
Written by London Swaminathan
Post No. 16,292
Date uploaded in London – 10 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இதற்கு முன்னர் வெளியிட்ட 30 கேள்விகள் கடைசியில் உள்ளன ; விடைகள் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.
விசுவாமித்திர முனிவன் அதி பயங்கர கோபத்துடன் எக்காளச் சிரிப்பு சிரித்து வெளியேற எத்தனித்தபோது , வசிட்ட மாமுனிவன் ப்ளீஸ் வெயிட், ப்ளீஸ் பி பேஷண்ட் PLEASE WAIT, PLEASE BE PATIENT என்று சொல்லி தசரதனுக்கு என்ன சொன்னான் ?
32
நீ தேரோட்டி மகன் ; க்ஷத்ரியர்கள் போட்டியில் நீ இடம்பெற முடியாது என்று கர்ணனிடம் சொன்னபோது, உடனே அவனை இன்று முதல் அங்க நாட்டுக்கு மன்னன் என்று டிக்ளேர் DECLARATION செய்து பிளாஷ் நியூஸ் FLASH NEWS வெளியிட்டான் துரியோதனன் ; அந்த அங்க நாட்டுக்கு ஏன் அங்கம் என்று பெயர் வந்ததாகக் கம்பன் செப்புகிறான் ?
33
ராம லெட்சுமணர்களுக்கு பலா , அபலா என்ற இரண்டு மந்திரங்களை விச்வாமித்ரன் அளித்தானே ; அவைகளின் பொருள் என்ன? காளிதாசன் இது பற்றி விளம்பியது என்ன ?
34
தாடகை என்னும் அரக்கியை கம்பன் எப்படி அழகாக வருணிக்கிறான் ?
35
ராமனைப் பார்த்த ஆண்களுக்கு, தாங்கள் பெண்களாகப் பிறந்து இவரை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை எழுமாமே! கம்பனின் அதீதக் கற்பனை வரும் பாடல் எது ?
36
இந்தியாவில் எரிமலைகள் /VOLCANOES கிடையாது ; ஆயினும் தாடகையை கம்பன் வால்க்கேனோ – எரிமலை என்று வருணிக்கும் வியப்பான இடம் எது?
37
தமிழ்க்கடல் தந்த அகத்தியனை கம்பன் எப்படி அறிமுகப்படுத்துகிறான் ?
38
செவிடன் காதில் ஊதிய சங்கு போல என்று தமிழ்ப்பழமொழி உண்டு; ஆனால் கம்பன், தீயவர் காதில் போட்ட சொற்கள் ஒரு காதில் சென்று மனத்தில் தங்காமல் மறு காது வழியாகப் போய் விடும் என்ற உவமையைப் பொருத்தமாகப் பயன்படுத்துவது எங்கே?
39
கம்பன், ராமாயணம் இயற்றும் காலையில், அவருக்கு பேருதவி புரிந்தவர் சடையப்ப வள்ளல் என்னும் பெருந்தகை ஆவார்; அவரை அவ்வப்போது கம்பன் புகழ்ந்து நன்றிக் கடன் செலுத்துவான்; அவ்வாறு முதல்முதலில் புகழும் பாடல் எது ?
40
ஒருவன் செய்த நற்பயன்/ கல்வி அனைத்தும் மறுபிறப்பில் (ஏழு பிறப்புக்கும்) வரும் என்று வள்ளுவன் சொன்னதைக் கம்பன் எப்படிப் பாட்டில் வடிக்கிறான் ?
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

விடைகள்
31.கறுத்த மா முனி கருத்தை உன்னி. ‘நீ
பொறுத்தி’ என்று அவற் புகன்று. ‘நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
மறுத்தியோ?’ எனா வசிட்டன் கூறினான்.
கறுத்த மாமுனி – சீற்றம் கொண்டெழுந்த விசுவாமித்திர
முனிவனது; கருத்தை உன்னி – உள்ளக் கருத்தை நினைத்துத்
தேர்ந்து (அவனை நோக்கி); நீ பொறுத்தி என்று அவன்புகன்று –
நீ பொறத்தருள்வாயாக என அவனுக்குச் சொல்லிவிட்டு (பிறகு
மன்னனைப் பார்த்து); நின் மகற்கு – உனது மகனாகிய ராமபிரானுக்கு;
உறுத்தல் ஆகலா உறுதி – அடைவித்தற்கு அரிய நன்மைகளெல்லாம்;
எய்தும் நாள் மறுத்தியோ – வந்து கூடும் நாளை வேண்டாமென
மறுத்துக் கூறுவாயோ; எனா வசிட்டன் கூறினான் – என்று வசிட்ட
முனிவன் கூறலானான்.
