74.சர்ச்சைகள் மிகுந்த திருமழிசை ஆழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (Post.16,270)

Written by London Swaminathan

Post No. 16,270

Date uploaded in London – 4 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பத்து கேள்விகள் வரிசையில் இது 74-ஆவது பதிவு; முதல் 73 பதிவுகளின் பட்டியல் இறுதியில் உள்ளது.

Part 74

திருமழிசையாழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் நான்காவது ஆழ்வார் ஆவார்.

• பிறப்பிடம்: திருமழிசை, திருவள்ளூர் மாவட்டம் (சென்னை அருகில்).

• அம்சம்: திருமாலின் திருஆழியாகிய சுதர்சன சக்கரத்தின் அவதாரம்.

• பெற்றோர்: பார்க்கவ முனிவர் மற்றும் கனகாங்கி. வேறு பெயர்கள்: பக்திசாரர், மழிசைப்பிரான்.

இயற்றிய நூல்கள்- நான்முகன் திருவந்தாதி: 96 பாடல்கள்;  திருச்சந்த விருத்தம்: 120 பாடல்கள்.

திருமாலே முழுமுதற் கடவுள் என்று தனது பாடல்கள் மூலம் வாதிட்டு நிலைநாட்டியவர்.

• சொன்னவண்ணம் செய்த பெருமாள்: காஞ்சிபுரத்தில் இவரது சீடரான கணிகண்ணனுக்காகப் பெருமாள் இவருடன் சேர்ந்து ஊரைவிட்டு வெளியேறி, மீண்டும் திரும்பிய வரலாறு இவருக்கு உண்டு.

****

1

திருமழிசையாழ்வார், முன்னர் சிவவாக்கியர் என்னும் சித்தர் ஆக இருந்தார் என்று காட்டும் நம்பர் பாடல்கள் எவை ?

 2 

திருப்பதி மலை மீது முருகன் இருப்பதாக அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியதை இதே பிளாக் கட்டுரைகளில் வாசித்தீர்கள் ; திருமழிசை இது பற்றி என்ன சொல்கிறார் ?

3

அணோர் அணீயாம் மஹதோ மஹீயாம் = இறைவன் அணுவுக்கும் அணுவானவன்/ சிறியவன்; உலகில் / பிரபஞ்சத்தில் காணப்படும் பெரிய பொருளுக்கும் பெரியவன் என்று கடோபநிஷத் கூறுகிறது.இதே கருத்து கீதையிலும் தொனிக்கிறது ; அதை ஆழ்வார் எப்படிக் கூறுகிறார்?

4

ஹரே கிருஷ்ணா இயக்கத்தை ஸ்தாபித்த பக்தி வேதாந்த பிரபுபாத சுவாமிகள் எழுதிய பகவத் கீதை பேருரையில், சுலோகத்துக்கு ஸ்லோகம், சிவ பெருமானை சிறு தெய்வம் Demi God டெமி காட்  என்று முத்திரை குத்துகிறார் ; திருமழிசை ஆழ்வார் எப்படித் திட்டுகிறார் ?

5

சிவ பெருமான் பிள்ளை குட்டிகளோடு, மனைவி மக்களோடு, தோற்று  ஓடியதாக ஆழ்வார் கூறும் கதை என்ன ?  

6

மாணிக்கவாசகர் திருவாசகத்திலுள்ள சிவபுராணத்தில் சிவபெருமானின் ஐந்து கலர்களைக் கூறினார் ; நமது ஆழ்வார் வண்ணங்கள் பற்றிச் செப்புவது யாது?

7

ஆனை என்னும் சொல்லை  வைத்து சிலேடைப்பொருளில் சொற்சிலம்பம் ஆடும் பாடலின் பொருள் என்ன ?

