙனம்
கோடி?
விபீஷணா! நான் வாலி என்னும் குரங்கிடம் தோற்றது உண்மைதான் ; அதனால் குரங்குகளால் எனக்கு அழிவு வரும் என்று நம்பிவிடாதே
அம்பலத்திலே நடனமாடுகின்ற சிவபிரானை வேண்டி பெற்ற வரபலமுடையவன் வாலி என்பதனை அறியாதவனாய், சண்டை போட்டேன். எதிர்த்தவர் பலம் தனக்கு வரவேண்டும் என்று வரம் பெற்றிருந்த வாலியிடம் எனது வலிமை அவனிடம் சென்றது. அதனால் நான் தோல்வியுற்றேன். .குரங்குகள் எல்லாமே என்னை வென்று விடும் என்று எப்படிக் கருதுகிறாய் ?
*************************
474. ராவணன் கிண்டல்! நான் குரங்கிடம் தோற்றத்தைச் சொன்னாயே? நீ சொல்லும் மனிதன் ராமன் என்ன செய்தான்!
‘நீலகண்டனும் நேமியும் நேர் நின்று நேரின்,
ஏலும் அன்னவருடை வலி அவன்வயின் எய்தும்;
சாலும் நல் வரம் நினைந்து, அவன் எதிர் செலல்
தவிர்ந்து,
வாலிதன்னை, அம் மனிதனும், மறைந்து நின்று எய்தான்.
நீலகண்ட சிவனும் சக்கராயுதத்தை உடைய திருமாலும் நேருக்கு நேர் நின்று சண்டை போட்டாலும், எதிர்க்கும் அவர்களது வலிமையும் அந்த வாலியிடம் சேர்ந்து விடும் என்ற வரத்தை நினைத்தே நீ சொன்ன அந்த மனிதனாகிய இராமனும், அவனுக்கு எதிரிலே சென்று நின்று போரிடுவதைத் தவிர்த்து அந்த வாலியை மறைந்து நின்று அம்பெய்து கொன்றான்.
*************************
475.ராமன் மனுஷன் இல்லை; அவன் ஒரு அவதாரம் ; சபை விவாதத்தில் விபீஷணன் அறிவிப்பு
தன்னின் முன்னிய பொருள் இலா ஒரு தனித்
தலைவன்,
அன்ன மானுடன் ஆகி வந்து, அவதரித்து
அமைந்தான்,
சொன்ன நம்பொருட்டு, உம்பர்தம் சூழ்ச்சியின்
துணிவால்;
இன்னம் ஏகுதி போலும்’ என்று அடி தொழுது
இரந்தான்.
தன்னை விடச்சிறந்த பொருள் வேறொன்றில்லாத ஒப்பற்ற தலைவனாகிய திருமாலே தேவர்களின் ஆலோசனைப்படி, அந்தத் தேவர்களெல்லாம் தீயவர் என்று கூறிய நம்மை அழிக்கும் பொருட்டு, மானிடனான இராமனாக வந்து அவதாரம் செய்துஇருக்கிறான். நம்முடன் போர் செய்ய வந்துள்ளான்; இதனை அறிந்தும் போருக்குச் செல்வாயா? வேண்டாம், வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன் என்றான் வீடணன்.
இராவணன் அடிகளில் வணங்கி யாசித்துக் கூறினான்.
*************************
476 .இராவணன் மறுமொழி;சிவனும் விஷ்ணுவும் என்னைக் கண்டு பயந்து ஓடியதை மறந்து விட்டாயா ?
6186.
‘பித்தன் ஆகிய ஈசனும் அரியும், என் பெயர் கேட்டு,
எய்த்த சிந்தையர், ஏகுழி ஏகுழி எல்லாம்,
கைத்த ஏற்றினும் கடவிய புள்ளினும், முதுகில்
தைத்த வாளிகள் நின்று உள, குன்றின் வீழ் தடித்தின்.*
பித்தனாகிய சிவபெருமானும், திருமாலும் எனது பெயரைக் கேட்டவுடன் (அச்சத்தால்) சோர்ந்துபோய் ஓடினார்கள்; அவர் சென்ற சென்ற இடமெல்லாம், சிவன் வாகனம் காளை மீதும், திருமால் வாகனம் கருடன் மீதும் நான் விட்ட பாணங்கள் முதுகில் தைத்து
நின்றன. அந்த வடுக்கள் மலைமீது விழுந்த இடிபோல் உள்ளன இல்லையா ?