***
32.‘வாரணத்து உரிவையான் மதனனைச் சினவு நாள்.
ஈரம் அற்றும் அங்கம் இங்கு உகுதலால். இவண் எலாம்.
ஆரணத்து உறையுளாய்! அங்க நாடு; இதுவும். அக்
காரணக் குறியுடைக் காமன் ஆச்சிரமமே.
ஆரணத்து உறை யுளாய் – வேதங்களை வாழும் இடமாக
உடையவனே; வாரணத்து உரிவையான் – யானைத் தோலைப்
போர்த்தவனாகிய சிவபிரான்; மதனனைச் சினவு நான்- மன்மதனைக்
கோபித்த நாளில்; ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால் –
பசையற்றுப் போய் அவனது சிதைந்த உடல் இங்குச் சிதறி
வீழ்ந்ததால்; இவணெலாம் அங்கநாடு – இந்த இடமெல்லாம் அங்க
நாடு என அழைக்கப்படும் இடமாகும்; இதுவும் அக் காரணக்குறி
உடைகாமன் ஆச்சிரமமே – இந்த இடமும். அந்தக்காரணக் குறியை
உடைய காமன் ஆச்சிரமம் என்று சொல்லப்படுவதாகும்.
வாரணம்: யானை. ஆரணம்: வேதம். அங்கம் =Body: உடல் (உடம்பு). மன்மதன் எரிந்து
உடலற்றுப்போனதால் அவன் அநங்கன் ( NO BODY; BODY LESS) ஆனான்.
ANGA COUNTRY= BIHAR+ PART OF NEPAL
***
33.நோக்கினன் அவன் முகம்; நோக்க. நோக்குடைக்
கோக் குமரரும் அடி குறுக. நான்முகன்
ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அவ் வழி
ஊக்கினன்; அவை அவர் உள்ளத்து உள்ளினார்.
(விசுவாமித்திர முனிவன்) அந்த அரசகுமரர்களுடைய முகங்களைப் பார்த்தான்;
அவ்வாறு பார்க்கவே. அவ்வரச குமாரர்களும்; முனிவரின்
பாதங்களை வணங்க; பிரம்ம தேவனால் தனக்களிக்கப்பட்ட இரண்டு அரிய
வித்தைகளை; அப்பார்வையின் வழியே அவர்கள் மனத்தில் பதியுமாறு ஊக்குவித்தான்;
அவைகளை அக்குமரர் தமது உள்ளத்தில் நினைத்தனர்.
நோக்கின் வழி ஊக்கினன் என்பது நயன தீட்சை எனப்படும்.
நான் முகன் ஆக்கிய விஞ்சைகள் இரண்டு. பலை அதிபலை என்ற
மந்திரங்களாகும் (விஞ்சை: வித்தை. ஊக்குதல்: செலுத்துதல்.)
இவைகள் களைப்பினைப் போக்கும் ; தன்னுடைய தாயின் அரவணைப்பில் செல்லும் நினைப்பினை உண்டாக்கும்; உலககப் புகழ்பெற்ற காளிதாசன்தான் இதனை விளக்குகிறான் :
तौ बलातिबलयोः प्रभावतो
विद्ययोः पथि मुनिप्रदिष्टयोः।
मम्लतुर्न मणिकुट्टिमोचितौ
मातृपार्श्वपरिवर्तिनाविव॥ ११-९
tau balātibalayoḥ prabhāvato
vidyayoḥ pathi munipradiṣṭayoḥ |
mamlaturna maṇikuṭṭimocitau
mātṛpārśvaparivartināviva || 11-9) RAGHUVAMSAM
பொருள் – கற்கள் நிரம்பிய கடினமான பாதையில் சென்ற இருவர்க்கும் பலா, அதி பலா என்ற இரண்டு வேத மந்திரங்களும் களைப்பினை நீக்கின; தாயாருடன் செல்வது போன்ற எண்ணத்தை உண்டாக்கின. ரகுவம்சம் [11-9]
***
34.‘பெரு வரை இரண்டொடும். பிறந்த நஞ்சொடும்.
உரும் உறழ் முழக்கொடும். ஊழித் தீயொடும்.
இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம்எனின்.
வெருவரு தோற்றத்தள் மேனி மானுமே:
பெரியமலைகள் இரண்டுடனும்; தன்னிடம் தோன்றிய நஞ்சுடனும்;
இடிக்கு ஒப்பான முழக்கத்துடனும்; – ஊழிக் காலத்துப் பெரு நெருப்புடனும்;
இரண்டு பிறைச் சந்திரர்கள் சேர்ந்து; எழுகின்ற கடல் ஒன்று உண்டென்றால் அது;
யாவரும் அஞ்சத்தக்க தோற்றத்தை உடைய அவளது உடலை ஒத்ததாகும்.
பெருவரை: பெரியமலை. கொங்கைகள் இரண்டும் மலைகள் கண்கள்
இரண்டும். நஞ்சு: பெருங்குரல். இடிமுழக்கம். கூந்தல்: ஊழித்தீ.
கோரைப்பற்கள்.
***
35.‘சூடக அரவு உறழ் சூலக் கையினள்;
காடு உறை வாழ்க்கையள்; கண்ணின் காண்பரேல்.
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!-
‘’தாடகை’’ என்பது அச் சழக்கி நாமமே;
ஆடவர் கண்ணில் காண்பரேல் பெண்மையை அவாவும்
தோளினாய் – ஆண்களும் உன்னைக் காண்பாராயின்
பெண்தன்மையை விரும்பத் தகுந்த தோளாற்றலுடையவனே;
கையணியாகப் பாம்புகளை உடையவள் சூலம் உடையவள்;
இவ்வனத்தில் வாழும் வாழ்க்கை உடையவள்;
இத்தகைய இக்கொடியவளது (சழக்கி) பெயர் தாடகை என்பதாம்.
ராமனது தோளாற்றல் கண்ட ஆண்களும். பெண்மையை அவாவுவர் என்றார்.
அவாவுதல்: விரும்புதல். சழக்கி: கொடியவள்.
****
36.கைவரை எனத் தகைய காளை உரை கேளா
ஐவரை அகத்திடை அடைத்த முனி ‘ஐய!
இவ் வரை இருப்பது அவள்’ என்பதனின் முன்பு ஓர்
மை வரை நெருப்பு எரிய VOLCANO வந்ததென வந்தாள்.
துதிக்கையையுடைய மலையை ஒத்ததான யானை போன்றவனும், காளையை ஒத்தவனுமாகிய
இராமன்; உரையைக் கேட்டு; இந்திரியங்கள் ஐந்தினையும் மனத்தில்
அடக்கியமுனிவன்; இராம! அந்தத் தாடகை இருப்பது இந்த மலைதான்;
என்று சுட்டிப் காட்டுவதற்கு முன்பாக;
ஒரு கரியமலை உச்சியில் நெருப்பு எரிந்து கொண்டிருக்க VOLCANO;
எதிரில் வந்தது போலத் தாடகை எதிரே வந்தாள்.
‘ஓர் மைவரை நெருப்பு எரிய = எரிமலை = VOLCANO
***
37.‘தமிழ் எனும் அளப்ப அருஞ் சலதி தந்தவன்
உமிழ் கனல் விழி வழி ஒழுக உங்கரித்து
“அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
இழிக!” என உரைத்தனன் அசனி எஞ்சவே.
தமிழ் என்னும் கடல் போன்ற மொழியைத் தந்தவன் என்றும் கடலைக்குடித்த முத்தமிழ் முனிவன் அகத்தியன் என்றும் பொருள் சொல்லலாம் ;
அவருடைய வனத்திலுள்ள மான்களைத் தின்ற பெண்ணை அரக்கியாகுக என்று அவர் சாபம் இட்டதை இப்பாடல் இயம்புகிறது .
****
38.சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம் கரிய செம்மல்
அல் ஒக்கும் நிறத்தினாள்மேல் விடுதலும் வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று கல்லாப்
புல்லார்க்கு நல்லோர் சொன்ன பொருள் என போயிற்று அன்றே!
மந்திரம் ஓதும் ரிஷிகளின் சாபச் சொற்களை ஒத்த கடிய வேகமுடைய ஒரு ஒரு அம்பினை கரிய நிறமும்,
அழகும் உடைய இராமபிரான், இருள் போன்ற நிறத்தை உடைய தாடகையின் மீது செலுத்தி விடவே; (அந்த அம்பு) வைரம் பாய்ந்த கல்போன்ற
அத்தாடகையின் நெஞ்சில் தங்கியிராமல்; (நெஞ்சில் பாய்ந்து) பின் முதுகின் புறமாகக் கழன்று; கல்வி அறிவில்லா புன்மையாளருக்கு நல்லவர்கள் சொன்ன நல்ல பொருளைப் போல ஓடிப்போய்விட்டது!
