
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,274
Date uploaded in London – 6 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
27-9-26 tontஇதினமணி கதிர் இதழில் வெளியான கட்டுரை!
புத்தரின் பிரம்மாண்டமான சிலைகள் உணர்த்தும் தத்துவம்!
ச. நாகராஜன்
உலகின் பிரம்மாண்டமான சிலைகளில் புத்தரின் சிலைகள் தனி முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.
புத்தரை மனதில் நிலைநிறுத்துவதோடு அவரது போதனைகளை நினைவூட்டி நமது படைப்பாற்றலை மேம்படுத்தி ஆன்மீக சிகரத்தில் ஏற்ற வல்ல சிலைகள் இவை. இவற்றில் ஒவ்வொன்றும் ஒரு தனிப்பட்ட முறையில் அமைக்கப்பட்டிருப்பதோடு நல்லதொரு தத்துவத்தையும் நமக்கு அளிக்கின்றன. இதில் இருக்கும் கலை வண்ணமோ உலகில் உள்ள அனைத்து இனத்தவரையும் மதத்தவரையும் ஈர்க்கின்றன.
புத்தகயா, இந்தியா
இந்தியாவில் பீகார் மாநிலத்தில் கயா மாவட்டத்தில் கயையில் உள்ள புத்தரின் சிலை தியானத்தில் தாமரையில் அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்ட தெய்வீகச் சிலையாகும். இந்தக் கல் சிலையின் உயரம் 64 அடி. அகலம் 60 அடி. 1989ம் ஆண்டு இது திறந்து வைக்கப்பட்டது.
ஹைதராபாத், இந்தியா
1992ம் ஆண்டு அமைக்கப்பட்ட பெரும் புத்தர் சிலை ஹைதராபாத்தில் உசேன் சாகர் ஏரியின் நடுவில் உள்ள ஜிப்ரால்டர் பாறையின் மீது உள்ள ஒற்றைக்கல் சிலையாகும். இதன் உயரம் 58 அடி. இங்கு அபயமுத்திரையுடன் புத்தர் காட்சியளிக்கிறார்.
ஸ்பிரிங் ஆலயம், சீனா
சீனாவில் ஹெனானில் உள்ள லுஷான் என்ற இடத்தில் அமைந்திருக்கும் ஸ்பிரிங் ஆலயம் 2008ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஃபோடுஷான் மலையில் உள்ள இந்த பிரம்மாண்டமான சிலையின் உயரம் 420 அடி. 66 அடி பீடத்தில் இது அமைந்துள்ளது. நூறு கிலோ தங்கம் இதில் உள்ளது. 3300 டன் தாமிரக் கலவையினாலும் 1500 டன் எஃகினாலும் இது படைக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள லிபர்டி சிலையைப் போல இரு மடங்கு உயரம் உள்ளது இது.
2018ல் இந்தியாவில் சர்தார் வல்லபாபாய் படேலின் சிலை அமைக்கப்பட்டது வரை இதுவே கின்னஸ் ரிகார்டில் உலகின் அதி உயர சிலை என்ற பெருமையைப் பெற்றிருந்தது. 597 அடி உயரமுள்ள படேலின் சிலை இப்போது அதிக உயரமான சிலை என்ற பெயரைப் பெற்று முதலிடத்தை வகிக்கிறது.
மோனிவா புத்தர் சிலை, மயன்மார்
மயன்மாரில் மோனிவா என்ற இடத்தில் உள்ள சிலை 380 அடி உயரம் உள்ளது. 2008ம் ஆண்டு அமைக்கப்பட்ட இது நின்ற நிலையில் இருக்கும் கற்சிலையாகும். அடுத்து சயனகோலத்தில் உள்ள சிலை 295 அடி நீளம் உள்ளது. இது 1991ம் ஆண்டு நிறுவப்பட்டது.

லேக்யுன் செக்யா புத்தர், மயன்மார்
மயன்மாரில் மோனிவாவில் உள்ள வெங்கல புத்தர் சிலையின் உயரம் 381 அடி. நின்ற நிலையில் கௌதம புத்தர் காட்சியளிக்கிறார்.இதைச் சுற்றி பல்வேறு சிலைகளும் அழகிய தோட்டங்களும் உள்ளன. இது 2008ல் நிறுவப்பட்டது.
