
Written by London Swaminathan
Post No. 16,408
Date uploaded in London – 18 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சூடாமணி படலம் – தலைப்புச் செய்திகள்
என் தோளின் மீது ஏற்றிச் செல்கிறேன் – அனுமன்
ராமன் உடலினைத் தவிர வேறு எதையும் தொடமாட்டேன் – சீதை
என் சொல்லினால் சுடுவேன்- ஆயினும் வில் ஆற்றலுக்கு காத்திருக்கிறேன்- சீதை
நான் சொன்ன செய்திகளைச் சொல்- சீதை
இதோ என் கூந்தலை அலங்கரிக்கும் சூடாமணி- சீதை
******

401
சீதா தேவியிடம் அனுமன் என்ன வேண்டுகோள் விடுத்தான் ?
402
கற்புக்கரசிகள் உலகையே எரிக்க வல்லவர்கள் என்று சீதை எப்போது சொன்னாள் ?
403
சீதா தேவியைத் தொடுவதற்கு ராவணன் அஞ்சியது ஏன் ?
404
ராம பிரானுக்கு சீதை அனுப்பிய 5 செய்திகள் என்ன ?
405
லெட்சுமணனிடம்செப்பு மாறு சீதை என்ன சொன்னாள் ?
406
ராவணன் கண்களை காகங்கள் கொத்தி தின்பத்தைக் காண்பாய் என்று அனுமன் சொன்னானா?
407
சீதைவளர்த்த செல்லக் கிளிக்கு ‘கைகேயியின் பெயரை வை’ என்று ராமன் சொன்னது எப்போது ?
408
ராமனிடம் அளிக்குமாறு சீதை கொடுத்த சூடாமணியைக் கண்டு அனுமன் வியந்தது ஏன்?
409
சூடாமணி என்றால் என்ன ?
410
சூடாமணியைப் பெற்றுக்கொண்ட அனுமன் என்ன செய்தான் ?
******************

விடைகள்
401
அனுமனின் அன்பு வேண்டுகோள் :–
‘கேட்டி, அடியேன் உரை; முனிந்தருளல்; கேள், ஆய்!
வீட்டியிடும்மேல் அவனை; வேறல் வினை அன்றால்;
ஈட்டி இனி என்பல; இராமன் எதிர், நின்னைக்
காட்டி, அடிதாழ்வென்; இது காண்டி இது காலம்;
அடியேனின் மொழியை கேட்பாயாக! வெறுத்து ஒதுக்காதே; கேளாய் ! ராவணன் உன்னைக் கொன்று விடுவானேயானால் (பிறகு) அந்த இராவணனைவெல்வது தேவையற்ற செயல்; இராமபிரானுக்கு முன்னே உன்னை, காண்பித்து; உங்கள் இருவரின் திருவடிகளையும் வணங்குவேன்; அதற்கு ஏற்ற காலம் இதுவே.
இது முதல் 9 கவிதைகள் அனுமன் விண்ணப்பம். பிராட்டியை மீட்பதில் உறுதி கொண்டு அனுமன் பேசுகின்றான். இராவணன், உன்னைக் கொன்று விட்டால் பிறகு அவனை வெல்வதால் பயனில்லை என்றான் அனுமன்.
‘பொன் திணி பொலங்கொடி ! என் மென் மயிர்
பொருந்தித்
துன்றிய புயத்து இனிது இருக்க;துயர் விட்டாய்,
இன் துயில்விளைக்க;ஓர் இமைப்பின், இறை
வைகும்
குன்றிடை, உனைக்கொடு குதிப்பென்;இடை
கொள்ளேன்.
அம்மையே! என் தோள் மீது இருங்கள்; துன்பத்தை விடுங்கள்; உன்னைச் சுமந்து கொண்டு; இராமபிரான் தங்கியுள்ள மலையில் ஓர் இமைக்கும் நேரத்தில் குதிப்பேன்; நடுவில் தாமதம் செய்யேன்- என்றான் அனுமன். (இராமபிரான் தங்கிய மலை பிரஸ்ரவனம்.)
****************
402. சொல்லினால் சுடுவேன் – சீதா தேவியின் பேராற்றல்
5362.
‘அல்லல்மாக்கள் இலங்கையது ஆகுமோ ?
எல்லை நீத்தஉலகங்கள் யாவும், என்
சொல்லினால்சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன்.
