கம்ப ராமாயணத்தில் 150 கேள்விகள் (Post.16,328)

Written by London Swaminathan

Post No. 16,328

Date uploaded in London – 21 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

இதற்கு முன்னர் வெளியிட்ட 140 கேள்விகளும், விடைகளும்  எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.

ஜடாயுவும் ராமனும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தி முடிந்தவுடன் விடைபெற்றுக்கொண்டு, கோதாவரி நதிக்கரைக்கு வந்தனர் ; அதாவது தென்னிந்தியாவுக்குள்  நுழைந்தனர் ; இவ்வளவு தூரம் வருவதற்கு அவர்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துக் கொண்டனர்.

141

கோதாவரி நதியைக் கம்பன், சான்றோரின் கவிதைக்கு ஒப்பிட்டதில் உள்ள சிலேடை என்ன?

142

பஞ்சவடியில் (பஞ்ச வட= ஐந்து ஆலமரம்) லெட்சுமணன் அமைத்த குடிசையில்  ராமன் தங்கவே சூர்ப்பனகை வந்தாள்; அவளை முதல் பாடலிலேயே “பிறக்கும்போதே தோன்றிய வியாதி” என்கிறான் கம்பன் ; மேலும் ராவணனுக்கு “சாவு மணி அடிக்கப்போகிறாள்” என்று சினிமா டைரக்டர் போல அறிமுகப்படுத்தியது எங்ஙனம்?

143

ராமனைக் கண்ட சூர்ப்பணகை அவனை மன்மதனோ, சிவ பெருமானோ, விஷ்ணுவோ என்று எண்ணி இல்லை, இல்லை, இல்லை என்று முடிவு செய்தது எப்படி?

144

அரக்கி உருவம் கொண்ட சூர்ப்பணகை லட்சுமி மந்திரம் சொல்லி பேரழகி ஆனாள்; அவளுடைய அன்ன நடையைக் கம்பன் பாட்டிலே காணலாமா ?

.     பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர்

பல்லவம் அனுங்க,

செஞ் செவிய கஞ்சம் நிகர்,

சீறடியள் ஆகி,

அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம்

என, மின்னும்

வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச

மகள் வந்தாள்.

(பாட்டின் பொருளை விடைகள் பகுதியில் காண்க)

145

சூர்ப்பணகையைக் கண்ட ராமன் அழகிற்கு அவதி உண்டோ – இவள் அழகிற்குஎல்லை உள்ளதோ?- என்று வியந்தது ஏன்?

146

நான் யார் தெரியுமா ? தமிழ் நாட்டு முதலமைச்சர் மகள் என்று சூர்ப்பணகை சொன்னாளா ?அல்லது உத்தரப்பிரதேச எம்.பி யின் மகள் என்று சொன்னாளா ? அல்லது லோக்கல் எல் எல் ஏ புதல்வி என்று சொன்னாளா ? எப்படித் தன்னை INTRODUCE இன்ட்ரொட்யூஸ் பண்ணிக்கொண்டாள்?

147

ஏ பெண்ணே ! பெத்த பெத்த பெயரையெல்லாம் செப்புறாயே !  ஹெலிகாப்டரைக் காணோம்; ரோல்ஸ்ராய் காரையும் காணோம் ; இப்படித் தனியா வந்தது எப்படின்னு ராமன்  வினவவே அப்பேரழகி யின் விடை என்ன?

148

ஐ லவ்  யூ I LOVE YOU ன்னு பெண்கள் சொல்ல மாட்டாங்க ; நீயே புரிஞ்சுக்கோப்பா – என்று ராமனிடம் சூர்ப்பணகை கோடி காட்டியது எப்படி?

149

சூர்ப்பணகையிடம் ஓ பியூட்டி ! சுந்தரி ! நீ பாப்பாத்தி ; நானோ க்ஷத்ரியன் என்று ஜாதி வேறுபாட்டைச் சொல்லி ராமன் தப்பிக்க முயன்றானா ?

