
Written by London Swaminathan
Post No. 16,403
Date uploaded in London – 16 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுந்தர காண்டத்தில் முக்கியக் காட்சிகள் ;
அசோகவனத்தில் அஞ்சா நெஞ்சன் ஆஞ்சனேயன்;
சகுன சாஸ்திரம் ;
திரிசடையின் வினோதக் கனவுகள்;
சீதையைக் கண்ட அனுமன் ஆடிய ஆனந்த நடனம்
xxxxxxxxxxxxxxxxxxxxxx

381
அசோகவனத்தில் அனுமன் நுழைந்தவுடனே தேவர்கள் பூமாரி பொழிந்தது ஏன் ?
382
அசோகவனத்தில் சீதை செய்த செயல்களை 12 வினைச் சொற்களைப் பயன்படுத்தி கம்பன் எப்படி வருணிக்கிறான்?
383
அசோகவனத்தில் அனுமனைக் காணும் முன்னர் சீதா தேவி புலம்பிய விஷயங்களில் ராம பிரான் குறித்த மிக முக்கியமான செய்தி என்ன ?
384
திரிசடையிடம் சீதாதேவி தான் கண்ட சகுனம் பற்றி என்ன சொன்னாள் ?
385
திரிசடை கனவில் கண்ட காட்சிகள் என்ன ?
386
இந்தப்பெண் சீதையே என்று அனுமன் எப்படிக் கண்டுபிடித்தான் ?
387
சீதையைக் கண்ட அனுமன் அடைந்த ஆனந்தம் எத்தகையது ?
388
சீதையைக் கண்ட அனுமன் சிந்தனையில் ஓடிய கீழ்கண்ட வரிகளின் பொருள் புரிகிறதா ?
‘தருமமே காத்ததோ? சனகன் நல்வினைக்
கருமமே காத்ததோ? கற்பின் காவலோ?
அருமையே! அருமையே! யார் இது ஆற்றுவார்?
ஒருமையே எம்மனோர்க்கு உரைக்கற் பாலதோ? 5.4.75
389
ராவணன் அசோக வனத்தில் நுழைந்தபோது அவனுடைய செருப்பினை ஏந்திவந்த தேவலோக அழகி யார் ?
390
ராவணனைப் புலி என்றும் சீதாதேவியை புலிக்குப் பயப்படும் மான் என்றும் கம்பன் எப்படி உவமிக்கிறான் ?
xxxxxxxxxxxxxxxxx
.webp)
.webp)
விடைகள்
381.அசோகவனத்தில் சீதாப்பிராட்டி தென்படவில்லையெனில், திரிகூட மலையிலுள்ள இலங்கையைப் பாழாக்கி விட்டு, நான் இறப்பேன்’ என்று நினைத்துக்கொண்டே அசோகவனத்தில் நுழைகிறான் அனுமன்;
என்று, சோலைபுக்கு எய்தினன் இராகவன் தூதன்;
ஒன்றி வானவர் பூமழை பொழிந்தனர் உவந்தார்,
அன்று வாள் அரக்கன் சிறை அவ் வழி வைத்த
துன்று அல் ஓதிதன் நிலை இனிச் சொல்லுவான் துணிந்தாம்.
உடனே தேவர்கள் பூமாரி பொழிந்தனர். சீதையைச் சிறைவைத்த அரக்கனுக்கு முடிவுக்காலம் வந்துவிட்டதென்று அவர்கள் மகிழ்ந்தனர்.
***
382.கம்பராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் (காட்சிப் படலம்) அசோக வனத்தில் துயருற்றுத் தவிக்கும் சீதாப் பிராட்டியின் நிலையை விளக்கும் பாடல் இதோ
“விழுதல், விம்முதல், மெய் உற வெதும்புதல், வெருவல், எழுதல், ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணித் தொழுதல், சோருதல், துவங்குதல், துயர் உழந்து உயிர்த்தல், அழுதல், அன்றிமற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள்”
இதன் பொருள்:
• விழுதல்: சோகத்தால் நிலத்தில் சரிந்து விழுதல்.
• விம்முதல்: விம்மி விம்மி அழுதல்.
• மெய் உற வெதும்புதல்: உடல் முழுவதும் கவலையாலும் துயரத்தாலும் கொதித்துத் தவித்தல்.
• வெருவல்: அஞ்சி நடுங்குதல்.
