
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,278
Date uploaded in London – 7 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
4-10-26 தினமணி கொண்டாட்டம் பகுதியில் வெளியாகியுள்ள கட்டுரை!
பெண்ணுரிமைக்காகக் கோடி கோடியாகப் பணத்தை நன்கொடையாக அளிக்கும் அதிசயப் பெண்மணி!
ச. நாகராஜன்

பெண் உரிமைக்காகப் போராடி ஆணுக்குப் பெண் நிகர் என உரத்த குரலில் வாயால் மட்டும் பேசாது தனது பணத்தை கோடி கோடியாகக் கொடுத்து
உழைக்கும் ஒரு அதிசயப் பெண்மணி யார் தெரியுமா? அவர் பெயர் மெலிண்டா ஃப்ரெஞ்ச் கேட்ஸ்.
இவர் வாழ்க்கையே பெண் உரிமைப் போராட்டத்திற்கு முன்னோடியாகத் திகழும் அற்புதமான வாழ்க்கை. 1964ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தில் இவர் பிறந்தார். (15-8-1964)
அமெரிக்காவில் டெக்ஸாஸில் டல்லாஸில் வளர்ந்த இவர் இளமையில் பெண்களுக்கு மட்டுமேயான கத்தோலிக்க பள்ளியில் படித்தார். அவருக்கு மேற்படிப்பு பற்றி ஆலோசனை சொல்ல வந்த ஒரு ஆலோசகர் அவரிடம்.” நீ அதிகமாக எல்லாம் ஆசைப்படக் கூடாது. உள்ளூரில் டெக்ஸாஸ் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்து சேர்ந்து விடு. ட்யூக் அல்லது நார்த் டேம் என்றெல்லாம் ஆசைப்படாதே” என்றார். இது அவரை உசுப்பி எழுப்பி விட்டது.
ஒரு பெண் என்றால் அவ்வளவு கேவலமா என்ன என்று வெகுண்டெழுந்த அவர் பெண்கள் பற்றிய பள்ளி ஆவணங்களை ஆராய ஆரம்பித்தார். அதில் ஒரு வாலெடிக்டோரியன் ஆனால் அவர் எங்கும் சென்று படிக்கலாம் என்பதைக் கண்டார். வாலெடிக்டோரியன் என்றால் தொடர்ந்து படிப்பில் ‘ஏ’ கிரேடு பெற்று, பட்டமளிக்கும் விழாவில் பேசும் திறன் படைத்தவர் என்று அர்த்தம். கடுமையாக உழைத்த மெலிண்டா ‘ஏ’ கிரேடு பெற்று முதன்மை மாணவியாக ஆனார். ட்யூக் கல்லூரியில் சேர்ந்தார். முதல் வெற்றியை அடைந்தார்.

அடுத்து ஆயிரத்திதொள்ளாயிரத்து எண்பதுகளில் கம்ப்யூட்டர் யுகம் ஆரம்பித்தது. அதில் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தினர். அதிர்ஷ்டவசமாக மெலிண்டாவின் திறனையும் உயர் நோக்கத்தையும் தெரிந்து கொண்ட அவரது ஆசிரியை திருமதி பார் தனது பள்ளித் தலைவியிடம் சிபாரிசு செய்து மெலிண்டாவிற்கு ஒரு கம்ப்யூட்டரை வாங்கிக் கொடுத்தார். ப்ரொக்ராமில் தீவிர ஈடுபாடு கொண்ட மெலிண்டா அதில் தேர்ந்து 1987ல் மைக்ரோசாப்டில் ஒரு இளம் வயது பெண் நிர்வாகி ஆனார். இது அவரது இரண்டாவது சாதனை.
ஆனால் வீட்டிலும் பெண் என்றால் ஒரு பங்கு குறைவான மதிப்பு தான். ஆனால் இதை தனது வீட்டிலும் அவர் மாற்றினார். “அம்மா சமையலறையை விட்டு வெளியில் போகும் வரை யாரும் சமையலறையை விட்டுப் போகக் கூடாது” என்று ஒரு விதியைப் பிறப்பித்தார். வீட்டிலும் ஆண்- பெண் சம உரிமை நிறுவப்பட்டது.
மைக்ரோ சாப்ட் நிறுவனரான பில்கேட்ஸும் இவரும் காதல் வயப்படவே 1994ல் அவரை மணந்தார்.