150

ராமன் ஜாதி வித்தியாசத்தைக் காட்டி மறுத்தவுடன் சால கடங்கடர்  கதை சொன்னாளே சூர்ப்பணகை ; அது என்ன கதை ?

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

விடைகள்

141.புவியினுக்கு அணிஆய், ஆன்ற பொருள்

தந்து, புலத்திற்று ஆகி

அவி அகத் துறைகள் தாங்கி,

ஐந்திணை நெறி அளாவி,

சவி உறத் தெளிந்து, தண்ணென்

ஒழுக்கமும் தழுவி, சான்றோர்

கவி எனக் கிடந்த கோதாவரியினை

வீரர் கண்டார்.

பூமிக்கு ஓர் அணிகலன் போன்று அழகூட்டுவதாய் அமைந்து, சிறந்த பொருள்களைக் கொடுத்து,வயல்களுக்குப் பயன்படுவதாக ஆகி, தன்னுள் அமைந்த பல நீர்த் துறைகளைக் கொண்டு, குறிஞ்சி-முல்லை- பாலை- மருதம்- நெய்தல் எனும் ஐந்து நிலப்பகுதி வழிகளில் பரவிச் சென்று, செவ்வையாய் தெளிவுடையதாகி  குளிர்ந்த நீரோட்டமும் உடையதாய் கல்வியில் நிறைந்த பெரியோரின் செய்யுள் போல் விளங்கிய கோதாவரி எனும் ஆற்றை இராமலக்குவராம் வீரர்கள் பார்த்தனர்.

இதையே கவிதையிலும் காணலாம் :

உலக மக்களுக்குப் பல அலங்காரமாகி, சிறந்த அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய உறுதிப் பொருள்களை உணர்த்தி,அகப் பொருள் துறைகளை ஏற்று,  குறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல் எனும் ஐந்து அக ஒழுக்கங்கள் விரவப் பெற்று ,பொருள் தெளிவுற அமைந்து நல்லொழுக்கத்தையும் உணர்த்தி,  புலமையால் நிறைந்தவர் செய்யுள்போல ;

செய்யுளிலும் அணி, துறை, 5 திணைகள் , நல்ல பொருள் , ஒழுங்கு என்பன உண்டு ; ஆக இரு பொருள்படும்படி ஆறு = கவிதை என்று இயம்பினான் கம்பன் !

இதற்கான ஆதாரம் நன்னூல்  என்னும் பிற்கால இலக்கண நூலின் சூத்திரத்தில் உள்ளது

‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’ என்பதற்கேற்பப் புவியினுக்கு அணியாக அமைகிறது. நிலமகள் மார்பிற்கு ஆரம் போல் பொலிகிறது; எனலுமாம். ஆன்ற பொருள் – மலைபடு பொருளாம் தேக்கு, சந்தனம் ,அகில் பலவகை மணிகள்

இனிச் சான்றோர் கவி பற்றிக் காணும்போது அணி என்பதை நன்னூலாரும் வல்லோர் அணி பெறச் செய்வன செய்யுள் (நன். 268) என்ற நூற்பாவால் உணர்த்துவர்.  தண்ணென் ஒழுக்கம் என்பதற்கு மெல்லோசையுடன் தட்டுப்பாடு இன்றிச் செல்லும் இனிய நடைப் போக்கு என்பர்.

*********************

142.நம் எல்லோருக்கும் ராமாயணக் கதை தெரிந்ததால் சஸ் பென்ஸ் இல்லை ! கம்பன் ராமாயணம் தெரியாதோருக்கு எழுதுவது போல சஸ்பென்ஸ் வைக்கிறான் !

