
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,386
Date uploaded in London –9 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அம்பாளின் தலைநகரம்! – 5
ச. நாகராஜன்
அடுத்து மஹாபத்மாடவீ பிராகாரங்கள் ஆறு உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்.
20. மனோமயக் கோட்டை
இந்தக் கோட்டைக்கும் பத்தொன்பதாவது கோட்டைக்கும் இடையேயுள்ள பிரதேசமானது ஸ்வர்ணமயமாப் பிரகாசித்து அநேக நந்தவனங்களோடு கூடி விளங்கும். அங்கே முத்துமயமான அன்ன பக்ஷிகளும், இந்திர நீலம் போன்ற வண்டுகளும் நிறைந்துள்ள சஞ்சலமாகிய பல தரங்கங்களையுடைய அமிர்தவாபிகை ஒன்று உள்ளது. இந்த வாவியில் முத்து மணிகளால் செய்யப்பட்ட ஓடத்தின் மீது சிந்தூர பாடல நிறமான அங்கங்களையுடையவளும், சந்திர கலையைச் சிரசில் அணிந்தவளும், பூர்ண சந்திரனைப் போன்ற முகத்தை உடையவளும், தளிர் போல் சிவந்த கீழுதட்டில் பிரகாசிக்கும் மந்தஹாஸத்தை உடையவளும், யௌவன கர்வத்தை உடையவளுமான தாரா தேவி பல சக்திக் கூட்டங்கள் சூழ வசித்துக் கொண்டிருப்பாள்.
21. புத்திமயக் கோட்டை
இது மிகவும் மனோகரமாய் விளங்கும். இதற்கும் மனோமயக் கோட்டைக்கும் இடையில் ஆனந்தவாபிகை உள்ளது. இந்த வாபிகைக்குக் கெம்புக்களாலாக்கிய படிகளுண்டு. பிரம்மானந்தத்தை அருளச் செய்யும் சிறப்பினை வாய்ந்த இந்த வாபிகையில் மாணிக்கமயமான தோணியின் மேல் வாருணீ தேவி வீற்றிருப்பாள். இந்த வாருணீ தேவி பல ஆபரணங்களைப் பூண்டு, கருணை பெருகும் கடைக்கண் பார்வையை உடையவளாய்ப் பல்லாயிரம் தோழிகள் துடுப்புகளைக் கையில் பூண்டு படகைச் செலுத்திக்கொண்டும் ஆனந்தமாய்ப் பாடிக்கொண்டும் இருக்க இருப்பாள்.
22. அஹங்காரமயக் கோட்டை
இது மிகவும் உன்னதமாக, மற்ற கோட்டைகளை விட அதிகச் சிறப்புகளை கொண்டதாய் விளங்கும். இதற்கும் புத்திமயக் கோட்டைக்கும் இடையில் நறுமணமும், குளிர்ச்சியும் உடைய தென்றல் காற்று மெல்ல வீசிக் கொண்டிருக்கும். அன்றியும் கரைகளின் மேல் மோதிக் கொண்டிருக்கும் அலைகளையும், பக்ஷி ஜாலங்களும், வண்டுகளும் பரமானந்தத்தினால் செய்யும் கோலாலகல சப்தத்தையும் உடைய விமர்ச வாபிகை ஒன்று அங்கு உண்டு. அந்த வாபிகையின் நடுவே ஒரு ரத்தினமயமான ஓடத்தின் மீது புங்கன் தளிரைப் போன்று கருநிறமுள்ள சரீரத்தோடும், மதிவதனத்தோடும், அங்கயற்கண்களோடும், பூர்ண சந்திரிகையைப் போன்ற மந்தஹாஸத்தோடும், செஞ்சந்தனக்குழம்பு பூசப்பட்ட மார்பினோடும் துடி போன்ற இடையோடும் விளங்கும் குருகுள்ளா தேவியானவள் பல்லாயிரம் சுந்தரத் தோழிகள் தன்னைச் சுற்றிப் பணிவிடை செய்ய நாணேற்றிய வில்லைக் கையில் தாங்கி விளங்குவாள்.
23. சூரியப் பிராகாரம்
இது பதினான்கு லோகங்களையும் பிரகாசிக்கச் செய்து கொண்டிருக்கும். இதற்கும் இருபத்திரண்டாவது கோட்டைக்கும் இடையில், பேரொளி வீசும் மாணிக்க மண்டபத்தில் இரத்தின சிம்மாசனத்தின் மேல் சுவர்ணமயமான பத்மத்தின் நடுக் கர்ணிகையில் செம்மலர்களால் ஆக்கப்பட்ட மாலையைப் பூண்டு, கிரீட குண்டலங்கள் துலங்கச் செஞ்சந்தனம் மேனியில் பூசிக்கொண்டு சக்ஷூஷ்மதீ, சாயாதேவி என்னும் தேவிகளோடு கூடி, மார்த்தாண்ட பைரவன் (சூர்ய மூர்த்தி) வசிப்பான்.
** தொடரும்