ராவணன், இந்திரஜித், கும்பகர்ணன், மண்டோதரி தூங்கிய வர்ணனை! கம்ப ராமாயணத்தில் 380 கேள்விகள்! (Post.16,400)

Written by London Swaminathan

Post No. 16,400

Date uploaded in London – 15 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

371

அனுமன் முதலில் கண்ட

கும்பகர்ணனின் தூக்கம் எப்படி இருந்தது ?

372

விபீஷணனைக் கண்ட அனுமன் அவன் நல்லவன் என்று எண்ணி விலகிப்போனது எப்படி?

373

கீழ்கண்ட பாடலில் மும்மூர்த்திகளுக்கு நிகரானவன் என்று யாரைக் கம்பன் புகழ்கிறான்?

இவனைஇன்துணை உடையபோர் இராவணன் என்னே

புவனம் மூன்றையும்வென்றது ஓர் பொருள்எனப்

புகறல்?

சிவனை நான்முகத்தொருவனைத் திருநெடு மாலாம்

அவனை அல்லவர்நிகர்ப்பவர் என்பதும் அறிவோ?

374

மண்டோதரியின் பள்ளி அறையைக் கம்பன் எப்படி வருணிக்கிறான்?

375

மண்டோதரியைச் சீதை என்று கருதிய அனுமனின் மனதில் என்ன எண்ணங்கள் ஓடின ?

376

ராவணன் அரண்மனையில் நுழைந்த அனுமன் என்ன தீய சகுனங்களைப் பார்த்தான் ?

377

ராவணன் படுக்கைக்கு ஆயிரம் அழகிகள் சாமரம் வீசியத்தைக் கம்பன் எவ்வாறு வருணிக்கிறான் ?

378

ராவணன் அரண்மனையில் தண்தமிழ்ப் பசுந்தென்றல் காற்று  வீசிய போதிலும் என்ன நிகழ்ந்தது ?

379

இப்போதே ராவணனைக் கொல்வேன் என்று அனுமன் துடித்தது எங்ஙனம் ?

380

ராவணனை தான் கொல்வது முறையல்ல என்று அனுமன் ஏன் மனம் மாறினான் ?

XXXXXXXXXXXX

விடைகள்

371.அனுமன் முதலில் கண்ட கும்பகருணானின் தூக்கம்

மூசியஉயிர்ப்பு எனும் முடுகு வாதமும்,

வாசலின்புறத்திடை நிறுவி, வன்மையால்

நாசியின்அளவையின் நடத்த, கண்டவன்

கூசினன்;குதித்தனன், விதிர்த்த கையினான்.

கும்பகர்ணன் விட்ட   மூச்சுக் காற்று அனுமனைக்  கும்பகர்ணன் தூங்கிக் கொண்டிருந்த அரண்மனை வாயிலின் புறத்தை விட்டு அப்பாற் செல்ல வொட்டாது தடுத்தது. அவனுடைய மூச்சு அவ்வளவு ஈர்ப்பு விசை உடையது! கும்பகர்ணனது மூக்கு வரை இழுப்பதனை உணர்ந்த அனுமன் மூக்கின் உள்ளே செல்லக் கூசினான்.  அச்சத்தால் கைகளை உதறிக் குதித்து  அப்பாற் சென்றான்.

கும்பகர்ணன் சுவாசம் விடுவது பற்றி பின்னால் கூறப்போகும் கம்பன் . ‘வீரன் வாயில் திறத்தலும் சுவாத காதம் மண்டுற, வீரர் எல்லாம் வருவது போவதாக’ (கம்ப.7320)  என்று கூறுவதை இங்கு ஒப்பு நோக்குக.

கும்பகர்ணனின் செயல்களைக் காப்பி அடித்து, ஜோனாதன்

ஸ்விப்ட் என்ற ஆங்கில ஆசிரியர்  கல்லிவர்ஸ் டிராவல்ஸ் நாவல் எழுதினார் என்று முன்னரே எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் எழுதியதையும் காண்க

தடைபுகு மந்திரம் தகைந்த நாகம்போல்,

இடைபுகல் அரியதுஓர் உறக்கம் எய்தினான்,

கடையுக முடிவு எனும்காலம் பார்த்து அயல்

புடைபெயராநெடுங் கடலும் போலவே.

யுகங்களின் முடிவான  பிரளய காலத்தை எதிர்பார்த்து       கரையை விட்டுச் செல்லாத பெரிய சமுத்திரத்தைப்

போலவும் மந்திரத்தால் கட்டுப்பட்ட நல்ல பாம்பைப் போலவும்  யாரும் எழுப்ப முடியாத ஆழ்ந்த உறக்கத்தில் கும்பகர்ணன் இருந்தான்.