உஷிகு டைபுட்ஸு, ஜப்பான்
ஜப்பானில் உஷிகு என்ற இடத்தில் உள்ள புத்தர் சிலையின் உயரம் 394 அடியாகும். 1993ல் நிறுவப்பட்டது இது. அமிதாப் புத்தர் உட்கார்ந்திருக்கும் நிலையில் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
ப்ர புத்தா, தாய்லாந்து
தாய்லாந்தில் ஆங் தாங்கில் 2008ல் ப்ர புத்தா சிலையின் உயரம் 72 அடி. வெங்கலச் சிலை மீது தங்க முலாம் பூசப்பட்டு ஜொலிக்கும் சிலை இது. பாங்காக்கில் வாட் முவாங் ஆலயத்தில் உள்ளது இது. புத்தர் இரு கைகளையும் இணைத்து அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டிருக்கும் சிலையாகும் இது.
ஒவ்வொரு சிலைக்கும் ஒரு தத்துவம் உண்டு. இதனால் உத்வேகம் பெற்று உயர்நிலையை அனைவரும் அடைகின்றனர்.
பெரும்பாலான இடங்களில் உள்ள சிலைகளில் புத்தர் தாமரை ஆசனத்தில் கால்களை குறுக்காக ஒன்றின் மேல் ஒன்று வைத்து அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இந்த நிலையில் தான் புத்தர் அனைவருக்கும் பெரும்பாலான உபதேசங்களை அளித்து வந்தார். இதே நிலையில் தான் அவர் நிர்வாணத்தையும் அடைந்தார்.
இது உடலின் சமநிலையை உறுதிப்படுத்துவதோடு அனைத்து புலன்களையும் அடக்க வழி வகுக்கிறது. சமாதி நிலை எனப்படும் ஆழ்நிலை தியானத்தின் மூலம் அடையும் சித்தியை இதன் மூலம் அடையலாம்.
வஜ்ராசனம் எனப்படும் இந்த நிலையில் ஒரு கால் மற்றொன்றின் எதிரில் இருக்கும். வீராசனம் எனப்படும் நிலையில் வலது கால் இடது தொடைப்பக்கமும் இடது கால் வலது தொடைப்பக்கமும் இருக்கும்.
தேரவாத புத்தமதத்தில் வீராசனமும் மஹாயான புத்தமதத்தில் வஜ்ராசனமும் கடைப்பிடிக்கப்படுகிறது.
அமர்ந்த நிலையில் அவர் பல முத்திரைகளைக் காண்பிப்பதையும் சிலைகள் சித்தரிக்கின்றன.
நின்ற நிலையில் உள்ள சிலைகள் அவரது இரு கால்களும் பூமியில் மிக்க உறுதியுடன் நிற்பதையும் தியானத்திலிருந்து எழுந்து ஊனக் கண்களினாலும் ஞானக் கண்களினாலும் உலகைப் பார்ப்பதையும் பார்க்கலாம். இது அனைவரும் விடுதலை பெற்று முக்தியை அடைய உதவும் கருணா நிலையாகும். இது அனைவருக்கும் வரும் அபாயத்தைப் போக்கும்.
ஒரு காலை முன் வைத்து நடக்கும் நிலையில் உள்ள புத்தர் சிலைகள் தாய்லாந்தில் 13ம் நூற்றாண்டில் அமைக்கப்பட ஆரம்பித்தது. கால்நடையாகவே நடந்து தனது திருவோட்டுடன் மக்களிடம் ஆன்மீக உணர்வைத் தட்டி எழுப்பி, பிக்ஷை கேட்டு வாங்கியதை இவை குறிக்கின்றன.
சயன கோலத்தில் இருக்கும் புத்தர் எப்போதுமே வலது பக்கமாகப் படுத்திருப்பார். அவரது கையின் மீது தலை இருக்கும். இது அவரது இறுதி கால நிலையைச் சித்தரிப்பதாகும்.
புத்தரின் சிலைகள் காண்பிக்கும் முத்திரைகள் ஏராளமான ரகசியங்களை விளக்குபவையாகும்.
இவற்றை அன்பர்கள் புத்தமத நூல்களின் தொகுப்பில் படித்து அறியலாம்.
மன சாந்திக்கும், உலகியல் வாழ்வில் வெற்றிக்கும், பல செல்வங்களையும் அடையவும் வழி வகுப்பவை புத்த தரிசனம்!
***