எல்லை கடந்த எல்லாவு லகங்களையும் என்னுடைய
சொல்லினாலேயே சுட்டெரித்து விடுவேன்; அவ்வாறு
செய்வது தூயவனாகிய இராமபிரானின், வில்லினுடைய வலிமைக்கு களங்கம் உண்டாக்கும் என்று (அதை) ஒதுக்கித் தள்ளினேன்.
‘வேறும் உண்டு உரை;கேள் அது; மெய்ம்மையோய் !
ஏறு சேவகன் மேனிஅல்லால், இடை
ஆறும் ஐம்பொறிநின்னையும், “ஆண்” எனக்
கூறும்; இவ் உருத்தீண்டுதல் கூடுமோ ?
இவை தவிர வேறு ஒன்றும் உள்ளது; அதைக் கேட்பாயாக;
இராமபிரானின் திருமேனியை அல்லாமல் ஐம் பொறிகளைப் பெற்ற உன்னையும் (இந்தஉலகம்) ஆண் எனக் கூறும்; (ஆதலின்)
-இந்த மேனியை தொடுவது தகுமா.?
அனுமனே நீ பிரம்மசரிய விரதத்தால் ஐந்து பொறிகளையும்
அடக்கியுள்ளாய். அதனால், நீ, ஆண்பால் பெண்பால் என்னும் பகுப்பைக் கடந்தவனாவாய். ஆனால் உலகம் உன்னை ஆண் என்று கூறுகிறது. ஆதலின் உன் மேனியைத் தீண்டுவது தகாது என்று சீதை செப்பினாள்.
****************
403 ராவணன் ஏன் என்னைத் தொடவில்லை – சீதை விளக்கம்
5364.
‘தீண்டினான்எனின், இத்தனை சேண் பகல்
ஈண்டுமோ உயிர்மெய்யின் ? “இமைப்பின்முன்
மாண்டுதீர்வென்” என்றே, நிலம் வன் கையால்
கீண்டு கொண்டு,எழுந்து ஏகினன், கீழ்மையான்.
இழிந்த பண்புடைய இராவணன், -என்னைத் தொட்டிருப்பா னேயானால் இவ்வளவு நீண்ட நாட்கள் உயிரானது உடலில் தங்கியிருக்குமா ?; கண் இமைக்கும் நேரத்தில்அழிந்து ஒழிவேன் என்று கருதியே பேராற்றலால், யான் இருந்த பூமியை பெயர்த்து எடுத்துக் கொண்டு இராவணன் இலங்கைக்குச் சென்றான்.
(என் தோளில் ஏறுவதற்கு மறுத்தாய்; ஆனால் இராவணன் உன்னை எப்படிக் கொணர்ந்தான் என்று அனுமன் நினைக்கலாம் என்பதால் சீதை அதற்கும் பதில் சொல்லிவிட்டாள்).
‘ “மேவு சிந்தை இல் மாதரை மெய் தொடின்,
தேவு வன் தலைசிந்துக நீ” என,
பூவில் வந்தபுராதனனே புகல்
சாவம் உண்டு;எனது ஆர் உயிர் தந்ததால்.
விருப்பமில்லாத பெண்களைத் தொட்டால் தலைகள் நிலத்தில் உருளும் என்று பிரம்மா சாபம் இட்டதும் காப்பாற்றியது என்று சீதை விளக்கினாள்.
****************
404.ராம பிரானுக்கு சீதை அனுப்பிய ஐந்து செய்திகள்
1
‘இன்னும்,ஈண்டு, ஒரு திங்கள் இருப்பல் யான்;
நின்னைநோக்கிப் பகர்ந்தது, நீதியோய் !
பின்னை ஆவிபிடிக்ககிலேன்; அந்த
மன்னன் ஆணை;இதனை மனக் கொள் நீ.
நீதியின் வடிவான அனுமனே! நான்; இன்னும் இந்த இலங்கையில் ஒரு மாதம் பெருமான் வருகைக்காக உயிருடன் இருப்பேன்; அதற்குப் பின்பு (அவர் வரவில்லை எனின் நான் உயிருடன் இருக்க மாட்டேன் ; அந்த அரசன் ஆணை; நீ இதை மனத்தில் வைத்துக் கொள்.5374.