• எழுதல்: மீண்டும் துயரத்துடன் எழுந்து நிற்றல்.
• ஏங்குதல்: இராமனை நினைத்து ஏக்கம்கொள்ளுதல்.
• இரங்குதல்: தன் நிலையை எண்ணித் தானே இரக்கப்படுதல்.
• இராமனை எண்ணித் தொழுதல்: இராமனை மனத்தில் நினைத்து வணங்குதல்.
• சோருதல்: உடல் தளர்ந்து சோர்ந்து போதல்.
• துவங்குதல்: மனம் தளர்ந்து துவண்டு போதல்.
• துயர் உழந்து உயிர்த்தல்: பெருந்துயரத்தால் மூச்சுவிட்டுப் பெருமூச்சு விடுதல்.
• அழுதல்: கண்நீா்விட்டு அழுதல்.
இவை தவிர வேறு எதையும் செய்ய அறியாமல், அசோக வனத்தில் சீதாதேவி படும் துயரத்தை கம்பன் இப்பாடலில் மிக உருக்கமாக விவரிக்கிறான்
***
383 சீதா தேவி புலம்பல்
“ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு, எம்பி நின்தம்பி, நீ தோழன்,
மங்கை கொழுந்தி எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி மயங்குவாள்.”
பொருள்:
ஆழமான நீரை உடைய கங்கை நதியில் தன் ஓடத்தைச் செலுத்திய எளிய வேடனாகிய குகனிடம், இராமன் அன்பு பாராட்டி, “இவர் என் தம்பி, உனக்கும் தம்பி; நீ எனக்கு நண்பன்; என் மனைவி சீதை உனக்கு மைத்துனி (கொழுந்தி)” என்று உரிமையுடன் சொன்ன வாழ்த்தத்தக்க அந்த நட்பின் சிறப்பை நினைத்து, சீதை தன் உள்ளம் கலங்குவாள் (இராமனின் பிரிவிலும், அவனது உயர்ந்த பண்பிலும் மனம் நெகிழ்வாள்) என்று இப்பகுதி விளக்குகிறது. இராமன், வேடன் குகனிடம், என் தம்பி நின் தம்பி; நீ என் தோழன்; இவள் (சீதை) உன் கொழுந்தி என்றெல் லாம் கூறிய அன்புரை அவள் உள்ளத்தை வாட்டியது. “
இராமபிரான் இன்னும் தன்னை மீட்க வராததை எண்ணி எண்ணி சீதை புலம்பும்போது அதுவரை நடந்த நிகழ்ச்சிகள் அவள் மனத்தில் திரைப்படம்போல ஓடுகிறது; ஒவ்வொன்றையும் நினைத்துப் புலம்புகையில் வேடன் குகனிடம் சொன்னதையும் நினைவு கூறிப் புலம்புகிறாள்; இது ராமனின் ஜாதி மத இனத்துக்கு அப்பாற்பட்ட பரந்த நோக்கினைக் கம்பன் காட்டும் பாடல் ஆகும்
***
384.திரிசடையிடம் சீதாதேவி தான் கண்ட சகுனம் பற்றி சொன்னாள் :–
ஆயிடைத் திரிசடை என்னும் அன்பினால்
தாயினும் இனியவள் தன்னை நோக்கினாள்
‘தூயநீ! கேட்டி! என் துணைவி ஆம்! ‘எனா
மேயது ஓர் கட்டுரை விளம்பல் மேயினாள். 5.4.31
‘நலம் துடிக்கின்றதோ? நான்செய் தீவினை
சலம் துடித்து இன்னமும் தருவது உண்மையோ?
பொலம் துடி மருங்குலாய்! புருவம் கண் நுதல்
வலம் துடிக்கின்றில : வருவது ஓர்கிலேன்! 5.4.32
இராமன் வந்து தன்னைக் காணுதற்கு முன்பு, சீதை தன் உற்ற தோழியாக உள்ள திரிசடையிடம் தனக்கு உற்ற நிமித்தங்களைத் தெரிவிக்கின்றாள். தூய திரிசடையே ஒன்று கேள்! எனக்கு ஏதேனும் இப் போது நன்மை வருமோ? என் புருவம், கண், தோள் முதலியன வலம் துடிக்காமல் இடப் பக்கம் துடிக்கின்றன. வரக்கூடிய நன்மை என்னவோ!
