ராம நாமம் செய்த அற்புதம்! கம்ப ராமாயணத்தில் 340 கேள்விகள்! (Post.16,387)

Written by London Swaminathan

Post No. 16,387

Date uploaded in London – 9 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

5000 ஆண்டுகளுக்கு முந்தைய சென்னைப் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகள்:

வங்கக் கடலினைத் தாண்டி இலங்கைக்குச் செல்லப்போவதாக  ஆஞ்சனேயன் அறிவிப்பு.!

மஹேந்திர மலை மீது நின்று அனுமன் விஸ்வரூபம் எடுத்தான்!!

ராம நாமம் சொன்னால் ஏற்படும் அற்புதம் பற்றிக் கம்பன் பாடுகிறான்; அது வால்மீகி ராமாயணத்தில் இல்லாத பு திய செய்தி!!!

கம்பன் திரைப்படத்தில் துமிரன் சண்டைக் காட்சி!

கிஷ்கிந்தா காண்டம் நிறைவு! அடுத்தது சுவை மிகு சுந்தர காண்டம்!!

**********

331

கம்பன் தமிழ்த் திரைப்படம் போலவே சண்டைக் காட்சிளை எங்கே நுழைக்கிறான் ?

332

கொல்லப்பட்ட அசுரன் துமிரன் யார் ?

333

திருப்பதி மலை பாலாஜி கோயில் பற்றி முன்னர் கூறாதிருந்த கம்பன் இப்பொழுது வெங்கடாசலபதியின் புகழை  எப்படிப் பாடுகிறான் ?

334

சீதையைக் கண்டுபிடிக்க அரசன் சுக்ரீவன் விதித்த ஒரு மாத கெடு முடிந்துவிட்டது ; யார் யார் உயிரை மாய்த்துக்கொள்ள என்ன என்ன தற்கொலை வழிகளைக் கூறினார்கள் ?

335

தற்கொலை செய்யாமல் செயல்படுவோம்; முயற்சி திருவினை ஆக்கும் என்று யார் கூறினார் ?

336

சம்பாதி என்னும் கழுகினைச் சந்தித்தபோது ராமநாமம்  பற்றிக் கூறிய  முக்கியச் செய்தி என்ன ?

337

இராம நாமம் ஓதியதால் சம்பாதியின் உடலில் என்ன அற்புதம் நிகழ்ந்தது ?

338

இலங்கைக்குச் செல்ல  சம்பாதி காட்டிய வழி எது ?

339

சாம்பவான் கூற்றில் அனுமனின் வலிமை எப்படிப்பட்டது என்றான் ?

340

அனுமனின் திடீர் அறிவிப்பு என்ன ? மஹேந்திர மலை மீது நின்று அனுமன் எடுத்த விஸ்வரூபம் எப்படிக் காட்சி அளித்தது ?

*********

விடைகள்

331.தமிழ்த் திரைப்படங்களின் – பொதுவாக இந்தியத் திரைப்படங்களின் – மசாலா பார்முலாவில் – சண்டைக் காட்சிகள், நகைச் சுவைக் காட்சிகள் – காதல் காட்சிகள் – திகில் திருப்பங்கள்- இருக்கும் ; சென்ற பகுதியில் குகையில் சிக்கிய வானரங்களை அனுமன் மீட்ட திகில் காட்சியைக் கம்பன் கொடுத்தான்; இப்பொழுது துமிரன் என்ற அசுரனை அறிமுகப்படுத்தி அங்கதனையும் அவனையும் சண்டையில் ஈடுபடுத்தி நமக்குச் சுவையான ஸ்டண்ட் காட்சிகளை அளிக்கிறான்.