2
‘ “ஆரம் தாழ் திரு மார்பற்கு அமைந்தது ஓர்
தாரம்தான்அலளேனும், தயா எனும்
ஈரம்தான் அகத்துஇல்லை என்றாலும், தன்
வீரம் காத்தலைவேண்டு” என்று வேண்டுவாய்.
மாலை தங்கும் மார்புடைய இராம பிரானுக்கு ஏற்புடைய
மனைவியாக இல்லாவிடினும் (அதனால்) இராமபிரானின்
உள்ளத்தில் கருணை இல்லாமற் போனாலும் தனக்கே உரித்தான வீரத்தைப் பாது காத்துக் கொள்ள வேண்டும் என்று விண்ணப்பம் செய்வாயாக.
யான் தகாதவளாய் இருத்தலின் பெருமான் உள்ளத்தில் இருந்த ஈரம் உலர்ந்து போயிற்று. ஆனால் வீரம் கூடவா வற்றிப் போக வேண்டும் ஈரம் உலர்ந்தது போல் வீரம் உலராமல் காத்துக் கொள்ள வேண்டும் என்று பேசும் பிராட்டி மொழியில் வெறுப்பும் வெகுளியும் புலப்படுகிறது. பிராட்டி உலகப் பெண்கள் போலவே பேசுகிறாள்.
5376.
3
‘ “திங்கள் ஒன்றின் என் செய் தவம் தீர்ந்ததால்;
இங்குவந்திலனேஎனின், யாணர் நீர்க்
கங்கையாற்றங்கரை, அடியேற்கும், தன்
செங் கையால்கடன் செய்க” என்று செப்புவாய்.
ஒரு மாதஎல்லையில் தவம் நிறைவு பெறுகிறது. அதற்குள் வந்தால் என்னைப் பார்க்கலாம். இல்லையேல் இறந்து படுவேன். அச்சடங்கு செய்ய இங்கு வரவேண்டா. அதை அங்கே அருகில் உள்ள கங்கைக் கரையில் செய்க என்று கூறுக என்று கூறுவதால் பிராட்டியின் மனநிலை புலப்படுகிறது.
4
“இந்த, இப்பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும்தொடேன்” என்ற, செவ் வரம்
தந்த வார்த்தைதிருச் செவி சாற்றுவாய்.
(இராமபிரான்) இந்த அவதாரத்தில் இரண்டாவது மனத்தால் கூட தீ்ண்டமாட்டேன்; (இவ்வுறுதியைப்) பெற்றுக் கொள் என்ற வரத்தை வழங்கிய செய்தியை இராமபிரான் செவியில் மொழிக.
5
‘ “ஈண்டு நான் இருந்து, இன் உயிர் மாயினும்,
மீண்டு வந்துபிறந்து, தன் மேனியைத்
தீண்டலாவது ஓர்தீவினை தீர் வரம்
வேண்டினாள்,தொழுது” என்று விளம்புவாய்.
இலங்கையிலிருந்து மீட்கப்படாமல் இறந்தாலும் அடுத்த பிறவியில் ராம பிரானுக்கு மனைவியாகி,- இராமபிரானுடைய திருமேனியை தழுவி, தீமையிலிருந்து விடுபடும் வரத்தை அருளுமாறு கைகூப்பி வேண்டிக் கொண்டாள் என்றும் கூறுவாயாக.
****************
405 லெட்சுமணனிடம் செப்பு மறு சீதை சொன்னது
5375.
‘ஏத்தும் வென்றி இளையவற்கு, ஈது ஒரு
வார்த்தை கூறுதி;”மன் அருளால் எனைக்
காத்து இருந்ததனக்கே கடன், இடை
கோத்த வெஞ்சிறை வீடு” என்று கூறுவாய
பிராட்டிசிந்தித்துச் சிந்தித்துப் பேசுகின்றாள். ஆதலால் பேச்சு இடை இடையே தடுமாறி வருகிறது. இலக்குவனை எண்ணும்போது அவன்பால்தான் கூறிய கடுஞ்சொற்கள் நினைவு வந்தது போலும். இளையவற்கு ஒரு வார்த்தை சொல்… இராமபிரான் கட்டளையால் பாதுகாத்தவற்குத் தான் கடமை உண்டு… இடையிலே என்னைப் பிணித்த சிறையிலிருந்து விடுவிப்பது என்று கூறுக என்ற தொடர் அமைப்பு அதனைக் காட்டும்
****************
406 அனுமன் அளித்த வாக்குறுதி
5404.
