
Written by London Swaminathan
Post No. 16,288
Date uploaded in London – 9 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இதற்கு முன்னர் வெளியிட்ட 20 கேள்விகள் கடைசியில் உள்ளன ; விடைகள் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும் .

21
விஷ்ணு ராமனாகவும், சிவன் அனுமனாகவும் தேவர்கள் வானரங்களாகவும் அவதரித்ததாகக் கம்பன் சொன்னதைப் பாடல்களில் கண்டோம்; வாலி, சுக்ரீவன் யார் அவதாரம் ?
22
ரிஷ்யஸ்ருங்க முனிவரின் தமிழ்ப் பெயர் கலைக்கோட்டு முனிவர் (கலை-மான்); அவரை கம்பன் எப்படிப் புகழ்கிறான் ?
23
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை — என்று மூதுரை நூலில் தமிழ் மூதாட்டி ஔவையார் பாடியுள்ளார்.ரிஷ்ய ச்ருங்க முனிவர் நகருக்குள் நுழைந்தவுடன் என்ன நடந்தது ?
24
சோழர்கள் ஒரிஜினல் தமிழர்கள் அல்ல என்று புறநானூற்றுப் புலவர்களும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவும் குறிப்பால் உணர்த்துகின்றார்கள்.வடமேற்கு இந்தியாவை ஆண்ட சிபி என்னும் சூரியகுல மன்னன் அவர்களின் முன்னோன் ; கம்பன் செப்புவது என்ன ?
25
கலைக்கோட்டு முனிவன் தசரதனுக்காக புத்ர காமேஷ்டி யாகம் செய்தவுடன் அக்கினி குண்டத்திலிருந்து வந்த தேவன், பாயசம் ஏந்திய கலத்தைக் கொண்டுவந்தான் என்று வால்மீகி கூறுகிறார்; கம்பன் வேறு கதை சொல்கிறானே!
26
சுமித்திரைக்கு மாட்டும் இரட்டைப்பிள்ளைகள் பிறந்தது ஏன் என்று கம்பன் காட்டுகிறான்?
27
கம்பன் சொல்லும் ஜாதகக் குறிப்புகள் என்ன ? ராமன் , லெட்சுமணன் நட்சத்திரங்கள்- ராசிகள் என்ன ?
28
வள்ளுவர் பற்றிக் கம்பன் புகல்வது யாது?
29
ராமனை என்னோடு காட்டுக்கு அனுப்பு என்று விச்வாமித்ர முனிவன் சொன்னவுடன் தசரதன் அவனைவிட்டுவிடு, நானே வருகிறேன், என்று சொல்லி எப்படித்துடித்தான் ?
30
விசுவாமித்திர முனிவரின் கோபத்தையும் எக்காளச் சிரிப்பையும் கம்பன் எப்படி அழகாக வருணிக்கிறான்?
XXXXX

விடைகள்
21.தருவுடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான். ‘எனது கூறு
மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும்’ என்ன;
இரவி. ‘மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன்’ என்று ஓத
அரியும். ‘மற்று எனது கூறுநீலன்’ என்று அறைந்திட்டானால்
இந்திரன்= வாலியும். அவன் மகன் அங்கதனும்;
சூரியன்= சுக்கிரீவன்; அக்கினி. =‘நீலன்’.
தருஉடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான்-கற்பகம் முதலிய ஐந்து
மரங்களையுமுடைய தேவர்களுக்கு அரசனான இந்திரன்
சொல்லலுற்றான்; எனது கூறு மருவலர்க்கு அசனி அன்ன வாலியும்
மகனும் என்ன- எனது அம்சமானது. பகைவர்களுக்கு இடி போன்ற
வாலியும். அவன் மகன் அங்கதனும் ஆகும் என்றுரைக்க; இரவி மற்று
எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத- சூரியன்,
எனது அம்சம் அங்கேயே அந்த வாலிக்குத் தம்பியான
சுக்கிரீவன் என்று சொல்ல; அரியும் மற்று எனது கூறுநீலன் என்று
அறைந்திட்டான்- நெருப்புக் கடவுள் எனது அம்சம் ‘நீலன்’
என்னும் வானர வீரனாகும் எனக் கூறினான்.