ஆனை காத்து ஒர் ஆனை கொன்று அது அன்றி ஆயர்-பிள்ளையாய்

ஆனை மேய்த்தி ஆனெய் உண்டி அன்று குன்றம் ஒன்றினால்

ஆனை காத்து மை-அரிக் கண் மாதரார் திறத்து முன்

ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே

8

இன்று இருப்பவன் நாளை இருக்கமாட்டான் என்பதே உலகத்தின் சிறப்பு; அதிசய குணம்! என்று வள்ளுவனும் வியாசனும் செப்பினர் ; அதே கருத்தை ஆழ்வார் பகர்வது எப்படி ?   

9

எட்டும் இரண்டும் அறியாத என்னை பட்டிமண்டபம் ஏற்றினாய்; அறம் பாவம் என்னும் கயிற்றால்  / பந்தத்தால் கட்டினாய் என்கிறார் மாணிக்கவாசகர் ; அதே கருத்தை ஆழ்வார் எதிரொலிப்பது எங்கே ?

10

இந்திரலோகம் கிடைத்தாலும் வேண்டாம் என்றார் தொண்டரடிப்பொடி ஆழ்வார் ; இவர் போவாரா?

********************************

விடைகள்

1.எட்டும் எட்டும் எட்டுமாய் ஓர்  ஏழும் ஏழும் ஏழுமாய்

எட்டும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதிதேவனே

எட்டும் ஆய பாதமோடு இறைஞ்சி நின்ற வண்ணமே

எட்டு எழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே — சிவவாக்கியர் பாடல்

எட்டும் எட்டும் எட்டுமாய் ஒர் ஏழும் ஏழும் ஏழுமாய்

எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதிதேவனை

எட்டின் ஆய பேதமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர்

எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே   — திருமழிசை ஆழ்வார்  

இதிலுள்ள எண்களை யார் எப்படி வேண்டுமானாலும் வியாக்கியானம் செய்ய வாய்ப்புண்டு. மேலும் இதே பாடல் ஒரு சிறிது மாற்றத்தோடு திருமழிசை ஆழ்வார் பாசுரங்களில் வருவதால் இருவரும் ஒருவரா? சமயம் மாறினார்களா? என்ற சர்ச்சைகளும்  இருக்கின்றன.

இது ஒரு பாடல் மட்டுமல்ல ; மேலும் பல பாடல்கள் ஒரே மாதிரியாகவே உள்ளன. சிவவாக்கியரும் ஆழ்வாரும் ஆறு, ஐந்து, பத்து முதலிய எண்களைக் கொண்டும் அடுத்தடுத்துப் பாடினர்.

இவர்களுக்கு எல்லாம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த  தீர்க்கதமஸும்,  ரிக் வேதத்தில் இப்படி எண்களை புதிர்களாக வைத்துப் பாடி இருக்கிறார். (ரிக்.1-164-1 முதல் 1-164-3 வரை).

வைணவ பாரம்பரியக் கதைகளின்படி, திருமழிசை ஆழ்வார் பிறந்து பல சமயங்களை ஆராய்ந்தார். அவர் பௌத்தம், சமணம் மற்றும் சைவம் ஆகிய மதங்களை தீவிரமாகப் பயின்றார். சைவராக இருந்தபோது அவர் சிவவாக்கியர் என்ற பெயருடன் சிவபெருமானை வழிபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், பேயாழ்வாரால் திருத்தப்பட்டு, வைணவத்திற்கு மாறி ‘திருமழிசை ஆழ்வார்’ ஆனார் என்பது வைணவத் திலகங்களின் வரலாறு.திருமழிசை ஆழ்வாரின் காலம் பொதுவாக கி.பி. 7-ஆம் அல்லது 8-ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. ஆனால், சிவவாக்கியரின் பாடல்களின் மொழிநடை மற்றும் சித்தர்களின் காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு அல்லது அதற்குப் பிந்தையது என ஆய்வாளர்கள் கணிப்பார்கள். பேயாழ்வோரின் காலமோ மிகவும் முந்தியது; ஆகையால் சர்ச்சை நீடிக்கிறது

