ஶ்ரீ சக்ர பாவனைகளை விளக்கும் பாவநோபநிஷத்! – 1 (Post No.16,407)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,407

Date uploaded in London –18 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஶ்ரீ சக்ர பாவனைகளை விளக்கும் பாவநோபநிஷத்! – 1

ச. நாகராஜன்

அம்பாளின் எல்லையற்ற மகிமையை விளக்கும் உபநிடதங்களில் முக்கியமானவை மூன்று.

1.       பாவனோபநிஷத்

2.       த்ரிபுராதாபின்யுபநிஷத்

3.       த்ரிபுரோபநிஷத்

4.        முதலில் காதி மதத்தை அனுசரித்து அந்தரங்கமான ஶ்ரீ சக்ர பாவனைகளை விளக்கும் பாவனோபநிஷத்தைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

1.       ஶ்ரீ குருநாதரே மேலாகிய காரணமாகும் சிற்சக்தியாகும். இத்தகைய விமரிச சக்தியானது தேகத்தில் இரு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு நாசித் துவாரங்கள், வாய், பாயு, உபஸ்தம் என்னும் ஒன்பது துவாரங்களின் மூலமாய் ஸ்புரிக்கிறது. ஆகவே இந்த ஒன்பது துவாரங்களும் குரு ஸ்வரூபமானவை.

2.       நவ சக்ர மயமாய் விளங்கும் ஶ்ரீ சக்ரமே தேகமாகும்.

3.       சரீரத்தில் உள்ள அஸ்தி (எலும்பு) தாதுவே வாராஹீயாகும். மாமிசமே குருகுள்ளாதேவி எனப்படுபவள். வாராஹீ பிதா; குருகுள்ளாவாகிய பல் தேவதையே தாய்.

4.       நான்கு சமுத்திரங்களே தர்மாதி நான்கு புருஷார்த்தங்கள்.

5.       தேகமே நவரத்தினத் தீவு.

6.       மாம்ஸம், ரோமம், துவக்கு (சருமம் அல்லது தோல்), ரத்தம், சுக்கிலம், மஜ்ஜை, அஸ்தி, மேதை, ஓஜஸ்ஸு என்னும் ஒன்பது தாதுக்களும் புஷ்பராகம், நீலம், வைடூரியம், பவழம், முத்து, மரகதம், வஜ்ஜிரம், கோமேதகம், பத்மராகம் என்னும் நவரத்தினக் கண்டங்களாகும்.

7.       மனத்தின் ஸங்கற்பங்களே ஸந்தானம், ஹரிசந்தனம், மந்தாரம், பாரிஜாதம், கதம்பம் என்னும் கல்பக விருக்ஷங்களாகும்.

8.       தேஜஸ்ஸாகும் மனமே கல்பக உத்தியானவனம்.

9.       நாவினால் ருசித்து உணரத்தக்க இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, கார்ப்பு, துவர்ப்பு என்னும் ரஸங்களே வஸந்த, கிரீஷ்மாதி அறுவித ருதுக்களாகும்.

10.   ஞானமே (விசேஷ) அர்க்கியம். இதுவென்று பஞ்சேந்திரியங்களால் சுட்டி அறியக் கூடிய யாவும் நைவேத்தியத்திற்குரிய (அவிஸ்) பதார்த்தங்களாகும். அறிபவனே, அதாவது, தானே, ஹோமம் செய்பவன் ஆகும். ஞாதுரு, ஞானம், ஞேயம் என்னும் திரிபுடிகளின் அபேதபாவனையே ஶ்ரீ சக்ர பூஜையாகும்.

11.   நியதியோடு கூடிய சிருங்காரம், பயானகம், ரௌத்திரம், பீபத்ஸம், ஹாஸ்யம், வீரம், கருணை, அத்புதம், சாந்தி என்னும் ஒன்பது ரஸங்களும் (சுவைகளும்) அணிமாதி பத்து ஸித்தி தேவதைகளாகும்.

12.   காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம், புண்ணியம், பாவம் ஆகிய இவை எட்டும் பிராஹ்மி முதலிய எட்டு மாத்ருகா சக்திகளாகும்.

13.   மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாஹதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆறு ஆதாரங்களும், மூலாதாரத்திற்குக் கீழுள்ள குள ஸஹஸ்ராரமும், மேலுள்ள அகுள ஸஹஸ்ராரமும், உள்நாக்கும் சேர்ந்து ஒன்பது ஆதாரங்கள். இவற்றின் ஸமஷ்டி ஒன்று, ஆக பத்தும் ஸர்வ ஸங்க்ஷோபிண்யாதி பத்து முத்ரா தேவதைகளாகும்.

14.   பிரிதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சுரோத்திரம், துவக்கு, சட்சு, ஜிஹ்வை, கிராணம், வாக்கு, பாணி, பாதம், பாயு, உபஸ்தம் என்னும் பதினைந்தும் இங்ஙனம் விசாரப்பட்ட மனமும் சேர்ந்து பதினாறும், பதினாறு இதழ்க் கமலத்தில் உள்ள காமாகர்ஷிணீ முதலிய பதினாறு சக்திகளாம்.

15.   பேசுதல், ஏற்றுக்கொள்ளுதல், நடத்தல், கழித்தல், ஆனந்தித்தல் என்னும் ஐந்து கர்மேந்திரியங்களில் தொழில்களும், தியாக புத்தி, கிரகிக்கும் புத்தி, உபேக்ஷர புத்தி ஆக எட்டும் அஷ்ட கமலத்தில் உள்ள அநங்க குஸுமாதி எட்டு சக்திகளாகும்.

16.   அலம்புஸா, குஹு, விச்வோதரி, வாரணா, ஹஸ்தி ஜிஹ்வை, யசோவதீ, பயஸ்வினீ, காந்தாரீ, பூஷா, சங்கினீ, ஸரஸ்வதீ, இடை, பிங்கலை, சுஷுமனை என்னும் பதினான்கு நாடிகளின் சக்திகளே ஸங்க்ஷோபிணி முதலிய பதினான்கு கோண தேவதைகளாவர்.

17.   பிராணன், அபானன், வியானன், உதானன், ஸமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்ஜயன் என்னும் பத்து வாயுக்களே பஹிர்த்தசாரத்தில் உள்ள ஸர்வ ஸித்திப்பிரதை முதலிய பத்து தேவதைகள் ஆவர்.

18.   மேற்கூறிய தச வாயுக்களோடு சேர்க்கையாகும் உபாதிபேதத்தினால் ஜாடராக்னியானது ரேசகம், பாசகம், சோஷகம், தாஹகம், ப்லாவகம் என்னும் தொழில்களையும்,

19.   க்ஷாரகம், உத்தாரகம், க்ஷோபகம், ஜ்ரும்பகம், மோஹகம் என்னும் தொழில்களையும் செய்து, பிராணிகள் புஜித்த பக்ஷியம், போஜ்யம், சோஷ்யம், லேஹ்யம், பேயம் என்னும் ஐந்து வித ஆகாரத்தை ஜீரணம் செய்கின்றது.

ஜாடராக்னியானது பிராணாதி, ஐந்து வாயுக்களோடும், நாகாதி ஐந்து உபவாயுக்களோடும் சேர்ந்து தனது பத்து கலைகளினால் மேற்கூறிய பத்து தொழிற்பெயர்களை அடைகின்றது என்று அறிக.

**             தொடரும்

Leave a comment

Leave a Reply