கலிங்கத்துப் பரணி பற்றி 10 கேள்விகள் (Post No.16,050)

Written by London Swaminathan

Post No. 16,050

Date uploaded in London – 3 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

கலிங்கத்துப் பரணியை யார் இயற்றினார்? ஏன் ?

2

கலிங்கத்துப் பரணியை ஏன் இயற்றினார்?

பரணி எப்போது பாடப்படும் ?

4

இது எந்த நூற்றாண்டு நூல் ?

5

நூல் அரங்கேற்றத்தின் போது  நடந்த சுவையான நிகழ்ச்சி என்ன ?

6

பரணி நூல்களில் என்ன விஷயம் இருக்கும்?

7

கலிங்கத்துப் பரணியில் பேய்க்காட்சிகள் எப்படி முடிகிறது  ?

8

கலிங்கத்துப் பரணி நூலில் வரும் பேய்களின் வகை என்ன?

9

கலிங்கத்துப் பரணி போன்ற வேறு வகைப் பரணி நூல்கள் யாவை?

10

கலிங்கத்துப் பரணியில் என்ன வகைப்  பாக்கள் உள்ளன ?

**********************************************************************************

ANSWERS விடைகள்

1.கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர் ஜெயங்கொண்டார் . இவரது இயற்பெயரை அறிய முடியவில்லை. புலவர் பலரும் சொற்போர் நிகழ்த்துவது வழக்கம். இத்தகு சொற்போரில் வென்றதால் இவருக்குச் இந்தப் பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பர். இவருடைய ஊர் தீபங் குடி. ஸம்ஸ்க்ருதச் சொல்ஜெயம் என்பதற்கு வெற்றி என்று பொருள்.

***

2.குலோத்துங்கன் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தான். அப்போது தென்னவர், வில்லவர் முதலிய மன்னர்கள் திறை/கப்பம்  செலுத்திப் பணிந்தனர். வட கலிங்க மன்னன் மட்டும் திறை செலுத்தாமல் இருந்தான். அவனை அழித்து வெற்றி கொள்ள  தளபதி கருணாகரன் புறப்பட்டான். அந்தக் கலிங்கப் போரில் சோழர்கள் வெற்றி வாகை சூடினர் . இந்த வெற்றியைக் கொண்டாட பரணியை புலவர் எழுதினார்.

***

3.போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்று வென்ற தலைவனைப் பாட்டுடைத் தலைவனாக கொண்டு பாடப்படும்  சிற்றிலக்கியம் பரணி எனப்படும். பரணி என்பது கொற்றவையை வழிபடவேண்டிய நாள். மீனமாதம் [சித்திரை] பரணி நட்சத்திரமே கொற்றவைக்கு அல்லது பகவதிக்குரிய விழாநாளாகும். இந்தத் திருவிழாக்களே பரணி என்றுதான் சொல்லப்படுகிறன. கேரளத்தில் இன்று நூற்றுக்கணக்கான பரணித்திருவிழாக்கள் இருந்தாலும் முதன்மையானது கொடுங்கல்லூர் பரணி விழாதான். அது கொற்றவையாக வழிபடப்படும் கண்ணகிக்கான விழா.

***

4. காலம் (1078- 1118- குலோத்துங்க சோழன் காலம்) பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதி. கலிங்கத்துப் பரணியின் பாட்டுடைத் தலைவன் முதல் குலோத்துங்க சோழன்.. இவன் இராசேந்திர சோழன் மகள் சோழ இளவரசி அம்மங்கைக்கும் சாளுக்கியர் குல இராசராச நரேந்திரனுக்கும் பிறந்தவன். இவன் மாமன் வீரராசேந்திர சோழன் இறந்த பின்பு அவன் மகன் அதிராசேந்திரன் பட்டம் ஏற்றான். இவனும் சில திங்களில் இறந்தான். சோழ நாடு வாரிசு இல்லாமல் குழப்பத்தில் ஆழ்ந்தது. குழப்பத்தை நீக்கச் சாளுக்கியர் குலத்தைச் சேர்ந்த குலோத்துங்கன் பட்டம் ஏற்றான்.