XXXXX
22.‘வரு கலை பிறவும். நீதி மனுநெறி வரம்பும். வாய்மை
தரு கலை மறையும். எண்ணின். சதுமுகற்கு உவமை சான்றோன்.
திருகலை உடைய இந்தச் செகத்து உளோர் தன்மை தேரா
ஒரு கலை முகச் சிருங்க உயர் தவன் வருதல் வேண்டும்.
வருகலை பிறவும் – வளர்ந்த கல்வியாலும் கேள்வி முதலிய
பிறவற்றாலும்; நீதி மனுநெறிவரம்பும்- நீதியைக் கூறும்மனு நூல்
வரம்பாலும்; வாய்மைதரு கலைமறையும்- உண்மையை உணர்த்தும்
வேதங்களை ஓதி யுணர்ந்ததாலும்; எண்ணின் சது முகற்கு உவமை
சான்றோன்- நினைத்துப் பார்த்தால் நான்முகனுக்கு ஒப்பாகிய
பெருமை உடையவனும்; திருகலை உடைய இந்தச் செகத்துளோர்
தன்மை தேரா- பலவித மாறுபட்ட இயற்கையை உடைய
உலகத்தவரின் தன்மையை அறியாதவனும்; ஒருகலை முகச்சிருங்க
உயர்தவன் வருதல் வேண்டும்-கலைமான் கொம்பு போன்ற கொம்பை
முகத்தில் உடையவனுமான சிருங்கன் என்னும் பெயருடைய உயர்ந்த
தவத்தை உடைய முனிவன் வரவேண்டும். (வேள்வியை நடத்த) இங்கு வரவேண்டும்
என்றான் வசிட்டன் என்பது பாட்டின் கருத்து.
XXXX
23.வளநகர் முனிவரன் வருமுன் வானவன்
களன் அமர் கடு எனக் கருகி. வான் முகில்.
சளசள என மழைத் தாரை கான்றன-
குளனொடு நதிகள் தம் குறைகள் தீரவே
முனிவரன் வளநகர் வருமுன்- கலைக் கோட்டு முனிவன் அந்த வளம் பொருந்திய நகருக்கு வரும் முன்னே; வான்முகில் வானவன் களன் அமர்கடு எனக் கருகி – பெரு மேகங்கள். சிவபிரானுடைய கழுத்தில் தங்கியுள்ள நஞ்சு போலக் கருநிறம் கொண்டு.; குளனொடு நதிகள்தம் குறைகள் தீர – குளங்களும். ஆறுகளும் குறை தீரும் படியாக; மழைத்தாரை சளசள எனக் கான்றன – மழைத் தாரைகளைச்சளசள என்ற ஒலியுடன் பொழிந்தன. (வருமுன்:வருமளவில் (அல்லது வருவதற்கு முன்னமே)
XXXX
24.கம்பனும் அதையே செப்புகிறான்:
‘புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க
பெருந்தகைதன் புகழில் பூத்த
அறன் ஒன்றும் திரு மனத்தான். அமரர்களுக்கு
இடர் இழைக்கும் அவுணர் ஆயோர்
திறல் உண்ட வடி வேலான். ‘’தசரதன்’’ என்று.
உயர் கீர்த்திச் செங்கோல் வேந்தன்.
விறல்கொண்ட மணி மாட அயோத்திநகர்
அடைந்து. இவண் நீ மீள்தல்!’ என்றான்.
