
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,411
Date uploaded in London –20 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

ஶ்ரீ சக்ர ரகசியம்! – 3
ச. நாகராஜன்
9. ஒன்பதாவது ஸர்வாநந்தமய சக்ரம்
முக்கோணத்தின் மத்தியில் பிரஞ்ஞான ஸ்வரூபமாயும், யோகிகளால் தியானித்தற்குரியதாயுமுள்ள ஸர்வாநந்தமயம் என்னும் பிந்து சக்ரத்தில் மாயா மயங்களாகும் கயிறுகளால் கட்டப்பட்டிருக்கும் கறுப்புப் பட்டுத் திரையும் (திரஸ்கரணியும்)
மல்லிகை, முல்லை முதலிய நறுமணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பஞ்சப் பிரஹ்ம மஹா மஞ்சமும் அதன் மேல் விரித்துள்ள இலவம்பஞ்சு மெத்தையும், சிவ தத்துவம் முதல் பிரிதிவி தத்துவம் ஈறாகவுள்ள முப்பத்தாறு தத்துவ ரூபமான படிகளும் ஸதாசிவ ரூபமான பட்டுத் தலையணைகளும் விளங்கும்.
இத்தகையை மகிமை வாய்ந்தை மஞ்சத்தின் மேல் திரிலோக சுந்தரனும் காமேஸ்வரனுமான பரப்ரஹ்மம், பாசம், அங்குசம், கரும்பு வில், புஷ்ப பாணங்களைத் தனது நான்கு கைகளிலும் தரித்துக் கொண்டு திவ்ய வஸ்திர பூஷணங்களை அணிந்து, அழகில் மிக்க அறமாதர் பலர் வெண்தாமரை வீசிக்கொண்டும், இனிய வீணாகானம் செய்து கொண்டும், இன்னும் இவ்விதமான பல உபசாரங்களைச் செய்து கொண்டும் சூழ்ந்து நிற்க, மஹா வைபவத்தோடு அமர்ந்திருப்பார். அவருடைய இடது தொடை என்னும் மஹாபீடத்தின் மேல் திரிலோக மோஹினியும், சிருஷ்டியாதி பஞ்சகிருத்தியங்களுக்கும் காரணமானவளும், ஸர்வதந்திர ஸ்வதந்திரையும், சாந்த ரஸ ஸ்வரூபிணியும், ஸகல லோக மாதாவும், சிறந்த வஸ்திர பூஷண புஷ்பமாலைகளை அணிந்தவளும், குங்குமப் பூவைப் போன்ற திருமேனியை உடையவளும், ஸமஸ்த சக்ர பரிவார ஸமேதையும், பரப்ரஹ்ம சக்ரமயமானவளும் மஹா ஒட்டியாண பீட ஸ்வரூபிணியும், சர்யாநந்த நாதாதிகளோடு கூடி விளங்குபவளும்,
இப்பிந்துவோடு கூடிய முக்கோணத்தின் மேலுள்ள நாற்கோணத்தில், சாதகனுடைய வலப்பக்கத்திலிருந்து இடதுபக்கமாக மூன்று ரேகைகள் உண்டு. இந்த மூன்று ரேகைகளில் குருமண்டல தேவதைகள் வீற்றிருப்பார்கள். ஒன்று என்று குறிப்பிட்ட மேல் ரேகையில் திவ்ய ஓக குரு மண்டலமும்
இரண்டாம் ரேகையில் ஸித்த ஓக குரு மண்டலமும், மூன்றாம் ரேகையில் மானவ ஓக குரு மண்டலமும் விளங்கும்.
இந்த திவ்ய, ஸித்த, மானவ, ஓக குரு மண்டல தேவதைகளின் பெயர்கள், அவரவர்கள் சம்பிரதாயத்திற்கேற்ப பேதப்படும். இந்த சம்பிரதாயங்கள் பலவகைப்படும்; அவற்றுள் காதி வித்யா சம்பிரதாயம், ஹாதி வித்யா சம்பிரதாயம், ஸாதி வித்யா சம்பிரதாயம், மஹா ஷோடசீ சம்பிரதாயம், பர சம்பிரதாயம் என்பவை முக்கியமானவையாகும்.
இந்த குரு மண்டலத்தின் மூன்று கோடுகளில் மானவ ஓகக் கோட்டில், சாதகன், தனது பரம குருவையும், திவ்ய ஓகக் கோட்டில் தனது பரமேஷ்டி குருவையும் பாவித்து பூஜித்தல் வேண்டும்.
நித்தியா தேவதைகள்

மத்திய முக்கோணத்தில் மூன்று கோடுகளிலும், ஒவ்வொரு கோட்டிலும் ஐந்தைந்து தேவதைகள் வீதம் பதினைந்து தேவதைகள்
விளங்குவார்கள். இப்பதினைந்து நித்தியா தேவதைகளுக்கும், காமேஸ்வரீ, பகமாலினீ, நித்யக்லின்னை, பேருண்டா, வந்நிவாஸினி, மஹா வஜ்ரேஸ்வரி, சிவதூதி, த்வரிதை, குளசுந்தரீ, நித்தியை, நீலபதாகா, விஜயா, ஸர்வமங்களா, ஜ்வாலா மாலினீ, சித்ரா என்பன பெயர்களாகும். பதினாறாவது நித்யை மஹா நித்யையாகும். இந்த மஹா நித்யா தேவியைப் பிந்துவில் பாவித்தல் வேண்டும்.
அன்றியும் அந்த மத்திய திரிகோணத்தின் நாற்றிசைகளிலும் காமேஸ்வர, காமேஸ்வரிகளின் ஆயுதங்களான பஞ்ச பாணங்கள், தனுசு, பாசம், அங்குசம் என்னும் ஆயுத தேவதைகள் விளங்குவார்கள்.
இத்துடன் ஶ்ரீ சக்ர ரகசியம் முடிகிறது.
இதில் ஶ்ரீ சக்ர விளக்கமும் ஆவரண தேவதைகளின் பெயர்களும் சுருக்கமாகக் கூறப்பட்டன.
** முற்றும்