‘தாக்கு இகல் இராவணன் தலையில் தாவின,
பாக்கியம் அனையநின் பழிப்பு இல் மேனியை
நோக்கிய கண்களை, நுதி கொள் மூக்கினால்,
காக்கைகள்கவர்ந்து கொண்டு, உண்ணக்
காண்டியால்.
சீதையை நோக்கி அனுமன் செப்பியது: இராவணனுடைய தலைகளில் காகங்கள், தாவியமர்ந்து கொண்டு, பழிப்பற்ற உன்னுடைய மேனியை நோக்கிய கண்களை கூர்மையான அலகுகளால் கொத்தி எடுத்து உண்பதைக் காண்பாய்
****************
407. சீதை தன்னைப்பற்றி கூறிய அடையாளங்கள்
5421.
‘நாகம்ஒன்றிய நல் வரையின்தலை, மேல்நாள்,
ஆகம் வந்து,எனை, அள் உகிர் வாளின் அளைந்த
காகம் ஒன்றைமுனிந்து, அயல் கல் எழு புல்லால்,
வேக வெம் படைவிட்டது, மெல்ல விரிப்பாய்.
முன்பு ஒருநாள் சித்திரகூட மலையில் என்னுடைய உடலை கூரிய நகமாகிய வாளினால் காகம் ஒன்றை – கோபித்து, புல்லாலேவேகமான கொடிய பிரம்மாத்திரத்தை ஏவிய செய்தியை மெதுவாகக் கூறுவாயாக.
காக்கையின்கொடுஞ்செயலை இராமபிரான் அடையாளமாகக் கூறியதைப் பெரியாழ்வார் பேசினார். அது பிராட்டி கூறியதாக அமைக்கப்பெற்றது.:
சித்திரகூடத்து இருப்பச் சிறுகாக்கைமுலைதீண்ட
அத்திரமேகொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனேஇராமாவோ நின்அபயம் என்றழைப்ப
அத்திரமேஅதன்கண்ணை அறுத்ததுமோர் அடையாளம்.
என்று பெரியாழ்வார்திருமொழி பேசும் (3.10.6)
5422.
‘ “என் ஓர் இன் உயிர் மென் கிளிக்கு யார் பெயர்
ஈகேன் ?
மன்ன !”என்றலும், “மாசு அறு கேகயன் மாது, என்
அன்னைதன் பெயர்ஆக” என அன்பினொடு, அந்
நாள்,
சொன்ன மெய்ம்மொழி சொல்லுதி-மெய்ம்மை
தொடர்ந்தோய் !
உண்மை நெறியில்இயங்கும் அனுமனே! என்னுடைய; ஒப்பற்ற இனிய உயிர் போன்ற, மென்மையான கிளிப்பிள்ளைக்குஎவருடைய பெயரை இடுவேன்?- அரசே! என்று யான்கூறியதும் (சீதையே) குற்றம் அற்ற என் அன்னை என்னுடைய தாயாகியகேகய வேந்தன் புதல்வியாகிய கைகேயியின் பெயர் அமைக என்று அன்பினொடு அக்காலத்தில் (இராமபிரான்)கூறிய மெய்ம்மையான வார்த்தையை சொல்வாயாக;
****************
408.ராமனிடம் அளிக்குமாறு சீதை கொடுத்த சூடாமணியைக் கண்டு அனுமனை வியந்தது
5424.
வாங்கினாள், தன் மலர்க்கையில்; மன்னனை
முன்னா,
ஏங்கினாள்; அவ்அனுமனும், ‘என்கொல் இது ?’
என்னா,
வீங்கினான்;வியந்தான்; உலகு ஏழும் விழுங்கித்
தூங்கு கார் இருள்முற்றும் இரிந்தது சுற்றும்.
சீதை, சூடாமணியை தன்னுடைய மலர் போன்ற கைகளில் எடுத்தாள்; இராமபிரானை எண்ணி ஏக்கமுற்றாள்; அனுமனும்
பிராட்டியின் கையில் உள்ள இப்பொருள் யாதோ என்று ஆச்சரியப்பட்டான். அப்போதுமணியின் ஒளியால் ஏழு
உலகங்களையும் உட் கொண்டு உறங்குகின்ற கரிய இருள் முழுவதும் ஓடிப்போயிற்று.
