
Written by London Swaminathan
Post No. 16,348
Date uploaded in London – 27 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கம்ப ராமாயணத்தை முழுக்க படிக்க வேண்டாம்; சுவையான பகுதிகளை மட்டும் படியுங்க!! கம்பன் ஒவ்வொரு விஷயத்துக்கும் 10 அல்லது 15 பாடல்களைச் சொல்வதால் 10,000 பாடல்கள் கிடைக்கின்றன; அவைகளைப் படிக்க முடியாதோருக்கு சுவையான பகுதிகளை மட்டும் கேள்வி – பதில் வடிவில் தருகிறேன்; எப்போதும் என் பிளாக்குகளில் இலவசமாகக் கிடைக்கும் ; தொடர்ந்து படியுங்கள்:
இதற்கு முன்னர் வெளியிட்ட 200 கேள்விகளும், விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.
***

201
ராமனும் லட்சுமணனும் பர்ணசாலைக்கு விரைவாக ஓடி வந்தனர். சீதையைக் காணாது திகைத்தனர்; அப்போது இந்த SOLAR SYSTEM சோலார் சிஸ்டெம் என்னும் சூரிய மண்டலத்துக்கு நேர்ந்த கதியை கம்பன் எப்படி அற்புதமாக விளக்குகிறான் ? அதிலுள்ள தத்துவம் என்ன ?
202
ராவணனின் தேரின் தடத்தைப் பின்பற்றி ஓடிவந்த ராம லெட்சுமணர்களின் கண்டுபிடிப்பு என்ன ?
203
தமிழ்த்திரைப்பட டைரக்டர் கம்பன், திடீரென்று ரோட்டில் கிடந்த வீணைக்கொடியைக் காட்டியது ஏன் ?
204
விமானத்தில் சென்றவன் ராவணன் தான் என்று – “சுமித்திரை சிங்கம்” — லெட்சுமணன் கண்டுபிடித்தது எப்படி ?
205
ராம லெட்சுமணரைக் கண்டவுடன் ஜடாயுவின் மனத்தில் எழுந்த எண்ணங்கள் என்ன?
206
விதியை மதியால் வெல்லலாம் என்று ஜடாயு கூறிய பொன்மொழி என்ன ?
207
ஜடாயுவிடமிருந்து இராவணன் செய்த செய்கைகளைக் கேட்டவுடன் ராமன் பிரபஞ்சத்தையே அழிப்பேன் என்று சொன்ன சூளுரை என்ன ?
208
எல்லாக் கதைகளையும் ராம லெட்சுமணரிடம் கேட்ட ஜடாயு, ராவணனுடன் தான் செய்த போரினைக்கூறி உயிர் நீத்த பின்னர் ராமன் என்ன செய்தான் ?
209
மயில் குயில், அன்றில் பறவைகளில் ராமன் சீதையைக் கண்டதை கம்பன் எப்படி வருணித்தான்?
210
ராமன் சொன்னதால் தண்ணீர் கொண்டுவரச் சென்ற லெட்சுமணன் மீது, காதல் வலை வீசிய அயோமுகி பற்றி கம்பன் கூறிய உவமை என்ன ?

XXXXXXXXXXXXXX
விடைகள்
201.பிரபஞ்சத்துக்கு நேர்ந்த கதி !
மண் சுழன்றது; மால்
வரை சுழன்றது; மதியோர்
எண் சுழன்றது; சுழன்ற,
அவ் எறி கடல் ஏழும்;
விண் சுழன்றது; வேதமும்
சுழன்றது; விரிஞ்சன்
கண் சுழன்றது; சுழன்றது,
கதிரொடு மதியும்.
நிலம் சுழன்றது; பெரிய மலைகள் சுழன்றன; ஞானிகள் உடைய எண்ணமும் திரிந்து சுழன்றது; அலை எறியும் கடல்கள் ஏழும் சுழன்றன; வானமும் சுழன்றது; குலையா வேதங்களும் குலைந்து சுழன்றன; பிரம்மாவினுடைய கண்களும் சுழன்றன; சூரியனும் சந்திரனும் நிலை குலைந்து சுழன்றன.
நமக்குள் இருக்கும் இறைவனே பிரபஞ்சம் முழுதும் உளான்; மாணிக்க வாசகரைப் பாண்டிய மன்னன் அடித்த அடி , அங்குள்ள அனைவர் மீதும் விழுந்ததை நாம் அறிவோம்; அதுபோல ராமபிரானின் மனம் சுழன்றவுடன் பிரபஞ்சமே தடுமாறியது என்கிறான் புலவன் .