*************

372 வெள்ளை வர்ண வீடணன் நல்லவன்

பளிக்கு வேதிகைப் பவளத்தின் கூடத்துப் பசுந்தேன்

துளிக்கும் கற்பகப் பந்தரில், கருநிறத் தோர்பால்

வெளித்து வைகுதல்அரிதுஎன  அவர்உரு மேவி,

ஒளித்துவாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான்.

முதல் முதலாக விபீஷணனைக் குறிப்பிடும் பாடலிலேயே அவனுக்குத் தர்மவான் முத்திரை குத்திவிடுகிறான் கம்பன்! இந்த அதிசயக் கண்டுபிடிப்புக்கு காரணம் அவன் கருப்புநிறத் தோல்  உடைய அரக்கர்களுக்கு இடையே வெள்ளையனாக இருந்தானாம் !

நிறமும் கருப்பும்

அறத்தின் நிறம்வெண்மை என்பது இலக்கிய வழக்கு. இராமபிரானின் பல்லின் வெண்மையைப் பேசவந்த அனுமன், ‘துறையறத்தின் வித்து முளைத்த அங்குரல் கொல்’ என்று பேசினான் (கம்ப. 5280) ” ஆரருள சுரக்கும் நீதிஅறம் நிறம்கரிதோ” (கம்ப. 6492) எனப்பின் வருவதும் இங்கு கருதுக.  (135)

பிற்காலத்தில் முத்தநாதன் என்ற கொலைகாரனை வருணித்த சேக்கிழார் பெருமானும் மனதிலே கருப்புவைத்து நுழைந்தனன் என்று பாடியதைக் கருத்தில்கொள்க.

*************

373. இந்திரசித்தனைப் புகழும் கம்பன்

ராவணனின் மகன் பெயர் மேகநாதன் ; இந்திரனை வென்றதால் அவனுடைய இன்னொரு பெயர்: இந்திர ஜித்

இவனைஇன்துணை உடையபோர் இராவணன் என்னே

புவனம் மூன்றையும்வென்றது ஓர் பொருள்எனப்

புகறல்?

சிவனை நான்முகத்தொருவனைத் திருநெடு மாலாம்

அவனை அல்லவர்நிகர்ப்பவர் என்பதும் அறிவோ?

சிவபெருமானும், நான்கு முகம்கொண்ட பிரம்மதேவனும், திரு மாலும் இவனுக்குச் சமம் என்று சொல்வது பொருந்துமா ? அறிவாகுமா?  இந்த வீரனை   நல்ல துணைவனாகப்பெற்ற

இராவணன் மூன்று உலகங்களையும்  வெற்றி கொண்டது  ஒரு அருஞ்செயல் என்று சொல்வது பொருந்துமா ? என்னே அதிசயம்!

மும்மூர்த்திகட்குச் சமமான வீரனைத் துணையாகப் பெற்ற இராவணன் மூன்று உலகத்தை வென்றது செயற்கரும் செயலன்று.

*************

374. மண்டோதரியின் பள்ளி அறை; மூச்சுக் காற்றிலும் வாசனை

அரம்பை, மேனகை, திலோத்தமை, உருப்பசி

ஆதியர்,மலர்க்காமன்

சரம்பெய்தூணிபோல்தளிர்அடி தாம்தொடச்

சாமரைபணிமாற

கரும்பையும் சுவைகற்பித்த சொல்லியர்

காமரம்கனியாழின்

நரம்பின்இன்இசை செவிபுக நாசியில்

கற்பகவிரை நாற.

மன்மதனுடைய  மலரம்புகள் போன்ற பாதங்களை ஊர்வசி, ரம்பை, மேனகை, திலோத்தமை முதலான மகளிர் தம் கரத்தால் பிடித்து விட்டார்கள் .சாமரை வீசசினார்கள்;  கரும்பைப்போன்ற இனிய சொற்களையுடைய மகளிர்  காமரம் என்னும் யாழினுடைய     நரம்பின் இனிய ஓசையை இசைத்தார்கள்; அது அவளுடைய செவியிலே நுழையவும்  கற்பக மலரின் நறுமணம் நாசியின் கண்ணே வெளிப்படவும்.மண்டோதரி உறங்கினாள்;

‘காமரம் – சீ காமரம் என்னும் பண்ணின் பெயர் . இராவணனின் மூச்சுக் காற்றில் மாம்பூ, புன்னைப்பூ, மகிழம்பூவின் மணம் இருப்பதாக   ஆதி கவி  வால்மீகி  பேசினார். கவிச்சக்கரவர்த்தி மண்டோதரியின் மூச்சு மணக்கிறது என்றார்.                                                *************

375.மண்டோதரியைச் சீதை என்று கருதிய அனுமனின் மனதில் ஓடிய எண்ணங்கள்

எற்புவான்தொடர் யாக்கையால் பெறும்பயன்

இழந்தனள்! இதுநிற்க;

அற்பு வான்தளைஇற்பிறப்பு அதனொடும்

இகந்துதன்அருந் தெய்வக்

கற்பு நீங்கியகனங்குழை இவள்எனின்,

காகுத்தன்புகழோடும்

பொற்பும் யானும்இவ் இலங்கையும் அரக்கரும்

பொன்றுதும்இன்று என்றான்.