***

2.கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்

தண்ட அரக்கன் தலை தாளால் பண்டு எண்ணிப்

போம் குமரன் நிற்கும் பொழில் வேங்கடமலைக்கே

போம் குமரருள்ளீர்! புரிந்து 

இதில் குமரன் என்பதை இளைஞன் என்று வைணவர்கள் நாராயணனுக்கு ஒரு பெயர் என்பர் ; ஆனால் வேறு எவரும் சொல்லாத இந்த சொல் அருணகிரி சொல்லும் குமாரன்/ முருகன் என்றும் கொள்வார்கள் சிலர் . மேலும் திருமூலர் சொற்களையும் சிவவாக்கியர் பயன்படுத்துகிறார்

“எண்பது லட்சத்து எழுகோடி யோனியும்

கொண்டு குடங்கால் வைத்த குழவியாய்…”-திருமூலர்

***

3.சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்

ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று

ஓதிய வாக்கு அதனைக் கல்லார் உலகத்தில்

ஏதிலர் ஆம் மெய்ஞ் ஞானம் இல்.

இவை பிரம்மனை /இறைவனை வருணிக்க உபநிஷத்துக்கள் பயன்படுத்தும் சொற்களாகும்.

***

4.அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்

சிறியார் சிவப்பட்டார் செப்பில் வெறியாய

மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்

ஈனவரே ஆதலால் இன்று .

பெருமாளை வணங்காதோர் ஈனர்கள்= இழிவானவர்கள்=அறிவிலாதவர்; சிவப்பட்டார் சிறியார்!

***

5.மோடியோடு இலச்சையாய சாபம் எய்தி முக்கணான்

கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து

ஓட வாணன் ஆயிரம் கரங் கழித்த ஆதி மால்

பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே 

பாணாசுரனுக்கு சப்போர்ட்டாக support வந்த, வெட்கப்படும்படியான சாபம் பெற்ற சிவபெருமானையும் அவனது மனைவி மக்களையும் ஓடிப்போகும்படி திருமால், பாணாசுரனின் ஆயிரம் கைகளையும் வெட்டி வீழ்த்தினார்

***

6.பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம்

போலும் நீர்மை பொற்பு உடைத் தடத்து வண்டு விண்டு உலாம்

நீல நீர்மை என்று இவை நிறைந்த காலம் நான்குமாய்

மாலின் நீர்மை வையகம் மறைத்தது என்ன நீர்மையே?  

பொருள்

நீ கிருதயுகத்தில் வெள்ளை நிறம், திரேதா யுகத்தில் செம்பொன் நிறம், துவாபர யுகத்தில் பச்சை நிறம், கலியுகத்தில் நீலப்பூ நிறம் எடுக்கிறாய் ; உன்னை யாரே அறிய வல்லார்?

***

7.பொருள்

ஆனை = யானை ; ஆனை= பசு, காளை, ஆநிரை .

கஜேந்திரன் என்னும் யானையைக் காப்பாற்றினாய் ; கம்சன் ஏவிய குவலயாபீடம் என்னும் யானையை வீழ்த்தினாய் . ஆநிரைகளை ஆயர்களுடன் மேய்த்தாய்; ஆவின் நெய்யைஉண்டாய்;     ஆவோடு யாதவர்களைக் கோவர்த்தன மலையின் கீழ் காப்பாற்றினாய் ; நப்பின்னையை மணக்க மஞ்சு விரட்டில் ஏழு காளைகளை வென்றாய் ; நீ மாயன் தான் !

***

8.இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து

ஒன்றி நின்று வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என்கொலோ

அன்று பார் அளந்த பாத-போதை உன்னி வானின்மேல்

சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே?  

***

9.மட்டு உலாவு தண் துழாய்-அலங்கலாய் பொலன் கழல்

விட்டு வீழ்வு இலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்

எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனந்தனைக்

கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே  

மாணிக்கவாசகர் பாடலில் எட்டும் இரண்டும் என்பதற்கு ஓம் என்னும் பிரணவத்தை குறிப்பதாக உரை எழுதியுள்ளார்கள். திருமூலரும் இதைச் சொன்ன  இடத்தில், சிவம் சக்தி போன்ற விளக்கங்கள் உள்ளன ; திருமழிசை என்ன பொருளில் சொன்னார் என்ற விளக்கம் இல்லை; எட்டும் இரண்டும் என்பதில் எட்டு எழுத்து ஓம் நமோ நாராயணா என்று ஒரு உரை கூறுகிறது ஆனால் இரண்டு என்பதற்கு விளக்கம் இல்லை.

