
Written by London Swaminathan
Post No. 16,412
Date uploaded in London – 20 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அசோக வனத்தை அனுமன் சேதப்படுத்தியதை அறிந்த ராவணன் , அனுமனைக் கொல்லாமல் பிடித்து வாருங்கள் என்று கிங்கரர்களையும் சம்புமாலியையும் அனுப்பினான் ; அவர்களை மாருதி அழித்தான் ; பின்னர் பஞ்ச சேனாதிபதிகள் என்னும் ஐந்து படைத்தலைவர்களும் அதற்குப்பின்னர் ராவணன் மகன் அட்சய குமாரனும் போய் அழிகிறார்கள் ; இறுதியில் ராவணனின் இன்னொரு மகனான இந்திரஜித், அநுமனைப் பிடித்துவருகிறான்; சுவையான செய்திகளை மட்டும் காண்போம்.

421
பஞ்ச சேனாதிபதிகள் கூறிய மதயானை உவமை என்ன ?
422
வள்ளுவர் யார் ? அவர் செய்த பணி என்ன ?
423
பஞ்ச சேனாபதியர் கொணர்ந்த நால்வகைப் படைகளின் எண்ணிக்கை எவ்வளவு ?
424
வீர சூட்டிகை என்றால் என்ன என்று தெரியுமா?
425
பஞ்ச சேனாதிபதிகளின் படைகளை அனுமன் எப்படி அழித்தான்?
426
பஞ்சசேனாபதிகளை தீய வழியில் செல்லும் ஐம்புலன்களுக்கு கம்பன் ஒப்பிட்ட உவமையின் சிறப்பு என்ன ?
427
தந்தையிடம் அட்சய குமாரன் என்ன வேண்டினான் ?
428
அனுமனுக்குப் பயந்து ஓடிய படையினர் எப்படி உருவங்களை எடுத்தார்கள்?
429
மண்டோதரி அழுது புலம்பியது ஏன்?
430
ஆண் தொழில் குரங்கை, யானே,”ஏ” எனும்அளவில் பற்றித் தருகுவென்- என்று இந்திரஜித் செப்பியதன் பொருள் என்ன?
xxxxxxxxxxxxxxxxxxxxxx
விடைகள்


421.பஞ்ச சேனாதிபதிகள் கூறிய மதயானை உவமை
சிலந்திஉண்பது ஓர் குரங்கின்மேல் சேறியேல்,
திறலோய் !
கலந்த போரில்நின் கண்புலக் கடுங் கனல் கதுவ,
உலந்த மால் வரைஅருவி ஆறு ஒழுக்கு அற்ற
ஒக்கப்
புலர்ந்த மாமதம் பூக்கும் அன்றே, திசைப் பூட்கை ?
(சேனைத் தலைவர் இராவணனை நோக்கி) வலிமை
வாய்ந்தவனே! (நீ) சிலந்திப் பூச்சியைப் பிடித்துத் தின்னும் ஒரு குரங்கின் மேல் போர் செய்யப் போவாயானால் …….
ஒரு குரங்கை எதிர்த்து இராவணன் போருக்குச் சென்றால், அது அவனது ஆற்றலின் குறைவைத் தெரிவிக்கும். முன்னர் ஒரு சமயம் தோற்ற எட்டுத் திசை யானைகளும் இப்போது அவனை இழிவாகக் கருதி மகிழ்ச்சியினால்,மதச் செருக்குக் கொள்ளும், என்று சேனைத் தலைவர் கூறினார்கள். அருவி ஆறுவற்றிப் போன மலைக்கு மதம் அடங்கிய திக்கு யானைகள் உவமை.
xxxxxxxxxxxxxxxx
422.வள்ளுவர் யார்?
5606.
