ஶ்ரீ சக்ர ரகசியம்!– 1 (Post No.16,398)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,398

Date uploaded in London –15 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஶ்ரீ சக்ர ரகசியம்! – 1

ச. நாகராஜன்

அம்பாளின் அற்புதமான சக்ரம் ஶ்ரீ சக்ரம்.

இதை முற்றிலுமாக விளக்க யாராலும் முடியாது.

இதன் சிக்கலான கணித வடிவமைப்பைக் கண்டு விஞ்ஞானிகள் வியக்கின்றனர்.

குறிப்பிட்ட முறைப்படி இதை வரைந்து வழிபட்டால் தான் பலன் கிடைக்கும்.

இதை தொங்க விடக் கூடாது. படுக்கைவசமாகவே வைத்து வழிபட வேண்டும். அன்றாட வழிபாட்டில் நைவேத்யம் செய்தல் அவசியம்.

இதைப் பற்றிய விளக்கத்தை இனி காண்போம்.

1.      முதலாவது த்ரைலோக்ய மோஹன சக்ரம்

இது நாற்சதுரமாய் மூன்று பிராகாரங்களோடு விளங்கும்.

இது முதலாவது ஆவரணம் ஆகும். (ஆவரணம் என்றால் பிராகாரம் என்று பொருள்)

இதன் முதல் ரேகையில் பரதேவதையின் தேக காந்திகளையே சரீரமாகத் தரித்த அணிமா, மஹிமா, இலகிமா, ஈசித்வ, வசித்வ, ப்ராகாம்ய, புக்தி, இச்சா, ப்ராப்தி, ஸர்வகாமம் என்னும் தச ஸித்தி தேவதைகளும், இரண்டாவது ரேகையில் பிராஹ்மீ, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவீ, வாராஹீ, மாஹேந்திரி, சாமுண்டா, மஹாலக்ஷ்மீ என்னும் அஷ்ட மாத்ருகைகளும்,

மூன்றாவது ரேகையில் ஸர்வஸம்க்ஷோபிணி, ஸர்வவித்ராவிணீ, ஸர்வாகர்ஷிணீ, ஸர்வவசீகரிணீ, ஸர்வோந்மாதினீ, ஸர்வமஹாங்குசீ, ஸர்வகேசரீ, ஸர்வபீஜ, ஸர்வயோனி, ஸர்வத்ரிகண்டா என்னும் பத்து முத்ரா தேவதைகளும் வசித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களின் சரீர காந்திகள் சூரியனையும் தோற்றுவிக்கும்படியானவை.

இவைகளுக்கு பிரகட யோகினிகள் என்று பெயர்.

இவர்களுக்கெல்லாம் நாயகியாகிய திரிபுரை என்னும் சக்ரேஸ்வரி அக்ர (முன்) பாகத்தில் ரத்ன சிம்ஹாஸனத்தில் வீற்றிருந்து யோகினீ கணங்கள் புடைசூழப் பேராநந்தத்தோடு விளங்குவாள்.

2.      இரண்டாவது ஸர்வாசா பரிபூரக சக்ரம்

இது பதினாறு தளங்களையுடைய கமலமாகும். இதில் காமாகர்ஷிணீ, புத்யாகர்ஷிணீ, அஹங்காராகர்ஷிணீ, சப்தாகர்ஷிணீ, ஸ்பர்சாகர்ஷிணீ, ரூபாகர்ஷிணீ, ரஸாகர்ஷிணீ, கந்தாகர்ஷிணீ, சித்தாகர்ஷிணீ, தைர்யாகர்ஷிணீ, ஸ்மிருத்யாகர்ஷிணீ, நாமாகர்ஷிணீ, பீஜாகர்ஷிணீ, ஆத்மாகர்ஷிணீ, அம்ருதாகர்ஷிணீ, சரீராகர்ஷிணீ என்னும் பதினாறு ஆகர்ஷிணீ தேவதைகள் வசிப்பார்கள்.

இவர்களுக்கு குப்த யோகினிகள் என்று பெயர்.

இவர்களுக்கெல்லாம் பிரபுவாய் திரிபுரேசி என்னும் சக்ரேஸ்வரி தேவி மணிபீடத்தின் மேல் வீற்றிருந்து ஆவரண தேவதைகள் வணங்க ஆனந்தமாய் இருப்பாள்.

3.      மூன்றாவது ஸர்வ ஸம்க்ஷோபண சக்ரம்

இது எட்டு இதழ் பதுமம். இந்த தளங்களில் குப்ததர யோகினிகள் என்னும் பெயரை உடைய அநங்ககுஸுமா, அநங்கமேகலா, அநங்கமதனா, அநங்கமதனாதுரா, அநங்கரேகா, அநங்காங்குசா, அநங்கவேகினீ, அநங்கமாலினீ என்னும் எட்டு சக்திகள் பாசம், அங்குசம், வரதம், அபயம் என்பனவற்றைக் கையில் தாங்கி, செம்மையான வஸ்திரங்களயும், புஷ்ப மாலைகளையும் தரித்துக் கொண்டு மஹா திரிபுரசுந்தரி தேவியின் தியானத்தில் ஒரு முகப்பட்ட மனதுடையவர்களாய் விளங்குவார்கள். இவர்களுக்கெல்லாம் நாயகியாகிய திரிபுரசுந்தரி என்னும் சக்ரேஸ்வரி, சக்ர தேவதைகள் சேவிக்க முன்னருள்ள சிம்மாசனத்தில் வீற்றிருப்பாள்.

4.      நான்காவது ஸர்வ ஸௌபாக்ய தாயக சக்ரம்

இந்த சக்ரம் பதினான்கு முக்கோணங்களை உடையது. அந்த முக்கோணங்களில் ஸர்வஸம்க்ஷோபிணீ, ஸர்வவித்ராவிணீ, ஸர்வாகர்ஷிணீ, ஸர்வாஹ்லாதினீ, ஸர்வஸம்மோஹிணீ, ஸர்வஸ்தம்பினீ, ஸர்வஜ்ரும்பிணீ, ஸர்வவசங்கரீ, ஸர்வரஞ்சனீ, ஸர்வோந்மாதினீ, ஸர்வார்த்தஸாதனீ, ஸர்வஸம்பத்திபூரணீ, ஸர்வமந்த்ரமயீ, ஸர்வதுவந்துவக்ஷயங்கரீ என்னும் நாமங்களையுடைய பதினான்கு ஸம்பிரதாய யோகினிகள் வசிப்பார்கள். இவர்களுக்கெல்லாம் பிரபுவாய் திரிபுரவாஸினி என்னும் சக்ரேஸ்வரி அந்த ஆவரண தேவதைகள் புடைசூழ மணிமயமான ஆசனத்தின் மேல் அமர்ந்து விளங்குவாள்.

***                 தொடரும்

Leave a comment

Leave a Reply