புறவு ஒன்றின் பொருட்டு ஆக. துலைபுக்க- ஒரு புறாவைக்
காப்பாற்றுவதற்காகத் தன்னையே தரத்துணிந்து தராசுத்தட்டிலேறிய;
பெருந்தகை தன் புகழில் பூத்த – பெருந்தகையான சிபிக்
சக்கரவர்த்தியினது புகழ் பொருந்திய பெருங்குடியில் தோன்றிய;
அறன் ஒன்று திருமனத்தான் – அறப்பண்பு பொருந்திய நல்ல
மனத்தினனும்; அமரர்களுக்கு இடர் இழைக்கும் அவுணர் ஆயோர்
திறம் உண்ட வடிவேலான் – தேவர்களுக்குத் துன்பம் தந்த அசுரரின்
வலிமையை அழித்த வேலை உடையவனும்; தயரதன் என்று
உயர்கீர்த்தி செங்கோல் வேந்தன்- தயரதன் என்னும் பெயர்கொண்ட
புகழ்மிக்க செங்கோலுடையவனுமான வேந்தனது; விறல் கொண்ட
மணிமாட அயோத்தி நகர் அடைந்து – வலிமையை அணியாகக்
கொண்ட மணிகளால் இழைத்த மாளிகைகளையுடைய அயோத்தி
நகரத்தை அடைந்து; இவண் மீள்தல் என்றான் – பின் இங்கு மீண்டு
திரும்புதலே (நான் வேண்டும் வரமாகும்) என்று உரோமபதன்
சொன்னான்.
புறவு புறா. புறாவுக்காகத் தராசில் ஏறிய சிபி மன்னன் வரலாறு
பிரசித்தம். சோழர்கள் சிபிச் சக்ரவர்த்தி, தங்களுடைய முன்னோன் என்று சங்க இலக்கியப்பாடல்களிலும் பிற்காலக் கல்வெட்டுகளிலும் பறை அறிவிக்கிறார்கள் . பின்னர் வரும் பாடல்களிலும் இதை கம்பன் வலியுறுத்துகிறான்
(முந்திய பாடலில் வரம் அருளும் என்று கேட்ட மன்னனை
நோக்கி வரம் யாது என வினவிய கலைக் கோட்டு முனிவனுக்கு அயோத்தி அடைந்து
மீள்தலே அவ்வரம் என்றான் உரோமபதன்.)
XXXXX
25.ஆயிடை கனலின்நின்று அம் பொன் தட்டம் மீத்
தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று – சூழ்
தீ எரிப் பங்கியும் சிவந்த கண்ணும் ஆய்
ஏயென பூதம் ஒன்று எழுந்தது – ஏந்தியே.
ஆயிடை கனலின் நின்று – அப்போது அந்த வேள்வித் தீயிலிருந்து; தீ எரிப்பங்கியும் சிவந்த கண்ணுமாய் – தீ எரிவதுபோன்ற தலை மயிரும் சிவந்த கண்ணும் உடையதாக; பூதம் ஒன்று –ஒரு பூதமானது; அம்பொன் தட்டம் – அழகிய ஒரு பொன் தட்டத்தின் மேலே; தூய சுதை நிகர் பிண்டம் ஒன்று – தூய்மையான
அமுதத்தை ஒத்த ஒரு பிண்டத்தை; ஏந்தி ஏயென எழுந்தது –தாங்கிக் கொண்டு விரைந்து எழுந்தது.
பிண்டம்: சோற்றுத்திரள் (பொன்தட்டிலே பாயசத்தை ஏந்திஅப்பூதம் வந்தது என்பது வான்மீகி கூற்று).
XXXX
26.கெளசல்யாவுக்கு ஒரு பங்கு கொடுத்தான் கைகேயிக்கு ஒரு பங்கு கொடுத்தான் சுமித்திரைக்கு ஒரு பங்கு கொடுத்தான்; கீழே சிந்திய சோற்றினையும் சுமித்திரைக்குக் கொடுத்தான் என்பது கம்பனின் கூற்று; இதனால் அவளுக்கு இரட்டைப்பிள்ளை !
பின்னும் அப் பெருந்தகை பிதிர்ந்து விழ்ந்தது
தன்னையும் சுமித்திரைதனக்கு நல்கினான்–
ஒன்னலர்க்கு இடமும். வேறு உலகின் ஓங்கிய
மன்னுயிர்தமக்கு நீள் வலமும். துள்ளவே.
