
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,330
Date uploaded in London – 22 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லலிதா சஹஸ்ர நாம பாராயணத்தால் ஏற்படும் பலன்கள் என்ன? – 1
ச. நாகராஜன்
லலிதா சஹஸ்ர நாமத்தில் ஆயிரம் நாமங்கள் உள்ளன. இதை பாராயணம் செய்வதால் ஏற்படும் பலன்களை சஹஸ்ர நாமத்தில் உள்ள உத்தரபாகத்தில் பலச்ருதி பாகம் கூறுகிறது.
பலச்ருதியில் 87 ஸ்லோகங்கள் உள்ளன. அதைச் சுருக்கமாக தமிழில் கீழே பார்க்கலாம். மூலத்தில் சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் உள்ளன.
ஸ்லோகம் 1
இந்த மாதிரியாக இந்த ஆயிரம் நாமங்களானது, ஹே கடோத்பவ, உனக்குச் சொல்லப்பட்டது.
(ஶ்ரீ ஹயக்ரீவர் கடோத்பவர் என்று அழைக்கப்படும் அகத்திய முனிவருக்குக் கூறியது லலிதா ஸஹஸ்ர நாமம்.)
ஸ்லோகம் 2
ரகசியங்களுக்கெல்லாம் ரகசியமானதும் லலிதாம்பிகைக்குப் பிரியமானதுமான இதற்குச் சமமான ஸ்தோத்திரம் இருந்ததில்லை. இனி இருக்கப்போவதுமில்லை.
ஸ்லோகம் 3
(இந்த ஸஹஸ்ர நாம ஸ்தோத்திரமானது) சகல வியாதிகளையும் அடக்கி விடும். சமஸ்தமான சம்பத்துகளையும் விருத்தி செய்யும். சகல விதமான அகால மிருத்யுவையும் அடக்கி விடும். காலக்ரமத்தில் ஏற்படக்கூடிய மரணத்தையும் நீக்கி விடும்.
ஸ்லோகம் 4
சகலவிதமான ஜுரங்களால் ஏற்படும் கஷ்டங்களை நீக்கி விடும். தீர்க்கமான ஆயுளைக் கொடுக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்ர சம்பத்தைக் கொடுக்கும். புருஷார்த்தத்தையும் நல்கும்.
ஸ்லோகம் 5
இப்படி ஶ்ரீ தேவியின் ப்ரீதியை விசேஷமாகக் கொடுக்கும் இந்த ஸ்தோத்திரத்தை லலிதோபாஸனையில் ஈடுபட்ட பக்தனானவன் தினந்தோறும் சர்வ ப்ரயத்னத்துடன் ஜபம் செய்ய வேண்டும்.
ஸ்லோகம் 6
காலையில் ஸ்நானத்தை முடித்து விட்டு விதிப்படி சந்தியாவந்தன கர்மாவை முடித்து விட்டு பிறகு பூஜை அறைக்குச் சென்று ஶ்ரீ சக்ரத்தை நன்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஸ்லோகம் 7
அம்பாளுடைய வித்யையை ஆயிரம், அல்லது முந்நூறு, அல்லது நூறு தடவையாவது ஜபம் செய்து, பிறகு இந்த ரகசிய நாம சஹஸ்ரத்தைப் படனம் செய்ய வேண்டும்.
(இங்கு வித்யை என்பது பஞ்சதசீ அல்லது ஷோடசீ-யைக் குறிக்கும்)
ஸ்லோகம் 8
நல்ல அறிவுடைய ஒருவன் தனது ஆயுளுக்குள் ஒரு தடவையாவது இந்த மாதிரி கீர்த்தனம் செய்தால் அதனால் அவனுக்கு ஏற்படும் புண்ய பலனைச் சொல்கிறேன். ஹே! கும்பஸம்பவ! கேள்!!
(இங்கு கும்பஸம்பவ என்பது அகத்தியரைக் குறிக்கிறது)
ஸ்லோகம் 9
கங்கை முதலான சகல புண்ய தீர்த்தங்களில் ஒருவன் கோடி ஜன்மங்களில் ஸ்நானம் செய்தாலும், அவிமுக்த க்ஷேத்திரத்தில் ஒருவன் கோடி லிங்கங்களை பிரதிஷ்டை செய்தாலும்,
(காசியில் காசீ, வாராணஸீ, அவிமுக்தம், அந்தர்க்ருஹம் என்று நான்கு ஸ்தானங்கள் உள்ளன.)
ஸ்லோகம் 10
குருக்ஷேத்ரத்தில் சூரிய கிரஹணத்தின் போது கோடி பாரம் எடையுள்ள தங்கத்தை ச்ரோத்ரியர்களான பிராமணர்களுக்கு கோடித் தடவைகள் தானம் செய்தாலும்
(100 பலம் = ஒரு துலாம், 20 துலாம்= ஒரு பாரம்)
ஸ்லோகம் 11
கங்கைக் கரையில் கோடி அச்வமேத யாகங்களை ஒருவன் செய்தாலும், நிர்ஜலமாயிருக்கும் பாலைவன பிரதேசத்தில் கோடிக் கணக்கான கிணறுகளை வெட்டி வைத்தாலும்,
ஸ்லோகம் 12
பிக்ஷை துர்லபமாக இருக்கு துர்பிக்ஷகாலத்தில் பரம சிரத்தையுடன் கோடி பிராமணர்களுக்கு போஜனம் போட்டு அப்படி பன்னீராயிரம் வருடங்கள் செய்தாலும்,
ஸ்லோகம் 13
அந்த புண்ணியத்தின் கோடி மடங்கானதும், அனுத்தமமானதுமான புண்யத்தை இந்த ரகசிய நாம ஸாஹஸ்ரத்தில் இருக்கும் ஒரு நாமத்தைச் சொன்னாலேயே அடையலாம்.
ஸ்லோகம் 14
யாராயினும் ஒருவன் இந்த ரகசிய நாம சஹஸ்ரத்தில் ஒரு நாமத்தைச் சொன்னாலும் கூட அதனால் அவனுடைய மகத்தான பாபங்களும் நசித்துப் போகின்றன. அதில் சந்தேகமே இல்லை.
ஸ்லோகம் 15
நித்ய கர்மாக்களை அனுஷ்டிக்காமல் இருந்தாலும், நிஷித்தமான கர்மாக்களைச் செய்தாலும், அவற்றால் மனிதர்களுக்கு எந்த பாவம் ஏற்பட்டாலும் அதெல்லாம் உடனே நாசமடைகிறது.
** (தொடரும்)