இந்தச் சூடாமணி என்னால் மிகவும் போற்றிப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. துக்கம் உண்டாகும் போது இதைக் கண்டு உன்னைக் கண்டவள் போல மிகவும் களிக்கின்றேன்’ என்று பிராட்டி
பேசியதாக வான்மீகி எழுதியுள்ளார் . அதைக் கருத்திற் கொண்ட கவிச்சக்கரவர்த்தி, ‘மன்னனை முன்னா ஏங்கினாள்’ என்றார். மன்னன் என்றது ‘சனகன்’ என்றும், தசரதன் என்றும் கூறலாம் என்பர். சனகன் சூடாமணி வழங்கியவன்; தசரதன் அந்த மணியைப் போற்றியவன் என்பர்.
5426.
கூந்தல்மென் மழை கொள் முகில்மேல் எழு
கோளின்
வேந்தன் அன்னது,மெல்லியல்தன் திரு மேனி
சேந்தது, அந்தம்இல் சேவகன் சேவடி என்னக்
காந்துகின்றது,காட்டினள்; மாருதி கண்டான்.
கோள்களின் அரசனாகிய சூரியனைப் போன்றிருப்பதும், பிராட்டியின் அழகிய ஒளி வீசும் மேனிபோல செந்நிறம் பெற்றதும் ,இராம பிரானின் திருவடி போல ஒளி வீசுவதுமான சூடாமணியை காட்டினாள்; அனுமன் அதைப் பார்த்தான்.
****************
409.சூடாமணி என்றால் என்ன ?
5427.
‘சூடையின்மணி கண் மணி ஒப்பது, தொல் நாள்
ஆடையின்கண்இருந்தது, பேர் அடையாளம்;
நாடி வந்து எனதுஇன் உயிர் நல்கினை, நல்லோய் !
கோடி’ என்றுகொடுத்தனள், மெய்ப் புகழ்
கொண்டாள்.
உண்மையான புகழைப்பெற்ற பிராட்டி, அனுமனை நோக்கி, விளம்பினாள் : விருப்பத்துடன் வந்து என்னுடைய இனிய உயிரை வழங்கினாய்; சிறந்தவனே (இஃது); சூடாமணியாகும்; என்னுடைய கண்ணின் மணி போன்றது;நீண்ட நாட்களாக என்னுடைய ஆடையில் மறைத்து வைக்கப் பெற்றது; பெரிய அடையாளமாகும்; இதனை எடுத்துச் செல்வாயாக என்று கூறி சூடாமணியை, அனுமனிடம்வழங்கினாள்.
சூடாமணி என்பதுநடுவே ரத்தினம் பதிந்த வில்லை என்று திரிசிரபுரம் மாகவித்துவான் வி. கோவிந்தப் பிள்ளை வரைந்தார். சூடா என்னும் வடசொல் சூடை என்று வந்தது. உறுசுடர்ச் சூடைக் காசுக்கு அரசினை’ என்று பின்பு பேசப் பெறும் (கம்ப. 5473) ****************
410. சூடாமணியைப் பெற்றுக்கொண்ட அனுமன் செய்தது
5428.
தொழுதுவாங்கினன்; சுற்றிய தூசினன், முற்றப்
பழுது உறாவகைபந்தனை செய்தனன்; வந்தித்து,
அழுது, மும்மை வலம் கொடு இறைஞ்சினன்;
அன்போடு,
எழுது பாவையும்,ஏத்தினள்; ஏகினன் இப்பால்.
(அனுமன் சூடாமணியை) கை கூப்பிப் பெற்று உடுத்திருந்த ஆடையிலே நன்றாக தவறிப் போகாதபடி முடித்து வைத்துக் கொண்டு வணங்கி; அழுது, மூன்று முறை வலஞ் செய்து பிராட்டியின் பாதங்களில் பணிந்தான்; அது கண்ட பிராட்டி அன்புடன்;
வாழ்த்தினள்; அனுமன் சென்றனன்.
–SUBHAM—
TAGS- சூடாமணி, “உலகங்கள் யாவும், என் சொல்லினால் சுடுவேன்”- சீதை, கம்பராமாயணத்தில் 410 கேள்விகள், அனுமன், சுந்தர காண்டம்