பின்னும் அப்பெருந்தகை – மறுபடியும் அந்தப்
பெருந்தகைமையுள்ள தயரத மன்னன்; பிதிர்ந்து வீழ்ந்தது
தன்னையும் – பொன் தட்டிலே சிதறி வீழ்ந்த பிண்டத்தையும்;
ஒன்னலர்க்கு இடமும் வேறு மன்னுயிர் தமக்குநீள் வலமும்
துன்ன – பகைவர்களுக்கு இடப்புறமும். மற்றும் உலகத்து
உயிர்களுக்கெல்லாம் வலப்புறமும் தோள். கண் முதலியன துடிக்க;
சுமித்திரை தனக்கு நல்கினான் – சுமித்திரைக்கே கொடுத்தான்.
ஆண்களுக்கு இடம் துடித்தல் தீமை. வலம் துடித்தல் நன்மை
என்பதால்: பகைவர்களுக்கு இடமும். மற்றுள்ளோர்க்கு வலமும்
துடித்ததென்றான்; தயரதன் அமுத பிண்டத்தைத் தேவியர் மூவருக்கும்
முறையே கொடுத்துப் பின்னர் பிதிர்ந்து சிதறியவைகளைத் திரட்டி
மறுபடியும் சுமித்திரை கைகளில் கொடுத்தான். இருபங்குகளைப் பெற்ற
சுமித்திரை இரு பிள்ளைகளைப் (லெட்சுமணன் சத்ருக்கன்) பெற்றாள் .
XXXX
27.ராமன் அவதரித்த நாள் புனர்பூசம். ராசி கடகம்
ஆயிடை பருவம் வந்து அடைந்த எல்லையின்
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட
வேய் புனர்பூசமும் விண்ணுளோர்களும்.
தூய கற்கடகமும் எழுந்து துள்ளவே.
XX
புனர்பூசத்துக்கு அடுத்த நட்சத்திரமான பூசம் பரதன் பிறந்த நட்சத்திரமாகும். பரதன் இலக்கினம் மீனம்.
ஆசையும் விசும்பும் நின்று அமரர் ஆர்த்து எழ
வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துற
பூசமும் மீனமும் பொலிய நல்கினாள்
மாசு அறு கேகயன் மாது மைந்தனை.
XX
இலக்குவன்-ஆயில்யம்- கடக ராசி
தளை அவிழ் தருவுடைச் சயிலகோபனும்.
கிளையும் அந்தரமிசைக் கெழுமி ஆர்ப்புற
அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வுற.
இளையவற் பயந்தனள் இளைய மென் கொடி.
பாம்பாகிய ஆயில்யத்தோடு; அலவன் வாழ்வு உற -நண்டாகிய கடக ராசியும் வாழ்வுபெற; இளையமென்கொடி இளையவன் பயந்தனள் –
கோசலை,கைகேயி இருவருக்கும் இளையவளாகிய மெல்லிய கொடிபோன்ற சுமித்திரை இளையவனைப் பெற்றாள்
ராமனுக்கு இளையவனான இலக்குவன். சுமித்திரை ஆயில்ய நட்சத்திரத்தில். கடக
ராசியில் ஒரு மகனைப் பெற்றாள்.ஆயில்யம் ஆதிசேடனுக்குரியதென்பர். ஆதிசேடன் அம்சமான இலக்குவன் இந்த நட்சத்திரத்தில் பிறந்தது பொருத்தமாகும்.
XX
சத்ருக்னன்- மகம்- சிங்க ராசி
படம் கிளர் பல் தலைப் பாந்தள் ஏந்து பார்
நடம் கிளர்தர மறை நவில நாடகம்
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட.
விடம் கிளர் விழியினாள் மீட்டும் ஈன்றனள்.
மடங்கலும் மகமும் வாழ்வின் ஓங்கிட – சிங்க ராசியும் மக நட்சத்திரமும்
வாழ்வில் மகிழ்ந்தோங்கவும்; மீட்டும் ஈன்றனள் – மறுபடியும் ஓராண்மகவைப் பெற்றாள்.
மடங்கல்:சிங்கம். சுமித்திரை மக நட்சத்திரத்தில் சிங்க ராசியில் மீண்டும் ஒருபுத்திரனைப் பெற்றாள்
XXXX
28.யானை மீது இருந்துகொண்டு பறை அடிப்பவன் வள்ளுவன்
என்புழி வள்ளுவர் யானை மீமிசை
நன்பறை அறைந்தனர்; நகர மாந்தரும்
மின் பிறழ் நுசுப்பினார்தாமும் விம்மலால்
இன்பம் என்ற அளக்க அரும் அளக்கர் எய்தினார்.
