
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,401
Date uploaded in London –16 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஶ்ரீ சக்ர ரகசியம்! – 2
ச. நாகராஜன்
5. ஐந்தாவது ஸர்வார்த்த ஸாதக சக்ரம்
இது பஹிர்த்தசாரம் என்னும் வெளியேயுள்ள பத்து முக்கோணங்களை உடைய சக்ரமாகும். இக்கோணங்களில் குளோத்தீர்ண யோகினிகள் என்னும் பெயரை உடைய ஸர்வஸித்திப்ரதா, ஸர்வ ஸம்பத்ப்ரதா, ஸர்வ ப்ரியங்கரீ, ஸர்வ மங்களாகாரிணீ, ஸர்வ காமப்ரதா, ஸர்வ துக்கவிமோசனீ, ஸர்வ மிருத்யுப்பிரசமனீ, ஸர்வ விக்கின நிவாரணீ, ஸர்வாங்க சுந்தரீ, ஸர்வ ஸௌபாக்யதாயினீ என்னும் பத்து தேவதைகள் பரிவார ஸமேதர்களாய் வாசம் செய்து கொண்டிருப்பார்கள். இவர்களுக்கெல்லாம் ஈசையாய்த் திரிபுராஶ்ரீ என்னும் சக்ரேஸ்வரி, பரிவார தேவதைகள் போற்ற, ஸ்வர்ண சிம்மாசனத்தின் மேல் வீற்றிருப்பாள்.
6. ஆறாவது ஸர்வ ரக்ஷாகர சக்ரம்
இது, உள்ளேயுள்ள பத்து முக்கோணங்களை உடையது. இவற்றில் உள்ள ஆவரண தேவதைகளுக்கு நிகர்ப்ப யோகினிகள் என்று பெயர். இவர்கள் ஸர்வக்ஞா, ஸர்வசக்தி, ஸர்வ ஐஸ்வர்யப்ரதா, ஸர்வஞானமயீ, ஸர்வ வியாதி விநாசினீ, ஸர்வாதார ஸ்வரூபா, ஸர்வ பாபஹரா, ஸர்வாநந்தமயீ, ஸர்வரக்ஷாஸ்வரூபிணி, ஸர்வேப்ஸித பலப்ரதா என்னும் திருநாமங்களை உடையவராவர்.
இவர்கள் ஜபமாலையையும், புஸ்தகத்தையும் கையில் தாங்கிப் பச்சைக் கற்பூரம் போன்ற வெண்மையான திருமேனியை உடையவராய் விளங்குவார்கள். இவர்களுக்கெல்லாம் நாயகியாய்த் திரிபுராமாலினீ என்னும் சக்ரேஸ்வரீ, சக்ர தேவதைகள் பணிய, ரத்தின சிம்மாசனத்தின் மேல் வீற்றிருப்பாள்.
7. ஏழாவது ஸர்வரோக ஹர சக்ரம்
இந்த சக்ரமானது எட்டு கோணங்களை உடையது. இகோணங்களில் வசினீ, காமேஸ்வரீ, மோதினீ, விமலா, அருணா, ஜயினீ, ஸர்வேஸ்வரீ, கௌளினீ என்னும் பெயர்களையுடைய ரஹஸ்ய யோகினிகள் வசித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு வாக் தேவதைகள் என்றும் வேறு பெயருண்டு. இந்த ஆவரண தேவதைகளின் நாயகியாகிய திரிபுரா ஸித்தாம்பாள் என்னும் சக்ரேஸ்வரியானவ்ள் மஹாபீடத்தின் மேல் வீற்றிருப்பாள்.