*****
385.திரிசடை தான் கண்ட நிமித்தமும் கனவும் பயனும் கூறல் (5212-5228)
கனவு
‘எண்ணெய் தன் முடிதொறும் இழுகி ஈறு இலாத்
திண் நெடும் கழுதை பேய் பூண்ட தேரின்மேல்
அண்ணல் வேல் இராவணன் அரத்த ஆடையன்
நண்ணினன் தெனபுலம்; நவை இல் கற்பினாய்! 5.4.40
• எண்ணெய் பொன் முடிதொறும் இழுகி: இராவணன் தன் அழகிய பத்து கிரீடங்களை (முடிகளை) அணிந்த தலைகள் முழுவதிலும் எண்ணெய் வழியத் தேய்த்துக் கொண்டு,
• ஈறு இலாத் திண் நெடுங் கழுதை பேய் பூண்ட தேரின்மேல்: கணக்கற்ற, வலிமையான நீண்ட காதுகளை உடைய கழுதைகளும் பேய்களும் பூட்டப்பட்ட ஒரு தேரின் மீது ஏறி,
• வண்ண வெண் துகிலினன்: வெண்ணிற ஆடையை உடுத்தியவனாய்,
• தென்புலத்தார்தம் நண்ணு நல் நகர் எய்தினன்: எமனுடைய தென்திசை நகரத்தை நோக்கி (மரணத்தை நோக்கி) விரைந்து சென்றான்.
• நவை உளான: தீய செயல்களையே வடிவமாகக் கொண்ட இராவணன் இவ்வாறு செல்வது போன்ற காட்சியை அக்குறிப்புகள் உணர்த்துகின்றன.
இலக்கிய மரபில் ஒரு அரசன் தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு, கழுதை பூட்டிய தேரில் ஏறி தென்திசை நோக்கிச் செல்வது போல் கனவு கண்டாலோ அல்லது சகுனம் தென்பட்டாலோ, அது அவனுடைய பேரழிவையும் மரணத்தையும் குறிக்கும் ஒரு பெரும் அபசகுனமாகக் கருதப்படுகிறது.
‘ஆண்தகை இராவணன் வளர்க்கும் அவ் அனல்
ஈண்டில பிறந்தவால்; இனம் கொள் செம் சிதல்
தூண்டரு மணிவிளக்கு அழலும் தொல் மனை
கீண்டதால் வான ஏறு எறியக் கீழைநாள்! 5.4.42
ஆண்மைமிக்க இராவணன் தன் மாளிகையில் வளர்த்து வந்த வேள்வித் தீ அங்கே இப்போது இல்லை; அதற்குப் பதிலாக அங்கே செவ்வரியான செல்லரிக்க (கரையான் புற்றுகள்) தோன்றியுள்ளன. தூண்ட வேண்டிய அவசியமில்லாமல் ஒளிர்கின்ற உயர்ந்த மணிவிளக்குகள் எரியும் அவனது பழமையான மாளிகையில், முன்பு ஒருநாளில் இடி விழுந்ததால் அது சிதைந்து போயுள்ளது
‘திரியுமால் இலங்கையும் மதிலும்; திக்கு எலாம்
எரியுமால்; கந்தர்ப்ப நகரம் எங்கணும்
தெரியுமால்; மங்கல கலசம் சிந்தின
விரியுமால்; விளக்கினை விழுங்குமால் இருள்! 5.4.45
- திரியுமால், இலங்கையும் மதிலும்: இலங்கையும் அதன் பெரிய மதில்களும் (கோட்டைச் சுவர்களும்) சுழன்று திரிகின்றன.
- திக்கு எலாம் எரியுமால்: எல்லா திசைகளிலும் தீ பரவி எரிகின்றது.
- கந்தர்ப்ப நகரம் எங்கணும் தெரியுமால்: எல்லா இடங்களிலும் கந்தர்வ நகரம் (கண்ணுக்குத் தோன்றும் மாய நகரங்கள் / ஆகாய நகரங்கள்) போன்று காட்சிகள் தோன்றுகின்றன.
- மங்கல கலசம் சிந்தின: மங்கலமான நீர் நிறைந்த குடங்கள் (கலசங்கள்) கீழே விழுந்து சிந்துகின்றன.