ஆனைமேல்முரசு அறைந்தனர் வள்ளுவர்
அமைந்தார்;
பேன வேலையின்புடை பரந்தது, பெருஞ் சேனை;
சோனை மா மழைமுகில் எனப் போர்ப் பணை
துவைத்த;
மீன வான் இடுவில் எனப் படைக்கலம் மிடைந்த.
பறையறைவோராக இருந்த வள்ளுவர் யானையின் மீது ஏறிப் போர் முரசை முழக்கினர்; பெரிய அரக்கர் படைகள் நுரையை உடைய கடலைப் போல, எல்லாப் பக்கங்களிலும் பரவலாயிற்று; விடாது பெரு மழை பொழிகின்ற மேகம் போல போர் முரசங்கள் ஒலித்தன; நட்சத்திரங்கள் விளங்கும் ஆகாயத்தில் தோன்றும் வானவில்லைப் போல போர்ப் படைக் கருவிகள் விளங்கின.
போர் முரசு ஒலிக்கு. மழை பொழியும் மேகமும், படைக்கலங்களுக்கு வான வில்லும் உவமைகள்.
xxxxxxxxxxxxxx
423. பஞ்சசேனாபதியர் கொணர்ந்த நால்வகைப் படையின் எண்ணிக்கை:-
ஆழித்தேர்த் தொகை ஐம்பதினாயிரம்; அஃதே
சூழிப்பூட்கைக்குத் தொகை; அவற்று இரட்டியின்
தொகைய,
ஊழிக் காற்றுஅன்ன புரவி; மற்று அவற்றினுக்கு
இரட்டி,
பாழித் தோள்நெடும் படைக்கலப் பதாதியின் பகுதி.
சக்கரங்களைக் கொண்ட தேர்களின் கணக்கு ஐம்பதினாயிரம்;
முகபடாம் அணிந்த யானைகளின் தொகையும் மேலே கூறிய தேர்களின் அளவேயாகும்; யுகாந்த காலத்தில் தோன்றுகின்ற பெருங்காற்றுப் போல வேகமாகச் செல்கின்ற குதிரைகள் அந்தத்
தேர்ப்படை, யானைப் படைகளைவிட இருமடங்கு தொகை உடையன; பெரிய தோள்களையும், சிறந்த ஆயுதங்களையும் உடைய காலாட்படைப் பிரிவுகளின் கணக்கு, அந்தக் குதிரைப் படைகளுக்கு இரு மடங்காகும் (இரண்டு லட்சம்)
xxxxxxxxxxxxxxx
424.வீர சூட்டிகை
5618.
சூர்தடிந்தவன் மயிலிடைப் பறித்த வன் தோகை,
பார் பயந்தவன்அன்னத்தின் இறகிடைப் பறித்த
மூரி வெஞ் சிறகு,இடை இட்டுத் தொடுத்தன
முறுக்கி,
வீர சூடிகைநெற்றியின் அயல் இட்டு விசித்தார்.
சூரபதுமனைக் கொன்ற முருகக் கடவுளின் வாகனமாகிய மயிலின் வாலினிடத்திருந்து பிய்த்த வலிய இறகுகளையும் பூமியைப் படைத்த நான்முகனின் வாகனமான அன்னப் பறவையினது இறகிலிருந்து எடுத்த அழகிய சிறகுகளையும் நடு நடுவே வைத்து முறுக்கித் தொடுத்த, வீரத்துக்கு அறிகுறியான, வீர சூடிகையை நெற்றியில் வைத்துக் கட்டிக் கொண்டிருப்பவர்கள்.
வீர சூடிகை – வீரர்கள்அணியும் நெற்றிச் சுட்டி.
xxxxxxxxxxxxxxxxxxxxx
425.அனுமனின் விஸ்வரூபத்தில் அழிந்த படைகள்
ஆயிடை,அனுமனும், அமரர்கோன் நகர்
வாயில்நின்றுஅவ் வழிக் கொணர்ந்து வைத்த மாச்
சேயொளித்தோரணத்து உம்பர், சேண் நெடு
மீ உயர்விசும்பையும் கடக்க வீங்கினான்.