தாடகையின் முதுகுப்புறம் ராமனது அம்பு விரைந்து சென்றது என்ற உவமை நயம் உணரத்தக்கது.
***
தாடகையை வீழ்த்தியதற்காக தேவர்கள் ராம பிரானை வாழ்த்தினர் .
39.விண்ணவர் போய பின்றை விரிந்த பூமழையினாலே
தண்ணெனும் கானம் நிங்கி தாங்க அருந் தவத்தின் மிக்கோன்
மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் வெண்ணெய்
அண்ணல்தன் சொல்லே அன்ன படைக்கலம் அருளினானே.
தேவர்கள் வாழ்த்திச் சென்ற பிறகு; தேவர்கள் பொழிந்த விரிந்த மலர்
மாரியாலே; ‘குளிர்ந்த அந்தக் கானத்தை விட்டகன்று; தாங்குதற்கரிய
தவம் மிகுந்த விசுவாமித்திர முனிவன்; – உலகத்தவரின் ‘வறுமை’ என்னும் நோய்க்கு;
மருந்தைப்போன்றதான சடையப்ப வள்ளலாகிய திருவெண்ணெய் நல்லூர் அண்ணலுடைய;
சொல்லையே போன்றதாகிய படைக்கலங்களை இராம. இலக்குவர்களுக்கு ஈந்து அருளினான்.
***
40.ஆறிய அறிவன் கூறி அளித்தலும். அண்ணல்தன்பால்.
ஊறிய உவகையோடும் உம்பர்தம் படைகள் எல்லாம்.
தேறிய மனத்தான் செய்த நல்வினைப் பயன்கள் எல்லாம்
மாறிய பிறப்பில் தேடி வருவபோல் வந்த அன்றே.
ஆறிய அறிவன் கூறி அளித்தலும்-துயர்தீரப்பெற்ற அறிவனாகிய
முனிவன் உரிய மந்திரங்களைக் கூறி ஈந்ததும்; உம்பர்தம் படைகள்
எல்லாம் – தெய்வத்தன்மை உடைய அப்படைக்கலன்களெல்லாம்;
தேறிய மனத்தான் செய்த – தெளிந்த மனம் உடையவன் முன்பு
செய்த; நல்வினைப் பயன்கள் எல்லாம் – நல்வினைப் பயன்
அனைத்தும்; மாறிய பிறப்பில் தேடிவருவ போல் – மாறி எடுத்த
அடுத்த பிறவியிலும் செய்தவனைத் தேடிவந்து அடைவது போல;
ஊறிய உவகை யோடும் – ஊற்றம் மிக்க களிப்போடும்; அண்ணல்
தன்பால் வந்த – பெருமைமிகுந்த ராமபிரானிடம் வந்து சேர்ந்தன.
****************************************************************

இதற்கு முன்னர் வெளியிட்ட 30 கேள்விகள் ; விடைகள் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்
1
அஞ்சிலே ஒன்று பெற்றான் — என்னும் அருமையான கம்பன் பாடலின் பொருள் என்ன?
2
ராம என்ற இரண்டே எழுத்துக்கள் தரும் அற்புதப் பலன்கள் பற்றி கம்ப இராமாயண சிறப்புப் பாயிரத்தில் ஒரு பாடல் உள்ளது. நினைவுக்கு வருகிறதா அந்தப்பாடல்?
3
எந்த ஒரு நூலினையும் மங்களச் சொற்களுடன் துவங்க வேண்டும் என்ற விதி சம்ஸ்க்ருத நூல்களிலும் தமிழ் நூல்களிலும் உள்ளது ; கம்பன், தனது ராமாயணத்தை, எந்தச் சொல்லுடன் துவங்குகிறான்?
4
கம்பனும் காளிதாசனும் என்ன சொல்லி நூலை எழுதத் துவங்கினார்கள் ?
5
போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் ; போங்கடா போங்க! நான் சொல்வது தெய்வ மாக்கவி எழுதிய கவிதை என்று கம்பன் செப்பியது எங்கே ?