இப்பாடல் அந்தர்யாமித்தத்துவத்தை விளக்குவதாக அமைந்துள்ளது. வால்மீகி இராமாயணத்தில் இல்லாத இரணியன் வதைப் படலத்தை கம்பர் தம் நூலில்அமைந்தமைக்குக் காரணம், கலந்தும் கரைந்தும் உள்ள பரம் பொருளின் அந்தர் யாமித் தத்துவத்தை விளக்கவே என்பர். அப்படலத்தின் உள்ள
தன்னுளே உலகங்கள் எவையும் தந்து, அவை-
தன்னுளே நின்று தான் அவற்றுள் தங்குவான் (6247)
சாணினும் உளன்; ஓர் தன்மை அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந்நின்ற தூணினும்
உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன், இத்தன்மை காணுதி, விரைவின்
என்றான்; ‘நன்று’ எனக் கனகன் சொன்னான். (6312) என்ற பாடல் கருத்தையும் உள்ளடங்கியது இப்பாடல் !
***********
202.சிறிது தூரம் தெரிந்த தேரின் தடம் திடீர் என்று மறைந்தவுடன் AIRPLANE TOOK OFF FROM THE RUNWAY AT THIS POINT பிளேன் ரன் வேயிலிருந்து டேக் ஆப் ஆன இடம் இது என்று ராமன் கண்டுபிடித்தான்; லெட்சுமணன் அதி மேதாவி! அது தெற்கு திசை வரை ஒடி மறைந்ததை அண்ணனிடம் சொல்லி நம் அம்புக்கு இலக்கு தென் திசை என்றான்
‘தெற்குநோக்கியது எனும் பொருள்
தெரிந்தது, அத்திண்தேர்;
மற்கு நோக்கிய திரள்புயத்து
அண்ணலே! வானம்,
விற்கு நோக்கிய பகழியின் நெடுது
அன்று; விம்மி,
நிற்கும் நோக்கு இது என் பயத்தது?’ என,
இளையவன் நேர்ந்தான்.
(இராமன் சொன்னதைக் கேட்ட இலக்குவன்)
‘போரெனில் புகலும் மற்புயத்து அண்ணலே! இத்தேர் தென் திசை நோக்கிச் சென்றுளது என்பது தெரிகிறது. அது சென்ற வானம் வில்லில் இருந்து வெளிப்படும் அம்புக்கு நீண்டது அல்ல. எனவே கலங்கித் தடுமாறி நிற்பதால் என்ன பயன் என்று இலக்குவன் இராமனிடம் கூறினான்
****
203.வீணைக்கொடி கண்டு போர் நடந்தமை அறிதல்
3482. ‘ஆகும்; அன்னதே கருமம்’
என்று, அத்திசை நோக்கி
ஏகி, யோசனை இரண்டு
சென்றார்; இடை எதிர்ந்தார்,
மாக மால் வரை கால்
பொர மறிந்தது மான,
பாக வீணையின் கொடி
ஒன்று கிடந்தது பார்மேல்.
இலக்குவன் கூறியதை ஏற்று இருவரும் சீதையை எடுத்துச் சென்ற பகைவனைத் தேடித் தென் திசையில் இரண்டு யோசனை தூரம் சென்றார்கள். செல்லும் வழியில் காற்றால் பெருமலை ஒன்று விழுந்து கிடப்பதைப் போல் விழுந்து கிடந்த துண்டான வீணை வடிவம் எழுதப்பட்ட கொடி ஒன்றைக் கண்டார்கள்.
(ராவணன் என்பதைச் சொல்லாமல், தென் திசை இலங்கை என்பதைச் சொல்லாமல், கம்பன் சஸ்பென்ஸ் SUSPENSE வைக்கிறான்; ராமாயணம் தெரியாமல் முதல் தடவை படிப்போருக்கு இவை எல்லாம் SUSPENSE சஸ்பென்ஸ் காட்சிகள் ! அதற்கு ஏற்ற இசையையும் பின்னால் சேர்த்துக் கொள்ளவேண்டும் ( Jurassic Park, directed by Steven Spielberg and released in 1993) டைனோஸரஸ் வருவதற்கு முன்னர், எப்படி ஸ்டீவன் ஸ்பீல்பர்க் பயங்கர இசை கொடுத்து நம் மனதில் திக் திக் உண்டாக்கினார்)
****
204.இராமலக்குவர் வழியில், வில் , அம்பறாத்துணி, கவச குண்டலங்கள், சிதைந்த குதிரைகளைக் கண்டவுடன் பலர் சண்டையிட்டு சீதையைக் கவர்ந்ததாக ராமன் சொல்கிறான் ; இல்லை , அண்ணா ! பத்து தலை இருந்தால் இப்படிச் செய்ய முடியுமே என்கிறான் அதி மேதாவி இலக்குவன் ! அவனைச் சுமித்திரை பெற்ற சிங்கம் என்கிறான் கம்பன்.