- விரியுமால், விளக்கினை விழுங்குமால், இருள்: எங்கும் இருள் பரவுகிறது; அந்த இருள் விளக்குகளின் ஒளியையும் விழுங்கி விடுகிறது. [1]
(குறிப்பு: கம்பராமாயணத்தில் காட்சிப் படலத்தில் அசோகவனத்தில் சிறைப்பட்டிருந்த சீதையின் துயரத்தைப் போக்க, திரிசடை தான் கண்ட கனவை அவளுக்குக் கூறும் சூழலில் வரும் வரிகள் இவை).
‘ நல்ல சகுனங்கள்
பிடி மதம் பிறந்தன; பிறங்கு பேரியும்
இடிபட முழங்கின இரட்டல் இன்றியே;
தடி உடை முகில் குலம் இன்றித் தாவு இல் வான்
வெடிபட அதிருமால் : உதிரும் மீன் எலாம்! 5.4.43
இலங்கையில் நல்ல காரியங்கள் நடக்கப் போவதை உணர்த்தும் விதமாக, பெண் யானைகளுக்கு மதம் பிடித்தது; முரசுகள் அடிக்காமலேயே இடி போல முழங்கின; மேகங்கள் இன்பமாய் இடி மின்னலுடன் மழையைப் பொழிந்தன.
****
386. அநுமன் பிராட்டியைக் காண்டல்
கருப்பு நிற அரக்கர் கூட்டத்தில் மின்னல்போலப் பிரகாசிக்கும் சீதையைக் கண்ட அனுமன், இந்தப் பெண்மணி நிச்சயமாக சீதையே என்று முடிவு செய்கிறான் ; இரும் நிறம் அத்து உற்ற எற்கு இயைந்த காந்தத்தை என்று கம்பன் சொல்வது குறிப்பிடத்தக்கது
விரி மழைக்குலம் கிழித்து ஒளிரும் மின் எனக்
கருநிறத்து அரக்கியர் குழுவில் கண்டனன்
குருநிறத்து ஒரு தனிக் கொண்டல் ஊழியான்
இரும் நிறம் அத்து உற்ற எற்கு இயைந்த காந்தத்தை! 5.4.63
***
387. கண்டான் சீதையை! கொண்டான் ஆனந்தம்!
‘வீடினது அன்று அறன்! யானும் வீகலேன்!
தேடினன் கண்டனன் தேவியே! ‘எனா
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து
ஓடினன் உலாவினன் உவகைத் தேன் உண்டான். 5.4.67
அநுமன் சீதாதேவியை அசோகவனத்தில் கண்டடைந்த மகிழ்ச்சி
அறன் வீடினது அன்று: தருமம் ஒருபோதும் தோற்றுப் போகாது; அழியாது.
- யானும் வீகலேன்: சீதையைத் காணாவிட்டால் உயிரை விடுவேன் என்று எண்ணியிருந்த நானும் இனி இறக்க மாட்டேன்.
- தேடினென் கண்டனென் தேவியே!: தேடிய அடியோன் இதோ சீதாதேவியைக் கண்டுவிட்டேன் என்று சொல்லி ஆடினான், பாடினான்; அங்குமிங்கும் தாவித்தாவி ஓடி ஆனந்த நடனம் ஆடினான் அனுமன்.
******
388.சீதா தேவியைக் காப்பாற்றியது எது ? அனுமனின் கேள்விகள்
.தருமமே காத்ததோ? சனகன் நல்வினைக்
கருமமே காத்ததோ? கற்பின் காவலோ?
அருமையே! அருமையே! யார் இது ஆற்றுவார்?
ஒருமையே எம்மனோர்க்கு உரைக்கற் பாலதோ? 5.4.75
· தருமமே காத்ததோ? – சீதையை அவளது அறநெறியே காப்பாற்றுகிறதா?
· சனகன் நல்வினைக் கருமமே காத்ததோ? – அவளது தந்தை சனக மகாராஜா செய்த நல்லறங்களின் பயன் அவளைக் காப்பாற்றுகிறதா?
· கற்பின் காவலோ? – அல்லது அவள் தன் கணவன் மேல் கொண்டுள்ள கற்பு நெறியே அவளுக்குப் பாதுகாப்பாக நிற்கிறதா?
· அருமையே! அருமையே! யார் இது ஆற்றுவார்? – இது மிகவும் வியப்புக்குரியது! இத்தகைய பெரும் தவத்தை உலகத்தில் வேறு யார் செய்ய வல்லவர்கள்?