மலையே போல்வான்; மால் கடல்

ஒப்பான்; மறம் முற்ற,

கொலையே செய்வான்; கூற்றை

நிகர்ப்பான்; கொடுமைக்கு ஓர்

நிலையே போல்வான்; நீர்மை

இலாதான்; நிமிர் திங்கட்

கலையே போலும் கால

எயிற்றான்; கனல் கண்ணான்;

அந்த அசுரன் துமிரன் மலையைப் போன்றவன்; (உருவத்தின் நிறத்தாலும் பரப்பாலும்)பெரிய கரிய கடலைப் போன்றவன்;  யாவரையும் கொன்று தீர்ப்பவன்; எமதர்மனுக்கு நிகரானவன் கொடுமையென்னும் குணத்திற்கு இருப்பிடமாவான்; நற்பண்பு சிறிதும் இல்லாதவன்  (வானில்) எழுந்து விளங்கும் சந்திரனின் பிறை போல் விளங்கும் நச்சுப்  பற்களையுடையவன்; கனல் கக்கும் கண்களையுடைவன்.

அவனுக்கும் தாரையின் மகனான அங்கதனுக்கும் குத்துச் சண்டை நடைபெறுகிறது;  இறுதியில் அவனை அங்கதன் கொல்கிறான்; யார் இவன் என்று அனுமன் கேட்டபொழுது எனக்குத் தெரியாது; சண்டைக்கு வந்தான் தீர்த்துக் கட்டினேன் என்றான் அங்கதன் .

இது தென் திசை நோக்கிச் சென்ற வானரப்படைகள் சந்தித்த ஆபத்துக்களில் ஒன்று

***

332.சாம்பவான், துமிரன் வரலாறு கூறுதல்

4603.  ‘யான் இவன்தனைத் தெரிய எண்ணினேன்;

தூ நிவந்த வேல் துமிரன் என்னும் பே –

ரான், இவ் ஆழ் புனல் பொய்கை ஆளும் ஓர்

தானவன்’ என, சாம்பன் சாற்றினான்.

அது கேட்டு கரடிகளுக்குத் தலைவனான சாம்பவான், இந்த அசுரன் பற்றிய செய்தி எனக்கு நினைவுக்கு வருகிறது ; பகைவரது புலால் நிறைந்த வேற்படையைத் தாங்கிய  இவன் பெயர்  துமிரன்.  ஆழ்ந்தநீரையுடைய இந்தப் பொய்கையை காத்து நிற்கும் ஓர் அசுரனாவான் என்று கூறினான்.

திருமாலின் திரிவிக்கிரமாவதார காலத்தில் அவன் திருவடிகள் உலகில் பரவியதைக் காணுமாறு சாம்பவான் பலமுறை பூமியை வலம் வந்தவனாதலால் அவன் இந்த அசுரனைக் குறித்து அறிந்திருந்தான்.   இத் துமிரன் என்னும் அசுரனை அங்கதன் கொன்ற செய்தி,  வானரர் பிலம் புகுவதற்குமுன் நிகழ்ந்த்தாக வால்மீகி ராமாயணம் கூறும். கம்பன் இடத்தை  மாற்றி அமைத்திருக்கிறான்.

****

333.கம்ப ராமாயணத்திலும் வால்மீகி ராமாயணத்திலும் பூகோளம் பற்றி மஹா குழப்பம் உள்ளது; கிஷ்கிந்தை என்பது கர்நாடகத்திலோ ஆந்திரத்திலோ இருந்ததாக இருவேறு கருத்துக்கள் உண்டு. ஆனால் தென் திசை நோக்கிச் சென்ற அனுமன் சேனை பூகோள வரைபடத்தை மாற்றி மாற்றிக் குழப்புகிறது. வடக்கே எங்கிருந்தோ புறப்பட்ட மாதிரி பேசுகிறது ! முன்னர் வேங்கட மலை பற்றிப் பாடிய கம்பன் தொல்காப்பிய பாயிரத்தில் கண்டபடி தமிழ் மொழியின் வட எல்லை என்றான் ; இப்பொழுது அதே வேங்கட மலை பற்றிப்   பாடுகையில் திருப்பதி பாலாஜிக்கு ஸலாம் போடுகிறான் !

4629.  வலம் கொள் நேமி

மழை நிற வானவன்

அலங்கு தாள் இணை

தாங்கிய அம் மலை

விலங்கும் வீடு உறுகின்றன;

மெய்ந் நெறி

புலன் கொள்வார்கட்கு

அனையது பொய்க்குமோ?