திருவின் நாயகன் உரைசெய,
சுமித்திரை சிங்கம்,
‘தருவின் நீளிய தோள் பல,
தலை பல, என்றால்,
பொருது தாதையை இத்தனை
நெறிக் கொடு போனான்
ஒருவனே, அவன் இராவணன் ஆம்’
என உரைத்தான்.
இராமன் கூறியதைக் கேட்ட இலக்குவன் பல தோளணிகளும், பல மகுடங்களும் கிடப்பதால் பல தோள்களும், பல தலைகளும் உடைய இராவணன் ஒருவனே சடாயுவொடு போரிட்டுச் சீதையை இவ்வளவு நீண்ட தூரம் கவர்ந்து வந்தவனாதல் வேண்டும் என்றான்
***
205.ராமனும் லெட்சுமணனும் கீழே கடந்த ஜடாயுவைக் கண்டு அழுது புலம்பினர்; ஆனால் ஜடாயுவோ புத்துயிர் பெற்று என் குற்றம் இன்று நீங்கியது என்று மகிழ்கிறான். சீதையைக் காப்பாற்றாமல் போன குற்ற உணர்வு இருந்தது; இன்று ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றதைச் சொல்லிவிட்டால் இனிமேல் ராவணன் கதை முடிந்தது என்ற எண்ணம் ஜடாயுவின் மனதி ஓடியது.
உற்றது உணராது, உயிர்
உலைய வெய்துயிர்ப்பான்
கொற்றவரைக் கண்டான்; தன்
உள்ளம் குளிர்ப்புற்றான்;
இற்ற இரு சிறகும், இன்னுயிரும்,
ஏழ் உலகும்,
பெற்றனனே ஒத்தான்; ‘பெயர்த்தேன்
பழி’ என்றான்.
(தான் வெட்டுண்டு விழுந்த பின் சீதைக்கு) நேர்ந்த நிலையை அறியாமல்; உயிர் நடுங்குமாறு பெருமூச்சு விடுபவனாகிய சடாயு;
வெற்றி வீரர்களான இராமலக்குவரைக் கண்டவனாய், (அதனால்)
தன் மனம் குளிர்ந்தான்; அறுபட்டு விழுந்த தன் இரு இறகுகளையும்; (தன்) இனிய உயிரையும், ஏழு உலகங்களையும்; பெற்றனனே ஒத்தான்
ஒருங்கே பெற்றவன் போல (பெரு மகிழ்ச்சி அடைந்தான்); (எனக்கு ஏற்பட்ட பழியையும் அவர்களுக்கு ஏற்பட்ட) பழியையும் நீக்கி விட்டேன் என்று கூறினான்.
****

206.ஜடாயு அறிவுரை
3508. ‘அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ?
“துதி அறு பிறவியின் இன்ப துன்பம் தான்
விதி வயம்” என்பதை மேற்கொளாவிடின்,
மதி வலியால் விதி வெல்ல வல்லமோ?
நமக்கு வரும் இன்ப துன்பங்கள் விதி வசம் என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டால் தான் நாம் நம் அறிவு வலிமையால் அதை நீக்க முடியும். விதிவசம் என்பதை ஏற்காவிடின் நம் மதி வலிமையால் இன்ப துன்பங்களை வெல்ல முடியாது என்றபடி. வருவன வந்தே தீரும், அவற்றைத் தடுக்க முடியாது. வந்ததன் பின் விதி வசம் என எண்ணி ஆறுதல் அடைந்து மதி வலியால் அதனைப் போக்கலாம் என்று சடாயுஆறுதல் கூறுகிறான்.