· ஒருமையே எம்மனோர்க்கு உரைக்கற் பாலதோ? – இத்தகைய சீதையின் ஒப்பில்லாத கற்பின் பெருமையை எம்மைப் போன்றவர்கள் எடுத்துச் சொல்லத் தகுதி உடையவர்களா? என்று அனுமன் அவளது தூய்மையை எண்ணி வியக்கிறான்
****
389 ராவணப் பிரவேசம்
உருப்பசி உடைவாள் ஏந்தினள் தொடர, மேனகை வெள்ளடை உதவச்
செருப்பினைத் தாங்கித் திலோத்தமை செல்ல, அரம்பையர் குழாம் புடை சுற்றக்
கருப்புரச் சாந்தும் கலவையும் மலரும் கலந்து உமிழ் பரிமள கந்தம்
மருப்புடைப் பொருப்பு ஏர் மாதிரக் களிற்றின் வரிக்கைவாய் மூக்கிடை மடுப்ப. 5.4.79
தேவ லோக அழகிகள் அனைவரும் ராவணனுக்கு சேவை செய்தார்கள். ஊர்வசி உடை வாளை ஏந்தி வந்தாள். மேனகை அவனது வெற்றிலை பாக்கு பெட்டியை எடுத்து வந்தாள். திலோத்தமை ராவணனுடைய செருப்புகளைத் தாங்கி வந்தாஎல்லோரும் பரிமள கந்தம் வீசும் வாசனைப்பொருட்களை சுமந்து வந்தார்கள் . ள் . ரம்பா ஏனையோருடன் அவனைப்பின்பற்றி வந்தாள்.
****
390.ராவணன் = கொடிய புலி; சீதா தேவி = அஞ்சி நடுங்கும் மான்
ஆயிடை, அரக்கன், அரம்பையர் குழுவும் அல்லவும் வேறு அயல் அகல,
மேயினன் பெண்ணின் விளக்கு எனும் தகையாள் இருந்துழி; ஆண்டு அவள் வெருவிப்
போயின உயிரளாம் என நடுங்கிப் பொறி வரி எறுழ் வலிப் புகைக் கண்
காய் சின உழுவை தின்னிய வந்த கலையிளம் பிணை எனக் கரைந்தாள். 5.4.98
பொருள்:
• ஆயிடை: அந்தச் சமயத்தில்.
• அரக்கன்: அரக்கர் தலைவனான இராவணன்.
• அரம்பையர் குழுவும் அல்லவும் வேறு அயல் அகல: தன்னுடனேயே சூழ்ந்து வந்த தேவ மகளிர் (அரம்பையர்) கூட்டத்தையும், மற்ற தோழியர் கூட்டத்தையும் தனக்குத் தனிமை வேண்டும் என்பதற்காகப் பக்கத்திலே சற்றுத் தள்ளிப் போகும்படிச் செய்தான்.
• மேயினன் பெண்ணின் விளக்கு எனும் தகையாள் இருந்துழி: அவ்வாறு தன் கூட்டத்தினரை விலக்கிவிட்டு, பெண் குலத்திற்கே விளக்கு போன்ற பெருமைமிக்க குணங்களைக் கொண்ட சீதா பிராட்டி வீற்றிருந்த இடத்தை நோக்கி இராவணன் தனியாக நடந்து வந்தான்.
• ஆண்டு, அவள், வெருவி… கரைந்தாள்: அவனைக் கண்டவுடன் சீதை, தன் உடலில் இருந்து உயிர் பிரிந்து போவதைப் போல அஞ்சி நடுங்கி, புள்ளிகளையும் வரிகளையும் உடைய, புகை கக்கும் கண்களைக் கொண்ட ஒரு பசிய புலி தன்னைத் தின்பதற்காக நெருங்கி வரும்போது அஞ்சிக் கதறும் ஒரு இளம் பெண் மான் போல மனம் உருகி அழுது புலம்பினாள்.
முக்கியக் கருத்து: இராவணன் சீதையைத் தன் வசப்படுத்த அசோக வனத்திற்குத் தன் பரிவாரங்களுடன் வருகிறான். ஆனால், சீதையிடம் பேசப் போகும்போது அவளுடன் வந்த பெண்களைத் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு, அவளைத் தனிமையில் நெருங்குகிறான். அவனைக் கண்டதும் சீதை புலியைக் கண்டு ஒரு மான் அஞ்சுவது போலப் பயந்து நடுங்குகிறாள்.
–சுபம்—
Tags- கம்ப ராமாயணம், 390 கேள்விகள், சுந்தரகாண்டம், இலங்கை