நீல மா மணி நிற நிருதர் வேந்தனை

மூல நாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள்,

மேலைநாள் உயிரொடும் பிறந்து, தான் விளை

காலம் ஓர்ந்து, உடன் உறை கடிய நோய் அனாள்,

பாடலின் பொருள் இதோ :

நீல மா மணி நிற நிருதர் வேந்தனை – சிறந்த நீல ரத்தினம் போன்ற கருநிறமுடைய இராக்கதர் அரசனாம் இராவணனை; மூல நாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள் – வேரோடு அழிவு அடையுமாறு சூழ்ச்சி செய்து அழிக்கும் வலிமை உடையவளும்; மேலைநாள் உயிரொடும் பிறந்து – உயிரோடு கூடவே தோன்றி; தான் விளை காலம் ஓர்ந்து – தான் செயல்பட வேண்டிய காலத்தை எதிர்பார்த்து, உடன் உறை கடிய நோய் அனாள் – அவ்வுயிரோடு தங்கும் கொடிய வியாதியைப் போன்றவளும்; (ஆகிய சூர்ப்பணகை)

(நிருதர் என்பவர் நிருதி எனும் தென்மேற்குத்

திசைக்குக் காவல் பூண்ட தெய்வத்தின் வழி வந்தவர் என்பர்.  உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்ற வழக்கிற்கேற்பச் சூர்ப்பணகையை ‘உடன் உறை கடிய நோய் அனாள்’ என்றார்.  இராவணனின் சகோதரி இவள்.

*********************

143.’சிந்தையின் உறைபவற்கு

உருவம் தீர்ந்ததால்;

இந்திரற்கு ஆயிரம்

நயனம்; ஈசற்கு

முந்திய மலர்க் கண் ஓர் மூன்று;

நான்கு தோள்,

உந்தியில் உலகு அளித்தாற்கு’

என்று உன்னுவாள்.

இராமனின் அழகைக் கண்டு வியந்த சூர்ப்பணகை ‘இவன் மன்மதனோ?’ என முதலில் ஐயுற்றாள். ‘மன்மதனுக்கு வடிவமில்லை. இவனோ வடிவுடையவன். எனவே இவன் மன்மதனன்று’ எனத் தெளிந்தாள்.

பின்னர் ‘இவன் இந்திரனோ, சிவனோ, திருமாலோ’ என ஐயுற்றபின் முறையே ஆயிரங் கண்ணும், மூன்று கண்ணும், நான்கு கையும் இல்லாததால் அவர்கள் இல்லை  எனத் தெளிந்தாள்.

*********************

144.பாட்டின் பொருள் இதோ :

பஞ்சி – செம்பஞ்சும், ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க –

மிகச் செழித்த தளிர்களும் (செம்மையிலும் மென்மையிலும் தமக்கு ஒப்பாகாமல்) வருந்தும்படி; செஞ்செவிய கஞ்சம் நிகர் சீறடியள்

ஆகி – சிறந்த அழகுள்ள தாமரைக்கு ஒப்பான சிறிய பாதங்கள்

உடையவள் ஆகி; அம் சொல் இள மஞ்ஞை என – அழகிய

மயில் போலவும்; அன்னம் என – அன்னம் போலவும்; மின்னும் வஞ்சி என – விளங்குகின்ற வஞ்சிக் கொடி போலவும்; நஞ்சம் என- கொடிய விடம் போலவும்; வஞ்சமகள் வந்தாள்- வஞ்சனை புரியும் சூர்ப்பணகை அங்கு இராமன் முன் வந்தாள்.

( இதில் பல உவமைகள் மாலை போல் வந்ததால் மாலையுவமை அணியாம். இப் பாடலில் காணும் சந்த இன்பம் மெல்லொலி நயம்).

*********************

145.அழகிற்கு எல்லை இல்லை: கம்பன் கண்டுபிடிப்பு!

பேர் உழைய நாகர்-உலகில்,

பிறிது வானில்,

பாருழையின், இல்லது ஒரு

மெல் உருவு பாரா,

‘ஆருழை அடங்கும்? அழகிற்கு

அவதி உண்டோ?

நேரிழையர் யாவர், இவர் நேர்?’

