
Written by S Nagarajan
Date: 16 February 2016
Post No. 2545
Time uploaded in London :– 8-10 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
swami_48@yahoo.com)
அதீத உளவியல் ஆற்றல்
பாக்யா 5-2-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
ஆவி கொடுத்த ஆவணத்தை ஏற்று தீர்ப்பளித்த நீதிபதி!
ச.நாகராஜன்

“சிறப்பில் மனதை மயக்கும் உன்னதமான ஆவி உலகம் எப்போதும் அப்படி இருக்கவே விரும்புகிறது”
– பிரபல எழுத்தாளர் விக்டர் ஹ்யூகோ
உலேண்ட் லுட்விக் (Uhland Ludwig 1787-1852) என்பவர் பிரபல்மான ஜெர்மானியக் கவிஞர். இவரது சொத்து யாருக்குச் சேர வேண்டும் என்பது பற்றிய சிக்கலான வழக்கு இவர் இறந்து 58 ஆண்டுகளுக்குப் பின்னர் 1930ஆம் ஆண்டில் பெர்லின் நகரில் தொடரப்பட்டது. விசித்திரமான இந்த வழக்கை நீதிபதி எப்படி தீர்த்து வைக்கப் போகிறார் என அனைவரும் ஆவலுட்ன் எதிர்பார்த்திருந்தனர்.
ஒரு நாள் சொத்தின் மீது உரிமை கொண்டாடிய ஒரு பெண்மணி ஆவி உலகத் துணையை நாடினார். சற்று அரை இருட்டாக இருந்த அறையில் மீடியமும் அந்தப் பெண்மணியும் மற்றவர்களும் குழுமினர்.திடீரென ஒரு கை தோன்றியது. அது அந்தப் பெண்மணியின் கையைப் பற்றியது. அந்தக் கையில் மஞ்சள் நிறமுள்ள தோல் ஒன்று இருந்தது. அதை அந்தப் பெண்மணி பெற்றார்.
ஹோலோகிராப் பார்ச்மெண்ட் (Holograph parchment) என்பது சொத்துக்குரிய ஒருவர் தன் கைப்பட தோலில் அது யாருக்குச் சேரவேண்டும் என்பதை எழுதிக் கொடுக்கும் ஒரு ஆவணமாகும்.
மீடியம் கையில் பெறப்பட்ட தோல் ஆவணம் காலத்தால் பழுப்பேறிக் கிடந்தது. அதில் சொத்து பற்றிய விபரம் அடங்கிய இரண்டு செய்யுள்கள் – குறள் போல – இருந்தன. அதில் உலேண்ட் லுட்விக்கின் கையெழுத்தும் இருந்தது.
முதலில் கையெழுத்து கவிஞருடையது தானா என சரிபார்க்கப்பட்டது அந்த தோல் ஆவணத்தின் நிலை காலத்தால் அது முற்பட்டது என்பதையும் அதில் இருந்த செய்யுளின் நடை லுட்விக்கின் நடை தான் என்பதும் கையெழுத்தும் அவருடையது தான் என்பதும் உறுதி செய்யப்பட்டன.
வழக்கு விசாரணைக்கு வந்த போது சாட்சிகள் தோல் ஆவணத்தை மீடிய்மாக் இருந்த பெண்மணியின் கையில் ஆவி கொடுத்ததைத் தாங்கள் பார்த்ததாக சாட்சியம் கூறினர்.
நீதிபதி ஆவி கொடுத்த ஆவணத்தை ஏற்பதாகக் கூறி அந்த சொத்துக்கான உரிமையை அந்தப் பெண்மணிக்கே அளித்து தீர்ப்புக் கூறினார்.
ஆவி உலக ஆதரவாளர்கள் பெரிதும் இதை வரவேற்றனர். பரபரப்பான இந்த வழக்கில் ஆவி உலகமே வென்றது!
இதே போல கவிஞர்கள் மட்டுமல்லை, ராஜதந்திரிகள் கூட ஆவி உலகை நம்புபவர்களாக இருந்ததை வரலாறு சுட்டிக் காட்டுகிறது. இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக நான்கு முறை பதவி வகித்தவர் டபிள்யூ. ஈ. க்ளாட்ஸ்டோன். (W.E.Gladstone 1809-1908). மிகச் சிறந்த ராஜதந்திரி என்று உலகத்தினரால் பாராட்டப்பட்டவர் இவர்.
பிரப்ல நாவலாசிரியையான வயலட் ட்வீடேல் என்பவரின் அழைப்பை ஏற்று. அவர் வீட்டிற்கு க்ளாட்ஸ்டோன் வருகை புரிந்தார்.
அங்கு ஆவிகளை அழைக்கும் அமர்வு நடந்தது. அதில் அவர் கலந்து கொண்டு பல சோதனைகளை நடத்தி மிகவும் திருப்தியுற்றார். வில்லியம்ஸ் மற்றும் ஹஸ்க் ஆகிய இரு மீடியம்கள் க்ளாட்ஸ்டோன் ஆவி உலத்துடன் தொடர்பு கொள்ள உதவினர்.