*************************
477.இரணியன் மாண்ட கதையை நினைவூட்டி வீடணன் கூறிய அறிவுரை :
பின்னும் வீடணன், ‘ஐய ! நின் தரம் அலாப்
பெரியோர்,
முன்னை நாள், இவன் முனிந்திடக் கிளையொடும்
முடிந்தார்;
இன்னம் உண்டு, யான் இயம்புவது ;
இரணியன்என்பான்-
தன்னை உள்ளவா கேட்டி’ என்று உரைசெயச்
சமைந்தான் :
இராவணன் கூறியதைக் கேட்டபின்பு வீடணன், தலைவனே! உன்னைவிட அறிவு ஆற்றல்களில் மேம்பட்ட பெரியோர் பலர் முன் காலத்திl இந்தத் திருமால் கோபம் கொண்ட காரணத்தால், உற்றார் உறவினரோடு அழிந்தார்கள்; இன்னும் உனக்கு நான் சொல்ல வேண்டிய தொன்றுண்டு. இரணியன் செய்தியை உள்ளபடியே நான் கூறக் கேட்பாயாக என்று சொல்லி இரணியன் அழிந்த கதையை விளக்கினான்.
*************************
478 .இரணியனது பெருமை
ஆண், பெண் , அலி, மனிதர், தேவர், ஆகாயம், பூமி, பகல் இரவு , ஆயுதங்கள் இவற்றால் கொல்லப்படக் கூடாது என்று வரம் பெற்றவன் இரணியன் என்று கம்பன் பாடுகிறான்
‘பெண்ணில், பேர் எழில் ஆணினில், அலியினில், பிறிதும் உள் நிற்கும் உயிர் உள்ளதில், இல்லதில், உலவான்; கண்ணில் காண்பன, கருதுவ, யாவினும் கழியான்; மண்ணில் சாகிலன்; வானிலும் சாகிலன்;-வரத்தால்.
‘தேவர் ஆயினர் ஏவரும், சேணிடைத் திரியும் யாவரேயும், மற்று எண்ணுதற்கு அரியராய் இயன்ற, கோவை மால், அயன், மான் இடன், யாவரும் கொல்ல, ஆவி தீர்கிலன்; ஆற்றலும் தீர்கிலன்-அனையான்.
‘நீரின் சாகிலன்; நெருப்பினும் சாகிலன்; நிமிர்ந்த மாருதத்தினும், மண்ணின் மற்று எவற்றினும், மாளான்; ஓரும் தேவரும் முனிவரும் பிறர்களும் உரைப்பச் சாரும் சாபமும், அன்னவன்தனைச் சென்று சாரா.
‘உள்ளில் சாகிலன்; புறத்தினும் உலக்கிலன்; உலவாக் கொள்ளைத் தெய்வ வான் படைக்கலம் யாவையும் கொல்லா; நள்ளின் சாகிலன்; பகலிடைச் சாகிலன்; நமனார் கொள்ளச் சாகிலன்; ஆர் இனி அவன் உயிர் கொள்வார்?
‘பூதம் ஐந்தொடும் பொருந்திய உருவினால் புரளான்; வேதம் நான்கினும் விளம்பிய பொருள்களால் விளியான்; தாதை வந்து தான் தனிக் கொலை சூழினும், சாகான்; ஈது அவன் நிலை; எவ் உலகங்கட்கும் இறைவன்.