சுதரிசனம் என்ற சக்கராயுதத்தைக் கையில் கொண்ட கார் மேகம்

போன்ற கருநிறத்தையுடைய கடவுளான திருவேங்கடவனது

இரண்டு திருவடிகளையும் தாங்கி நின்ற அத் திருவேங்கடமலையில் வாழ்கின்ற  மிருகங்களும் மோட்சத்தையடைகின்றன! (அவ்வாறானால்) தவங்களில் தன் மனத்தைச் செலுத்தும் யோகியர்க்கு அந்த மோட்சமானது  கிடைக்காமல் தவறிப் போகுமோ? (தவறிப் போகாது).

இதனால்தான் எம்பெருமானின் சந்நிதி வாசலில் அடியார்கள் நடமாடும் படியாகவோ, செடியாகவோ, பறவையாகவோ அல்லது திருமலையில் ஏதேனும் ஒரு பொருளாகவோ பிறக்க வேண்டும் என்று வேண்டிப் பாடுகிறார் குலசேகர ஆழ்வார் ; காண்க -பெருமாள் திருமொழி .

****

334. வானர வீரர்களும் அங்கதனும் தற்கொலைக்கு முயற்சி!

4652.  ‘அருந் தவம் புரிதுமோ?

அன்னது அன்றுஎனின்,

மருந்து அரு நெடுங்

கடு உண்டு மாய்துமோ?

திருந்தியது யாது? அது செய்து

தீர்தும்’ என்று

இருந்தனர் – தம்

உயிர்க்கு இறுதி எண்ணுவார்.

(கிட்கிந்தைக்கு மீண்டு செல்லாமல் இங்கிருந்தபடியே) –

செய்தற்கரிய தவத்தை செய்வோமோ அவ்வாறு செய்ய இயலா விட்டால் கொடிய நஞ்சைக் குடித்து; இறந்து அழிவோமோ?  (இந்த இரண்டில்) தகுதியானது எதுவோ; அதைச் செய்து முடிப்போம்; என்று இருந்தனர் அந்த வானரவீர்கள்.

(மருந்து அரு நெடுங்கடு: முறிவில்லாத கடுமையான விஷம்)

4656.  ‘எந்தையும் முனியும்; எம்

இறை இராமனும்

சிந்தனை வருந்தும்; அச்

செய்கை காண்குறேன்;

நுந்துவென் உயிரினை;

நுணங்கு கேள்வியீர்!

புந்தியின் உற்றது புகல்விர்

ஆம்’ என்றான்.

(செயலை முடிக்காமல் தவணை கடந்த பிறகு  சென்றால்) என் தந்தையான மன்னனும் நம்மைக் கோபிப்பான்; – நம் தலைவனான இராமனும்  வருந்துவான்; அந்த நிகழ்ச்சிகளைக் கண்ணால் காணும் சக்தி எனக்கில்லை ; ஆகையால் நான் என்னுயிரை  மாய்த்துக் கொள்வேன் . நுட்பமான நூற்கேள்வியுடைவர்களே!  உங்கள் அறிவில்பட்டதை,  ஆராய்ந்து கூறுவீர் என்று (அங்கதன்) சொன்னான்.

நான் திரும்பிச்  சென்றால் ஏற்றுக் கொண்ட செயலை முடிக்காமல் வெறுங்கையோடு மீண்டார்களே’ என்று பெரியோர் கூறும் பழிச் சொல்லுக்கு அஞ்சி உயிர்போன்ற நண்பர் யாவரும் உயிர்விடவும் இவன்மட்டும் அச்சம் சிறிதுமின்றி திரும்பி வந்தான் என்று சான்றோர் என்னை ஏசுவர்  ;அதற்கு  இடமில்லாமல் முதலில் நான் சாவேன்  என்று அங்கதன் கூறினான்.

***

335.அனுமனின் கருத்து

நாடுதலே நலம் இன்னும்; நாடி, அத்

தோடு அலர் குழலிதன் துயரின் சென்று, அமர்

வீடிய சடாயுவைப் போல வீடுதல்

பாடவம்; அல்லது பழியிற்று ஆம்’ என்றான்.