என நினைத்தான்.

பேர் உழைய நாகர் உலகில் – பெரிய இடமுடைய நாகங்கள்

வாழும் பாதலத்திலும்; பிறிது வானில் – அதனில் வேறான சுவர்க்க

லோகத்திலும்; பார் உழையின் – நில உலகத்திலும்; இல்லது ஒரு மெல்உருவு பாரா – இல்லாததான ஒப்பற்ற மென்மை பொருந்திய பெண் வடிவைப் (இராமன்) பார்த்து; ஆர் உழை அடங்கும் – இவள் அழகு யாரிடத்து அமையும்?; அழகிற்கு அவதி உண்டோ – இவள் அழகிற்கு எல்லை உள்ளதோ?; நேரிழையர் யாவர் இவர் நேர் என நினைத்தான்– இவளுக்கு ஒப்பான மகளிர் யார் உள்ளார்? என்று எண்ணினான்.

(‘அழகிற்கு அவதி உண்டோ?’ என இங்குக் கேட்ட கேள்விக்கு விடை போலப் பின்னர் ‘அழகிற்கு எல்லை இல்லை ஆம்’ (2791) என்ற தொடர் பின்னர் வரும் ஒரு பாடலில் (2791)அமைந்துள்ளது.)

*********************

146.நான் யார் தெரியுமா ?

‘பூவிலோன் புதல்வன் மைந்தன்

புதல்வி; முப்புரங்கள் செற்ற

சே-வலோன் துணைவன் ஆன செங்கையோன்

தங்கை; திக்கின்

மா எலாம் தொலைத்து, வெள்ளிமலை

எடுத்து, உலகம் மூன்றும்

காவலோன் பின்னை; காமவல்லி ஆம்

கன்னி’ என்றாள்.

பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி – தாமரைப் பூவைத்தன் இருப்பிடமாய்க் கொண்ட பிரமன் மகனாம் புலத்தியரின் மகன் விச்சிரவசுவின் மகள் ஆவேன்; முப்புரங்கள் செற்ற சேவலோன் துணைவன் ஆன செங்கையோன் தங்கை – திரிபுரங்களை எரித்து அழித்த காளை மீது ஏறிச் செலுத்தவல்லவனாம் சிவபெருமானின் நண்பனான சிவந்த கைகளை உடைய குபேரனின் தங்கை ஆவேன்; திக்கின் மாஎலாம் தொலைத்து வெள்ளிமலை எடுத்து உலகம் மூன்றும்

காவலோன் பின்னை – எட்டுத்திசைகளிலுள்ள யானைகளின் வலி எலாம் இழந்து ஓடச் செய்து வெள்ளி மயமான கயிலை மலையைப் பெயர்த்தெடுத்து மூன்று உலகங்களையும் காக்கும் திறம்படைத்த இராவணனின் பின் பிறந்த தங்கை ஆவேன்; காமவல்லி ஆம் கன்னி என்றாள் – காம வல்லி என்ற பெயரையுடைய கன்னி என்று கூறினாள்.

     (உத்தர காண்டத்தில் புலத்தியன் மகனாம் விச்சிரவசு என்பவன் சுமாலியின் மகள் கைகசியை மணந்து இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை, வீடணன் ஆகியோரைப் பெற்றனன் என்பதை அறியலாம்.

வியாச பாரதமும் பெருந்தேவனார் பாரதமும் இதுபற்றி வேறுபட்ட

செய்தியைக் கூறும். அவற்றின் படி விச்சிரவசுவிற்கு மூன்று மனைவியர். அவருள் புட்போத்கடை என்பவளுக்கு இராவணனும் கும்பகர்ணனும் பிறந்தனர். மாலினிக்கு வீடணனும் இராகைக்குக் கரனும், சூர்ப்பணகையும் பிறந்தனர்.  )                                               

****************************

147.இப்படித் தனியா வந்தது எப்படின்னு ராமன்  வினவவே அப்பேரழகி யின் விடை :—

147.வீரன் அஃது உரைத்தலோடும்,

மெய்இலாள், ‘விமல! யான் அச்

சீரியரல்லார் மாட்டுச்

சேர்கிலென்; தேவர்பாலும்

ஆரிய முனிவர்பாலும் அடைந்தனென்;

இறைவ! ஈண்டு ஓர்

காரியம் உண்மை, நின்னைக் காணிய

வந்தேன்’ என்றாள்.

