
Date uploaded in London – – 1 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 44
கோவில் எண்கள் –59, 60, 61, 62
59. லோகாம்பிகை கோவில்
கேரள மாநில கோழிக்கோடு வட்டாரக் கோவில்களில் மிகவும் முக்கியமானது லோக மகாதேவி கோவில் . இந்தக் கோவில் பல வகைகளிலும் உன்னதமானது .
சங்க இலக்கிய புலவர்களில் ஒருவர் பெயர் சங்க வருணர் நாகரியர். அவர் வடநாட்டிலிருந்து வந்தவர் என்பதை அவர் பெயரே காட்டும். அந்த நாகரியர் வம்சத்தினர் கட்டிய கோவில் இது .அந்தப் புலவர் புறநானூற்றின் 360ஆவது பாடலை யாத்தார்; அது தத்துவப் பாடல்; உலக நிலையாமையை, தந்து மாறன் என்பவனுக்கு எடுத்துச் சொல்லி, அறம் செய்க என்று வலியுறுத்தும் பாடல் .
இதை மெய்ப்பிக்கும் மற்றோர் சான்று தெய்வத்தின் பெயர் லோக மஹா தேவி; தமிழின் புகழை தென் கிழக்கு ஆசியா முழுதும் பரப்பிய ராஜ ராஜனுக்குப் பல மனைவியர் உண்டு. அவர்களில் பட்டத்து அரசியின் பெயர் லோக மகா தேவி ; அது வடகரா கோவில் தெய்வத்தின் பெயர்; அவளுக்கு மற்றும் ஒரு பெயர் தந்தி சக்தி விடங்கி; உலகம் புகழும் தமிழ் அறிஞர் டாக்டர் இரா. நாகசாமி எழுதிய யாவரும் கேளிர் நூலில் சோழர் புகழ் உள்ளது
மூன்றாவது சான்று புறநானூற்றுப் புலவர் கருவூர் பெருஞ் சதுக்கத்துப் பூத நாதனார் பெயரில் உள்ளது அவர் 291ஆவது பாடலை இயற்றியவர். வடகரா கோவிலிலும் பூதத் தேவர் சந்நிதி இருக்கிறது; சேர நாட்டின் புகழ் பாடும் சிலப்பதிகார காவியத்தில் சதுக்க பூதம் பற்றிய சுவையான கதைகள் நிறைய உள்ளன. கருவூர் என்பது சேர நாட்டின் தலைநகர் என்பதும் குறிப்பிடத்தக்கது
ஆக தமிழ் இலக்கியத்துக்கு உரை எழுதியது போல வடகரா கோவில் தெய்வங்களின் பெயர்கள் உள்ளன.
கோவில் எங்கே இருக்கிறது?
வடகரா கோவில் இருக்கும் இடம் லோகனார் காவு ; இது வடகராவிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மீமுண்டா என்னும் சிற்றூ ரில் அமைந்துள்ளது.
கோழிக்கோட்டிலிருந்து 48 கிலோ மீட்டர் தூரத்தில் வடகரை அமைந்துள்ளது. , கண்ணூர் நகரத்திலிருந்து 44 கி.மீ.
சுவையான கதைகள்
மூகாம்பிகை கோவில் வரலாற்றை அறிந்தோருக்கு ஒரு உண்மை விளங்கும் தேவி சொல்கிறாள்; நான் பின்னாலேயே வருவேன்; ஆனால் திரும்பிப் பார்க்கக்கூடாது ; அதாவது நம்பிக்கை இழக்கும்போது சந்தேகம் வரும்; அப்படி வந்தால் இறைவன் கண்ணுக்குத் தெரிய மாட்டான் . இதே கதைதான் துர்கா என்றும் பகவதி என்றும் பத்ரகாளி என்றும் (எல்லாமே பார்வதியின் பெயர்) வணங்கப்படும் லோகாம்பிகை அம்மன் கதையும் .
வடக்கிலிருந்து வந்த நாகரியர் மக்களின் குல தெய்வம் அவள் ; நான் பின்னால் வருவேன் திரும்பிப் பார்க்கக்கூடாது என்கிறாள் லோகாம்பிகை
போகும் வழியில் கிராம மக்கள் யார் அந்தப் பெண்? என்று வினவவே ஒருவன் திரும்பிப் பார்க்கிறான். தேவி லோகாம்பிகை மறைந்து விடுகிறாள் பின்னர் அந்த இனத் தலைவன் ஒரு அம்பு விட்டு அது விழும் இடத்தில் தேவிக்கு கோவிலை எழுப்பினான்.
சம்ஸ்க்ருத மொழியில் லோகாம்பிகை, ஜகதாம்பிகை , உலகமகா நாயகி என்பன ஒரே பொருளடைத்து .
அம்மன் சன்னிதிக்கு வடக்குப் பக்கம் சிவன், விஷ்ணு ஆகியோருக்குத் தனித்தனிச் சன்னிதிகள் உள .
கோவிலின் வடக்கு வாசலில் மேற்கூரையற்ற சன்னிதி ஒன்றில் கோவிலுக்குப் பாதுகாப்பு தரும் தெய்வமாகப் பூதத்தேவர் கோவில் இருக்கிறது
விருச்சிகம் (கார்த்திகை) மாதம் தொடங்கி 41 நாட்கள் வரை மண்டல விளக்குப் பெருவிழா (மண்டல உற்சவம்) நடைபெறும். பங்குனி என்னும் மீனம் மாதத்தில் எட்டு நாட்கள் மீனம் விழா நடைபெறுகிறது.