என்புழி வள்ளுவர் யானை மீமிசை நன்பறை அறைந்தனர் –
என்று மன்னர் பிரான் கட்டளையிட்டபோது வள்ளுவர் யானை
மேலிருந்து அரசன் கூறியபடி பறை நன்கு சாற்றினர்; நகர மாந்தரும்
– (இதனைக் கேட்டு) நகர மக்களும்; மின்பிறழ் நுசுப்பினர் தாமும்-
மின்னலைப் போன்ற இடையை உடைய பெண்களும்; விம்மலால்
இன்பம் என்று அளக்க அரும் அளக்கர் எய்தினார் –
பெருங்களிப்பால் இன்பம் என்று சொல்லப்பபடும் அளக்க முடியாத
கடலை அடைந்தனர்.
என்புழி: என்றபோது. ‘
வள்ளுவர்: தோற்கருவி கொண்டு பறை சாற்றுபவர். அரசனது உள்படு
கருமத் தலைவர் இவரென்பர். யானை மேல் அமர்ந்து பறை முழக்கிச்
செய்தியை அறிவிக்கும் உரிமை உடையவர்கள்.
XXXX
9.எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல்
மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தா
லெனச் செவியில் புகுதலோடும்.
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த.
ஆர் உயிர் நின்று ஊசலாட.
‘கண் இலான் பெற்று இழந்தான்’ என உழந்தான்
கடுந் துயரம் – கால வேலான்.
எண்ண முடியாத அரிய தவத்தைச் செய்த விசுவாமித்திரர்; சொன்ன இந்தச்
சொற்களானது; மார்பின் மேல் எறிந்த வேல் பாய்ந்த: புண்ணாகிய
புழையிலே; கனன்று கொண்டிருக்கும் தீ நுழைந்தது போல; தனது காதுகளில் புகுந்த
போது; உள்ளத்திலே நிலைத்துள்ள துயரம் (உயிரை) வெளியே தள்ள;
தயரதனது அவ்வரிய உயிர் (உள்ளே போகவும்.வெளியே வரவுமாக) ஊசல்போல் ஆட;
கண்கள் இல்லாதவன் அதனைப் பெற்றுப் பின்னர் இழந்தான் எனக் கூறும்படி;
பகைவனின் உயிருக்கு இறுதிக்காலம் காட்டும் வேலையுடைய தயரதன் கடுமையான
துன்பத்தினாலே வருந்தினான். (தயரதன் சிரவணனை அம்பால் கொல்ல
அவனது பெற்றோர் தந்த சாபத்தால் நிலவிய துன்பம் இது.)
XXXX
ஹாஹா! ஹாஹா! ஹாஹா ! (எக்காளச் சிரிப்பு)
10.என்றனன்; என்றலும். முனிவோடு எழுந்தனன்.
மண் படைத்த முனி; ‘இறுதிக் காலம்
அன்று’ ‘என. ‘ஆம்’ என இமையோர் அயிர்த்தனர்;
மேல் வெயில் கரந்தது; அங்கும் இங்கும்
நின்றளவும் திரிந்தன; மேல் நிவந்த கொழுங்
கடைப் புருவம் நெற்றி முற்றச்
சென்றன; வந்தது நகையும்; சிவந்தன கண்;
இருண்டன. போய்த் திசைகள் எல்லாம்.
என்று தயரதன் சொன்னான். அவ்வாறு
கூறலும்; உலகத்தையே படைக்கத் தொடங்கிய முனிவனாகிய விசுவாமித்திரன்
சினத்தோடு எழுந்தான்; அம்முனிவனது. மேலே உயர்ந்தனவாகிய புருவங்கள்;
அவரது நெற்றியில் முற்றவும் சென்றன;
கோபச் சிரிப்பும் வந்து சேர்ந்தது;
ஹாஹா! ஹாஹா! ஹாஹா ! (எக்காளச் சிரிப்பு)
அம்முனிவனது இரு கண்களும் சினத்தால் சிவந்தன;
வானிலே உலாவிக் கொண்டிருந்த கதிரவன் அஞ்சி
மறைந்தான்; அவ்வுலகத்திலும். இவ்வுலகத்திலும் நின்ற உயிரினங்கள் யாவும்
நிலைகெட்டுத் திரிந்தன; – திக்குகள் எல்லாம் ஒளி இழந்து இருண்டன. –
இத் தோற்றங்களைக் கண்ட தேவர்கள் எல்லோரும்;
கடையூழிக் காலமோ அல்லவோ என ஐயம் கொள்வாராயினர்.
