கம்பன் போதிக்கும் அத்வைதம்! கம்ப ராமாயணத்தில் 450 கேள்விகள் (Post.16,417)

Written by London Swaminathan

Post No. 16,417

Date uploaded in London – 22 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

441

ஏண்டா அரக்கர்களைக்  கொன்றாய் என்று ஏக வசனத்தில் பேசிய ராவணனுக்கு அனுமன் என்ன பதில் தந்தான்?

442

அநுமனைக் கொல்ல ராவணன் முடிவுசெய்தவுடன் அவன் தம்பி விபீஷணன் என்ன அறிவுரை நல்கினான் ?

443

அனுமன் வாலில் தீ வைக்கும் படி ராவணன் இட்ட கட்டளை யாது ?

444

அனுமன் வாலில் தீ வைத்து அரக்கர்கள் செய்த ஆரவாரம் எப்படி இருந்தது ?

445

அனுமனின் வாலில் தீ வைக்கப்பட்ட செய்தியைக் கேட்ட சீதா தேவி  தன் கற்பின் சக்தியால் அனுமனை எப்படிக் காப்பாற்றினாள்?

446

கம்பன் கருத்துப்படி, திரிபுரம் எரித்த சிவபெருமானுக்கும் இலங்கையை எரித்த அனுமனுக்கும் என்ன வித்தியாசம்?

447

அனுமன் கொளுத்திய இலங்கை நகர வீடுகள் தங்கம் வெள்ளி ரத்தினக் கற்களால் ஆனவையா ?

448

இலங்கையை அக்கினி தேவன் உற்சாகத்தோடு எரித்தததற்கு என்ன காரணம் சொல்கிறான் கம்பன்?

449

மிதிலை எரிந்திட வேதப்பொருளை வினவும் மதி ஜனகன் மதி — என்று பாரதி பாடினான் ; அது போல இலங்கை எரியும் போதும் அத்வைதக் கருத்தை எப்படிக் கம்பன் பாடுகிறான் ?

450

அலாவுதீன் கில்ஜி என்ற அரக்கனின் கை படக்கூடாதென்று நூற்றுக் கணக்கான பெண்களுடன் தீயில் புகுந்து தெய்வ நிலை எய்திய சித்தூர் ராணி பத்மினி போல  இலங்கை மாதர் உயிர்த் தியாகம் செய்தார்களா ?

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

விடைகள்

441

ராவணனுக்கு அனுமன் அளித்தவிடை

5913.

‘காட்டுவார் இன்மையால், கடி காவினை

வாட்டினேன்;என்னைக் கொல்ல வந்தார்களை

வீட்டினேன்;பின்னும் மென்மையினால் உன்தன்-

மாட்டு வந்தது,காணும் மதியினால்.

காட்டு வார்இன்மையால் – உன்னை எனக்குக்காட்டுபவர் எவரும் இங்கு இல்லாமையால்;

கடிகாவினை வாட்டினேன் – உன் காவல் சோலையை

அழித்தேன்;

என்னைக் கொல்ல வந்தார்களை வீட்டினேன் – (என்

கருத்தை அறியாமல்) என்னைக் கொல்ல வந்த அரக்கர்களை அழித்தேன்;

பின்னும் – அதன் பின்பும்; மென்மையினால் உன் தன் மாட்டு வந்தது –

எளிமைப் பாட்டோடு உன்னிடத்து நான் வந்தது; காணும் மதியினால் – உன்னைக் கண்டு செய்தி கூற வேண்டும் என்ற எண்ணத்தால் (ஆகும்).

*************************

442.விபீஷணன் அறிவுரை

‘அந்தணன்,உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின்

ஆற்றல்

தந்தவன்,அன்புக்கு ஆன்ற தவ நெறி உணர்ந்து,

தக்கோய் !

இந்திரன் கருமம்ஆற்றும் இறைவன் நீ; “இயம்புதூது

வந்தனென்” என்றபின்னும், கோறியோ, மறைகள்

வல்லோய் ?

அறிவு ஆற்றல் உடையவனே, வேதங்களில் வல்லவனே ! மூவகை உலகங்களையும் படைத்தவனான பிரமனது   வழியை அறிந்து, தேவேந்திரனது திரிலோக ஆட்சியைக் கைப்பற்றி ஆளவல்ல பேரரசன் நீ; (அப்படியிருந்தும்);  தூதனாக இங்கு வந்தேன்’ என்று சொன்ன பிறகும் (அவனைக்) கொல்லுகின்றாயோ ?

இராவணனதுபெருமையை எடுத்துக் காட்டி, ‘தூதுவனைக் கொல்வது தக்கதன்று’ என்று வீடணன் கூறினான் என்க.

