
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,872
Date uploaded in London – – – 1 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தந்த்ர சாஸ்திரங்கள்
ச.நாகராஜன்
ஹிந்து மதத்தின் தலையாய சாஸ்திர பிரிவுகளில் மிக முக்கியமானது தந்த்ர சாஸ்திரம்.
இதைக் கற்பது மிகவும் கடினம். இதன்படி பிரயோகங்களைச் செய்வது அதை விடக் கடினம்.
இந்த சாஸ்திரங்கள் மிகவும் நுட்பமானவை என்பதால் இது குரு வழியாகவே கற்பிக்கப்பட்டு வந்தது.
இது சம்பந்தமான நூல்கள் நிறைய உண்டு. ஆனால் அவை காலப்போக்கில் அச்சுக்கு வராமல் ஓலைச் சுவடிகளாகவே இருக்கின்றன.
சில நூல்கள் அச்சுப் பதிப்பாகக் கிடைக்கின்றன.
தந்த்ர சாஸ்திரம் ஒரு பிரத்யக்ஷமான விஞ்ஞானம்.
செய்து பார்த்து அதன் பலனைத் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த சாஸ்திரங்களின் தொகுப்பாக அபிதானங்களும் – அதாவது அகராதிகளும் உண்டு.
இந்த அபிதானங்கள் அல்லது கோசங்கள் ஒலியின் மகிமையை உணர்த்துபவை. சப்தத்தையும் அர்த்தத்தையும் நமக்குத் தெளிவாகக் காண்பிப்பவை.
ஒரு குறிப்பிட்ட தேவதையைக் குறித்துச் செய்யப்படும் உபாசனையானது சித்தி பெற வேண்டுமெனில் குருவின் அருளுடன் இதைப் பற்றிய அனைத்தும் மிகத் தெளிவாக அறிந்துகொள்ளப்பட வேண்டும்.
எடுத்துக்காட்டாகச் சொல்லப் போனால் அகார உகார மகாரம் அடங்கியது ஓம்.
அது போலவே க்ரீம் என்பது காளியின் மந்திரம். இந்த க்ரீம் என்பது க, ர, இ ஆகிய ஒலிகளால் அமைகின்ற ஒன்று.
ஆகமசாஸ்திரங்களில் இந்த மந்திரம் சொல்லப்படும் போது அங்கு இந்த எளிய சேர்க்கை சொல்லப்படுவதில்லை.
இந்த அர்த்தம் அறியப்படவில்லையெனில் ஏகாக்ஷர பீஜமான இது முழுதுமாக அறியப்படமாட்டாது.
அகராதிகள் அக்ஷரங்களின் முழு விவரணத்தையும் தரும்.
ஒரே ஒரு அக்ஷரத்திற்கு நுட்பமான பல அர்த்தங்கள் உண்டு.
‘இ’ என்ற அக்ஷரத்தை எடுத்துக் கொண்டால் மும்மூர்த்திகள், ரதி, கோவிந்தன், வாமாக்ஷி, கமலா, மாயா, லக்ஷ்மி சாந்தி, வைஷ்ணவி ஆகிய அர்த்தங்கள் உண்டு.
தந்த்ராபிதானத்தில் உள்ள சில நூல்களை இங்கு மாதிரிக்காகப் பார்க்கலாம்:
1) மந்த்ராபிதானம் : இதில் அகாரத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு அக்ஷரத்திற்குமான விளக்கம் தரப்படுகிறது.
2) ப்ரகாராந்தர மந்த்ராபிதானம் : இதில் ஓம் என்ற அக்ஷரத்திற்கும் 35 அர்த்தங்கள் தரப்பட்டுள்ளன. அகாரத்திற்கு 42, ஆகாரத்திற்கு 36, இகாரத்திற்கு 29, ஈகாரத்திற்கு 38 அர்த்தங்கள் என இப்படி நுட்பமான விளக்கங்களை இந்த நூலில் காணலாம்.
3) ஏகாக்ஷரகோசம் : இதில் 38 ஸ்லோகங்களில் அக்ஷரங்களுக்கான விளக்கம் காணப்படுகிறது.
4) பீஜநிகண்டு : இதில் சிவபிரான் கூறுகின்ற அக்ஷர மஹிமையைக் காணலாம்.
5) மாத்ருகாநிகண்டு : மந்திரங்களில் வரும் அக்ஷர ஒலிகளுக்கான அர்த்தங்கள் வரிசையாக இதில் தரப்பட்டுள்ளது.
6) ப்ரகாராந்தர மாத்ருகாநிகண்டு ; இந்தா நூலில் ஓம் என்பது துருவன், தாரா, மூலஜோதி, சிவன், அவ்யயன், வேதாத்யா, தாரகா, அவ்யக்தா, சகாதி, பிரணவம் ஆகியவற்றைக் குறிக்கும் என்பதில் ஆரம்பித்து விரிவாக அக்ஷர மஹிமைகளை விவரிக்கிறது.
7. ப்ரகாராந்தர வர்ணநிகண்டு : இதில் ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் உள்ள அர்த்தங்கள் தரப்படுகின்றன.
8. வரதாதந்த்ரத்தில் உள்ள மந்த்ரார்த்தாபிதானம் : இந்த நூலில் சிவன் பார்வதிக்கு கூறும் அக்ஷர மஹிமைகள் தரப்படுகிறது.
9. முத்ராநிகண்டு : இதில் அபூர்வமான முத்திரைகளைப் பற்றிய விரிவான விளக்கத்தைக் காணலாம். மிக நுட்பமான ரகசிய செய்திகளைத் தரும் அற்புதமான நூல் இது.
இந்த நூல்களை திரு ராம் குமார் ராய் சம்ஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் தந்துள்ளார். இரண்டாம் பதிப்பு பிரசுரமான ஆண்டு- 1984.
இது வாரணாசி Prachya Prakashan ஆல் Indological Reference Seires No 2ஆக வெளியிடப்பட்டுள்ளது.
கால வெள்ளத்தில் இவை மறைந்து போகாமல் காக்கும் பணியை மேற்கொண்ட திரு ராம் குமார் ராய் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
தந்திர சாஸ்திரத்தில் ஆர்வமுள்ளோர் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
**