இந்த அமர்வுகள் முடிந்த பின்னர் விஞ்ஞானிகளை நோக்கி அவர் கூறினார் இப்படி:” விஞ்ஞானம் இந்தக் காலத்தில் மிகப் பெரிய அரும் பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது.ஆனால் விஞ்ஞானிகள் தங்களின் விதிகளுக்கும் நடைமுறைகளுக்கும் ஒத்து வராத எதையும் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் ஆவி உலக ஆராய்ச்சியில் இப்போது பெரும் பணி ஒன்று உலகில் நடந்து வருகிறது. அதை உணருங்கள்” என்று ஆவி உலகத் தொட்ர்பு பற்றிய ஆராய்ச்சியைப் புகழ்ந்து பேசினார்.
க்ளாட்ஸ்டோன் தன் வீட்டிற்கு வந்தது உள்ளிட்ட ஆவி உலக அனுபவங்களை வயலட் ட்வீடேல், ‘தி கோஸ்ட்ஸ் ஐ ஹாவ் சீன்’ (The Ghosts I have seen) என்று புத்தகமாக எழுதினார்.
இது ஒரு புறமிருக்க, ஆவிகள் மூலம் கொலை வழக்குகளில் குற்றம் இழைத்தவரைக் கண்டு பிடிக்க முடியுமா என்பன போன்ற கேள்விகளை ப்லர் எழுப்புவதுண்டு!.
உலகில் அமெரிக்கா,இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் சிக்கலான கேஸ்களைக் கண்டுபிடிக்க போலீஸாரின் துப்பறியும் பிரிவு மீடியம்களின் உதவியை இப்போது நாடி வருகின்றது.. சைக்கிக் டிடெக்டிவ்ஸ் என்று அழைக்கப்படும் இவர்கள் ஆவிகளின் துணையோடு நடந்தது என்ன என்பதை அக்கு வேறு ஆணி வேறாக அலசிச் சொல்லி விடுகின்றனர். நூற்றுக் கணக்கான கேஸ்களில் ஒன்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.
பெர்ரி சாரா என்ற பெண்மணி அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட்டில் 1973ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி கோரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள். எவ்வளவோ முயன்றும் போலீஸாரால் அவரைக் கொன்றவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.டிடெக்டிவ் ஜார்ஜ் மஜ்ஜாகேன் சைக்கிக் மீடியமான பசகரெல்லா டவுனி என்பவரின் துணையை நாடினார்.
அவர் மிகத் தெளிவாக,” கொலையாளியின் மீது ஆயில் நாற்றம் அடிக்கிறது. அவர் ஒரு மெக்கானிக்கிற்கான யூனிஃபாரத்தை அணிந்தவர்.. அவரது சட்டையில் ‘E’ என்ற ஆங்கில எழுத்து காணப்படுவதால் அவர் பெயர் ‘E’ யில் ஆரம்பிக்கும். ஆனால் தப்பி ஓடும் சாமர்த்தியசாலி என்பதால் அவரைப் பிடிக்க நெடுங்காலம் ஆகும்” என்றார்.
அதே போலவே நடந்தது. 26 வருடங்கள் கழித்து 1999ஆம் ஆண்டு எட்வர்ட் என்பவர் சாராவைக் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். டிஎன்ஏ சோதனை மூலம் அவரது குற்றம் நிரூபணமானது. கொலை செய்த சமயத்தில் அவர் மெக்கானிக்காக வேலை பார்த்ததும் தெரிய வந்தது! அவர் கொலைக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டார்.
இது போல சுவாரசியமான கேஸ்கள் சைக்கிக் டிடெக்டிவ்களால் தீர்க்கப்பட்டுள்ளது ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று.

. அறிவியல் அறிஞர் வாழ்வில்
தாமஸ் ஆல்வா எடிஸனுக்கு தனது கணக்குப் பிரிவில் இருப்பவர்களைக் கண்டாலே அவ்வளவாகப் பிடிக்காது. தனது உள்ளுணர்வை வைத்தே கணக்கு விஷயத்தில் அனைத்தையும் அவர் முடிவு செய்து விடுவார். அடிக்கடி அவர் “இந்த கணித மேதைகளிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கூறி கணக்கைப் போட சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? ஒரு பெரிய பேப்பரை எடுத்துக் கொண்டு வரிசை வரிசையாக கோடு போட்டு ஏ என்றும் பி என்றும் எக்ஸ் என்றும் ஒய் என்றும் எழுதி அந்த கட்டங்களில் ஏராளமான நம்பர்களைப் போட்டு நிரப்புவார்கள். கடைசியில் ஒன்றுக்கும் உதவாத ஒரு தப்பான விடையைத் தருவார்கள்.” என்று சொல்வது வழக்கம். தன் மனதிலேயே கணக்கைப் போட்டு உடனடியாக உள்ளுணர்வில் தோன்றியபடி விஷயத்தை முடித்து விடுவார் அவர்.
ஒரு முறை வெஸ்டர்ன் யூனியன் கம்பெனி அவரது ஒரு கண்டுபிடிப்புக்காக ஒரு லட்சம் டாலர் தொகையைத் தந்தது. அவ்வளவு பெரிய தொகையைப் பார்த்துப் பிரமித்துப் போனார் எடிஸன். கம்பெனி நிர்வாகத்திடம், “ எனக்கா இவ்வளவு பெரிய தொகை? இதை என்னிடம் தர வேண்டாம். நீங்களே பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆண்டொன்றுக்கு ஆறாயிரம் டாலர் வீதம் பதினேழு ஆண்டுகளுக்கு எனக்கு நீங்கள் தாருங்கள்” என்றார். அந்த நிறுவனமும் அப்படியே செய்ய சம்மதித்தது!
**********
You must be logged in to post a comment.