‘பூதலப் பரப்பின், அண்டப் பொகுட்டினுள், புறத்துள்,

பொய் தீர்

வேதம் உற்றுஇயங்கு வைப்பின், வேறு வேறு

இடத்து வேந்தர்,

மாதரைக் கொலைசெய்தார்கள் உளர் என வரினும்,

வந்த

தூதரைக்கொன்றுளார்கள் யாவரே, தொல்லை

நல்லோர் ?

அண்ட கோளத்திலும்  அதற்கு வெளியே பகிரண்டத்திலும்  சத்தியமான,வேதநெறி பொருந்தி வழங்கிவரும் உலகங்களில் உள்ள அரசர்கள் பலர் மாதரைக் /மகளிரைக் கொலை செய்தவர்கள் உண்டு; தம்மிடத்தில் வந்த தூதரைக் கொன்றுள்ளவர் யாரே உள்ளார் ? (ஒருவரும் இல்லை)

பாவங்களுள் பெண்கொலை கொடிது; அதனினும் கொடிது தூதுவனைக் கொல்லுதல் என்பதாம்.

*********************

443.அனுமன் வாலில் தீ வைக்கும் படி ராவணன் இட்ட கட்டளை

6005.  “நல்லது உரைத்தாய்; நம்பி! இவன்

நவை செய்தானே ஆனாலும்,

கொல்லல் பழுதே; போய் இடை நீ

கூறிக் கொணர்தி கடிது ‘‘ என்னாத்

“தொல்லை வாலை மூலம் அறச்

சுட்டு நகரைச் சூழ்போக்கி,

எல்லை கடக்க விடுமின்கள் ‘‘

என்றான்; நின்றார் இரைத்து எழுந்தார்.

ராவணன் சொல்கிறான்: தம்பி, விபீஷணா! நீ சொல்வது சரியே; தூதனைக் கொல்லக் கூடாது ; இவன் வாலில் தீ வைத்து நகருக்கு  வெளியெ கொண்டு விடுங்கள் என்று ராவணன்  கட்டளை இட்டான்.

**************************

444

அனுமன் வாலில் தீ வைத்து அரக்கர்கள் செய்த ஆரவாரம்

வேந்தன்கோயில் வாயிலொடு விரைவில் கடந்து,

வெள்ளிடையின்

போந்து, புறம்நின்று இரைக்கின்ற பொறை தீர்

மறவர் புறம் சுற்ற,

ஏந்து நெடு வால்கிழி சுற்றி, முற்றும் தோய்த்தார்,

இழுது எண்ணெய்;

காந்து கடுந்தீக் கொளுத்தினார்; ஆர்த்தார்,

அண்டம் கடி கலங்க.

அரக்கவீரர்கள், அனுமனைக் கயிறுகள் கட்டி இழுத்துக் கொண்டு  இராவணனது அரண்மனை வாயிலை விரைவாகக் கடந்து  வெட்ட வெளியை அடைந்தார்கள் . அனுமனைச் சுற்றி நின்று ஆரவாரஞ் செய்தார்கள் ; நீண்ட வாலில் பலவகைச் சீலைகளைக்கொண்டு சுற்றி அவ்வால் முழுவதையும் நெய்யிலும் எண்ணெயிலும் தோய்த்து எரியும் நெருப்பை வைத்தார்கள்.  அண்ட கோளம் முழுவதும் நிலை குலையும்படிப் பெரு முழக்கமிட்டார்கள்.

**********************

445

‘தாயே அனைய கருணையான் துணையை, ஏதும்

தகைவு இல்லா

நாயே அனைய வல்அரக்கர் நலியக் கண்டால்,

நல்காயோ ?

நீயே உலகுக்கு ஒருசான்று; நிற்கே தெரியும்

கற்பு;-அதனில்

தூயேன் என்னின்,தொழுகின்றேன்,-எரியே!-

அவனைச் சுடல் !’ என்றாள்.

(பிராட்டிஅக்கினி தேவனை நினைத்து) ஏ! நெருப்புக்

கடவுளே!;  எல்லா உயிர்களிடத்தும் தாய் போன்று அருள் புரியும் இராம பிரானுக்கு உயிர்த் துணைவனான அனுமனை  கொடிய அரக்கர்கள் நாய் போலத் துன்புறுத்தினால் அவனுக்கு அருள் செய்ய மாட்டாயோ ?   நீதான், உலகம் அனைத்துக்கும் ஒப்பற்ற சாட்சியாக விளங்குபவன்; (ஆதலால்) உனக்கே எனது கற்பு நிலை தெரியும்; அந்தக் கற்புத் திறத்தில்நான் தூய்மை உடையவள் என்பது உண்மையானால், அந்த அனுமனை நீ சுடாதே; உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கின்றேன்  என்று உறுதியிட்டுக் கூறினாள்.