இனிமேலும் சீதையைத் தேடிப் பார்த்தலே நற்செயலாகும் . நாம் தேடியும் சீதையைக் காணா விட்டால் அவளைக் காக்க ஏற்பட்ட போரில் உயிர்மாய்ந்த சடாயுவைப் போல நாமும் சீதையைத் தேடும் செயலில் உயிர் விடுதல் பெருமையாகும்;  அப்படிச் செய்யாது நீங்கள் கருதியபடி இப்போதே உயிரை விடுவது பழிக்கு இடமாகும்என்று அனுமன் அவ் வானரர்களிடம் கூறினான்.

*****

336. எல்லோரும் ராம நாமம் சொல்லுங்கள்- சம்பாதி வேண்டுகோள்!

சம்பாதி யார்? அருணனின் மகனும், சடாயுவின் அண்ணனும் ஆவார். சிறு வயதில் தம்பியான சடாயுவுடன் சேர்ந்து சூரியனை நோக்கிப் போட்டியிட்டுப் பறந்தனர். அப்போது சூரியனின் வெப்பம் தாங்க முடியாமல், தன் தம்பியைப் பாதுகாக்கச் சம்பாதி தன் சிறகுகளால் சடாயுவை மூடிக்கொண்டான். இதனால் சம்பாதியின் சிறகுகள் எரிந்து போயின.  சீதையைத் தேடிச் சென்ற அனுமன், அங்கதன் மற்றும் ஜாம்பவான் ஆகியோருக்கு சீதை இருக்கும் இடத்தை (இலங்கை) தனது திவ்ய திருஷ்டியால் கூறி உதவியவர் இந்தச் சம்பாதி ஆவார்.

4695.  ‘எல்லீரும் அவ் இராம நாமமே

சொல்லீர்; சொல்ல, எனக்கு ஓர் சோர்வு இலா

நல் ஈரப் பயன் நண்ணும்; – நல்ல சொல்

வல்லீர்! வாய்மை வளர்க்கும் மாண்பினீர்!’

சம்பாதி அந்த வானர வீரர்களை நோக்கி) சத்தியத்தை வளர்க்கும் பெருமை பெற்ற வானர வீரர்களே!  நீங்கள் அனைவரும் அந்த ‘இராம’ என்னும் திருநாமத்தையே வாயால் உச்சரிப்பீர்களாக!  (அவ்வாறு என்னருகில்) சொல்வதனால் எனக்கு நல்ல பயன்  கைகூடும்     என்றான்’

****

337 வானர வீரர்கள் ராம நாமம் சொல்லவே சம்பாதியின் இறக்கைகள் முளைத்தன! வானர வீரர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினார்கள்.

இராம நாமம் ஓதியதால் சம்பாதியின் சிறகு முளைத்தது என்னும் செய்தி வான்மீகத்தில் இல்லை.கம்பர்  படைப்பு!

4698.  தெருண்டான் மெய்ப் பெயர்

செப்பலோடும், வந்து

உருண்டான் உற்ற

பயத்தை உன்னினார்;

மருண்டார்; வானவர்

கோனை வாழ்த்தினார்;

வெருண்டார்; சிந்தை

வியந்து விம்முவார்.

அது கண்ட வானரர்கள் ஞானியர்களால் பரம் பொருள் என்று தெளியப்பட்டவனாகிய இராமனது திருநாமத்தை அந்த வானர வீரர்கள் உச்சரித்த அளவிலே, முன்பு இறகு இல்லாமல் உருண்டு வந்த சம்பாதிக்கு சிறகுகள் முளைத்ததை மனத்தில் கருதினர்; வியப்பால் திகைப்புற்றனர்;  அச்சமுற்றனர்; தேவர்களின் தலைவனான திருமாலின் அவதாரமாகிய இராமபிரானை வாழ்த்தித் துதித்தார்கள்; ஆச்சரியத்தால் மனம் பூரித்தனர்.

சம்பாதி இறகில்லாமல் உருண்டு வந்ததையும், இராம நாம உச்சரிப்பால் சிறகுகள் தழைத்ததையும் நேரிலே கண்ட வானரர்கள் அச்சமும் வியப்பும் மருட்சியும் ஒருங்கே கொண்டவர்களாய் அப் பெரும்பயனை விளைக்கும் பெருமை வாய்ந்த இராமனை வாழ்த்தினர்.

