அம்பாளின் தலைநகரம்!– Part 2 (Post No.16,377)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,377

Date uploaded in London –6 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

அம்பாளின் தலைநகரம்! – 2

ச. நாகராஜன்

1. இரும்புக் கோட்டை

ஶ்ரீ நகரத்தின் எட்டு உலோகக் கோட்டைகளில் முதலாவதாக அமைவது இரும்புக் கோட்டை.

இது நாற்கோண வடிவினதாய் ஆயிரத்து அறுநூறு காதம் அகலமும் அதே அளவு நீளமும் உள்ளது. இது ஆகாயத்தை அளாவும் துவஜங்களையும் கோபுரங்களையும் கொண்டதாய் மிக்க மனோகரமாய் விளங்குகிறது.

2. எஃகுக் கோட்டை

இரண்டாவதாக அமைந்துள்ள இந்தக் கோட்டையின் மேல் கட்டப்பட்டுள்ள பல மணிகளின் ஒலியானது ஆகாயத்தை அளாவி முழங்கிக் கொண்டிருக்கும். இதற்கும் முதலாவது கோட்டைக்கும் இடையிலுள்ள பிரதேசத்தில் பூத்துக் காய்த்துப் பழுத்துள்ள பல்வகையான விருக்ஷ மஹோத்தியானத்தில் பல விருக்ஷங்களும் அவற்றின் மேல் படர்ந்தொளிரும் பல கொடிகளும் அக்கொடிகளின் பூங்கொத்துகளிலிருந்து பெருகியோடும் செந்தேனருவிகளும், அவற்றின் தேனை உண்டு மெய்ம்மறந்து ரீங்காரம் செய்யும் வண்டினக் கூட்டங்களும், மயில்கள், குயில்கள், கிளிகள் முதலிய பக்ஷி ஜாலங்களும், செந்தாமரை, வெண்டாமரை, செங்கழுநீர், ஆம்பல் முதலிய பல அழகிய புஷ்பங்கள் நிறைந்த நீரோடைகளும், உத்தியானவனங்களும், மேடை மாளிகைகளும், கூட கோபுரங்களும் சிறந்து விளங்கும்.

அங்கே நீலநிறமான திருமேனியையுடைய மஹாகாளரானவர், காளி என்னும் தனது பத்தினியோடு விளங்கி திரிபுரசுந்தரியைப் பூஜித்துக் கொண்டு ஞான ஐஸ்வரிய போகங்களுடன் ஆனந்தமாய் இருப்பார்.

3. செப்புக் கோட்டை

இது சகல தேவ முனிக்கூட்டங்களின் நேத்திரானந்தமாய் விளங்கும். இதற்கும் இரண்டாவது கோட்டைக்கும் இடையிலுள்ள பகுதியானது கற்பக விருக்ஷங்கள் நிறைந்த தோட்டங்களாலும், நதீநதங்களாலும், பல மாட மாளிகைகளாலும் சிறந்து விளங்குவதாகும். அங்கே மது ஶ்ரீ, மாதவ ஶ்ரீ என்னும் இரு சக்திகளோடு கூடி திரிபுரசுந்தரியை உபாசித்துக் கொண்டு ஞான, விஞ்ஞானம், போக போக்யங்கள், ஆரோக்யம் முதலியவற்றோடு கூடி விளங்கும் வஸந்தன் என்பவன் வசித்துக் கொண்டிருப்பான்.

4. வெள்ளீயக் (தகரக்) கோட்டை

இது தனது வெண்மையான காந்திகளால் விண்ணெங்கும் ஒளியைப் பரப்பி ஆகாயத்தை அளாவும் சிகரக் கூட்டங்களைக் கொண்டதாகும். இதற்கும் மூன்றாவதாக உள்ள கோட்டைக்கும் இடையேயுள்ள பிரதேசமானது நறுமணம் வீசும் மந்தமாருதத்தோடும், ஸந்தான தரு என்னும் கற்பக விருக்ஷங்களோடும் சிறந்து விளங்கும். இங்கே கிரீஷ்ம ருதுவுக்கு அதிதேவதையாகிய புருஷன் சுக்கிர ஶ்ரீ, சுசி ஶ்ரீ என்னும் இரண்டு சக்திகளோடு ராஜராஜேஸ்வரி தேவியின் சரணங்களில் நிலைத்த பக்தியோடு துதித்துக் கொண்டு வாசம் செய்வான்.

5. பித்தளைக் கோட்டை

இது மிகவும் உன்னதமான பல்லாயிரம் பொற்சிகரங்களையும், கொடிகளையும் கொண்டு விளங்கும். இதற்கும் நான்காவதான வெள்ளீயக் கோட்டைக்கும் இடையில் உள்ள பிரதேசமானது ஹரிசந்தனம் என்னும் கற்பக விருக்ஷங்கள் அடர்ந்த தோட்டங்களும், செந்தாமரை, வெண்டாமரை, செங்குவளை, கருங்குவளை முதலிய புஷ்பங்கள் நிறைந்து விளங்கும் கமலாலயங்களும், நடைவாவிகளும் கொண்டு விளங்கும். அங்கே வர்ஷ ருதுவுக்கு அதிபனானவன் உருத்தரித்து நபஶ்ரீ, நபஸ்யஶ்ரீ என்னும் இரண்டு சக்திகளோடும் மிகவும் ஆனந்தமாய்க் கிரீடித்துக் கொண்டிருப்பான்.