பிராட்டிஅக்கினி தேவனிடம், அனுமனைச் சுட்டு வருத்தக் கூடாது என்று கேட்டுக் கொண்டாள். அதனால் அனுமனுக்குச் சூடு தெரியவில்லை.

***********************

446. திரிபுரம் எரித்த சிவபெருமானுக்கும் இலங்கையை எரித்த அனுமனுக்கும் வித்தியாசம்

5939.

துன்னலர்புரத்தை முற்றும் சுடு தொழில்

தொல்லையோனும்,

பன்னினபொருளும், நாண, ‘பாதகர் இருக்கை பற்ற,

மன்னனைவாழ்த்தி, பின்னை வயங்கு எரி

மடுப்பென்’ என்னா,

பொன் நகர்மீதே, தன் போர் வாலினைப் போக

விட்டான்.

பகைவர்களது திரிபுரத்தை முழுவதும் எரித்த முன்னோனான சிவபெருமானும்  , (அப்பெருமானுக்குத் துணை புரிய வந்தனஎன்று) சொல்லப்படுகின்ற பொருள்களும் வெட்கப்படும்படி, பாவிகளான அரக்கர்களது இலங்கை நகர் முழுவதும் தீப்பற்றி எரியுமாறு (முதலில்) இராமபிரானைத் துதித்து,    பிறகு நெருப்பை மூட்டுவேன் என்று எண்ணி , தனது வாலை, பொன்மயமான இலங்கை நகரின் மேலே செலுத்தினான்.

சிவபிரான்,துணைவலியோடு (ஆதிசேடன், நாண், திருமால் அம்பு, பூமித்தேர்) திரிபுரத்தை எரித்தான். அனுமன் எந்தத் துணையும் இன்றி பகைவர் ஊரை எரித்தான். அதனால், தொல்லையோனுக்கும், பொருளுக்கும் நாணம் ஏற்பட்டது என்க. துணைவலியின்றி, பகைப்புலத்தை எரிப்பதற்கு அனுமனுக்கு ஆற்றல் அளித்தது, அவன் இராமபிரானை வாழ்த்தியதாகும்.

*************************

447.அனுமன் கொளுத்திய இலங்கை நகர வீடுகள் தங்கம் வெள்ளி ரத்தினக் கற்களால் ஆனவை

வெள்ளியின் பொன்னின், நானா விளங்கு பல்

மணியின், விஞ்சை

தெள்ளியகடவுள்-தச்சன் கை முயன்று அரிதின்

செய்த

தள்ள அருமனைகள்தோறும், முறை முறை தாவிச்

சென்றான்;

ஒள் எரியோடும்,குன்றத்து ஊழி வீழ் உருமொடு

ஒத்தான்.

சிற்பக்கலையில் தேர்ந்தவனாகிய தெய்வத் தச்சன் விசுவகர்மன்    வெள்ளியாலும் தங்கத்தாலும், பலவகைப்பட்ட பிரகாசிக்கின்ற அழகிய இரத்தினங்களாலும் , தன் கைவன்மையால் முயற்சி செய்து அருமையாகக் கட்டிய  மாளிகைகளில் எல்லாம் தீ பரவும்படி செய்தான் அனுமன்;  யுகம் முடியும் காலத்தில் நெருப்புடனே மலையின் மீது விழுகின்ற பேரிடியைப் போல அந்தக் காட்சி இருந்தது. வரிசையாகத் தாவித் தாவித் தீயை வைத்துக் கொண்டு சென்றான் ஆஞ்சனேயன்.

************************

448. இலங்கையை அக்கினி தேவன் உற்சாகத்தோடு எரித்தததற்கு  காரணம்

நீல் நிறநிருதர், யாண்டும் நெய் பொழி வேள்வி

நீக்க,

பால் வரு பசியன், அன்பான் மாருதி வாலைப் பற்றி,

ஆலம் உண்டவன்நன்று ஊட்ட, உலகு எலாம்

அழிவின் உண்ணும்

காலமே என்னமன்னோ, கனலியும் கடிதின்

உண்டான்.

கருநிறத்தவர்களான அரக்கர்கள் எங்கும், நெய் சொரிந்து செய்யும்

யாகங்களைப் புரிய வொட்டாமல் நீக்கி  தன்னிடத்தே மிக்க பசி உடையவனான அக்கினி தேவனும்  அனுமனது வாலை அன்புடன் தனக்கு ஆதாரமாகப் பற்றிக் கொண்டு  விஷத்தை உண்ட சிவபெருமானே ஏவி உண்பிக்க   உலகம் முழுவதையும் ஊழி முடிவில் எரிக்கின்ற காலத்தைப் போல   இலங்கை நகரை விரைவாக எரித்து அழித்தான்.