***

10.கேடு இல் சீர் வரத்தினாய்க் கெடும் வரத்து அயன் அரன்

நாடினோடு நாட்டம்-ஆயிரத்தன் நாடு நண்ணினும்

வீடது ஆன போகம் எய்தி வீற்றிருந்த போதிலும்

கூடும் ஆசை அல்லது ஒன்று கொள்வனோ குறிப்பிலே?            (௧௦௮)

பிரம்மலோகம் சிவலோகம், இந்திரலோகம் எது கிடைத்தாலும் வேண்டாம் என்று புறக்கணித்து நான் உன்னையே நாடுவேன்.

ஆயிரத்தன் நாடு= இந்திரலோகம்

***

பத்து கேள்விகள் வரிசையில் 73  பதிவுகளின் பட்டியல் :

1.காரைக்கால் அம்மையார் பற்றி 10 கேள்விகள்! (Post.15,992)18/7

திருமந்திரம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,010)23/7

பெரிய புராணம் பற்றி 10 கேள்விகள் (Post.16,012)24/7

திருமுருகாற்றுப்படை பற்றி 10 கேள்விகள் (Post.16,018) 26/7

கந்த புராணம் பற்றி 10 கேள்விகள் (Post.16,024)27/7

முக்கூடற் பள்ளு பற்றி 10 கேள்விகள் (Post No.16,027) 28/7

குற்றாலக் குறவஞ்சி பற்றி 10 கேள்விகள் (Post No.160,30)29/7

அஷ்டாவக்ர கீதை பற்றி 10 கேள்விகள் (Post.16,036) 30/7

கீத கோவிந்தம் நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,039)31/7

****

10.பாரதியின் குயில்பாட்டு பற்றி 10 கேள்விகள் (Post.16,042) 1/8

அறப்பளீச்சுர சதகம் பற்றி 10 கேள்விகள் (Post.16,046) 2/8

கலிங்கத்துப் பரணி பற்றி 10 கேள்விகள் (Post No.16,050) 3/8

திருவள்ளுவமாலை பற்றி 10 கேள்விகள் (Post.16,052)4/8

பட்டினத்தார் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,055) 5/8

பஜ கோவிந்தம் பாடல் பற்றி 10 கேள்விகள் (Post.16,062)7/8

நாலடியார் நூல்பற்றி 10 கேள்விகள் (Post No.16,067)8/8

தாயுமானவர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,059)6/8

சீவக சிந்தாமணி பற்றி 10 கேள்விகள் (Post.16,070)9/8

முத்தொள்ளாயிரம் நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,074)

20.மணிமேகலைக்  காப்பியம் பற்றி 10 கேள்விகள் (Post.16,077)11/8

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள்  பற்றி 10 கேள்விகள் (Post.16,081)12/8

பாண்டியர் செப்பேடுகள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,089)14/8

பாண்டியர் செப்பேடுகள் பற்றி மேலும் 10 கேள்விகள் (Post.16,092)15/8

பாரதி பாட்டில் 16 நாடுகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,095) 16/8

மலைபடு கடாம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,102) 18/8

ஆய் குல/ யாதவ குல செப்பேடுகள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,107) 19/8

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,085) 13/8

கொங்கு மண்டல சதகம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,100) 17/8

திருவருட்பா நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,109)20/8

30.மஹாபாரதம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,112) 21/8

சர்ச்சைக்குரிய விவேக சிந்தாமணி பற்றி 10 கேள்விகள் (Post.16,118)22/8

பாபநாசம் சிவன் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,122)23/8

பார்ப்பனரை வசைபாடிய பாரதிதாசன் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,123)24/8

ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் அற்புதத் தமிழ் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,128) 25/8

அருணாசலக் கவிராயர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,131)26/8

முத்துத் தாண்டவர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,134)27/8

புத்த மத வேதப் புஸ்தகம் தம்மபதத்தில்10 கேள்விகள் (Post.16,137)28/8

மாரிமுத்தா பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,141)29/8

ஆண்டாள் அருளிய திருப்பாவையில்10 கேள்விகள் (Post.16,145) 30/8

40.பாஸா நாடகங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,150)31/8

****

நளவெண்பாவில் 10 கேள்விகள் (Post.16,153)1/9/2026

காளமேகப்புலவர் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,156)2/9

ஒட்டக்கூத்தர் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,160)3/9

அதிவீர ராம பாண்டியன் நூல்கள் பற்றி 10 கேள்விகள்(Post.16,164)4/9

உலகநீதி நூலில் 10 கேள்விகள் (Post No.16,167) 5/9

சிவப்பிரகாசர் நூல்களில் 10 கேள்விகள் (Post.16,171)6/9

சங்க கால ஔவையார் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,174)7/9

ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் படைப்புகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,177)8/9

முத்து சுவாமி தீட்சிதர் கிருதிகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,180)9/9

50.சதாசிவ பிரம்மேந்திராள் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,185)10/9

பல்லவர் செப்பேடுகளில் முதல் 10 கேள்விகள் (Post.16,189)11/9

பல்லவர் செப்பேடுகளில் இரண்டாவது 10 கேள்விகள் (Post No.16,192)12/9

பல்லவர் செப்பேடுகள் பற்றி மூன்றாவது 10 கேள்விகள் (Post.16,195)13/9

பல்லவர் செப்பேடுகள் பற்றி நான்காவது 10 கேள்விகள் (Post.16,198)14/9

பல்லவர் செப்பேடுகள் பற்றி ஐந்தாவது 10 கேள்விகள் (Post.16,200)15/9

பல்லவர் செப்பேடுகள் பற்றி ஆறாவது 10 கேள்விகள் (Post.16,204)16/9

பல்லவர் செப்பேடுகள் பற்றி ஏழாவது 10 கேள்விகள் (Post.16,207)17/9

பல்லவர் செப்பேடுகள் பற்றி எட்டாவது 10 கேள்விகள் விடைகள் (Post.16,211)18/9

பல்லவர் செப்பேடுகள் பற்றி ஒன்பதாவது 10 கேள்விகள் (Post.16,214)19/9

60.ஆன்மீக திரைப்படங்களில் (பிளாக் அண்ட் ஒயிட்) பத்து கேள்விகள் (Post.16,218)20/9

முருகனைப் போற்றும் திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,222)21/9

அலைமகள், கலைமகள், மலைமகள், மீதான திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,224)22/9

மஹாபாரதம், ராமாயணம் திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,228)23/9

கண்ணன்/ கிருஷ்ணன் மீதான திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,233)24/9

ஐயப்பன், குசேலர் திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,237)25/9

திரைப்படங்களில் பிரபலங்கள் சோ, எம். எஸ். பற்றி 10 கேள்விகள் (Post.16,240)26/9

திருக்குறளில் தெய்வங்கள் 10 கேள்விகள் (Post No.16,244)27/9

மாணிக்கவாசகரின் சிவபுராணத்தில் 10 கேள்விகள் (Post.16,248)28/9

திருமங்கை ஆழ்வார் பாடல்களில் 10 கேள்விகள்  (Post.16,252)29/9

70.நம்மாழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (Post No.16,256)30/9

71.குலசேகர ஆழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (Post.16,259)

72.பெரியாழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (போஸ்ட்.72) 2/10

73.தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (Post.16,266)3/10

–subham—

Tags- Part 74, சர்ச்சைகள் மிகுந்த, திருமழிசை ஆழ்வார், பாசுரங்கள், 10 கேள்விகள்

Leave a comment

Leave a comment