***

5.ஜெயங்கொண்டார் பரணி பாடி முடித்தார். பின்பு குலோத்துங்கன் அவையில் அரங்கேற்றம் செய்யத் தொடங்கினார்.       பாடலைக் குலோத்துங்கன் சுவைத்தான்; ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பொன்னால் ஆகிய தேங்காயை உருட்டிக் கவிஞரையும் நூலையும் சிறப்புச் செய்தான்.

****

6.இதில் கடவுள் வாழ்த்து, பேய்களின் வழிபாடு, போர்க்களக் காட்சிகள் மற்றும் வெற்றிச் சிறப்பு போன்ற செய்திகள் இடம்பெற்றிருக்கும்.போர்க்களத்தில் இறந்துபட்டவர்களின் இரத்தத்தைக் குடிக்க வரும் பேய்களின் கூத்து, பேய்களுக்கு இடையே நடக்கும் உரையாடல் மற்றும் காளி தேவிக்குக் களம் அமைத்தல் ஆகியவை விவரிக்கப்படும்..

***

7. காளிக்குக் கூளி கூறியது எனும் பகுதி கலிங்கப் போர் ஏற்பட்டதற்கான காரணத்தை விளக்குகிறது. போர் நடவடிக்கைகள் முதலியவற்றை ஒரு பேய் காளியிடம் கூறுவதாக இப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. போர் பாடியதும் களம் பாடியதும் போர் நிகழ்ச்சிகளைச் சுவையாக வருணித்துள்ளன. நூலின் நிறைவாகக் கூழ் அடுதல் (சமைத்தல்) எனும் பகுதி அமைந்துள்ளது. இறந்த வீரர்களின் உடல்களைக் கொண்டு கூழ் சமைத்துக் காளிக்குப் படைத்துப் பேய்கள் தாமும் உண்பதாகக் கூழ் அடுதல் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

***

8.பேய்களின் வகைகள்:நொண்டிப் பேய் – கால் ஊனமுற்ற பேய்.கை ஒடிந்த பேய் – கைகளில் பலம் இன்றி முடங்கிய பேய்.குருட்டுப் பேய் – கண் பார்வை இல்லாத பேய்.ஊமைப் பேய் – பேசும் திறன் அற்ற பேய்.செவிட்டுப் பேய் – கேட்கும் திறன் இல்லாத பேய்.கூன்பேய் – உடல் கூன் விழுந்து வளைந்த பேய்.கணிதப் பேய் – வரவிருக்கும் போர்களைக் கணக்கிட்டுச் சொல்லும் பேய்.முதுபேய் – இமயமலையில் இருந்து பறந்து வந்து இந்திரசாலம் (மாய வித்தைகள்) காட்டும் மூத்த பேய்.

***

9.கலிங்கத்துப் பரணி போன்ற மற்ற முக்கியப் பரணி நூல்கள்:– தக்கயாகப் பரணி, மோகவதைப் பரணி, பாசவதைப் பரணி ஆகியவை ஆகும். தக்கயாகப் பரணி:நூலாசிரியர்: ஒட்டக்கூத்தர்.காலம்: 12-ஆம் நூற்றாண்டு.மோகவதைப் பரணி:நூலாசிரியர்: தத்துவராயர்.காலம்: 15-ஆம் நூற்றாண்டு.பாசவதைப் பரணி:நூலாசிரியர்: வைத்தியநாத தேசிகர்.காலம்: 17-ஆம் நூற்றாண்டு.கஞ்சவதைப் பரணி மற்றும் இரணியவதைப் பரணி:கம்சனைக் கண்ணன் வதம் செய்ததும், இரணியனை நரசிம்மர் வதம் செய்ததும் ஆகிய புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய பிற பரணி நூல்களாகும்.

***

10.இது கலித் தாழிசையாற் பாடப்பெற்றது. 599 தாழிசைகளை உடையது. சமகாலப் புலவரான ஒட்டக்கூத்தர் இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி எனப் புகழ்ந்துள்ளார்.

–SUBHAM—

TAGS- கலிங்கத்துப் பரணி  , ஜெயங்கொண்டார், 10 கேள்விகள்

Leave a comment

Leave a comment