யாகங்களைச்செய்ய வொட்டாமல் அரக்கர்கள் தடுத்ததனால்,

உணவின்றிப் பசியினால் வருந்திய தீக்கடவுள், இப்போது, அனுமனது வாலைப் பற்றிக் கொண்டு, இலங்கை நகரை எரித்து, பசி அடங்கினான். அனுமனுக்கு  ஆலம் உண்டவனும், வாலின் தீக்கு யுகாந்தகாலத் தீயும், இலங்கைக்கு உலகமும் உவமைகள்.

*****************************

449. அத்வைதக் கருத்தை விளக்கும் விவேக சூடாமணியில் பானைக்குள் உள்ள காற்று பானை உடைந்த பின்னர்  எப்படி ஆகாசத்துடன் கலக்கிறதோ அது போல ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்று கலந்து விடுகிறது ; உண்மையில் இரண்டும் ஒன்றே என்று ஆதி சங்கரர் அத்வைதம் போதிக்கிறார் ; நெருப்புடன் நெருப்பு கலந்த உவமை மூலம் இதே அத்வைதக் கருத்தினை கம்பன் விளக்குகிறான்.

இல்லில்தங்கு வயங்கு எரி யாவையும்,

சொல்லின் தீர்ந்தன போல்வன, தொல் உருப்

புல்லிக்கொண்டன-மாயைப் புணர்ப்பு அறக்

கல்லி, தம்இயல்பு எய்தும் கருத்தர்போல்.

மாயையின் திரை நீங்க, இயல்பான ஆத்மஞான நிலையை அடையும் மேலோர் போல, அரக்கர்களது வீடுகளில் தங்கியிருந்த எரிகின்ற நெருப்புகளெல்லாம்    இராவணனது கட்டளையிலிருந்து விடுபட்டு தமது தொன்மையான உருவைத் தழுவிக் கொண்டு விட்டன.

இராவணனுக்குஅஞ்சி, இலங்கை நகரில் அரக்கர்களுக்குப் பயன்படும் அளவில், அது வரை கட்டுப்பட்டிருந்த நெருப்புகள், (அக்கினி தேவன்)இப்போது, இராவணன் ஆணையை, மீறி, அனுமன் வைத்த நெருப்புடன் ஒன்று பட்டுத் தமது பழைய உருவத்தை அடைந்து விட்டன. இது, மாயத்திரை விலகிய ஆன்மா, தமது உண்மை நிலையை அடைந்தது போல இருந்தது.

மாயை – உண்மை நிலையை அறிய முடியாது ஆன்மாவைக் கட்டுப்படுத்திக்  கொண்டிருக்கும் திரை.

******************

450.அலாவுதீன் கில்ஜி என்ற அரக்கனின் கை படக்கூடாதென்று நூற்றுக் கணக்கான பெண்களுடன் தீயில் புகுந்து தெய்வ நிலை எய்திய சித்தூர் ராணி பத்மினி போல  இலங்கை மாதர் உயிர்த் தியாகம் செய்தார்கள் :–

‘நல் கடன்இது; நம் உயிர் நாயகர்

மற்கடம் தெறமாண்டனர்; வாழ்வு இலம்;

இல் கடந்து இனிஏகலம் யாம்’ எனா,

வில் கடந்தநுதல் சிலர் வீடினார்.

வில்லின் வளைவையும்வென்ற நெற்றியை  உடைய அரக்க மகளிர் சிலர், நமது உயிர் போன்ற கணவன்மார்கள்,  ஒரு குரங்கு கொல்ல இறந்து போயினர்; யாம் மங்கல வாழ்க்கை இல்லாதவரானோம்; இனிமேல் (கைம்மை நிலையில்) வீட்டைக் கடந்து வெளியில் செல்லமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொண்டு இதுவே நல்ல கடப்பாடு ஆகும் என்று துணிந்து (அந்த நெருப்பிலே விழுந்து) இறந்தார்கள்.

சில உத்தமப்பெண்களின் இயல்பு கூறப்பட்டது.

–சுபம்—

Tags-  கம்பன் போதிக்கும் அத்வைதம், கம்ப ராமாயணத்தில் 450 கேள்விகள் , அனுமன் வாலில் தீ,  இலங்கை எரிதல், ராவணன், சீதையின் கற்பு

Leave a comment

Leave a Reply