வீரன் அஃது உரைத்தலோடும் – வீரனாம் இராமன்

அவ்வார்த்தையைச் சொன்னவுடன்; மெய் இலாள் –

உண்மையில்லாதவளாம் சூர்ப்பணகை; (இராமனைப் பார்த்து) விமல யான்

அச்சீரியரல்லார் மாட்டுச் சேர்கிலென் – குற்றமற்றவனே! நான் அந்த நற்பண்பும் நற்செய்கையுமில்லாத அரக்கர்களோடு   சேர மாட்டேன் (என் வழி…. தனி வழி…..  என்று ரஜினி காந்த் ஸ்டைலில் பதில் சொன்னாள்) தேவர் பாலும் ஆரிய முனிவர் பாலும் அடைந்தனென் – தேவர்கள் இடத்தும் ,முனிவர்களிடத்தும் சேர்ந்துள்ளேன்; இறைவ ஈண்டு ஓர் காரியம் உண்மை நின்னைக் காணிய வந்தேன் என்றாள் – தலைவனே! இங்கு ஒரு செயல் எனக்கு ஆக வேண்டி இருப்பதால் உன்னைக் காண வந்தேன் என்று சூர்ப்பணகை சொன்னாள்.

********************

148.     ‘தாம் உறு காமத் தன்மை தாங்களே

உரைப்பது என்பது

ஆம் எனல் ஆவது அன்றால், அருங் குல

மகளிர்க்கு அம்மா!

ஏமுறும் உயிர்க்கு நோவேன்; என் செய்கேன்?

யாரும் இல்லேன்;

காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையைக்

காத்தி‘ என்றாள்.

காதல் வேட்கை வந்தால் பெண்கள் தாங்களே வெளிப்படையாகக் கூறுவது,   குலத்திற் பிறந்த பெண்களுக்குப்

பொருந்துவது அழகாகாது ;எல்லா இன்பத்தையும் அடையக் கூடிய உயிரோடு கூடி வாழ்வதற்காக வருந்துவேன், எனக்குத் துணையென யாரும் இல்லை   என்றாள்.  (சூர்ப்பணகை)

*****************

149 ஆமாம் அப்படித்தான் கம்பன் ஜாதி வித்தியாசத்தை இங்கே நுழை க்கிறான் :

நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள்;

வினை மற்று எண்ணி

வந்தனள் ஆகும்‘ என்றே வள்ளலும்

மனத்துள் கொண்டான்;

‘சுந்தரி! மரபிற்கு ஒத்த தொன்மையின்

துணிவிற்று அன்றால்,

அந்தணர் பாவை நீ; யான் அரசரில்

வந்தேன்‘ என்றான்.

அது கேட்ட இராமனும்; நிந்தனை அரக்கி நீதி

நிலை இலாள் – இவள் எல்லோரும் பழிக்கத்தக்க அரக்கி என்பதுடன் நியாய நெறியில் நில்லாதவள்; மற்று வினை எண்ணி வந்தனள் ஆகும் என்றே மனத்துள் கொண்டான் – வேறு ஒரு தீவினையைச் செய்ய நினைத்து இங்கு வந்தாள் ஆக வேண்டும் எனவே மனத்தினுள் முடிவாகக் கருதியவனாய்;

சுந்தரி – அழகிய பெண்ணே!