அப்பொழுது தேவர்தலைவனான இந்திரனது தலை நகராகிய அமராவதிப் பட்டணத்தின் வாசலிலிருந்து கொண்டு வந்து வைக்கப்பட்ட செந்நிற தோரணத்தின் மேலே அனுமன் இருந்தான்
அனுமன் பெரியவடிவம் கொள்ளலும், அரக்கர் சினந்து படை வழங்கலும்
முழு முதல்,கண்ணுதல், முருகன் தாதை, கைம்
மழு எனப்பொலிந்து ஒளிர் வயிர வான் தனி
எழுவினின்,பொலங் கழல் அரக்கர் ஈண்டிய
குழுவினை, களம்படக் கொன்று நீக்கினான்.
மும் மூர்த்திகளில் ஒருவனாகிய கண்ணை நெற்றியிலே கொண்ட, முருகக் கடவுளின் தந்தையாகிய சிவபிரானது கையில் ஏந்திய மழுவாயுதம் போலவிளங்குகின்ற உறுதியான இரும்புத் தூணினால் அழகிய வீரக்கழல் அணிந்த அரக்கருடைய கூட்டத்தை போர்க் களத்தில் கொன்று தொலைத்தான்.
xxxxxxxxxxxxxxxxx
426 பஞ்சசேனாபதிகளை தீய வழியில் செல்லும் ஐம்புலன்களுக்கு ஒப்பிட்ட உவமை
5664.
வஞ்சமும்களவும் வெஃகி, வழி அலா வழிமேல் ஓடி,
நஞ்சினும்கொடியர் ஆகி, நவை செயற்கு உரிய
நீரார்,
வெஞ் சின அரக்கர் ஐவர்; ஒருவனே!-
வெல்லப்பட்டார்
அஞ்சு எனும்புலன்கள் ஒத்தார்; அவனும், நல்
அறிவை ஒத்தான்.
பஞ்ச சேனாபதியரை தீய வழியில் செல்லும் ஐம்புலன்களுக்கும், அவர்களை வென்ற அனுமனுக்குப் புலன்களை வென்ற ஞானத்துக்கும் உவமைகளாக தரப்பட்டுள்ளன. இது ஒரு தத்துவ உவமை. முன்னே (5615) ஒரு பாடலில் பஞ்ச சேனாபதியரை ஐம்பெரும் பூதங்களை நிகர்த்தவர் என்று குறிந்துள்ளார்.
வஞ்சகத் தன்மையையும் களவுத் தொழிலையும் விரும்பி,
பிறர்க்குத் தீமை செய்வதையே தமக்குக் குணமாகக் கொண்டவர்களாய் விளங்கியவர்கள் பஞ்சசேனாபதிகள்.
xxxxxxxxxxxxxxxxxx
427. தந்தை ராவணனிடம் அட்சய குமாரன்சொன்னது
‘முக்கணான்ஊர்தி அன்றேல், மூன்று உலகு
அடியின் தாயோன்
ஒக்க ஊர் பறவைஅன்றேல், அவன் துயில் உரகம்
அன்றேல்,
திக்கயம்அல்லதேல், புன் குரங்கின்மேல் சேறி
போலாம் !
இக் கடன்அடியேற்கு ஈதி; இருத்தி ஈண்டு
இனிதின்; எந்தாய் !
என்தந்தையே ! நம்மோடு போரிடுவது மூன்று கண்களை உடைய சிவபிரானது வாகனமாகிய ரிஷபம் இல்லையென்றால், தன் ஈரடிகளால் தாவியளந் தவனாகிய திருமால், ஊர்ந்து செல்லும் பறவையாகிய கருடன்இல்லையென்றால், அத்திருமால் பள்ளி
கொள்ளும் பாம்பாகிய ஆதிசேடன் இல்லையென்றால், எட்டுத் திக்குகளில் இருக்கும் யானைகளில் ஒன்றும் இல்லையென்றால் ,அற்பக்குரங்கின் மீது போருக்குச் செல்கின்றாய் போலும் ! (நீ செல்வது சிறிதும் தகுதியன்று); இந்தக் கடமையை எனக்குத் தந்து, இங்கு நீ (கவலையின்றி) இனிதாக இருப்பாயாக.
