
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,264
Date uploaded in London – 3 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
27-9-26 தினமணி நாளிதழ் கொண்டாட்டம் பகுதியில் வெளியான கட்டுரை!
சந்தோஷம் அடைவது எப்படி? 66 நாடுகளில் ஆராய்ச்சி! ‘மகிழ்ச்சிகரமான’ முடிவு!!
ச. நாகராஜன்
பூவுலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் அடைய விரும்புவது மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையே!
அறிவியல் உலகில் இதை எப்படி அடைவது என்பதைக் கண்டுபிடிக்க 66 நாடுகளைச் சேர்ந்த 97220 பேர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்விற்கான தரவுகள் வோர்ல்ட் வேல்யூஸ் சொஸைடியிடமிருந்து பெறப்பட்டன.போலிஷ் அகாடமி ஆஃப் ஸயின்ஸஸ் நடத்தும் உளவியல் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்மணியான ஈவா பாலிகாட் (Eva Polikot) ஆய்வின் முடிவுகளை ‘தி ஜர்னல் ஆஃப் பாஸிடிவ் சைக்காலஜி’ பத்திரிகையில் வெளியிட்டுள்ளார்.

ஒரு தனி மனிதனின் சந்தோஷம் மட்டும் ஒரு சமூகத்தின் மொத்த சந்தோஷமாக மாறி விட முடியாது. அத்தோடு சில சமயம் ஒரு தனி மனிதன் தனது எதிர்மறை எண்ணங்களை வெளியிட்டு தனக்கு இருக்கும் ஏமாற்றம், மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுபடுகிறான்.
தனி மனித சந்தோஷம் மொத்த சமுதாயத்தின் சந்தோஷமாக மாற வேண்டும். இதை எப்படி அடைவது என்பதே ஆராய்ச்சியின் முக்கிய குறிக்கோள் என்கிறார் பாலிகாட்.
இதற்காக ஆய்வாளர்கள் 200 வெவ்வேறு விதமான சமூக மற்றும் உளவியல் காரணங்களை முதலில் அலசி ஆராய்ந்தனர். அறிவியல் பூர்வமான தரவு மாடல்கள் இதற்கென தயாரிக்கப்பட்டன. இதற்காக வயது, பால், கல்வி, சமூக அந்தஸ்து உள்ளிட்ட அம்சங்கள் சரிபார்க்கப்பட்டன.
56 காரணிகளைத் தொகுத்து அவற்றை ஐந்து ஊக்குவிக்கும் அம்சங்களாக ஆய்வாளர்கள் பிரித்தனர்.
முதல் அம்சம் தனி மனித வளர்ச்சிக்கு ஒரு சமூகம் உதவுகிறதா என்பது தான். சமத்துவ சமுதாயம், ஆண், பெண் சமத்துவம், மைனாரிடியாக உள்ள சமுகத்தினரை ஏற்றுக் கொள்வது என்பது இதில் அடங்கும்.
இரண்டாவது அம்சம் விழிப்புணர்வூட்டும் கருத்துக்களையும் அதற்கான நிறுவனங்களையும் ஆதரிப்பது என்பதாகும்.
பாரம்பரிய வழிமுறைகளோடு நவீன யுகத்தின் பகுத்தறிவு, படைப்பாற்றல் அறிவு ஆகியவற்றை சமூகம் ஆதரிக்கிறதா என்பதாகும். ஆய்வாளர்கள் இப்படி நவீன உத்திகளைக் கடைப்பிடிப்பதானது தனிமனிதனின் சந்தோஷத்தையும் சமூகத்தின் சந்தோஷத்தையும் அதிகரிக்கிறது என்பதைக் கண்டனர்.
மூன்றாவது அம்சம் மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, தங்குமிடம் ஆகியவை திருப்திகரமாக இருக்கிறதா என்பது தான். இவை அனைத்தும் ஒருவருக்கு திருப்திகரமாக அமைந்து விட்டதெனில் அந்த நபர் மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்கிறார்.
நான்காவது அம்சம் நிர்வாக மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் நன்கு இயங்குகிறதா என்பதாகும். போலீஸ், வங்கிகள், நீதிமன்றங்கள் ஆகியவை நன்கு இயங்கும்போது அவை ஒரு தனிமனிதனின் சந்தோஷத்தை மிகவும் அதிகரிக்கின்றன என்பது காணப்பட்டது.
ஐந்தாவது அம்சம் குழுவாக இயங்குவது என்பதாகும். ஒரு மனிதன் தனது அண்டை வீட்டாருடன் நெருக்கமாகப் பழகும் போது அவன் சந்தோஷம் அதிகமாகிறது. ஆனால் உள்ளூர் பற்று அளவுக்கு மீறி அதிகமாகும் போது அது சமூகத்தில் பிளவை உண்டாக்குகிறது என்கிறது ஆய்வின் முடிவு. ஒரு தேசத்தின் மொத்த நலமானது அனைத்து குழுவினரும் ஒன்றாக இணையும் போது தான் ஏற்படுகிறது.
ஒரு ஆச்சரியமான விஷயம் ஒருவர் இன்னொருவருக்கு உதவும் போது சந்தோஷம் எல்லையற்ற அளவிற்கு உயர்கிறது தான்!
மற்றவர்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும் போது ஒருவரின் சந்தோஷமும் அதிகரிக்கிறது.
ஈவா பால்காட்டின் இந்த ஆய்வு முடிவு சந்தோஷத்தை விரும்பும் ஒரு சமூகம் முக்கிய ஐந்து அம்சங்களின் மீது கவனம் செலுத்தி அவற்றை நல்ல முறையில் ஊக்குவித்து வளர்க்க வேண்டும் என்கிறது.
உதவி வாழும் சமுதாயமே அதிகபட்ச மகிழ்ச்சியுடன் வாழும் சமுதாயம் என்பது அறிவியல்பூர்வமாக நிருபீக்கப்பட்டிருப்பது ஒரு ‘மகிழ்ச்சிகரமான’ முடிவு தானே!
***