KFC யின் வெற்றி வரலாறு! (Post.16,202)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,202

Date uploaded in London – 16 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

15-8-26 கல்கியில் வெளிவந்த கட்டுரை!

KFC யின் வெற்றி வரலாறு! 

ச. நாகராஜன்             

இன்று KFC நிறுவனத்தின் வெற்றியைப் பற்றி அறியாதவர் இல்லை. 

கோழி இறைச்சி பொதியப்பத்திற்குப் (Chicken Burger பெயர் பெற்ற அந்த நிறுவனத்தை உருவாக்கியவர் கர்னல் சாண்டர்ஸ் (Colonel Sanders) என்னும் அமெரிக்கர்.

65 வயது ஆகும் போது அவர் வேலையற்றவராக ஆனார். பரிதாபகரமான வாழ்க்கையைக் கொண்டு அவரது காரிலேயே தூங்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. அவரிடம் இருந்தது ஒரு பிரஷர் குக்கர் தான். ஆயிரக்கணக்கான பேரைச் சந்திக்கும் மனதிடமும் அவரிடம் இருந்தது.

கெண்டுகியில் தனது வியாபாரத்தைத் தொடங்கிய அவர் ஒரே இரவில் கண்டது படு தோல்வியைத் தான்.

ஆகவே தனது உணவு விடுதியை அவர் மூடினார்.கையில் இருந்தது 105 டாலருக்கான ஒரு சோஷியல் செக்யூரிடி செக். அதைக் காசாக்கினார்.

 இது அவருக்கு ஏற்பட்ட முதல் தோல்வி அல்ல. தோல்வித் தொடரில் நான்காவது தோல்வி.

1920ம் ஆண்டு அவர் ஒரு படகு கம்பெனியை ஆரம்பித்தார். அதில் வெற்றி பெற முடியாமல் தனது கம்பெனியை விற்றார்.

 அடுத்து அசிடிலின் விளக்குகளை தயாரிக்கும் ஒரு கம்பெனியை அவர் தொடங்கினார். ஆனால் மின்விளக்குகள் எங்கும் ஒளியைப் பரப்பவே அவரது கம்பெனி இருளில் மூழ்கியது. அதையும் அவர் மூடினார்.

 அடுத்து நிகோலஸ்வில்லியில் ஒரு கேஸ் ஸ்டேஷனை அவர் தொடங்கினார். ஆனால் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அவரது கேஸ் ஸ்டேஷனை மூடியது.

என்ன செய்வது?

அவருக்கு கோழி இறைச்சி எனப்படும் சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.

தன்னிடமிருந்த பிரஷர் குக்கருடன் தனது 1946ம் வருட மாடல் ஃபோர்டு காரில் ஏறினார். தனது சிக்கன் தயாரிக்கும் விதத்தை ஊர் ஊராகச் சென்று காண்பித்தார். அதைப் பார்ப்பவர்கள் தனது உணவு விடுதியைத் தொடங்குவார்களா என்று பார்த்தார்.

ஊஹூம், ஒருவருக்கும் ஆர்வம் இல்லை.

ஒருவர் அல்ல, இருவர் அல்ல, 1009 பேர்களை அவர் பார்த்தார். அனைவரும் அவரை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டனர்.

1010ம் நபரை அவர் பார்த்தார்.  அந்த நபர் சரி என்றார்.

உடனே வியாபாரம் தொடங்கியது. கெண்டுகி ஃப்ரைட் சிக்கன் (Kentucky Fried Chicken – KFC) என்ற தனது உணவு விடுதியை அவர் தொடங்கினார்.

தனது 73ம் வயதில் நாடெங்கும் 600 கிளைகளை அவர் திறந்திருந்தார்.

அவர் மரணமடையும் போது 48 நாடுகளில் கே எஃப் சி என்று பிரபலமான அவரது உணவுவிடுதி ஒரு ஆண்டிற்கு 200 கோடி டாலர் விற்பனையைச் செய்து சாதித்தது.

1890ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி பிறந்த அவர் 1980ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி மறைந்தார். அப்போது அவருக்கு வயது 90. ல்யூகேமியா வியாதியால் பாதிக்கப்பட்ட அவர் தான் மறைவதற்கு ஒரு மாதம் முன்னர் வரை மிகவும் சுறுசுறுப்பாக தனக்கே உரித்தான வெள்ளை உடையை அணிந்து கூட்டங்களில் கலந்து கொண்டார்.

அவரது இறுதிச் சடங்கில் 500 பேர்கள் கலந்து கொண்டனர். அவரது  உடல் அனைவரின் பார்வைக்காகவும் கே எஃப் சியின் தலைமையகம் இருந்த லூயிஸ்வில்லியில் வைக்கப்பட்டது.  அவரது மனைவியான க்ளாடியா தனது 94ம் வயதில் 1996, டிசம்பர் மாதம் 31ம் தேதி மறைந்தார்.

 சாண்டர்ஸின் வெற்றிக்குக் காரணம் என்ன? அதிர்ஷ்டமா, கடினமான முயற்சியா? 1009 முறை அவருக்குத் தோல்வி வழங்கி 1010ம் முறை வெற்றியைத் தந்தது அவரது விடா முயற்சியா, அல்லது அதிர்ஷ்டமா?

 இதைப் பற்றிய விவாதம் இன்றும் தொடரத்தான் செய்கிறது.

நீங்கள் எந்தக் கட்சி?

**

Leave a comment

Leave a comment