6
வால்மீகியைத் தவிர வேறு இருவர் ஸம்ஸ்க்ருதத்தில் ராமாயணம் எழுதினார்கள் என்று கம்பன் ஒரு புதிர் போடுகிறானே ! அந்தப் புதிருக்கு விடை கிடைத்ததா?
7
தெய்வ மாக்கவி, முதலில் ராமாயணம் சொன்னவர் என்றெல்லாம் வான்மீகி முனிவரைப் போற்றிய கம்பன் அவருடைய பெயரை எங்கேயாவது பகர்ந்தானா?
8
கம்பன் சர்வ சமய நோக்குள்ளவன்; சைவ, வைணவ பேதம் பாராட்டாதவன் ; முடிந்த அளவுக்கு சிவன் பெருமையை அவன் பாடுகிறான் ; சரயு நதிப் பாடலில் சிவனை அவன் எப்படிப் புகழ்கிறான்?
9
ஆகாசாத் பதிகம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்கார: கேசவம் பிரதி கச்சதி – என்று பிராமணர்கள் தினமும் மூன்று வேளை சந்தியா வந்தன மந்திரத்தில் சொல்கிறார்கள் ; இதைக் கம்பனும் சொல்லி, சர்வசமய பொதுநோக்கினைக் காட்டும் பாடல் எது?
10
கம்பன் போகிற போக்கில் Music மியூசிக் பற்றி ஒரு அருமையான உவமை சொல்கிறான் ; இந்தப்பாடலின் பொருள் விளங்குகிறதா?
பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும்,
பருந்தொடு நிழல் சென்றன்ன இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,
மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்,
விருந்தினர் முகம் கண்டன்ன விழா அணி விரும்புவாரும்.
***
11
கம்பன் சொல்லும் அதிசய மூலிகைகள் எவை ?
12
தூக்கணாங் குருவிகள்தான் மனிதனுக்கு வீட்டில் விளக்கு ஏற்றுவதைச் சொல்லிக் கொடுத்தன; அவை மின்மினிப் பூச்சிகளை பிடித்துக் கொண்டு போய் கூட்டில் வைத்து அழகு பார்க்கும்; இதைத் தற்கால தீபாவளி, நவராத்ரி, கிறிஸ்துமஸ் டெக்கரேஷன்களுடன் DECORATIONS ஒப்பிடலாம் ; இந்த அதிசயத்தைக் கம்பன் எங்கே குறிப்பிடுகிறான் ?
13
கோசல நாட்டுப் பெண்கள் நல்ல படித்த பணக்கார பெண்களாம்; ஆயினும் அவர்கள் ஆபீசுக்குப் போகாமல் வந்த விருத்தினர்களைக் கவனிப்பதே வேலையாகச் செய்தார்களாம் ; கம்பனின் இந்த கற்பனை வளத்தை எங்கே காணலாம்?
14
வாலிபால் என்னும் விளையாட்டினைக் கண்டு பிடித்தவர்கள் தமிழ்ப் பெண்கள்தான் ! பிற்காலத்தில் பூப்பந்தாட்டம் துவங்குவதற்கு அவர்களே காரணம் ; இதைச் சங்க இலக்கியப்பாடல்களில் காண்கிறோம்; கம்பன் அவர்கள் தினசரி ட்ரெயினிங் எடுத்தத்தைச் சொல்கிறானே ! அது என்ன பாடல்?
15
தாலி பற்றி அடிக்கடி தாலி அறுக்க விரும்பும் பெண்கள் கட்டுரைகளை எழுதி அவர்களின் அறியாமைக்கு ஆயிரம் வாட் பல்ப் THOUSAND WATT BULB போட்டு காட்டுவதை அவ்வப்போது படிக்கிறோம்; ஆனால் மு.சண்முகம் பிள்ளை , கம்பனும் மில்டனும் நூல் எழுதி டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் எஸ் ஆர் கே ஆகியோர் தாலி உண்டு என்று இலக்கியக் குறிப்புகளைக் காட்டினார்கள் !கம்பனும் தாலி உண்டு என்கிறான் ! அது எங்கே?