******

338.இலங்கைக்குச் செல்ல சம்பாதி காட்டிய வழி:_-

4707.  ‘ஓசனை ஒரு நூறு உண்டால், ஒலி

கடல் இலங்கை; அவ் ஊர்,

பாச வெங்கரத்துக் கூற்றும்

கட்புலன் பரப்ப அஞ்சும்;

நீசன் அவ் அரக்கன் சீற்றம்

நெருப்புக்கும் நெருப்பு; நீங்கள்

ஏச அருங் குணத்தீர்! சேறல் எப்

பரிசு இயைவது?’ என்றான்.

அலை வீசும்  கடலால் சூழப்பட்ட அந்த இலங்கை, இங்கிருந்து நூறு யோசனை தூரத்திலுள்ளது; அந்த இலங்கையை கண்ணால் ஏறிட்டுப் பார்க்க கொடிய பாசக்கயிற்றைக் கையில் கொண்டுள்ள யமனும்  அஞ்சுவான் . இழி செயல் செய்யும் அந்த இராவணனது கோபமோ  நெருப்பையும் அழிக்கவல்ல ஒரு பெருந்தீயைப் போன்றது .நண்பர்களே! நீங்கள் அங்கே செல்லுவது எவ்வாறு முடியுமோ?  என்று சம்பாதி கூறினான்.

******

339. வெல்லவும் வல்லீர்; மீளவும் வல்லீர்- சாம்பவான் தந்த தைரியம்

4721.      ‘நல்லவும் ஒன்றோ, தீயவும்

நாடி நவை தீரச்

சொல்லவும் வல்லீர்; காரியம்

நீரே துணிவுற்றீர்;

வெல்லவும் வல்லீர்; மீளவும்

வல்லீர்; மிடல் உண்டே;

கொல்லவும் வல்லீர்; தோள்

வலி என்றும் குறையாதீர்;

நீங்கள் நல்லவை மட்டுமோ செய்பவர்கள்? தீயவற்றை ஆராய்ந்து பார்த்து, குற்றம் நீங்குமாறு உண்மையை யெடுத்துக் கூறுவதிலும் வல்லமை உடையீர்; செய்யத்தக்க செயல் எது என்பதை நீரே ஆராய்ந்து துணிந்து செய்யும் திறமுடையவராவீர். அரக்கரை வெல்வதற்கும் வல்லமையுடையீர், இலங்கையிலிருந்து இங்கே திரும்பி வரவும் வல்லவராவீர்; அங்கே பகைவர்கள் வலிமையோடு எதிர்த்துப் போர் புரிந்தால்,  அப் பகைவர்களைக் கொல்லும் சக்தியும் உள்ள வீரர்கள் நீங்கள்! உங்கள் பலம் எப்போதும் குறையாது என்று சொல்லி சாம்பவான் அனுமனை ஊக்குவித்தான்

எந்தச் செயலைப் பற்றி ஆராயவேண்டுமானாலும் அதிலுள்ள நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து குற்றமில்லாது அச் செயல் முடிவுறத் தக்க வழிகளைச் சொல்ல வல்லவன் அனுமன் என்பதைச் சாம்பவான் கூறினான். அனுமனிடம் ஒரு சிறந்த அமைச்சனுக்கு உரியனவும், சிறந்த போர் வீரனுக்கு உரியனவுமான அரிய திறன்கள் அமைந்துள்ளமை காட்டப்பெற்றுள்ளது.                                                 *****

340. அனுமன் எடுத்த விஸ்வ ரூபம் = ஓங்கி உலகளந்த திருமால்!

சாம்பவானும் ஏனைய தலைவர்களும் விவாதித்து அனுமனே இச்செயலைச் செய்ய வல்லவன் என்று முடிவு செய்தனர்  ; தன்னுடைய வலிமையை அனுமன் உணரத் தொடங்கி மகத்தான அறிவிப்பை வெளியிட்டான்; தேவர்கள் பூ மாரி பொழிந்தனர்

4735.  ‘ஈண்டு இனிது உறைமின், யானே

எறி கடல் இலங்கை எய்தி,

மீண்டு இவண் வருதல்காறும்; விடை

தம்மின், விரைவின்’ என்னா

ஆண்டு அவர் உவந்து வாழ்த்த,

அலர் மழை அமரர் தூவ,

சேண் தொடர் சிமயத் தெய்வ

மயேந்திரத்து உம்பர்ச் சென்றான்.