முனிவன் கொண்ட சீற்றத்தால் நிகழ்ந்தவைகளை அழகுறச்
சித்திரிக்கும் பாடல் இது.
—subham—

இதற்கு முன்னர் வெளியிட்ட 20 கேள்விகள் ; விடைகள் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்
1
அஞ்சிலே ஒன்று பெற்றான் — என்னும் அருமையான கம்பன் பாடலின் பொருள் என்ன?
2
ராம என்ற இரண்டே எழுத்துக்கள் தரும் அற்புதப் பலன்கள் பற்றி கம்ப இராமாயண சிறப்புப் பாயிரத்தில் ஒரு பாடல் உள்ளது. நினைவுக்கு வருகிறதா அந்தப்பாடல்?
3
எந்த ஒரு நூலினையும் மங்களச் சொற்களுடன் துவங்க வேண்டும் என்ற விதி சம்ஸ்க்ருத நூல்களிலும் தமிழ் நூல்களிலும் உள்ளது ; கம்பன், தனது ராமாயணத்தை, எந்தச் சொல்லுடன் துவங்குகிறான்?
4
கம்பனும் காளிதாசனும் என்ன சொல்லி நூலை எழுதத் துவங்கினார்கள் ?
5
போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் ; போங்கடா போங்க! நான் சொல்வது தெய்வ மாக்கவி எழுதிய கவிதை என்று கம்பன் செப்பியது எங்கே ?
6
வால்மீகியைத் தவிர வேறு இருவர் ஸம்ஸ்க்ருதத்தில் ராமாயணம் எழுதினார்கள் என்று கம்பன் ஒரு புதிர் போடுகிறானே ! அந்தப் புதிருக்கு விடை கிடைத்ததா?
7
தெய்வ மாக்கவி, முதலில் ராமாயணம் சொன்னவர் என்றெல்லாம் வான்மீகி முனிவரைப் போற்றிய கம்பன் அவருடைய பெயரை எங்கேயாவது பகர்ந்தானா?
8
கம்பன் சர்வ சமய நோக்குள்ளவன்; சைவ, வைணவ பேதம் பாராட்டாதவன் ; முடிந்த அளவுக்கு சிவன் பெருமையை அவன் பாடுகிறான் ; சரயு நதிப் பாடலில் சிவனை அவன் எப்படிப் புகழ்கிறான்?
9
ஆகாசாத் பதிகம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்கார: கேசவம் பிரதி கச்சதி – என்று பிராமணர்கள் தினமும் மூன்று வேளை சந்தியா வந்தன மந்திரத்தில் சொல்கிறார்கள் ; இதைக் கம்பனும் சொல்லி, சர்வசமய பொதுநோக்கினைக் காட்டும் பாடல் எது?
10
கம்பன் போகிற போக்கில் Music மியூசிக் பற்றி ஒரு அருமையான உவமை சொல்கிறான் ; இந்தப்பாடலின் பொருள் விளங்குகிறதா?
பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும்,
பருந்தொடு நிழல் சென்றன்ன இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,
மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்,
விருந்தினர் முகம் கண்டன்ன விழா அணி விரும்புவாரும்.
***
11
கம்பன் சொல்லும் அதிசய மூலிகைகள் எவை ?
12
தூக்கணாங் குருவிகள்தான் மனிதனுக்கு வீட்டில் விளக்கு ஏற்றுவதைச் சொல்லிக் கொடுத்தன; அவை மின்மினிப் பூச்சிகளை பிடித்துக் கொண்டு போய் கூட்டில் வைத்து அழகு பார்க்கும்; இதைத் தற்கால தீபாவளி, நவராத்ரி, கிறிஸ்துமஸ் டெக்கரேஷன்களுடன் DECORATIONS ஒப்பிடலாம் ; இந்த அதிசயத்தைக் கம்பன் எங்கே குறிப்பிடுகிறான் ?