( ‘நீ விலங்குகளோடு எதிர்த்துப் போர் புரிவது உனக்கு இழுக்கு; சிவபிரானின் இடபம், திருமாலின் கருடன்,ஆதிசேடன், திக்கயம் இவற்றோடு போர் செய்தாலும் சரி என்று சொல்லலாம். அற்பக் குரங்கோடு போர் செய்யச் செல்வது, உன் பெருமைக்கும் வலிமைக்கும் குறைவு’ என்று அட்சய குமாரன் கூறினான்.
5671.
‘கொய் தளிர் கோதும் வாழ்க்கைக் கோடரத்து
உருவு கொண்டு,
கைதவம் கண்ணி,ஈண்டு ஓர் சிறு பழி இழைக்கும்
கற்பான்,
எய்தினன்,இமையா முக்கண் ஈசனே என்ற போதும்,
நொய்தினின்வென்று, பற்றி தருகுவென், நொடியில்
மூன்று கண்களை உடைய சிவபிரானே இந்த இலங்கையில் ஒரு சிறிய அவமதிப்பைச் செய்ய வேண்டும் என்ற நினைவினால், வஞ்சனையைக் கருத்தில் எண்ணி, கொய் கொய்யும் தளிர்களை மெதுவாகக் கடித்துத் தின்னும் எளிய வாழ்வை உடைய அற்பக்குரங்கினது வடிவத்தைக் கொண்டு வந்துள்ளான் என்றாலும் (அவனை) எளிதில் வென்று வெகு விரைவில் பிடித்து உன்னிடம் கொணர்ந்து விட்டுவிடுவேன் என்று அட்சய குமாரன் கூறினான்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxx
428. அனுமனுக்குப் பயந்து ஓடிய படையினர்
மீன் ஆய்,வேலையை உற்றார் சிலர்; சிலர்
பசு ஆய்வழிதொறும் மேய்வுற்றார்;
ஊன் ஆர்பறவையின் வடிவு ஆனார் சிலர்;
சிலர்நான்மறையவர் உரு ஆனார்;
மான் ஆர் கண்இள மடவார் ஆயினர்
முன்னே, தம் குழல் வகிர்வுற்றார்
ஆனார் சிலர்;சிலர், ‘ஐயா ! நின் சரண்’
என்றார்;நின்றவர் ‘அரி’ என்றார்.
அனுமனுக்கு அஞ்சித் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் அரக்கர்கள் செய்த மாயச் செயல்கள் கூறப்படுகின்றன; இதை திருவிளையாடல் புராண சமணர்கள் செய்த செயல்களுடன் ஒப்பிடலாம் ; பாண்டிய மன்னன் முன் நடைபெற்ற போட்டிகளில் தோற்றால் கழுவில் ஏறுவதாக 8000 சமணர்களும் சொன்னார்கள்; ஆயினும் சம்பந்தர் வெற்றிபெற்றவுடன் தோல்வியுற்ற சமணர்கள் பல்வேறு வழிகளில் தப்பித்தார்கள் என்று தி.வி.புராணம் கூறுகிறது.
