
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,356
Date uploaded in London – 30 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
24-10-26 கல்கி ஆன் லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
மூளைத் திறனைக் குறைக்கும் குப்பை! பிரின்ஸ்டன் ஆய்வு சொல்வது என்ன?
ச. நாகராஜன்
வீட்டிலோ அல்லது ஒரு நிறுவனத்திலோ வேலை பார்க்கும் போது நம்மைச் சுற்றி குப்பை கூளம் அதிகமாக இருப்பதாக அடிக்கடி உணர்கிறோமல்லவா?
இந்த வேண்டாத பொருள்கள் நம் மன நிலையையும் பாதிக்கும் என்று இப்போதைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் உள்ள நியுரோஸயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் fMRI ஸ்கானை வைத்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வு அதிசயமான முடிவுகளைத் தெரிவிக்கிறது. மனித மூளைக்கு எதிலும் ஒரு ஒழுங்கு, நேர்த்தி இருப்பது தான் பிடிக்குமாம். குப்பை கூளங்கள், வேண்டாத பொருள்கள் தேவையற்று நம்மைச் சுற்றி இருப்பதானது நமது மூளையை களைப்படையச் செய்து கவனமின்மையை ஏற்படுத்தி மூளைத் திறனைக் குறைக்கிறதாம். சோதனையில் பங்கேற்றவர்கள் தேவையற்ற பொருள்களைத் தூக்கி எறிந்துவிட்டு வேலை பார்க்க ஆரம்பித்த போது அவர்கள் மூளைத்திறன் கூடி அதிக கவனத்துடன் வேலை பார்க்க ஆரம்பித்தனர். அவர்களது உற்பத்தித் திறனும் கூடியது.
இப்படி தேவையற்ற பொருள்களின் “கூட்டமானது” ஒருவரை எந்த வேலையிலும் முழுமனதுடன் ஈடுபடச் செய்யாமல் “அப்புறம் செய்யலாம்” என்ற மன நிலையை உருவாக்குகிறது.

தேவையற்றதைத் தூக்கி எறி என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி உலகினருக்கு ஒரு புது உத்வேகம் கொடுத்தவர் மேரி கோண்டோ.
9-10-1984ல் ஜப்பானில் ஒஸாகாவில் பிறந்த மேரி, ‘கோன்மாரி வழி’ என்ற புதிய வழியை உலகிற்கு அளித்தார். அதாவது தேவையற்ற பொருள்களை அகற்றும் விதத்தை இவர் நேரில் பல வீடுகளுக்கும் சென்று காண்பித்து அவர்கள் வாழ்வை மேம்பட வைத்தார். 2015ம் ஆண்டு டைம் தனது முக்கியமான நூறு பேர்கள் பட்டியலில் இவர் பெயரையும் சேர்த்தது.
நான்கு புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். ஒவ்வொன்றும் லட்சக்கணக்கில் விற்பனை ஆனது. இளம் வயதிலேயே மற்ற தோழிகள் விளையாடச் செல்லும் போது இவர் பள்ளியில் உள்ள அனைத்தையும் ஒழுங்குபடுத்தி வைப்பாராம். ஒருநாள் நரம்புகள் சுண்டி இழுக்க இவர் சுயநினைவை இழந்து கீழே விழுந்தார். சுமார் இரண்டு மணி நேரம் நினைவே இல்லை. திரும்பி சுயநினைவு வந்த போது ஒரு அசரீரி இவருக்குக் கேட்டது. அந்த அசரீரியின் படி தனக்கு அருகில் இருந்தவற்றை இவர் கூர்ந்து கவனித்தபோது தான் இவரது தவறு இவருக்குப் புலப்பட்டதாம். தேவையற்ற பொருள்களைத் தூக்கி எறிவதை விட மனமகிழ்ச்சி தரும் பொருள்களை அருகில் வைத்திருக்க வேண்டும் என்ற படிப்பினையை இவர் பெற்றாராம்.
ஆகவே மன நிம்மதியை வேண்டும் அனைவரும் முதலில் தாங்கள் வாழும் இடத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என்பது தான் மேரி கோண்டா வழி.
மிக மிக தேவையான பொருள்களை அதனதன் தேவைக்கும் முக்கியத்திற்கும் தக்கபடி அடுக்கி வரிசையாக வைக்க வேண்டும்.
தேவையற்ற பொருள்களைத் தூக்கி எறிய வேண்டும்.
ஒரு எளிய வழி நமது புத்தகங்கள், துணிகள், சொந்த குறிப்புகள், போட்டோக்கள் உள்ளிட்ட அனைத்தையும் சேகரித்து அவற்றைத் தனித்தனியே அடுக்கி வைத்து அன்றைய தேதியையும் அந்தந்தப் பெட்டியின் மேல் குறிப்பிட வேண்டும். சரியாக ஒரு வருடத்திற்குப் பின்னர் அவற்றைப் பார்த்தால் எவை தேவையற்றவை என்பது நமக்குப் புரிந்து விடும். உடனே அவற்றைத் தூக்கி எறிந்து விடலாம். சிலர் அன்றாட பால் பாக்கட்டுகள், தினசரி செய்தித்தாள்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து வைப்பார்கள் – அதை வெளியில் விற்றால் கிடைக்கும் சொற்பத் தொகைக்காக. இது அவர்க:ளை எவ்வளவு பெரிய அளவில் பாதிக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது.
ஒரு ரூபாயைச் சேர்க்கப் போய் நூறு ரூபாயை இழந்த கதை தான்.
சுத்தமான சுற்றுப்புறம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அன்றாட கழிவுப் பொருள்களை உரிய முறையில் அகற்றுவது சமூகத்தை மேம்படச் செய்ய நாம் செய்யும் உதவியும் ஆகும்.
இந்த மேரி கோண்டோ வழி ஒரு நாளையப் பயணம் அல்ல; இது நீண்ட பயணம்- வாழ்நாள் முழுதும் செல்லக்கூடிய பயணம்.
இதனால் கிடைக்கும் ஆதாயமோ சொல்லவொண்ணா மகிழ்ச்சி, திறம்பட்ட வேலை செய்யும் சுகம், மனமகிச்சி தரும் வீட்டுச் சூழ்நிலை உள்ளிட்டவையே.
செய்து பார்த்தால் பலன் தெரியும்; எப்போது ஆரம்பிக்கலாம்.
இப்போதே, இந்தக் கணத்திலேயே!
வாழ்த்துகள் வளமான வாழ்க்கைக்கு!
***