6. பஞ்சலோகக் கோட்டை

இது இரத்தினங்களால் இழைக்கப்பட்ட பல்நெடுஞ்சிகரங்களையும். பொன் துவசங்களையும், பதுமைகளையும் கொண்டதாய் விளங்கும். இதற்கும் ஐந்தாவது கோட்டைக்கும் இடையில் உள்ள பிரதேசமானது, என்றும் மலர்ந்து நறுமணம் வீசும் மலர்கள் நிறைந்த மந்தாரமென்னும் கல்ப விருக்ஷ வனங்களும், சுகந்தத்தை வீசும் இனிய தென்றலும், இன்னோரன்ன பல சிறப்புகளையும் கொண்டதாய் விளங்கும். அங்கே சரத் ருதுவுக்கு நாதனானவன், இஷ ஶ்ரீ, ஊர்ஜ ஶ்ரீ என்னும் இரண்டு பிராணநாயகிகளோடு ஶ்ரீ லலிதா தேவியின் சேவையில் தற்பரனாய் விளங்குவான்.

7. வெள்ளிக் கோட்டை

இது தனது பிரகாசத்தால் எங்கும் வெண்மையைப் பரப்பிக் கணக்கற்ற நெடுமுடிகளையும் துவஜங்களையும் கொண்டதாய் விளங்கும். இதற்கும் ஆறாவது கோட்டைக்கும் மத்தியில் உள்ள பிரதேசமானது விண்ணையொட்டித் தாவும்படி உயர்ந்து விளங்கும் பாரிஜாத கல்ப விருக்ஷங்களையும், இன்னிசையோடு கூவும் குயிலினங்களையும், மனோகரமான மாடமாளிகைகளையும் கொண்டதாய்ப் பிரகாசிக்கும். அங்கு அந்த பாரிஜாத வாடிகையில் ஹேமந்த ருதுவுக்கு நாயகனான புருஷன் ஸஹ ஶ்ரீ, ஸஹஸ்ய ஶ்ரீ என்னும் இரண்டு தேவிகளோடும் கிரீடித்துக் கொண்டு பரமேஸ்வரியை அர்ச்சித்துக் கொண்டு விளங்குவான்.

8. தங்கக் கோட்டை

இந்தக் கோட்டைக்குப் பல இரத்தின கோபுரங்களும், மணிப் பதுமைகளும் பொற்கொடிகளும் உண்டு. இதற்கும் ஏழாவது கோட்டைக்கும் இடையில் உள்ள பிரதேசமானது கதம்ப விருக்ஷத் தோப்புகளும், மகரந்தத் திட்டுகளும், செந்தேன் அருவிகளும், மனோகரமான மணத்தோடு உலவும் மந்தமாருதங்களும் மாடமாளிகைகளும் இன்னும் இத்தகைய பலவும் கொண்டதாய் சிறந்து விளங்கும்.

இக்கதம்பவன வாடிகையில் சிசிரருதுவுக்கு நாதனானவன் தப ஶ்ரீ, தபஸ்ய ஶ்ரீ என்னும் இரண்டு சக்திகளோடு மஹா திரிபுரசுந்தரியைப் பூஜிக்கும் பெருஞ்செல்வத்தோடு விளங்கி உலக முழுவதையும் குளிரச் செய்துகொண்டு வசிப்பான்.

அன்றியும் இந்தக் கதம்ப வனத்தில், திரிகோணம், பஞ்ச கோணம், அஷ்டதள பத்மம், ஷோடச (16) தள கமலம், உள், வெளியென்னும் இரண்டு தசகோணங்கள், சதுரம் ஆகிய ஏழு ஆவரண சக்ரங்களோடு கூடி பிந்துஸ்தானத்தில் மந்திரிணி என்னும் சியாமளா தேவி மஹா வைபவத்துடன் விளங்குவாள். மேலும் இம் மந்திரிணீ தேவியின் ஸ்வரூபமானது எங்ஙனம் இருக்கும் எனில் அதையும் அறியலாம்.

மயில்தோகையைப் போன்ற காந்தியைக் கொண்டு பனையோலையால் செய்யப்பட்ட தாடகங்களையும், கற்பூர மணம் வீசும் தாம்பூலம் நிறைந்த செவ்விய வாயையும், சிவந்த உதட்டில் நிர்த்தனம் செய்யும் மந்தஹாஸத்தையும், குங்குமக் கலவையை அணிந்த திருமேனியையும், உலகனைத்தையும் மலரச் செய்யும் பாலசந்திரனை அணிந்த சிகரத்தையும், கஸ்தூரி திலகத்தையும், கதம்ப மலர் மாலைகளையும், இடது புஜத்தின் மேல் சரிந்த அளகபாரத்தையும் கொண்டதோடு ஒரு கரத்தில் கிளியையும், ஒரு கரத்தில் தாமரை மலரையும் தரித்து, மற்ற இரண்டு கரங்களால் இனிய வீணையைத் தாங்கி வாசித்துக் கொண்டு, அவ் வீணா கானத்தின் ஆனந்தத்தில் மூழ்கிய மனோபாவத்தை உடையவளாய் ஸங்கீத மாத்ருகை என்னும் சியாமளை விளங்குவாள்.

அடுத்து இரத்தினப் பிராகாரங்களைப் பார்ப்போம்.

**                தொடரும்

Leave a comment

Leave a Reply