(அதிசயம் -புதுமை; துதி அறு பிறவி – புகழ் அற்ற பிறவி. விதி- ஊழ்)
****
207.ராம பிரானின் சூளுரை
‘இக் கணம் ஒன்றில், நின்ற,
ஏழினொடு ஏழு சான்ற
மிக்கன போன்று தோன்றும்,
உலகங்கள் வீயுமாறும்,
திக்குடை அண்ட கோளப்
புறத்தவும் தீந்து, நீரின்
மொக்குளின் உடையுமாறும், காண்’
என, முனியும் வேலை,
இந்த ஒரு கணத்தில், மிகவும் பெரியவை போல் தோன்றுகிற பதினான்கு உலகங்கள் அழியும்; எட்டுத் திக்குகளை உடைய
அண்ட கோளத்துக்குப் புறத்தில் உள்ளவையும் (சினந்தால்) கருகிப் போய், நீரில் தோன்றுகிற குமிழி போல உடைந்து போகும் தன்மையினையும் காண்பாயாக என்று கூறிச் சினந்த போது, சினத்தைத் தவிர்த்து சீதையை மீட்கச் செல்வாயாக என்று ஜடாயு கூறினான்.
****
208.ஜடாயு தகனம்
இந்தனம் எனைய என்ன கார்
அகில் ஈட்டத்தோடும்
சந்தனம் குவித்து, வேண்டும்
தருப்பையும் திருத்தி, பூவும்
சிந்தினன்; மணலின் வேதி
தீது அற இயற்றி, தெண் நீர்
தந்தனன்; தாதை தன்னைத் தடக்
கையான் எடுத்துச் சார்வான்,
இறுதிச் சடங்கு செய்தற்குரிய விறகு, தருப்பை, பூ, தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து வைத்து, அதற்காக மணல் மேடை அமைத்ததை இப்பாடல் விளக்குகிறது.
ஏந்தினன் இரு கைதன்னால்;
ஏற்றினன் ஈமம்தன்மேல்;
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன்;
தலையின் சாரல்
காந்து எரி கஞல மூட்டி, கடன்
முறை கடவாவண்ணம்
நேர்ந்தனன்-நிரம்பும் நல் நூல் மந்திர
நெறியின் வல்லான்.
நல்ல நூல்களாகிய சாத்திரங்களில் வல்லவனாகிய இராமன், நீரையும் சந்தனத்தையும் மலரையும் பயன்படுத்திச் (சடாயுவின் உடலுக்கு இட்டு,அவ்வுடலைத் தன் இரண்டு கைகளாலும் எடுத்து (விறகுகள் அடுக்கப்பட்ட) ஈம மணல் மேடையின் மேல் ஏற்றி தலைப் பக்கத்தில் எரிகிற நெருப்பைப் பற்ற வைத்து செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாதவாறு செய்தான்.

****
209.ராமனின் வருத்தம்
பொழிலை நோக்கும்; பொழில் உறையும்
புள்ளை நோக்கும்; பூங்கொம்பின்
எழிலை நோக்கும்; இள மயிலின்
இயலை நோக்கும்; இயல்பு ஆனாள்
குழலை நோக்கி, கொங்கை இணைக்
குவட்டை நோக்கி, அக் குவட்டின்
தொழிலை நோக்கி, தன்னுடைய தோளை
நோக்கி, நாள் கழிப்பான்.
நோக்கிய காட்சிகளிலெல்லாம் சீதையின் உறுப்புகளையே இராமன் கண்டான் ; சோலை சீதையின் கருங்கூந்தலாகவும், அச்சோலையில் உள்ள சக்கரவாகப் பறவை அவளது இணைக் கொங்கைகளாகவும், பூங்கொம்பின் எழில் கொங்கையில் எழுதப்பட்ட தொய்யிலாகவும், இளமயிலின் இயல் சீதையின் சாயலாகவும் இராமனுக்குக் காட்சியளித்தன
****
210. மந்திரத்துக்கும் கட்டுப்படாத பாம்பு உவமை
நல் மதியோர் புகல் மந்திர நாமச்
சொல் மதியா அரவின் சுடர்கிற்பாள்
தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள்;
‘மன்மதன் ஆம் இவன்’ என்னும் மனத்தாள்.
மந்திரம் கேட்டுக் கட்டுப்படாத பாம்பு போன்றவளாகிய அயோமுகி, இலக்குவனிடம் கொண்ட காதலால் தன் மனச் செருக்கும் வலிமையும் தணியப் பெற்றாள் என்க. (நாமம் – அச்சம். மதன் – வலி, செருக்கு) மந்திரத்துக்கு கட்டுப்பட்ட பாம்பு போல என்ற உவமையை சம்ஸ்க்ருத, தமிழ் இலக்கியங்களில் காணலாம். ஆனால் அயோமுகி மந்திரத்துக்கு கூட வசப்படாத பாம்பு என்கிறான் கம்பன் !
–SUBHAM—
TAGS– கம்பராமாயணம், 210 கேள்விகள் , ஜடாயு தகனம், அயோமுகி காதல், வீணைக்கொடி , விமானப் பாதை