நான் மன்னர் குலத்தில் பிறந்தவன்; நீயோ அந்தணர் குலத்தில் பிறந்த பெண்; மரபினை மீறி மணம் முடிப்பது வழக்கம் இல்லையே என்றான்

(பண்டைய மரபுப் படி மேற் குலப் பெண்ணை மணத்தல் கூடாது. அந்தணர் பாவை என்றது சூர்ப்பணகையின் புலத்தியர் வழி மரபைக் குறித்ததாகும்).

********************

150.ராமன் ஜாதி வித்தியாசத்தைக் காட்டி மறுத்தவுடன்      சால கடங்கடர்  கதை சொன்னாள்; அந்தக் கதையாவது :-

‘ஆரண மறையோன் எந்தை; அருந்ததிக்

கற்பின் எம் மோய்,

தாரணி புரந்த சாலகடங்கட

மன்னன் தையல்;

போர் அணி பொலம் கொள் வேலாய்!

பொருந்தலை இகழ்தற்கு ஒத்த

காரணம் இதுவே ஆயின், என் உயிர்

காண்பென்’ என்றாள்.

போர் செய்தலே தனக்கு அணிகலமாகக் கொண்ட அழகிய வேலையுடையவனே! என் தந்தை வேதங்களை ஓதியுணர்ந்த விசிரவசு எனும் முனிவர்; அருந்ததி போன்ற கற்பிற் சிறந்த என் தாய், உலகை ஆண்ட சால கடங்கடர் என்னும் அரச குல மரபில் வந்த பெண்;

நீ இசையாமல் என்னை இகழ்ந்து ஏற்றுக் கொள்ளாததற்குத் தக்க காரணம்

இதுவே ஆனால் , என் உயிர்

அழியாமல் அதைப் பெற்றவள் ஆவேன் எனச் சூர்ப்பணகை சொன்னாள்.

இராமன்  ‘அந்தணர் பாவை’ என்று சொல்லி மறுத்தவுடன் சூர்ப்பனகை பிளேட்டை மாற்றிப்போட்டு நான் அரசன் வழி வந்தவள் என்கிறாள் ; ‘மணம் செய்து கொள்வானாயின் என் காம வேதனை தணிந்து பிழைத்திடுவேன்’ என்றாள். ‘என் உயிர் காண்பென்’ என்பதற்குச் ‘சாவேன்’ என்று பொருளுரைப்பாரும் உளர்.

சால கடங்கடர் மரபு – அரக்கர் குலத்தில் பிறந்த ஏதி என்பவன் மகன் வித்யுத் கேசன் என்பவன் சந்தியையின் மகளாம் சாலகடங்கடை என்பவளை மணந்து சுகேசனைப் பெற்றாள். அவன் மக்களாம் மாலியவான்,

சுமாலி, மாலி என்பவருள் சுமாலியின் மகள் கேகசி என்பவள் இராவணன், சூர்ப்பணகை முதலியோரைப் பெற்றனள். மேலும் சாலகடங்கடை பிள்ளையைப் பெற்றவுடன் தனியே விட்டு விட்டுக் கணவனுடன் சென்றாள். யாருமின்றிக் கிடந்த குழந்தையைச் சிவனும் உமையும் எடுத்து அதற்கு அப்போதே தாய்க்குச் சமமான பருவம் உண்டாக அருள் புரிந்து நீண்ட

ஆயுளையும் வானில் பறந்து செலும் நகரத்தையும் அளித்தனர். அது முதல் அரக்கர் மகளிர் விரைவிற் கருவுறலும், உடன் மகப்பெறலும், பிறந்த குழந்தை உடனே தாயின் ஒத்த பருவம் அடைதலும் ஆகிய பேற்றைப் பெற்றனர். காலங்காலமாகச் சாலகடங்கடர் ஆண்டு வந்ததால் அரச மரபினர் எனப்பட்டார்.

–subham—

Tags- கம்ப ராமாயணத்தில் 150 கேள்விகள், சூர்ப்பணகை

Leave a comment

Leave a Reply