சில அரக்கர்கள் மீன் உருவம் கொண்டு கடலில் சேர்ந்தனர்; சிலர் பசுவின் வடிவில் மாறி மேயத் துவங்கினார்கள்; சில அரக்கர்கள், மாமிசத்தைத்தின்னும் (கழுகு, காகம் முதலிய) பறவைகளின் வடிவை எடுத்தார்கள்; வேறு சிலஅரக்கர்கள் நான்கு வேதங்களை ஓதும் அந்தணர் உருவை எடுத்துக்கொண்டனர்; மற்றும் சில அரக்கர்கள், மான்போன்ற கண்களை உடைய இளமகளிர் உருவைப்
பெற்றவராய் தம்கூந்தலை முன்புறம் வகிடு எடுத்துக் கொண்டனர்; வேறுசிலர், ‘ஐயனே ! யாம் உன்னிடம் சரண் அடைகிறோம் என்றார்கள்; நின்றவர் அரி என்ற திருநாமத்தைக் கூறினர்.
இறுதியில் அனுமன் சிலேடையையும் நகைச் சுவையையும் அளிக்கிறான். பயத்தில் குரங்கு/ அரி குரங்கு/அரி என்று நாக்கு குழறியது அது விஷ்ணுவின் நாமமாக இருந்ததால் அனுமன் ஒன்றும் செய்யவில்லை; அரி = குரங்கு என்றும் பொருள் – குரங்கு என்றது அச்சத்தில் கூறியதாம் – அது திருமால்/ ஹரி நாமமாகக் கருதப்பட்டு உயிர் பெற்றார்.
xxxxxxxxxxxxxxxxxxx
429. இராவணனிடம் மண்டோதரி முதலியோர் அழுது புலம்புதல்
மண்டோதரி, தன்குமாரன் அட்சன் (அக்ககுமாரன்)
இறக்கக் காரணமாயிருந்த இராவணனது கால்களில் விழுந்து அழுது புலம்பினாள். வயிற்றில் அடித்துக் கொண்டார்.
கயல்மகிழ் கண் இணை கலுழி கான்று உக,
புயல் மகிழ் புரிகுழல் பொடி அளாவுற,
அயன் மகன் மகன்மகன் அடியின் வீழ்ந்தனள்,
மயன் மகள்;வயிறு அலைத்து அலறி மாழ்கினாள்.
மயனது மகளான மண்டோதரி, கயல் மீன் போன்ற கண்கள்
இரண்டும் நீர் பெருகச் சிந்தவும், காள மேகத்தை ஒத்த முறுக்கிவிட்ட கூந்தல் மண்ணின் புழுதியிலே புரளவும், பிரமதேவன்
குமாரனான புலத்திய முனிவரின் மகனாகிய விச்ரவஸ் என்பவனது மகனாகிய இராவணனது பாதங்களில் விழுந்து வயிற்றில் அடித்துக் கொண்டு கதறிப் புலம்பினாள்.
XXXXXXXXXXXXXXX
430
இராவணனிடம் விடைபெற்று, இந்திரசித்து போர்க்குச் செல்லுதல்
5728.
ஆயினும்,ஐய ! நொய்தின், ஆண் தொழில் குரங்கை,
யானே,
“ஏ” எனும்அளவில் பற்றித் தருகுவென்; இடர்
என்று ஒன்றும்
நீ இனிஉழக்கற்பாலை அல்லை; நீடு இருத்தி’
என்னா,
போயினன்-அமரர்கோவைப் புகழொடு கொண்டு
போந்தான்.
ஐயனே !வீரச்செயலில் சிறந்த இந்தக் குரங்கை (அனுமனை) சீக்கிரத்தில் (சூ என்பதற்குள்) நானே எளிதில் பிடித்துக் கொடுப்பேன்; இனிமேல் நீ வருந்த வேண்டிய தில்லை; நீண்டகாலம் வாழ்ந்திருப்பாய்! என்று சொல்லிவிட்டு தேவர்க்கரசனான இந்திரனை தோற்கடித்த மேகநாதன் போர்க்களம் சென்றான்.

—-SUBHAM—-
TAGS- அட்சய குமாரன், மேகநாதன், இந்திரஜித், அனுமன், கம்ப ராமாயணத்தில் 430 கேள்விகள்