16
பட்டி மண்டபம் இன்று பட்டி மன்றமாகிவிட்டது ; பட்டி விக்ரமாதித்யன் என்ற மாபெரும் மன்னனும் அறிஞனும் உண்டாக்கிய விவாத சபை இது ! மாணிக்க வாசகரும் ஒன்றும் அறியாத என்னை பட்டி மண்டபம் ஏற்றினையே என்கிறார் ; ஏனெனில் அவரை புத்தர்களுடன் வாதிடும்படி சிதம்பரம் தீட்சிதர்கள் அழைத்துச் சென்றுவிட்டனர் ; அயோத்தியில் பல MANY HALLS ஹால்கள்;உண்டாம்; அதில் ஒன்று அறிஞர்கள் மோதும் பட்டி மண்டபம் என்கிறானே கம்பன் ; அதைச் செப்பிய இடம் யாதோ!
17
யுவான் சுவாங் என்னும் சீன யாத்ரீகன் அப்பர், மஹேந்திர பல்லவன் காலத்தில் வந்தான் ; அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் குப்தர் காலத்தில் வந்த சீன யாத்ரீகன் பாஹியான்– குப்தர் காலத்தில் வீடுகளுக்கு கதவுகள் இல்லை; அந்த நாட்டில் திருடர்கள் இல்லை என்றான்; கம்பன் கண்ட அயோத்தியின் நிலை என்ன?
18
முதல் முதலாக கம்பன் ராவணனை அறிமுகப்படுத்தும் இடம்– தேவர்கள் அவன் செய்த அட்டூழியங்களை முறையிட்ட இடம் –ஆகும் . வால்மீகியில் இல்லாத அவதார விஷயத்தைக் கம்பன் இங்கே செப்பினானா ?
19
கம்பன் கருத்துப்படி வானரங்கள் – குரங்குப்படை யார் ?
20
துளசிதாஸ் எழுதிய ஹனுமான் சாலீஸாவில் அனுமன், சிவ பெருமானின் அவதாரம் என்கிறார் ; கம்பன் என்ன சொன்னான் ?
21
விஷ்ணு ராமனாகவும், சிவன் அனுமனாகவும் தேவர்கள் வானரங்களாகவும் அவதரித்ததாகக் கம்பன் சொன்னதைப் பாடல்களில் கண்டோம்; வாலி, சுக்ரீவன் யார் அவதாரம் ?
22
ரிஷ்யஸ்ருங்க முனிவரின் தமிழ்ப் பெயர் கலைக்கோட்டு முனிவர் (கலை-மான்); அவரை கம்பன் எப்படிப் புகழ்கிறான் ?
23
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை — என்று மூதுரை நூலில் தமிழ் மூதாட்டி ஔவையார் பாடியுள்ளார்.ரிஷ்ய ச்ருங்க முனிவர் நகருக்குள் நுழைந்தவுடன் என்ன நடந்தது ?
24
சோழர்கள் ஒரிஜினல் தமிழர்கள் அல்ல என்று புறநானூற்றுப் புலவர்களும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவும் குறிப்பால் உணர்த்துகின்றார்கள்.வடமேற்கு இந்தியாவை ஆண்ட சிபி என்னும் சூரியகுல மன்னன் அவர்களின் முன்னோன் ; கம்பன் செப்புவது என்ன ?
25
கலைக்கோட்டு முனிவன் தசரதனுக்காக புத்ர காமேஷ்டி யாகம் செய்தவுடன் அக்கினி குண்டத்திலிருந்து வந்த தேவன், பாயசம் ஏந்திய கலத்தைக் கொண்டுவந்தான் என்று வால்மீகி கூறுகிறார்; கம்பன் வேறு கதை சொல்கிறானே!
26
சுமித்திரைக்கு மாட்டும் இரட்டைப்பிள்ளைகள் பிறந்தது ஏன் என்று கம்பன் காட்டுகிறான்?
27
கம்பன் சொல்லும் ஜாதகக் குறிப்புகள் என்ன ? ராமன் , லெட்சுமணன் நட்சத்திரங்கள்- ராசிகள் என்ன ?
28
வள்ளுவர் பற்றிக் கம்பன் புகல்வது யாது?
29
ராமனை என்னோடு காட்டுக்கு அனுப்பு என்று விச்வாமித்ர முனிவன் சொன்னவுடன் தசரதன் அவனைவிட்டுவிடு, நானே வருகிறேன், என்று சொல்லி எப்படித்துடித்தான் ?
30
விசுவாமித்திர முனிவரின் கோபத்தையும் எக்காளச் சிரிப்பையும் கம்பன் எப்படி அழகாக வருணிக்கிறான்?
–subham—
Tags- கம்ப ராமாயணம், பாடல்கள்,40 கேள்விகள்
