ஜாக்கிரதை! சபலங்கள் உங்களை ஆபத்தான வாழ்க்கைக்குள் தள்ளிவிடும்! (Post.15,761)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,761

Date uploaded in London – 20 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

18-5-26 KALKIONLINE இதழில் வெளியாகியுள்ள கட்டுரை! 

ஜாக்கிரதை! சபலங்கள் உங்களை ஆபத்தான வாழ்க்கைக்குள் தள்ளிவிடும்!  

ச. நாகராஜன் 

தொலைக்காட்சிக்கு முன்னால் உட்கார்ந்திருக்கிறீர்கள். செய்ய வேண்டிய முக்கிய வேலைகள் காத்திருக்கின்றன. இந்த ஒரே ஒரு எபிசோடை மட்டும் பார்த்து விடுவோம் என்று பார்க்க ஆரம்பிக்கிறீர்கள். அந்த எபிசோடு முடிந்தவுடன் தொலைக்காட்சியை மூட மனம் வரவில்லை. இன்னும் ஒரே ஒரு எபிசோட் அல்லது நிகழ்ச்சி. அது முடிந்தபின் இன்னொரு நிகழ்ச்சி.

 சரி, எந்த நொறுக்குத் தீனியையும் சாப்பிடக் கூடாது, ஏனெனில் டாக்டர் மிகக் கடுமையாக எச்சரித்திருக்கிறார். ஆனால் ஒரே ஒரு எபிசோடில் ஒரே ஒரு நொறுக்குத்தீனி பொட்டலத்தை காலி செய்கிறீர்கள். அடுத்து இன்னொரு பொட்டலம்…. இதற்குக் காரணம் மனச் சபலம் தான்!

 இந்த மாதிரி பேர்வழிகளில் நீங்களும் ஒருவர் என்றால் ஜாக்கிரதை, இந்தப் பழக்கத்தை ஆரம்பத்திலேயே வெட்டி விடுங்கள். இது அபாயகரமான வாழ்க்கைப் போக்கில் கொண்டு விடும்.

சிலர் ஒரே ஒரு சிகரெட் என்று ஆரம்பிப்பார்கள். தொடர்ந்து புகைச் சங்கிலியை கைக் கொண்டு நுரையீரல் பாதிப்பை அடைவார்கள். சிலர் ஒரே ஒரு பெக் என்று சிறிதளவு மதுவை அருந்த ஆரம்பிப்பார்கள். அது சுயநினைவை இழந்து மருத்துவமனைக்குச் செல்லும் அளவு கொண்டு விடும்.

இந்த சபலத்தை இம்பல்ஸிவ் பிஹேவியர்  (Impulsive Behaviour) என்று உளவியல் மருத்துவர் கூறுகின்றனர்.

இன்ஸ்ட்ருமெண்டல் கண்டிஷனிங் (Instrumental Conditioning) என்னும். இந்த ஒரே ஒரு தடவை தான் இப்படி என்று அப்போதைய நிலையில் ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் க்ளாஸிகல் கண்டிஷனிங் (Classical Conditioning) என்ற நிரந்தரமான கெட்ட பழக்கத்திற்கு ஆளாக்கிவிடும்.

சோகமான ஒரு சம்பவத்திலிருந்து மீள்வதற்காக சிறிது மதுவை அருந்தும் ஒருவர் எப்போதெல்லாம் சோகமாகத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் மது அருந்தி குடிகாரராகி விடுவார்.

இந்த க்ளாஸிகல் கண்டிஷனிங் நிலையை அறிவுபூர்வமாக நிரூபித்தவர் பிரபல ரஷிய விஞ்ஞானியான பாவ்லாவ்.

‘பாவ்லாவ் நாய்கள்’ என்ற இவரது பிரபலமான சோதனையை அனைவரும் அறிவர்.

பாவ்லாவ் எப்போதெல்லாம் தனது நாய்களுக்கு உணவைக் கொடுப்பாரோ அப்போதெல்லாம் அதற்கு முன்னர் ஒரு மணியை அடிப்பார். பின்னர் உணவைத் தருவார். நாளடைவில் பாவ்லால் மணியை அடித்தவுடன் நாய்கள் உணவை உண்ண ஆஜராகி விட்டன. மணியோசையுடன் உணவு தருவதற்கான இந்த மனதில் ஏற்படும் தொடர்பு தான் க்ளாஸிகல் கண்டிஷனிங்.