நல்ல உடம்பினால்அடைய வேண்டிய பயனை இழந்துவிட்டாள்; அது கிடக்கட்டும்.இங்கே துயிலும் இப்பெண் சிறந்த குலத்தில் பிறந்து ,தெய்வத் தன்மைவாய்ந்த கற்பை விட்டு விலகிய  சீதை என்பது உண்மையானால் இராமபிரானின் புகழும் நானும் இந்த இலங்கை

மாநகரும் இராக்கதர்களும் இன்றைய தினத்தில் அழிவோம் என்று கருதினான்;அதாவது சீதை கற்பு தவறி இந்த அரண்மனையில் படுத்திருந்தால் உலகமே தலை கீழாக மாறிவிடும்[ அழிந்து போகட்டும்)

*************

376 ராவணன் அரண்மனையில் தீய சகுனங்கள்

நிலம்துடித்தன; நெடுவரை துடித்தன;

நிருதர்தம்குலமாதர்

பொலம் துடிக்குஅமை மருங்குல்போல் கண்களும்

புருவமும்,பொன் – தோளும்

வலம் துடித்தன;மாதிரம் துடித்தன;

தடித்துஇன்றி, நெடுவானம்

கலந்து இடித்தன;வெடித்தன பூரண

மங்கலகலசங்கள்.

(அனுமன் அம்மாளிகையில் நுழைந்தபோது)

இலங்கையில் பலஇடங்கள் அதிர்ந்தன;பெரிய மலைகள் அதிர்ந்தன; அரக்கர்குலப் பெண்களின் இடையைப்போல கண்களும், புருவங்களும்,  அழகிய தோள்களும் வலப்பக்கத்தில் துடித்தன.

திசைகள் அதிர்ந்தன; மின்னல் இல்லாமலேயே நீண்ட ஆகாய  ஒலி எல்லா இடத்திலும்அதிர்ந்தன; பூரண கும்ப மங்கல கலசங்கள்  சிதறின.

மகளிர்க்கு வலப்புறம் துடித்தல் கேட்டுக்கு அறிகுறி (கம்ப. 5100).

*************

377 ராவணன் படுக்கைக்கு ஆயிரம் அழகிகள் சாமரம் வீசினர்

ஆயபொன்தலத்து ஆய்வளை அரம்பையர்

ஆயிரர்அணிநின்று

தூய வெண்கவரித்திரள் இயக்கிடச்

சுழிபடுபசுங்காற்றின்

மீய கற்பகத்தேன்துளி விராயன,

வீ்ழ்தொறும் நெடுமேனி

தீய, நல்தொடிச்சீதையை நினைதொறும்

உயிர்த்து,உயிர் தேய்வானை-

பொன்மயமான அரண்மனையில், வளையல்களை அணிந்த  ஆயிரக்கணக்கான அரம்பையர்கள் வரிசையாக நின்று  தூய்மையும் வெண்மையும் உடைய  கவரிகளை (சாமரம்) வீசினர்; அதனால் எழுந்த காற்றால் கற்பக மலரில் உள்ள தேன் ராவணனின் பெரிய உடலில் சொட்டியது; சீதாபிராட்டியை எண்ணுந்தோறும்பெரிய உடல் வெப்பமடைந்தது; பெருமூச்சுவிட்டு உடல் தேய்ந்தது.

*************

378

ராவணன் அரண்மனையில் தண்தமிழ்ப் பசுந்தென்றல் காற்று !

சாந்துஅளாவிய கலவைமேல் தவழ்வுறு

தண்தமிழ்ப் பசுந்தென்றல்,

ஏந்து காமவெங்கனல் உயிர்த்து, இருமடி

துருத்தியின் உயிர்ப்பு ஏற

காந்தள்மெல்விரல் சனகிமேல் மனம்முதல்

கரணங்கள்கடிது ஓடப்

பாந்தள்நீங்கிய முழைஎன, குழைவுறு

நெஞ்சுபாழ்பட் டானை—

கற்பூரம் முதலான கலவைகளைப் பெற்ற சந்தனப் பூச்சின்மேல், தவழ்கின்ற   குளிர்ந்த தமிழ் மொழியினுடன் பிறந்த  பசுந்தென்றல் வீசியதால் காம நெருப்பு வெளிப்பட்டது ;துருத்தியைப்போல பெருமூச்சு அதிகரித்தது;  காந்தள் காந்தள் மலரைப் போன்ற சீதாப் பிராட்டியின்பால்மனம் முதலான கரணங்கள்  வேகமாகச்  சென்றது  ராவணன் இதயம் பாம்புகள் நீங்கப்பெற்ற புற்றைப்போல காலியாகக் கிடந்தது.