8. எட்டாவத்ய் ஸர்வ ஸித்திப்ரதாயக சக்ரம்
இது மத்தியிலுள்ள முக்கோணமாகும். இந்த முக்கோணத்திற்கும் அஷ்ட கோணத்திற்கும் இடையில் வலது பாகத்திலும், இடது பாகத்திலும், மேல் பாகத்திலும் மூன்று நாற்கோணங்கள் உண்டு. இந்த நாற்கோணங்களில் ஸகல அஸ்த்ர தேவதைகளும், தனுசு, பாணங்கள், பாசம், அங்குசம் முதலிய ஆயுத தேவதைகளும் வசித்துக் கொண்டிருப்பார்கள். முக்கோணத்தில் தனக்கு அதாவது சாதகனுக்கு எதிர்முகமாயுள்ள கோணத்திலுள்ள காமகிரி ஆலயத்தில் அக்கினிமயமான காமகிரி பீடத்தின் மேல் வாக்பவபீஜ ஸ்வரூபிணியும், காதி வித்யா மய பிரஹ்மாத்மக சக்தியுமாகிய மஹா காமேஸ்வரீ தேவியானவள், பாசம், அங்குசம், அம்ருத கலசம், கபாலம், வரத, அபய முத்திரைகள் இவைகளைத் தனது ஆறு கரங்களிலும் கொண்டதாய், பூஷணங்களின் மணித் திரட்கதிர்கள் நாற்றிசைகளிலும் பரந்தொளிரத் திவ்ய வஸ்திர, கந்த, புஷ்ப மாலைகளைத் தரித்துக் கொண்டு சதுரங்க சேனைகளுடன் மித்ரேசநாத, நவயோனி சக்ர, ஆத்ம தத்துவ, சிருஷ்டி கிருத்திய, இச்சா சக்தியோடு கூடி விளங்குவாள்.
வலது கோணத்தில் ஹாதிவித்யா ஸ்வரூபிணியாய் சூரியமண்டலமாகும் ஜாலந்தர பீடத்தில் ஷஷ்டிசநாதரோடு கூடி, உள், வெளித் தசாரங்கள் இரண்டிற்கும் பதினான்கு கோணத்திற்கும் நாயகியாய் வித்தியா தத்துவ, ஸ்திதி கிருத்திய, ஞானசக்தி ஸ்வரூபிணியாய், காமாராஜாத்மக காமகலா ஸ்வரூபிணியாய், பிரஹ்மாண்ட கோடிகளைச் சிருஷ்டிக்கவும், காக்கவும் ஆற்றலுள்ளவளாய்ச் சகல பரிவாரங்கள் புடைசூழ விஷ்ணு சக்தியாய் விளங்கித் தனது ஆறு கரங்களிலும் பாசம், அங்குசம், பாணம், வில், புஸ்தகம், ஜபமாலைகள் விளங்க, வஜ்ஜிரத்தைப் போல பிரகாசிக்கும் திருமேனியையுடைய மஹா வஜ்ரேஸ்வரீ மகா வைபவத்துடன் வீற்றிருப்பாள்.
இடது கோணத்தில் ஸாதி வித்தியா ஸ்வரூபிணியாய்ச் சந்திர மண்டல ரூப பூர்ணகிரி பீடத்தில், உட்டீசாநந்தநாதரோடு கூடி, நாற்கோணம், பதினாறு இதழ், எட்டு இதழ் பதுமங்கள் இவைகளுக்கு நாயகியாய்ச் சிவ தத்துவ, ஸம்ஹார கிருத்திய, கிரியா சக்தி, சக்திபீஜ ஸ்வரூபிணியாய், ருத்திராத்மக சக்தியாய்ப் பூரண சந்திரனை ஒத்த திருமேனியை உடையவளாய்த் தனது ஆறு கரங்களிலும் வில், அம்பு, பாசம், அங்குசம், புத்தகம், அபய முத்திரைகளைத் தரித்தவளாய், மணிமயமான பூஷணங்களையும், உடைகளையும் பூண்டு மஹாபகமாலினீ என்னும் தேவி வீற்றிருப்பாள்.
இவர்களுக்கு அதிரஹஸ்ய யோகினிகள் என்று பெயர். இம்மூவருக்கும் அதாவது மஹாகாமேஸ்வரீ, மஹா வஜ்ரேஸ்வரீ, மஹா பகமாலினிகளுக்கு நாயகியாகிய திரிபுராம்பா சக்ரேஸ்வரீ முக்கோணத்தின் எதிர்க்கோணத்திலுள்ள இரத்தின சிம்மாசனத்தின் மேல் வசிப்பாள்.
** தொடரும்