 இதற்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு மனிதன் என்றால் இப்படி உந்திவிடும் சபலங்கள் வரத்தான் செய்யும்.

 இதைப் போக்க வழிகள் உண்டு.

முதலில் இப்படிப்பட்ட சபலங்கள் நமக்கு உண்டா என்று அறிதல் வேண்டும். அடுத்து உங்கள் வாழ்க்கை லட்சியத்தைப் பற்றி நினைத்து அதைக் கெடுக்க இந்த சபலம் ஏற்படுத்தும் கேட்டை அறிதல் வேண்டும்.

அடுத்து இந்த கெட்ட சபலங்கள் உங்கள் வாழ்வில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளைப் பட்டியலிட வேண்டும்.

இந்தப் பட்டியலை அவ்வப்பொழுது பார்த்தாலேயே போதும் – சபலம் தரும் கேடுகள் உங்கள் மனதில் பதிய ஆரம்பிக்கும்.

அடுத்ததாக மனத்தெளிவு பயிற்சி முறை என்ற எளிய பயிற்சியை அன்றாடம் ஒரு இருபது நிமிடங்கள் மேற்கொள்ளலாம். இதற்கு காசு, பணம் செலவில்லை.

 குறிப்பிட்ட ஒரு இடத்தில் அன்றாடம் உட்கார்ந்தோ படுத்தோ கால் முதல் தலை வரையிலான அங்கங்களில் ஏற்படும் புலன் உணர்ச்சிகளைக் கவனித்தல் மனத்தெளிவு பயிற்சியில் ஒரு வகை.

அன்றாடம் அமைதியாக ஒரு இடத்தில் இருந்து மனத்தெளிவைப் பெற  பல பயிற்சிகளை இணையதளத்தில் காணலாம். உங்கள் பகுதி யோகா மாஸ்டரிடமும் கற்றுக் கொள்ளலாம்.

 இந்த சபல பழக்கத்திற்கு ஆளாகி மீள முடியாத நிலைக்குப் போய்விட்டால்  மனநல மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும். அவர் நிலைமைக்குத் தக்கபடி கீழ்க்கண்ட சிகிச்சை முறைகளை மேற்கொள்ளக்கூடும்.

 Dialectical behaviour therapy (DBT) சபலத் தூண்டுதல், உணர்ச்சித் தூண்டுதல் ஆகியவற்றை நீக்குவதற்கான சிகிச்சை முறை இது. சிலரோ தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற கடைசி நிலக்கும் சென்று விடுகின்றனர். ஆளுமைக் கோளாறுகளும் இந்த சிகிச்சையில் அடங்கும்.

 Cognitive behavioural therapy (CBT)

உதவிகரமான மனோ சிந்தனைகளைத் தந்து தீங்கு பயக்கும் மன நிலைகளை மாற்ற உதவும் சிகிச்சை இது.

Acceptance and Commitment therapy (ACT) மேலே உள்ள CBT சிகிச்சை முறையை உள்ளடக்கி ஏற்றுக்கொள்ளத்தக்கவற்றை ஏற்றுக் கொள்ளவும் மதிப்பு மிக்க செயல்களையும் கற்றுத் தரும் சிகிச்சை முறை இது.

 Mindfulness and modification therapy (MMT) மனத்தெளிவு பயிற்சிமுறைகளில் பயிற்சி தந்து லட்சியம் மிக்க நல்ல வாழ்க்கையை அமைக்க உதவுவது இந்த சிகிச்சை முறை.

 அப்பப்பா இதெல்லாம் வேண்டாம் என்றால்….

அடுத்தமுறை இன்ன்னொரு எபிசோட் என்ற சபலத்திற்கு ஆளாகும் போதோ இன்னும் ஒரே ஒரு நொறுக்குத்தீனி பொட்டலம் என்று நினைக்கும் போதோ இவை அனைத்தையும் நினைவில் கொள்ளுங்கள்.

சபலமே போய்விடும்; வாழ்க்கையும் சிறக்கும்!

**

Leave a comment

Leave a comment