தென்றலுடன்தமிழ் பிறந்தது என்பது இலக்கிய வழக்கு.

இராவணனின் அந்தக் கரணங்கள் பாம்பு போன்றவை. அவன் இதயம் புற்றையொப்பது.;இராவணன் கொண்டுள்ள காமமாகிய

கொடிய  நெருப்புக்கு தோல் துருத்தியின் காற்றாக அமைந்தது பெரு மூச்சு.

.************* 

379.இப்போதே ராவணனைக் கொல்வேன் என்று அனுமன் துடித்தது எங்ஙனம்?

5053.

தோள்ஆற்றல் என்னாகும் ?

மேல்நிற்கும் சொல் என்னாம் ?

வாள் ஆற்றுகண்ணாளை

வஞ்சித்தான் மணிமுடிஎன்

தாள் ஆற்றலால்இடித்துத்

தலைபத்தும்தகர்த்து இன்றென்

ஆள் ஆற்றல்காட்டேனேல்

அடியேனாய்முடியேனே !

(சீற்றங்கொண்டஅனுமன்) இராவணனின் மணிகள் பதித்த கீரிடத்தை என்னுடைய கால்களால் உதைத்து, பத்து  தலைகளையும்  பொடிப் பொடியாக்கி, என்னுடைய தோளின் வலிமையை நான் காட்டாமல் போனால் என்ன பயன்?   (யான்) தொண்டு புரிபவனாக கருதப்பட மாட்டேன் என்று எண்ணி அனுமன் துடியாகத் துடித்தான்.

.*************

380

ராவணனை நான் கொல்வது முறையல்ல

5055.

என்றுஊக்கி, எயிறு கடித்து,

இரு கரமும்பிசைந்து, எழுந்து

நின்று, ஊக்கி,உணர்ந்து உரைப்பான்

நேமியோன்பணி அன்றால்

ஒன்று ஊக்கிஒன்று இழைத்தல்

உணர்வுஉடைமைக்கு உரித்து அன்றால்

பின்தூக்கின்இதுசாலப்

பிழை பயக்கும் எனப் பெயர்ந்தான்.

அனுமன், ஊக்கம் பெற்று   தன்னுடைய பற்களைக் கடித்து,  இரண்டு கைகளையும் பிசைந்தான்; எழுந்து சென்று நின்று  (பிறகு) சினம் தணிந்து தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்;

“இராவணனையும் இலங்கையையும் அழித்தல்) இராமபிரானின் கட்டளை அன்று”. ஒரு செயலைச் செய்யத் தொடங்கி, அதை விட்டுவிட்டு வேறு செயலைச் செய்தல்  புத்தி சாலித் தனமல்ல ஆராய்ந்தால் துன்பத்தை உண்டுபண்ணும் என்று நினைத்து அனுமன் பின் வாங்கினான்.

5057.

இற்றைப்போர்ப் பெருஞ்சீற்றம்

என்னோடும்முடிந்திடுக;

கற்றைப் பூங்குழலாளைச்

சிறைவைத்தகண்டகனை

முற்றப் போர்முடித்தது ஒரு

குரங்குஎன்றால், முனைவீரன்

கொற்றப்போர்ச் சிலைத்தொழிற்குக்

குறைவு உண்டாம் ! எனக் குறைந்தான்.

இன்றைய தினத்தில், (இராவணனுடன்) போர் செய்ய வேண்டும் என்னும்  பெரியகோபம் எனக்குள்ளேயே அடங்கிக் கிடக்கட்டும்;  மலரணிந்த அடர்ந்த கூந்தலையுடைய பிராட்டியை  சிறையிலே வைத்த  முள்போலும் இராவணனை ஒரு குரங்கு போரிலே அழித்தது என்று பேசப்பட்டால் (அது)  போரில் வல்ல இராமபிரானின் போர்ச் செயலுக்கு தாழ்ச்சி உண்டாகும் என்று நினைந்து சீற்றம் தணிந்தான் அனுமன்.

–subham—

Tags- கம்ப ராமாயணத்தில் 380 கேள்விகள், ராவணன், இந்திரஜித், கும்பகர்ணன், விபீஷணன் மண்டோ தரி தூங்கிய முறை வர்ணனை

Leave a comment

Leave a Reply