நான் அலைவீசும் கடலால் சூழப் பெற்ற இலங்கை நகரையடைந்து இங்கே திரும்பி வருகின்ற வரையிலும் நீங்கள் இந்த கடற்கரையில்  தங்கியிருங்கள்; எனக்கு விரைவிலே விடை கொடுங்கள் என்று  அனுமன்  சொன்னான் ;உடனே  அந்த வானர வீரர்கள் மகிழ்ந்து வாழ்த்துக் கூறினார்கள் , தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். வானத்தை யளாவிய சிகரங்களையுடைய , தெய்வத் தன்மையுள்ள மகேந்திர மலையினது உச்சிக்குப் போய்ச் சேர்ந்தான். மஹா வீரன் .

அனுமன் விஸ்வரூபம் எடுத்தான்

4843.  பொரு அரு வேலை தாவும்

புந்தியான், புவனம் தாய

பெரு வடிவு உயர்ந்த மாயோன்

மேக்கு உறப் பெயர்ந்த தாள்போல்,

உரு அறி வடிவின் உம்பர்

ஓங்கினன், உவமை யாலும்

திருவடி என்னும் தன்மை

யாவர்க்கும் தரெிய நின்றான்.

கடந்து செல்வதற்கு அரிய பெரிய கடலை தாண்டுவதற்குரிய உறுதியான எண்ணமும் சிந்தனையும் உடைய அனுமன்,  முன்பொரு காலத்தில் வாமன அவதாரம் எடுத்து உலகங்கள் அனைத்தையும் தனது திருவடிகளால் அளந்த , விஸ்வரூபமாக வளர்ந்த திருமாலின் வானம் வரை ஓங்கிச் சென்ற திருவடியைப் போல,அனுமன் தனது விஸ்வரூப உருவத்தை வானளாவ உயர்த்தி நின்றான். ‘திருவடி’ (அனுமனின் மற்றொரு திருநாமம்)

(அனுமன் கடலைத் தாண்டத் தயாராகும் போது தனது உருவைப் பெருக்கி நின்ற காட்சியை ஓங்கி உலகளந்த த்ரிவிக்ரம அவதாரத்தோடு கம்பர் ஒப்பிட்டுப் பாடியுள்ளார்).

4739. மின் நெடுங் கொண்டல் தாளின்

வீக்கிய கழலின் ஆர்ப்ப,

தன் நெடுந் தோற்றம் வானோர்

கட்புலத்து எல்லை தாவ,

வல் நெடுஞ் சிகர கோடி

மயேந்திரம், அண்டம் தாங்கும்

பொன் நெடுந் தூணின் பாத

சிலை என, பொலிந்து நின்றான்.

மின்னலோடு கூடிய பெரிய மேகங்கள் அனுமன்  காலில் கட்டப்பெற்ற வீரக் கழல்போல ஒலித்தன. நீண்டுயர்ந்த அவனது பெரிய உருவமானது  தேவர்களின் கண்பார்வையையும்  தாண்டிச் சென்றது (தேவர்கள் கூட முழு உருவத்தைக் காண முடியாத பெரிய உருவம் அது!). இந்த அண்டகோளத்தைத் தாங்கி நிற்கும் பொன்மயமான பெரிய கல்லைப் போல வலிய பெரிய  மகேந்திர மலை  தோன்றியது.

கிஷ்கிந்தா காண்டம் நிறைவு. அடுத்தது சுவை மிகு சுந்தர காண்டம்!!

–சுபம் –-

TAGS- ராம நாமம் செய்த அற்புதம்! கம்ப ராமாயணத்தில் 340 கேள்விகள்! அனுமனின் விஸ்வரூபம், மஹேந்திர மலை , சாம்பவான் , இறக்கைகள் வளர்ந்தன, துமிரன் சண்டைக் காட்சி

Leave a comment

Leave a Reply