இவரது வாழ்க்கையில் ஏராளமான முன்னேற்றங்கள் ஏற்படவே கோடி கோடியாகப் பணம் வந்து குவிய ஆரம்பித்தது.
மூன்று குழந்தைகளைப் பெற்ற அவர் 2021ல் விவாகரத்து செய்து கொண்டார்.
ஆரம்பத்தில் அவர் மைக்ரோ சாப்டில் ஏராளமான முன்னேற்றங்களைச் செய்தாலும் தான் முன்னணியில் வராமல் பில் கேட்ஸையே முதன்மைப் படுத்தினார்.
ஆனால் மலாவிக்குப் பயணம் மேற்கொண்ட போது அவர் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அங்கு அவரைச் சந்தித்த பெண்கள் குழு அவரிடம், “நீங்கள் ஒருவர் மட்டுமே தான் எங்களின் குரலாக இருக்கிறீர்கள்” என்று உருக்கமாகக் கூறியது. இதனால் விழிப்புணர்வு கொண்ட அவர், பேசாமல் இருப்பது மிகச் சிறந்த குணம் என்று தான் கருதுவது சரியல்ல என்று உணர்ந்தார். கூட்டங்களில் முதன்மையான பேச்சாளராக ஆனார். உலகளாவிய விதத்தில் கர்ப்பத்தடையைப் பற்றி அவர் பேச ஆரம்பிக்கவே உலகமே அவர் கொள்கையை ஏற்றது.
2021ம் ஆண்டு விவாகரத்தையொட்டி விவாகரத்து ஒப்பந்தப்படி 1200 கோடி டாலரை அவர் பெற்றார். ‘பில் அண்ட் மிலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரையும் கேட்ஸ் ஃபவுண்டேஷன் என்று மாற்றி சுதந்திரமாக இயங்கத் தொடங்கினார். கல்வி, ஆரோக்கிய மேம்பாட்டிற்காகப் பாடுபடலானார்.
இப்போது பிவடல் வெஞ்சர்ஸ் (PIVOTAL VENTURES) என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நேரடியாகப் பெண்களுக்கு உதவி செய்து வருகிறார்.
எவ்வளவு பணம் என்று கேட்டால் மயக்கம் தான் வரும்.
2026 மத்தியில் 466 லட்சம் டாலர் பணத்தை வீடு, குழந்தைகள், குடும்பம் இவற்றிற்கான முன்னேற்றத்தில் இந்த நிறுவனம் முதலீடு செய்தது. (ஒரு டாலரின் இன்றைய மதிப்பு ரூ95.76 ஆகும்)
ஆணுக்கும் பெண்ணுக்குமான இடைவெளி சமுதாயத்தில் அதிகமாக இருப்பதைக் கண்டு நொந்து போன அவர் 1500 லட்சம் டாலரை ஒதுக்கி இந்த இடைவெளியை நீக்கப் பாடுபட்டு வருகிறார். வீட்டிலும் அலுவலகத்திலும் இருவருக்கும் சம உரிமை உண்டு என்பதே இவரது கொள்கை.
பெண்களுக்கான மருத்துவ சேவையில் அதிருப்தி கொண்ட இவர் தானே நேரில் களத்தில் இறங்கினார். மாதவிலக்கின் போதும், பிரசவத்தின் போதும் அவர்கள் படும் பாடைப் போக்குதல், இதய நோய்க்கான சிகிச்சைகள், பெண்களின் மன நல மேம்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மருத்துவத் துறையில் பெரிய அளவில் முதலீடு செய்து பாடுபட்டு வருகிறார்.
உலகின் பிரபல பத்திரிகையான போர்பஸ் பத்திரிகை இவரை உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவர் என்று வர்ணிக்கிறது. பிபிசி தனது 2021ம் ஆண்டில் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் நூறு பேரில் இவரையும் சேர்த்துள்ளது.
உலகில் உள்ள பணக்காரர்களில் 72வது இடத்தை இன்று வகிக்கும் இவரது இன்றைய சொத்தின் மதிப்பு மூவாயிரம் கோடி டாலர்கள் ஆகும்!
தமிழக வரலாற்றில் பாரி, ஓரி என்று வள்ளல்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
உலகளாவிய விதத்தில் பிரமிக்க வைக்கும் செல்வத்தை நன்கொடையாக அளிக்கும் இந்த ‘ உலக வள்ளலை’ என்ன பெயரிட்டுக் கூறி வியந்து போற்றுவது?!!
***