13
கோசல நாட்டுப் பெண்கள் நல்ல படித்த பணக்கார பெண்களாம்; ஆயினும் அவர்கள் ஆபீசுக்குப் போகாமல் வந்த விருத்தினர்களைக் கவனிப்பதே வேலையாகச் செய்தார்களாம் ; கம்பனின் இந்த கற்பனை வளத்தை எங்கே காணலாம்?
14
வாலிபால் என்னும் விளையாட்டினைக் கண்டு பிடித்தவர்கள் தமிழ்ப் பெண்கள்தான் ! பிற்காலத்தில் பூப்பந்தாட்டம் துவங்குவதற்கு அவர்களே காரணம் ; இதைச் சங்க இலக்கியப்பாடல்களில் காண்கிறோம்; கம்பன் அவர்கள் தினசரி ட்ரெயினிங் எடுத்தத்தைச் சொல்கிறானே ! அது என்ன பாடல்?
15
தாலி பற்றி அடிக்கடி தாலி அறுக்க விரும்பும் பெண்கள் கட்டுரைகளை எழுதி அவர்களின் அறியாமைக்கு ஆயிரம் வாட் பல்ப் THOUSAND WATT BULB போட்டு காட்டுவதை அவ்வப்போது படிக்கிறோம்; ஆனால் மு.சண்முகம் பிள்ளை , கம்பனும் மில்டனும் நூல் எழுதி டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் எஸ் ஆர் கே ஆகியோர் தாலி உண்டு என்று இலக்கியக் குறிப்புகளைக் காட்டினார்கள் !கம்பனும் தாலி உண்டு என்கிறான் ! அது எங்கே?
16
பட்டி மண்டபம் இன்று பட்டி மன்றமாகிவிட்டது ; பட்டி விக்ரமாதித்யன் என்ற மாபெரும் மன்னனும் அறிஞனும் உண்டாக்கிய விவாத சபை இது ! மாணிக்க வாசகரும் ஒன்றும் அறியாத என்னை பட்டி மண்டபம் ஏற்றினையே என்கிறார் ; ஏனெனில் அவரை புத்தர்களுடன் வாதிடும்படி சிதம்பரம் தீட்சிதர்கள் அழைத்துச் சென்றுவிட்டனர் ; அயோத்தியில் பல MANY HALLS ஹால்கள்;உண்டாம்; அதில் ஒன்று அறிஞர்கள் மோதும் பட்டி மண்டபம் என்கிறானே கம்பன் ; அதைச் செப்பிய இடம் யாதோ!
17
யுவான் சுவாங் என்னும் சீன யாத்ரீகன் அப்பர், மஹேந்திர பல்லவன் காலத்தில் வந்தான் ; அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் குப்தர் காலத்தில் வந்த சீன யாத்ரீகன் பாஹியான்– குப்தர் காலத்தில் வீடுகளுக்கு கதவுகள் இல்லை; அந்த நாட்டில் திருடர்கள் இல்லை என்றான்; கம்பன் கண்ட அயோத்தியின் நிலை என்ன?
18
முதல் முதலாக கம்பன் ராவணனை அறிமுகப்படுத்தும் இடம்– தேவர்கள் அவன் செய்த அட்டூழியங்களை முறையிட்ட இடம் –ஆகும் . வால்மீகியில் இல்லாத அவதார விஷயத்தைக் கம்பன் இங்கே செப்பினானா ?
19
கம்பன் கருத்துப்படி வானரங்கள் – குரங்குப்படை யார் ?
20
துளசிதாஸ் எழுதிய ஹனுமான் சாலீஸாவில் அனுமன், சிவ பெருமானின் அவதாரம் என்கிறார் ; கம்பன் என்ன சொன்னான் ?
–subham—
Tags- கம்ப ராமாயணம், பாடல்கள்,30 கேள்விகள்