********************************
479. குருவானவர் ஹிரண்ய கசியுவின் நாமத்தை உச்சரிக்கும்படி பாடம் சொல்லிக்கொடுத்தபோது பிரஹலாதன் தன கொள்கையைக் கூறுகிறான்:_
”ஆரைச் சொல்லுவது, அந்தணர் அரு மறை அறிந்தோர்,
ஓரச் சொல்லுவது எப் பொருள், உபநிடதங்கள்,
தீரச் சொல் பொருள் தேவரும் முனிவரும் செப்பும்
பேரைச் சொல்லுவது அல்லது, பிறிதும் ஒன்று உளதோ? (யுத்கா 158 / 6217)
”செவிகளால் பல கேட்டிலர் ஆயினும், தேவர்க்கு
அவி கொள் நான்மறை அகப்பொருள் புறப்பொருள் அறிவார்;
கவிகள் ஆகுவார்; காண்குவார், மெய்ப்பொருள்;காலால்
புவி கொள் நாயகற்கு அடியவர்க்கு அடிமையின் புக்கார். (யுத்கா 1161 / 6220)
பிரஹ்லாதன் கூற்று:
வேதம் வல்ல அந்தணர்களின் அரிய வேதங்கள் எல்லாம் யாரைச் சிறப்பித்துப் பேசுகிறதோ, கற்றுணர்ந்த சான்றோர்கள் ஓர்ந்து கூறுவது எந்தப் பொருளையோ, அதுவே எல்லா உபநிடதங்களும் முடிந்த முடிவாகக் கூறும் பொருள் ஆகும். அதனை உணர்ந்த தேவர்களும் முனிவர்களும் கூறும் அந்த திருப்பெயரைக் கூறுவதைத் தவிர வேறு ஒன்றும் உள்ளதோ?
தன் திருப்பாதங்களால் அளந்து, உலகத்தைத் தனக்குரியதாக்கிக் கொண்ட தலைவனாகிய திருமாலுக்கு அடியார்கள் எவரோ அவர்களுக்கு அடிமைபூண்டவர்கள் காதுகளால் பல நூல்களை கேட்கும் கேள்வி ஞானமில்லாதவரானாலும் தேவர்களுக்கு அவியுணவு அளிக்கும் மந்திரங்களைத் தன்னிடம் கொண்ட நான்கு வேதங்களும் நுட்பமாகவும் வெளிப்படை யாகவும் கூறிய எல்லாப் பொருள்களையும் அறிய வல்லாராவர் தெய்விகக் கவிஞர்களும் ஆவார்கள். மெய்ப்பொருளைக் கண்டறிய வல்லவராவார்.
***************************
480.
“எந்தை! கேள்: எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் இயம்பச்
சிந்தையால் இறை நினைத்தற்கும் அடாதன செப்பி,
‘முந்தையே நினைந்து, என் பொருள் முற்றும்?’ என்று உரைத்து, உன்
மைந்தன் ஓதிலன், வேதம்” என்று உரைத்தனன், வணங்கி.
பிரகலாதனுக்குக் கல்வி கற்பிக்க வந்த சண்டமார்க்கன் என்னும் ஆசிரியர், இரணியனிடம் பிரகலாதனைக் குறித்துப் புகார் அளித்தார் :
இரணியனை வணங்கி அந்த ஆசிரியர் கூறுகிறார்: “என் தந்தையே! தலைவனே! கேட்பாயாக. இப்பிறவியிலும் சரி, அடுத்த பிறவியிலும் சரி, வாயால் சொல்வதற்கோ அல்லது மனதால் ஒரு சிறிதாவது நினைப்பதற்கோ கூடத் தகாத சொற்களை உன்னுடைய மகன் பிரகலாதன் பேசுகிறான். ‘முன்பே அனைத்தையும் ஆராய்ந்து பார்த்துவிட்டேன்; உன்னுடைய கல்விப் பொருளால் எனக்கு என்ன பயன்?’ என்று கூறிவிட்டு, உன் மைந்தன் நான் சொல்லித்தரும் வேதங்களை ஓத மறுக்கிறான்” என்று கூறினார்.
–சுபம் —
Tags- இரணியன் வதைப் படலம், சபை விவாதத்தில் ராவணன்- வீடணன் மோதல்; கம்ப ராமாயணத்தில் 480 கேள்விகள்