மேலும் ஒரு சிறப்பு களரிப்பயிற்று அல்லது களரிப்பயட்டு
சேர நாட்டுக்கே உரித்தான தற்காப்புக் கலையை களரிப்பயிற்று அல்லது களரிப்பயட்டு என்று சொல்லுவார்கள் மலையாள மொழி வழங்கும் பகுதிகளில் மட்டும் இக்கலை உள்ளது இந்தக் கலையைப் பயிலுவோர் அரங்கேற்றம் செய்ய வரும் கோவில் லோகனார் காவு ஆகும். தேவியின் அருள் பெற்றால்தான் வெற்றி கிட்டும் என்பது வீரர்களின் நம்பிக்கை.
வாள், கத்தி, சுருள்வாள், மான்கொம்பு, கண்டகோடாலி, மழு போன்ற ஆயுதங்களை களரி விளையாட்டில் பயன்படுத்துவர்.
XXXX

60. தச்சோளி ஒதேனன் மணிக்கோத் கோவில்
வடகராவிலிருந்து 2 கி.மீ தொலைவில் ஒரு மனிதனுக்கு , வீரனுக்கு அமைக்கப்பட்ட கோவில் இது.
களரிபயட்டுக் கலையில் மிகப்பெரும் வீரனாக விளங்கியவன்
தச்சோளி ஒதேனன்/ ஒதனன்; பல மோதல்களில் வெற்றி வாகை சூடியவன் . பல நூற்றாண்டுகளாக கிராம மக்கள் அவன் புகழை நாட்டுப்புறப் பாடல் வடிவில் பாடி வருகின்றனர் ; அவைகளை வடக்கன் பாட்டுக்கள் என்று சொல்லுவர் . பாடல் பாடுவதோடு நிறுத்தாமல் அவனுக்கு ஒரு கோவிலைக் கட்டி, அதில் அவனுடைய முழு உருவச் சிலையையும் வைத்துள்ளனர் .
ஆண்டுதோறும் இரண்டு நாள் விழா நடக்கும். முதல் நாளில் தீர என்னும் நடனம் நடக்கும் ; லோகநார்காவு கோவிலில்தான் ஒதனன் வழிபட்டதால் அங்கிருந்து ஒரு விளக்கு கொண்டுவரப்படும். நூற்றுக் கணக்கான களரி பயற்று வீரர்கள், கத்தி கேடயங்களுடன் வீரர் உடையில் அணிவகுத்து வருவார்கள்.
இரண்டாம் நாள் விழாவில் ஒதனன் பயன்படுத்திய வாள் , ஊர்வலமாக கோவிலுக்குக் கொண்டுவரப்படும். பின்னர் திரயாட்டம் நடக்கும். அதில் பல்வேரு வீரர்களும் சாகசச் செயல்களை செய்து மக்களை வியப்பில் ஆழ்த்துவார்கள். இரவில் தச்சோளி களி நடைபெறும்.
பகவதி கோவில் மூலமாகவும். களரிப் பயட்டு மூலமாகவும் தென் இந்தியா முழுதும் லோகார்க்காவு புகழ் பரப்பி வருகிறது .
61.கோழிக்கோடு தளி சிவன் கோவில்

கோழிக்கோட்டில் நகரின் நடுவேயுள்ள தளி சிவன் கோவில் பழமையும் , புனிதமும் உள்ள கோவில்; அதை சுவாமி திருமுலபாத் கட்டினார் . சுமார் 700 ஆண்டு வரலாறு நமக்கு கிடைக்கிறது .ரேவதி பட்டதானம் என்னும் சம்ஸ்க்ருத சொற்பொழிவு நடக்கும் இடம். ஏப்ரல் மாதத்தில் எட்டு நாள் விழா நடக்கும் .எல்லா நாட்களிலும் இறைவனை ஊர்வலமாக எடுத்துச் செல்லுவார்கள் .
62.கணபதி கோவில்கள்
வடகராவில் தெரு கணபதி கோவிலும், கோழிக்கோட்டிலிருந்து 18 கி.மீ. தொலைவில் திருவாங்கூர் கணபதி கோவிலும் இருக்கின்றன .விழாவில் தெய்யம் நடனம் நடக்கிறது. சிவராத்திரி உற்சவம் பெரிய அளவில் நடக்கிறது.
63.திருவாங்கூர் நரசிம்ம, பார்த்தசாரதி கோவில்
இந்த நரசிம்ம மூர்த்தியின் கோவிலின் ரதோத்ஸவம் மிகவும் புகழ்பெற்றது. இங்கு 7 நாள் உற்சவம் நடக்கிறது. . நாலாவது நாள் நடக்கும் தேர்த் திருவிழாவுக்கு பல்லாயிரக் கணக்கானோர் வருகிறார்கள் பார்த்தசாரதியும், நரசிம்ம மூர்த்தியும் தேரில் இடம்பெறுவார்கள்.
—subham—
Tags- தமிழ் ரகசியம், லோகார்க்காவு, லோகாம்பிகை, தளி , சிவன் கோவில், நாகரியர், களரிப்பயிற்று ,களரிப்பயட்டு, Kalaripayattu, Martial art